மை விழி தீண்டல்

மதுவின் மயக்கமும் கணவினூடே கலந்துவிட்ட சிறு சோகமும் மனதை கால சக்கரட்ஜ்த்தின் பின் நோக்கி கடத்தி சென்றன. காட்சிகள் பத்து வருடங்களுக்கு முன் அவள் இவனை கவர்ந்த நொடிகளுக்கு , இவன் அவள் மனதை களவாடிய பொழுதுகளுக்குள் நுழைந்தன. தன்னை சுற்றிய தனி அறை கூட்டமிக்க பேருந்தாக மாறிப் போனது.. பக்கத்திலிருந்த ஜன்னல் வழியே பச்சை பசேல் வயல் வெளிகள் தெரிந்தன, நம்மூர் ரோடுகளின் குலுக்கம் உணர முடிந்தது

" மருங்குடி இறக்கம் இருக்கா.. இறக்கம் இருக்காப்பா.. " கன்டக்டர் தொண்டை கிழிய கத்தினார்.

" இறங்கனும்னே.. " தன் பைகளை தூக்கி கொண்டு கஷ்டப்பட்டு ஜன்னல் சீட்டிலிருந்து எழுந்தான் பதினேட்டு வயது அரும்பு மீசை அர்ஜுன், அருகிலிருந்த மீசைக்காரருக்கு முழு சீட் கூட போதாது. அவர் கொடுத்த நூல் இடைவெளியில் தன்னையும் நுழைத்துக் கொண்டு தன் பைகளையும் நுழைத்துக் கொண்டு ஒரு வழியாக வெளியே வந்த பொழுது பஸ் இவன் நிறுத்தத்தை அடைந்து விட்டது.

இறங்கி முடிப்பதற்குள் திருப்பதி பெருமாளை பார்த்த திருப்தி, கொண்டு வந்த பைகளை எறிட்டான். அம்மாவுக்கும் பாட்டிக்கும் நடுவில் சரக்கு வண்டி போல ஆகி விட்டது இவன் நிலை. பெருமூச்சுடன் பேக்குகளை எண்ணும் போது தான் தெரிந்தது , அம்மா தயாரித்து கொடுத்த வத்தல் பையை பஸ்சிலேயே விட்டுவிட்டான், திரும்புவதற்குள் பஸ் கிளம்பி விட்டிருந்தது.

வத்தல் இல்லாமல் போனால் இவனை வத்தலாக்கி காய போட்டு விடுவாள் அம்மா என்பதால் துரத்திக் கொண்டு ஓடினான்.

" அண்ணே.. நிறுத்துங்க.. என் வத்தல்.. "

கண்டக்டர்க்கு கேட்டதாக தெரிய வில்லை அனால் யாருக்கோ கேட்டு விட்டது போலும் , வண்டியிலிருந்து ஒரு கை வத்தல் பையை இவனிடம் எறிந்தது, அதை பிடித்துக் கொண்ட மகிழ்ச்சியில் நன்றி சொல்ல நிமிர்ந்தான், அப்போது தான் அவளை கண்டான்.

ஒரு அழகிய பெண், இவன் வயது தான் இருக்கும். வெள்ளை நிற சுடிதார், அவள் பார்வை வத்தல் பொட்டலத்தில் தொடங்கி இவனை ஏறிட்டு பின் திரும்பியது, இவன் பார்வையில் எதை கண்டாளோ.. மீண்டும் இவன் கண்ணை நேராக ஊடுருவும் பார்வையில் துளைத்தவள் , பஸ் திரும்பி மறையும் வரை பார்வையை திருப்பவில்லை. அவள் சென்ற பிறகு தான் சொன்னான்.

" தேங்க் யூ.. "

வரும் வழியில் ஆத்தங்கரை பிள்ளையார், போஸ்ட் ஆபிஸ் ஆலமரம் , கோவில் திண்ணையில் வெட்டி கதை பேசும் ஊர் அண்ணன்மார்கள் என அனைவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்து விட்டு பாட்டி வீடை வந்தடைகையில் சோர்வாக தான் இருந்தது. கதவை கண்டதும் எப்போதும் துளிர் விடும் குறும்பு தனம் சோர்வை விரட்டிவிட. கதவை வேகமாக தட்டி விட்டு அருகில் ஓடி ஒளிந்து கொண்டான். பாட்டியை பயமுறுத்த அவள் வரவிற்காக காத்திருந்தான்.

