Part 46
பாகம் 46
அதீத தயக்கத்துடன் தங்கள் அறைக்குள் நுழைந்தாள் இந்து. கண்களை மூடிகொண்டு, சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அர்ஜுன். இந்து உள்ளே நுழைந்ததை உணர்ந்து கண்களைத் திறந்தான். அவள் தன்னை நோக்கி வருவதை பார்த்து நிமிர்ந்து அமர்ந்து, தன் கைகளை அவளை நோக்கி விரித்தான். சிறிதும் தாமதிக்காமல், ஓடிச் சென்று அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துகொண்டாள் இந்து. அர்ஜுன் அவள் இடையை சுற்றி வளைத்துக்கொண்டான். அவன் ஒன்றும் செய்யவில்லை... ஒன்றும் பேசவும் இல்லை... அப்படியே அமைதியாய் இருந்தான். அவனுக்கு அந்த கதகதப்பு தேவைப்பட்டது. சிறிது நேரம் வரை இந்துவும் ஒன்றும் பேசாமல் நின்றாள்.
பிறகு மெல்ல ஆரம்பித்தாள்.
"என்னங்க..."
தன் தலையை மெல்ல நிமிர்த்தி அவளை பார்த்தான் அர்ஜுன்.
"ஹீனாவுக்கு நம்மளை விட்டா வேற யாரும் இல்லங்க"
நிமிர்ந்து அமர்ந்து கொண்டான் அர்ஜுன்.
"அவங்க அம்மா மோசமானவாங்களா இருந்தாலும் அவ நல்ல பொண்ணு தான் "
*விஷயத்திற்கு வா* என்பதைப் போல் அவளைப் பார்த்தான் அர்ஜுன்.
"அவங்க அம்மாவோட இறுதி சடங்கை செய்ய, நம்ம அவளுக்கு ஹெல்ப் பண்ணி தான் ஆகணும்"
ஒன்றும் சொல்லாமல் இருந்தான் அர்ஜுன்.
"முடியாதுன்னு சொல்லாதீங்க. யாரா இருந்தாலும் அவங்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டியது ரொம்ப அவசியம்... அவங்க இப்ப உயிரோட இல்ல... அதனால, அவங்க எப்படிப்பட்டவங்கன்னு நம்ம யோசிக்க வேண்டியதில்ல. ஹீனா, இப்போ, அது அவசியம் இல்லைன்னு நினைச்சாலும், நிச்சயமா ஃப்யூசர்ல ஃபீல் பண்ணுவா..."
இந்து சொல்வது சரியாகவே பட்டது அர்ஜுனுக்கு.
"நான் இறுதி சடங்குல கலந்துக்கவும் மாட்டேன்... அந்த பொம்பள முகத்தைப் பார்க்கவும் மாட்டேன்" என்றான்.
சரி என்று தலை அசைத்தாள் இந்து.
வரவேற்பறை
மேற்கூரையை வெறித்து பார்த்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தாள் ஹீனா. அவளருகில் வந்தமர்ந்தாள் இந்து.
"எங்க அம்மாவுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், அண்ணி" என்றாள்
"நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்ல. அவங்க செஞ்ச எந்த விஷயத்துக்கும் உனக்கும் எந்த தொடர்புமில்ல. நீ செய்யாத ஒரு தப்புக்காக, குற்ற உணர்ச்சியையோட இருக்க வேண்டிய அவசியமில்ல"
"அவங்களால தான் எல்லாருக்கும் கஷ்டம்... சீதாம்மா வாழ்க்கை நாசமா போச்சி... அண்ணன் தனியா இருந்தாரு... உங்களை கொல்ல ட்ரை பண்ணாங்க... அப்பா ஜெயிலுக்கு போயிட்டாரு... "
"அதெல்லாம் முடிஞ்சு போச்சு... எதையும் நம்மால மாத்த முடியாது. போனதை நெனச்சி கவலைப்படுறதை விட, அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிக்கணும்"
"அடுத்ததா?"
"உங்க அம்மாவோட இறுதி சடங்கு"
"அதை நான் செய்வேன்னு நீங்கள் நினைக்கிறீங்களா?"
