55 விதி வலியது
55 விதி வலியது
ஆதித்யா நினைத்தது போலவே, கமலி எல்லா நேரமும் பிகினியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதற்காக அவள் ஆதித்யாவை பற்றி நினைக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆதித்யா கவலையாய் இருக்கிறான் என்று அவளுக்கு நிச்சயம் தெரியும். பிரபாகரன் கூறியது போல், ஆதித்யாவை நன்றாக படிக்கத் தெரிந்து கொண்டு விட்டாள் கமலி. ஆனால் அவனை மனம் திறந்து எப்படி பேச வைப்பது என்று தான் அவளுக்கு புரியவில்லை. ஜிம்மியுடன் விளையாடியபடி இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி. ஜிம்மியை துரத்திக்கொண்டு ஓடிய கமலி, பாட்டியின் அறையை கடந்த போது, அவர் ஒரு பழைய புகைப்பட ஆல்பத்தை பார்த்து அழுது கொண்டிருந்ததை கண்டாள். அவள் அறையின் உள்ளே நுழைவதை பார்த்த பாட்டி, கண்ணை துடைத்துக் கொண்டு செயற்கையாய் புன்னகைத்தார்.
"ஏன் பாட்டி நீங்க அழறீங்க?" என்றாள் கவலையாக.
ஒன்றுமில்லை என்று பாட்டி தலை அசைத்தாலும் அவர் கண்கள் கண்ணீர் சிந்துவதை நிறுத்தவில்லை. அவர் கையிலிருந்த ஆல்பத்தை வாங்கி பார்த்தாள் கமலி. அது ஆதித்யா மற்றும் ரேணுகாவின் சிறுவயது புகைப்படங்கள் நிரம்பிய ஆல்பம். அதில் இருந்த புகைப்படங்களை பார்த்து புன்னகை புரிந்தாள் கமலி.
"உனக்கு தெரியுமா கமலி, ரேணுகா ரொம்ப நல்ல பொண்ணு. அவ எப்படி இந்த அளவுக்கு மாறி போனான்னு என்னால நம்பவே முடியல. ஆதின்னா அவளுக்கு உயிர். எல்லாரையும் விடவும் அவனைத் தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவனை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததே இல்ல. பணம், எப்படி எல்லாம் மனுசங்கள மாத்திடுது" என்று வருத்தப்பட்டார்.
"தயவுசெய்து வருத்தப்படாதீங்க பாட்டி"
கண்களை துடைத்துக் கொண்டு தன்னை சுதாகரித்துக் கொண்டார் பாட்டி.
"நான் இந்த ஆல்பத்தை எடுத்துக்கிட்டு போகட்டுமா பாட்டி?" என்றாள் கமலி.
"தாராளமா கொண்டு போ"
அந்த ஆல்பத்தை அங்கிருந்து தன் அறைக்கு கொண்டு வந்தாள் கமலி, ஏனென்றால், பாட்டி மீண்டும் அதை பார்த்து அழக் கூடும் என்று எண்ணி. கட்டிலின் மீது அமர்ந்து ஆதித்யாவின் புகைப்படங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்த அவளுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. அவள் இதழில் குறும்புப் புன்னகை மலர்ந்தது.
மாலை
ஏதோ ஒரு கோப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அவனிடம் வந்த கமலி, தயங்கியபடி நின்றாள்.
"ஏதாவது வேணுமா கமலி?" என்றான் ஆதித்யா வழக்கமான கரிசனத்துடன்.
ஆமாம் என்று தலையசைத்த கமலி,
"நான் வாட்ஸ்அப்பில் ப்ரொஃபைல் பிச்சரை மாத்திக்கட்டுமா?" என்றாள்.
முகம் சுருக்கியபடி,
"அதை ஏன் என்கிட்ட கேக்குற? மாத்தணும்னு தோணுச்சுன்னா மாத்து"
"நான் உங்களுடைய போட்டோவை தான் வைக்கப் போறேன் "
"ஓ... அப்படியா... ஹஸ்பண்ட் போட்டோவை ப்ரொஃபைலா வைக்கணும்னு நினைக்கிறது சகஜம் தானே... வச்சுக்கோ"
"நிஜமாத் தான் சொல்றீங்களா?"
"ஆமாம்" என்றான் குழப்பத்துடன்.
"நீங்க அப்செட்டாக மாட்டீங்களே?"
"நான் ஏன் அப்செட் ஆக போறேன்?"
"ஏன்னா, அந்த போட்டோவை பார்த்து பெரிய சுனாமியே கிளம்பலாம்"
"சுனாமியா? நீ என்ன பேசுற?"