" அப்பு.. வந்துட்டியா.. நெனச்சேன் நீதான்னு.. " தாத்தா ஜன்னலிலிருது எட்டி பார்த்தார்,

" சரி சரி.. உங்க ஆச்சி வாரா.. நல்லா பலமா கத்து.. கெழவிக்கு வரவர காது ஒழுங்கா கேக்கல.. வாரா... "

" யாருன்னு பாக்கறது தானே.. இங்க தானே நிக்கீய.. " புலம்பி கொண்டே அவள் திறக்கவும்.

" ஊஊஊஊ..... " என கத்தினான்.

அவள் பயந்ததாக தெரியவில்லை மாறாக இன்பத்தில் பூரித்து போனாள், சுருங்கிய முகம் மேலும் சுருங்க , விழுந்த பற்களை காட்டி மழலையென சிரித்தாள்.

" எய்யா.. எப்பிடி இருக்க.. கிழவிய பாக்க வந்துட்டியா.. " அவன் கன்னத்தை கிள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்

" அதான் இந்த மனுஷன் கம்முனு கெடக்காரோ.. தாத்தனும் பேரனும் நல்லா கள்ளத்தனம் காமிக்கீயோ.. "

பதில் பேசும் முன், ஒரு ரச வடையை வாயில் திணித்தாள்,பாதி வடை முடிவதற்குள்ளேயே..

" இந்தாயா.. குலம்புஜாமூனு.. உனக்கு புடிக்கும்னு அம்மா சொன்னா.. பக்கத்து வீட்டுல கேட்டு வச்சேன்.. சாப்புடு. "

குலோப்ஜாமூன் முடிவதற்குள் அதிரசம் முறுக்கு இன்னும் சில பலகாரங்கள் சேர்ந்து கொண்டது, அதற்கிடையில்

" இப்போ தான் உன்ன கைகுழந்தையா நர்சு கொடுத்தா.. இப்பிடி தான் வாங்குனேன் " என தொடங்கி இவன் நடை பழகியது,ரேடியோ கேட்டது, குப்புற படுத்தது என ஒவ்வொன்றையும் இராம புராணம் கிருஷ்ண லீலை போல சொல்லி முடித்து விட்டாள். இருந்தும் போதவில்லை, அவளுக்கு.

அர்ஜுன் பிறந்ததிலிருந்து பத்தாவது வரை பாட்டியிடம் தான் வளர்ந்தான், பெற்றோர் இருவரும் வேலை பார்ப்பதாலும், இடமாற்றத்தாலும், இவனையும் கைக்குழந்தையான இவனது தம்பியையும் சேர்த்து பார்த்துக் கொள்ள முடியாமல் பாட்டியிடம் இவனை கொடுத்தனர்.

அப்போது இவனுக்கு வயது ஐந்து தான் இருக்கும். அதன் பின் பத்து வயதில் அழைத்தனர், பாட்டியை பிரிய மறுத்து விட்டான். பதினைந்து வயதில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு செல்லும் போது தான் இவளை பிரிந்தான் அதன் பின் மூன்று வருடம் கழித்து இப்போது தான் பாட்டி வீட்டிற்கு வருகிறான், அவ்வளவு சீக்கிரத்தில் இவனை விட்டு விடுவாளா..

சமையல் முடித்து சாம்பார் கூட்டு பொரியல் என அணிவகுப்பே நடத்தி விட்டாள், அந்த உணவு பட்டாளத்தை பார்த்தாலே பசியும் பயங்கொண்டு ஓடி விடும்.

" இன்னிக்கு அமாவாசைலா.. அதான் மத்தது ஏதும் எடுக்கல.. நாளைக்கு கோழி அடிக்க சொல்லிருக்கேன் சரியாய்யா.. "

அவள் பார்வை இவன் முகத்தில் ஏமாற்றத்தை தேடியது , இவனுக்கும் ஏமாற்றம் தான். ஆஸ்டல் சாப்பாட்டில் அடக்கம் செய்த நாக்கை, பாட்டியின் கோழி குழம்பில் உயிர்ப்பிக்கலாம் என எண்ணியிருந்தான்.