"செஞ்சு தான் ஆகணும்"
"ஏன் செய்யணும்? அவங்க ஒரு மோசமான பொம்பள"
"ஆனா, நீ மோசமானவ இல்லயே... அவங்க மோசமானவங்க தான். ஆனா அவங்க செத்துட்டாங்க... உயிரில்லாத உடம்புகிட்ட வெறுப்பைக் காட்டுறதுல என்ன பிரயோஜனம்? அது வெறும் உடம்பு... நம்ம கடமையை நம்ம செய்யணும்... ஒரு நல்ல மகளா அதை செஞ்சி முடி"
"நீங்க அண்ணனைப் பத்தி யோசிச்சு பாத்தீங்களா? அவருக்கு தெரிஞ்சா வருத்தப்பட மாட்டாரா?"
அப்போது பின்னாலிருந்து வந்த அர்ஜுனின் குரல் அவர்களை திடுக்கிட செய்தது.
"அதுல நான் வருத்தப்பட எதுவுமில்ல. உங்க அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமையை செஞ்சு முடிக்க, நீ மத்தவங்கள பத்தி யோசிக்க வேண்டிய அவசியமில்ல" என்றான் அர்ஜுன்.
ஹீனா வாயடைத்துப் போனாள். அர்ஜுன், அவளிடம் நேரடியாகப் பேசுவது இது தான் முதல் முறை.
"இல்லண்ணா... எனக்கு அதை செய்ய தோணல..."
"இப்ப உனக்கு தோணாம இருக்கலாம்... ஒருவேளை எதிர்காலத்தில் தோணலாம்... அப்படி தோணும் போது, அதை உன்னால மாத்தி அமைக்க முடியுமா? அதை செஞ்சு முடி. ஏன்னா, சில விஷயங்களை எல்லாம், நினைச்சா கூட மாத்த முடியாது. அப்படி நீ ஃபியூச்சர்ல வருத்தப்படுறதை நாங்க பாக்க வேணாம்னு நினைக்கிறோம்"
சரி என்று தலையசைத்தாள் ஹீனா. எதிர்காலத்தில், அவளுடன் தான் அவர்கள் இருக்கப் போகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லிய அவளுடைய அண்ணனின் வார்த்தையை மீற அவளுக்கு விருப்பமில்லை. தன்னுடைய கைபேசியை எடுத்து கிரிக்கு ஃபோன் செய்தான் அர்ஜுன்.
"சொல்லு அர்ஜுன்"
"போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சதுக்கப்புறம், மாஷாவுடைய பாடியை வாங்க, வேண்டிய பார்மலிடீஸை செய். அப்படியே ஃபியுனரலுக்கும் ஏற்பாடு செய்"
"ஓகே, அர்ஜுன்"
"அவரையும் பெயில்ல எடு. ஃபைனல் ரிச்சுவல்ஸ் முடியிற வரைக்கும் அவர் இருக்கட்டும்"
அவன் யாரைப் பற்றிக் கூறுகிறான் என்று புரியாமல் இல்லை கிரிக்கு. அவன் அதிசயத்து போனான். இந்துவும், ஹீனாவும் கூட சிலையாகி போனார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அழைப்பை துண்டித்தான் அர்ஜுன்.
"எல்லா ஏற்பாட்டையும் கிரி செய்வான். நீ அங்க போகலாம்... அவன் உன் கூட இருப்பான்."
அர்ஜுன் வரப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் ஹீனா. அதில் யோசிக்க எதுவும் இல்லை. அவன் இந்த அளவிற்கு செய்வதே மிக அதிகம்.
"நாளைக்கு காலையில டிரைவர் உன்னை அங்க ட்ராப் பண்ணுவாரு"
"நாளைக்கு காலையிலயா?" என்றாள் இந்து
"ஆமாம்... போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு, நாளைக்கு காலையில தான் பாடி கிடைக்கும்."
சரி என்று தலையசைத்தாள் ஹீனா.