"பின்ன என்ன? நீங்க எவ்வளவு பெரிய பிசினஸ் மேன்... "
"அதனால?"
"நீங்க டிரஸ் போடாத போட்டோவை நான் ப்ரொஃபைலில் வச்சா, சுனாமி அடிக்காதா?"
"என்னது?" என்றான் பதட்டமாக.
காலை, பாட்டியிடம் இருந்து தான் கொண்டு வந்த ஆல்பத்தில் இருந்து எடுத்த, அவனது குழந்தை பருவ போட்டோவை அவனிடம் காட்டினாள் கமலி. அதில் அவன் எந்த உடையும் அணிந்து இருக்கவில்லை. அதைப் பார்த்து தன் இடப் புருவத்தை உயர்த்தினான் ஆதித்யா.
"அதை என்கிட்ட குடு" என்றான்.
அதைத் தனக்குப் பின்னால் மறைத்துக் கொண்டு, முடியாது என்று தலையசைத்தாள் கமலி.
"விளையாடாத கமலி"
அவர்கள் அறையில் அவள் இங்கும், அங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். ஆதித்யாவிடம் பிடி படவோ, அறையை விட்டு வெளியே வரவோ அவளுக்கு எண்ணமில்லை.
"கமலி... ஓடாத நில்லு"
"நான் இதை ஏற்கனவே என்னுடைய மொபைலில் போட்டோ எடுத்துட்டேன்"
அதைக் கேட்டு நின்ற ஆதித்யா, கதவை சாத்தி தாளிட்டாள். மூச்சு வாங்க அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் கமலி.
"நான் டிரஸ் போடாத ஃபோட்டோ தானே உனக்கு வேணும்? என்னோட லேட்டஸ்ட் போட்டோவை அப்லோட் பண்ணு"
தான் அணிந்திருந்த கோட்டைக் கழட்டி சோபாவின் மீது வீசினான். அவன் தன் டையில் கைவைக்க, ஓடிச்சென்று அவன் கரத்தைப் பற்றிக் கொண்டாள் கமலி.
"எவ்வளவு மோசமான ஆளு நீங்க..." லேசாய் அவன் கன்னத்தில் அறைந்தாள்.
எதிர்பாராத அந்த அறை அவனைத் திடுக்கிடச் செய்தாலும், ரசிக்கவே செய்தான் ஆதித்யா.
"நீ தானே என்னுடைய ட்ரெஸ் இல்லாத போட்டோவை போடணும்னு ஆசைப்பட்ட. அதனால தான் உனக்கு ஹெல்ப் பண்றேன்"
"வெட்கம் கெட்டவர் நீங்க "
"ஓய்... நீ மட்டும் என்னவாம்? புருஷனோட டிரஸ் இல்லாத ஃபோட்டோவை போடணும்னு யாராவது நினைப்பாங்களா? குழந்தை போட்டோவா இருந்தா மட்டும் என்னவாம்???"
"நான் உன்கிட்ட விளையாடினேன்" என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.
"அப்படியா? "
"ஆமாம்... நீங்க எப்ப பாத்தாலும் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க. அதனால உங்களை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு நெனச்சேன்"
அவளை அன்பாய் இழுத்து அணைத்துக் கொண்டு,
"எனக்கு ஒன்னும் இல்லடா" என்றான்.
அவனைப் பிடித்துத் தள்ளினாள் கமலி.
"பொய்... எனக்கு தெரியும், நீங்க நார்மலா இல்ல. நீங்க பொய் சொல்றீங்க ஆதிஜி" என்றாள் கோபமும் கவலையும் கலந்த உணர்வோடு.
"சரி, ஒத்துக்குறேன் . நான் நார்மலா இல்ல"
"ஏன்னு என்கிட்ட சொல்ல மாட்டீங்களா ஆதிஜி?" என்றாள் கவலையாக.
"அதை சொல்றதா வேணாமான்னு கூட எனக்கு தெரியல. உண்மையில் சொல்ல போனா, அதுக்காக கவலைப் படனுமா வேண்டாமான்னு கூட எனக்கு புரியல."
"என்ன விஷயம் ஆதிஜி?"
"எனக்கு ரெண்டு நாள் டைம் கொடு. எல்லாத்தையும் சொல்றேன். சரியா?"
"சரி" என்றாள் சோகமாக.
"அதைக் கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொல்லேன்"
"ம்ம்ம் " என்றாள்.
"சரி, நீ எப்போ பிகினி போட போற?"