ஏமாற்றத்தை காட்டி விட்டால் போதுமே இன்னும் ஒரு மாதம் புலம்புவாள். லாவகமாக அதை மறைத்து சிரித்து விட்டு, சாப்பிட்டு முடித்தான். மாலையில் ஆனதும் நண்பர்களை காண எண்ணி கிளம்பினான், சட்டை அணிகையில் தான் கவனித்தான். பாக்கெட்டிலிருந்த இருபது ரூபாய் நோட்டு இப்போது நூறு ரூபாயாக குட்டி போட்டிருந்தது. நிமிர்ந்தான், தாத்தா இவன் பார்வைக்காக காத்திருந்தார்.

அவர் கண் ஜாடையின் சங்கேத மொழியை அவன் அறியாமலில்லை, அதன் பொருள் கடையில் நினைத்ததை சாப்பிட்டுக் கொள் என்று அர்த்தம். பாட்டி என்ன கேட்டாலும் செய்து விடுவாள் என்றால், தாத்தாவோ கேட்காதையும் உணர்ந்து இவன் ஆசையை நிறைவேற்றி விடுவார்.

இவர்கள் இருவரையும் தாண்டி இந்த ஊரில் இவனை தேடும் ஜீவன்கள் இவன் நண்பர்கள் கோபு , மணி . கோபுவை காணவே முடியவில்லை, காலேஜுக்கு போய் விட்டானாம், காலேஜ் லீவு விட்டு ஒரு வாரம் ஆச்சு.. எங்கே போனானோ.. மணி தான் மாட்டினான். அவன் பள்ளிக்கு மேல் படிக்க வில்லை. சிறு வயதிலிருந்தே மூவரும் நகமும் சதையும் தான்.

அவனை காண இன்று இன்னொரு காரணமும் உண்டு, அந்த பெண் யாரென்று தெரிய வேண்டும். இந்த ஊரா.. வெளி ஊரா.. ஏதோ ஒரு உள்ளுணர்வு இந்த ஊர் தான் என்று கூறிக்கொண்டே இருந்தது.

தான் கண்ட பெண்ணை பற்றி கூறியதும் அவன் நண்பன் மணி,
உயரமா..
குள்ளமா...
நல்ல கலரோ..
முடி எப்படி.. ஒத்தை ஜடையா .. ரெட்டையா..
என யார் மனசிலே யாரு டாகடர் போல பல கேள்விகளை தொடுத்தான், பின் சட்டென அவளாக தான் இருக்கும் என்று முடித்தான்.

யார் அந்த அவள் என்று இவன் கேட்டதும் தான் தாமதம் அடுக்கி தீர்த்து விட்டான்., பெயர் ஜனனியாம், இவன் பள்ளியில் தான் படித்தாளாம், அவனுக்கு கூட பழக்கம் என்றான் ( அதை நம்ப முடியவில்லை ) , அக்ரஹாரத்தில் தான் வீடாம் , அப்பா மில்லில் குமாஸ்தா , அக்காள் டவுனில் படிக்கிறாள். ஆள் இவளை விட சுமார் தான், எத்தனையோ ப்ரபோசல்களாம், மாடர்ன் மார்க்கசிலிருந்து, ரவுடி ராகவன் வரை எவனுக்கும் மடங்கியதில்லையாம் .. அவளை பற்றி பேசுவது சுத்த வேஸ்ட் என ஊத்தி மூடினான்.

ஆனால் இவனுக்கோ அவன் கடைசியா சொன்ன எதுவும் காதில் விழாமல் வழுக்கி கொண்டு விட்டது. மீண்டும் அவளை பார்த்த நொடியை நினைத்து பார்த்ததான், அவள் உண்மைலேயே நம்மை பார்த்தாளா.. இல்லை.. வெறும் பிரமை தானா.. இல்லையே.. நம் பக்கம் தானே திரும்பினாள்.. என்று போய் கொண்டிருந்த அவன் மன ஓட்டத்தை நண்பன் முழங்கையால் இடித்து முடக்கி,

" அங்க பாருடா.. அந்த பொண்ணையா நீ பார்த்த... "

அவன் காட்டிய திசையில்.... அவள் தான் வந்து கொண்டிருந்தாள்.