மறுநாள்
ஹீனாவுடன் சங்கர் இல்லம் புறப்பட்டாள் இந்து. அவளுடன் ரம்யாவும், ரேவதியும் கூட சென்றார்கள்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், சீதாராணி இல்லத்தில் இருந்தபடியே செய்து கொடுத்தான் அர்ஜுன். இறுதி சடங்குகளை செய்ய வெகு நாட்கள் எடுத்துக்கொள்ள ஹீனாவுக்கு விருப்பமில்லை. ஏழு நாட்களில் அனைத்தையும் முடிக்குமாறு கேட்டுக் கொண்டாள். ஆனால், அந்த ஏழு நாட்களில், ஒரு நாள் கூட இந்து சங்கர் இல்லத்தில் தங்க வில்லை. ஒவ்வொரு நாள் மாலையும் அவள் சீதாரணி இல்லம் வந்து சேர்ந்தாள்... அதை அர்ஜுனே கூட எதிர்பார்க்கவில்லை.
ஏழு நாட்களுக்குப் பிறகு, அணைத்து சாம்பிராதயங்களும் முடிந்து, அவர்கள் சீதாராணி இல்லம் வந்தார்கள்... சங்கரும் வந்தார். அவரைப் பார்த்து முகம் சுருக்கினான் அர்ஜுன்.
"நான் என்னோட சொத்துக்களை உனக்கு கொடுக்க தான் வந்திருக்கேன்"
அர்ஜுன், ஹீனாவை பார்த்து பிறகு சங்கர் பக்கம் திரும்பினான்.
"எனக்கு எந்த சொத்தும் வேணாம்... என்கிட்ட இருக்கிறதே ஏழு தலைமுறைக்கு போதும்"
"ஆனா, நீ என்னோட பிள்ளை..." என்றார் சங்கர்.
"அப்போ அவ யாரு?" என்றான் அர்ஜுன், ஹீனாவை பார்த்து.
"இல்லங்கண்ணா..." என்று ஏதோ சொல்ல முயன்ற ஹீனாவை,
தன் கையை காட்டி, அவளை மேலே பேச விடாமல் தடுத்தான் அர்ஜுன்.
"உங்க சொத்தை அவ பேர்ல எழுதுங்க"
"நான் அவரோட சொந்த மக இல்லயே..."
"அது விஷயமே இல்ல... நீ இன்னைக்கு நிராதரவா நிக்கிறதுக்கு அவரும் ஒரு காரணம். அவர் தான் அதுக்குப் பொறுப்பேத்துக்கணும் "
"பணத்தால எல்லாத்தையும் சரி செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா?" என்றாள் ஹீனா.
அமைதியானான் அர்ஜுன்.
"நம்ம வாழ்க்கையில நடந்தது எதையுமே பணத்தால மாத்த முடியாது"
"பணம் இல்லனா உன்னால எதுவும் செய்ய முடியாது" என்றான் அர்ஜுன்.
"நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன்" என்றாள் ஹீனா.
எல்லோரும் அவளையே பார்த்தார்கள்.
"நான் என்னோட படிப்பை முடிச்சிட்டு வேலை தேடிக்கலாம்னு இருக்கேன்"
"ஆனா ஏன்?" என்றாள் இந்து.
"இந்த சொத்தை நான் ஏத்துகிட்டா, வாழ்நாள் முழுக்க அது என்னை உறுத்திக்கிட்டே இருக்கும். ஏன்னா, அது வந்து சேர போற விதம் அப்படி... அதனால அது எனக்கு வேணாம். உங்களை, அண்ணா, அண்ணின்னு நான் கூப்பிடுறேனே... எனக்கு அதுவே போதும். எனக்கும் சொந்தம்னு சொல்லிக்க சிலர் இருக்காங்கங்குற உணர்வை அது கொடுக்குது... அது போதும் எனக்கு." அவள் உணர்ச்சிப் பெருக்குடனும் திடமாகவும் கூறினாள்.
"நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு அதுல சம்மதம், அர்ஜுன். உன்னை எதுக்காகவும் நான் கட்டாய படுத்த விரும்பல. ஆனா தயவுசெஞ்சி யோசிச்சு முடிவெடு." என்றார் சங்கர்.
"அவர் சொல்றது சரி தான் அண்ணா. சீதாம்மா மட்டும் தான் அவருடைய மனைவி. அவங்களோட ஒரே மகனான நீங்க தான், அவரோட சொத்துக்கு ஒரே வாரிசு. உங்க உரிமையை நீங்க விட்டுக் கொடுக்காதீங்க அண்ணா"
முடியாது என்று கூற முடியவில்லை அர்ஜுனால். அவன் சரி என்று தலை அசைத்தான். ஹீனாவை பார்த்து நன்றியுடன் புன்னகைத்தார் சங்கர்.
அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இரவு உணவை உண்டார்கள். தன் வாழ்நாளில் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத சங்கர், கண்ணீர் வடித்தார். ஒன்றும் கூறாமல், தன் அறைக்கு சென்றான் அர்ஜுன். அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
இந்து அவர்கது அறைக்கு வந்த பொழுது, அவன் ஜன்னல் அருகில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்து நின்று, அவன் தோளை தொட்டாள்.
"நீங்க நார்மலா தானே இருக்கீங்க?"
"நான் எப்படி இருக்கேன்னு எனக்கே தெரியல... ஒரு கால கட்டத்துல, என் வாழ்க்கைல, நான் விருப்பப்பட்ட படி தான் எல்லாம் நடக்கும்னு நான் நினச்சிகிட்டிருந்தேன். ஆனா, வாழ்க்கை நம்ம நினைச்சது மாதிரி இல்ல..."
"எதையும் எதிர்பார்க்காம, வர்றதை ஏத்துகிட்டு போய்க்கிட்டே இருந்தா, எதுக்காகவும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காதுங்க"
"எங்க அப்பாகிட்ட எப்படி நடந்துகுறதுன்னு எனக்கு புரியல. அவர் உன்னை காப்பாத்தியிருக்காரு. அவரு மேல என்னால கோவபட முடியல. ஆனா, அதே நேரம், அவரை முழு மனசோட என்னால ஏத்துக்கவும் முடியல"
"உங்களால முடியலனா அதை செய்யாதீங்க. நீங்க அவரை ஒன்னும் சொல்லாம இருக்கிறதால, அவர் சந்தோஷமா தான் இருக்காரு. இப்போதைக்கு அது போதும். காலம் எல்லாத்தையும் மாத்தும்"
"நான் அவருக்காக வாதட, ஒரு நல்ல லாயரை ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன். ஏன்னா, அவர் செஞ்சது தப்புன்னு எனக்கு தோணல"
"நல்ல ஐடியாங்க... இதை விட அவருக்கு வேற என்ன வேணும்? நீங்க ரொம்ப நல்ல பிள்ளை" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"அப்பாடா... ஏழு நாளைக்கு அப்புறம், இப்பவாவது உன் புருஷன் மேல உனக்கு கொஞ்சமாவது கருணை பிறந்ததே..."
என்று கூறியவுடன் அவள் கண்ணம் சிவந்தது.
"நீ வெட்கப்படும் போது எவ்வளவு அட்ராக்டிவ்வா இருக்க தெரியுமா? எல்லாத்தையும் மறக்க வச்சி, *ஒரே ஒரு விஷயத்தை* மட்டும் தான் ஞாபகப் படுத்துது உன்னோட சிவந்த கன்னம்..." என்றான் விஷமப் புன்னகையுடன்.
அங்கிருந்து ஓடி போக முயன்றாள் இந்து. ஆனால், அர்ஜுனுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு, அவளை அப்படி ஓட விட்டுவிடுவானா என்ன அவன்...? ஒரே எட்டில் அவள் கையை பற்றி இழுத்து அணைத்து கொண்டான்.
"நான் ஏற்கனவே டயர்டா இருக்கேன். உன்னை துரத்திப் பிடிக்க வச்சி என்னை ரொம்ப டயர்ட் ஆக்காதே. எப்படி இருந்தாலும், நான் உன்னை பிடிச்சிட தான் போறேன். ஏழு நாளா காஞ்சி போய்க் கிடக்கிறேன்..."
"நீங்க டயர்டா இருக்கீங்கன்னு சொல்றிங்க...?"
"நீன்னு வந்துட்டா, அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல... நான் எவ்வளவு எனர்ஜிடிக்கா இருக்கேன்னு நீ பாக்க போற..."
கதவை சாத்திவிட்டு இந்துவின் பக்கம் திரும்பினான் அர்ஜுன், அவள் தரும் கதகதப்பில் தனி உலகைக் காண..
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top