இவன் ஏழு ஸ்வரத்தில் தலை அசைக்க

" அப்போ சொல்றேன் சான்ஸே இல்ல.. அவ உன்ன பாத்ருக்கவே மாட்டா.. "

" நான் என்ன பொய் சொல்றேனா... " சீறினான் அர்ஜுன்.

" சரி டா.. ஒரு பெட் வச்சுக்கலாம்.. இப்போ அவ நம்ம பக்கம் தானே வரா.. அவ நம்மள க்ராஸ் பண்றதுக்குள்ள உன்ன பாத்துட்டானா.. நைட் உன் ட்ரீட்.. இல்லேன்னா என் ட்ரீட்.. "

ஒத்துக்கொண்டான், இது விஷ பரீட்சை தான், மணி ஒரே அடியில் நாலு பரோட்டாவை முழுங்குபவன், இருந்தும் இந்த பரீட்சை இவனுக்கே தேவைப்பட்டது, அவள் பார்த்தாளா எனபதில் இவனுக்கும் சந்தேகம் தான்.

ஆக, பந்தயம் தொடங்கியது, கொஞ்சம் கொஞ்சமாக அவள் இவர்களை நெருங்கி கொண்டிருந்தாள், இவன் நண்பனின் கண்கள், அவள் கண்களை கழுகாக நோட்டமிட்டன. அவள் கண்களோ நிலத்தை விட்டு நகர வில்லை.. பார்த்து விடு என மனம் மௌனமாக ஒலமிட்டது, சுற்றிய உலகம் அவளாக சுறுங்கியது. சில அடிகளே அவள் இவளை நெருங்குவதற்கு என்று அறிந்து கால்களும் வேகத்தை குறைத்தன, இருந்தும் அவள் நெருங்கி விட்டாள், ஒரு முறை நிமிர்ந்தாள் அதிலும் இவனை பார்க்கவில்லை. முகத்தில் படர்ந்த முடியினை கோதி காதினுள் அடக்கி விட்டு மீண்டும் நிலம் பார்த்தாள். நிலம் பார்க்கும் பெண்களையே வெறுத்தான் அந்நொடியில், நண்பன் மனதில் சிரிப்பது கூட இவன் காதில் கேட்டது,

போதும்.. பார்க்க போவதில்லை, தோல்வியை ஒப்புக் கொள்ளலாம் என இவன் திரும்பினாலும், இவன் கண்கள் , அவள் இவனை கடக்கையில் தானாக அவள் கண்களில் சேர்ந்தது , அவள் கரு விழி நகன்று இவன் விழியில் மோதியது, அந்த சில நொடிகளில் பல யுகம் மகிழ்ந்தான், அவள் மையிட்ட புருவங்கள் சந்திப்பில் நுண்ணிய கரும் பொட்டு வெண்ணிலவாக ஒளிர்ந்தது , ஆழ் கடல் சிப்பியென அவளது மையிட்ட கண் இமைகள் , மெதுவாக மூடி அவள் விழியை இவனிடமிருந்து பிரித்து நேர் வழி செலுத்துகையில் தான் உறைந்த உலகம் மீண்டும் உயிர்பித்ததாக உணர்ந்தான்,

அவள் கடந்து சென்றாள் ஆனால் இன்னும் இவனால் அவள் விழி வீச்சின் தாக்கத்தை கடக்க இயலவில்லை, பார்வையின் எல்லை தொட்டு, புள்ளியாய் அவள் மறையும் வரை பார்த்தவன், அதிர்ச்சியில் வாய் பிளந்த தன் நண்பனை கண்டான் சிரிப்பதற்கு இப்போது இவன் முறை, மனதாற சிரித்தான்.

P.s: Hi friends.. first time romance attempt panren.. please share your thoughts about the story and once again thanks for all your support. :)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top