"மறுபடியும் ஆரம்பிக்காதீங்க ஆதிஜி" என்றாள் தன் விரலை நீட்டி.
"நேத்து ராத்திரி, உன்னை பிகினியில் கற்பனை பண்ணதுல இருந்து, எனக்கு தூக்கமே வரல தெரியுமா... "
அவன் நெஞ்சில் ஒரு குத்து குத்தினாள் கமலி. அவள் கையை பிடித்து தன் கண்ணத்தில் வைத்துக் கொண்டான் ஆதித்யா.
"பாரு, பேசும் போதே என் உடம்புக்கு எப்படி சூடாயிடுச்சி..."
அவனை பிடித்து தள்ளினாள் கமலி.
"எனக்காக ஒரு தடவை போடேன் கமலி"
"சரி போடுறேன்" என்று அவள் கூற அதிர்ந்து போனான் ஆதித்யா.
"என்ன சொன்ன?"
"சரின்னு சொன்னேன்"
"இது விளையாட்டில்ல கமலி"
"எனக்கு தெரியும். உங்களுடைய டிரஸ் இல்லாத போட்டோவை, ப்ரொஃபைல் பிக்ச்சரரா வச்சதுக்கு பிறகு நான் பிகினி போடுறேன்"
"நீ ரொம்ப ஸ்மார்ட்டா ஆயிட்ட கமலி"
"உங்களைவிட ஒன்னுமில்ல... நீங்க ஒரு கிரிமினல்"
"என்னை ரொம்ப புகழாத கமலி" என்று சிரித்தான்.
"அந்த பிகினி கதையை விடுங்க. நாளைக்கு நாங்க அவுட்டிங் போறோம்" என்றாள்.
"நாங்கன்னா?"
"நான், மயூரி, லாவண்யா"
"எங்க போறீங்க?"
"நாளைக்கு சமீருக்கு பர்த்டே. அவனுக்கு ட்ரீட் கொடுக்க போறோம்"
"அப்படின்னா, தாஜ் ஹோட்டலில் டேபிள் புக் பண்ணி தரேன்"
"நெஜமாவா? " என்றாள் சந்தோஷமாக.
"ஆமாம்"
"நீங்க ரொம்ப நல்லவர் ஆதிஜி"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே என்னை கிரிமினல்ன்னு சொன்ன... " என்றான் கிண்டலாக.
"நீங்க நல்ல கிரிமினல்"
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் ஆதித்யா.
"இருங்க நான் எல்லாரையும் கேக்குறேன்"
தனது கைப்பேசியை எடுத்து அனைவரையும் கான்ஃபரன்ஸ் காலில் இணைத்தாள் கமலி.
"நீ எங்க இருக்க கமலி?" என்றாள் மயூரி.
"வீட்ல தான் இருக்கேன்"
"அப்போ நேரா கூப்பிடறது தானே?"
அப்பொழுது, மற்ற இருவரும் ஹாய் மயூரி என்றார்கள்.
"ஓஹோ நம்ம கான்ஃபரன்ஸ் காலில் இருக்கோமா?" என்று புரிந்துகொண்டாள் மயூரி.
"ஆமாம்" என்றாள் கமலி.
"என்ன விஷயம் கமலி?"
"நாளைக்கு சமீர் பர்த்டேவுக்காக, ஆதிஜி நமக்கு தாஜ் ஹோட்டலில் டேபிள் புக் பண்ணி கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காரு. எல்லாரும் சரியான டைமுக்கு வந்துடனும்" என்றாள் கமலி.
"வாவ், சூப்பர்" என்றார்கள் லாவண்யாவும், மயூரியும்.
ஆனால் சமீரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
"சமீர், நீ லைன்ல இருக்கியா?" என்றாள் கமலி
"சாரி கமலி. என்னால வர முடியாது" என்றான் சமீர்.
"ஏன்?" என்றாள் லாவண்யா.
"நான் என்னுடைய ஒவ்வொரு பர்த்டேவையும் அனாதை ஆசிரமத்தில் கழிக்கிறது வழக்கம். ஒரே ஒரு வேலைக்காக, இவ்வளவு பணம் செலவு செய்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. ஏன்னா, நான் நிறைய நாள் சாப்பாடே இல்லாம இருந்திருக்கேன். என்னை தப்பா நினைச்சுக்காதீங்க"
"இப்போ என்ன செய்றது கமலி?" என்றாள் லாவண்யா பெருமூச்சுவிட்டு.
"நம்ம ஏன் சமீர் கூட நாளைக்கு போகக் கூடாது?" என்றாள் கமலி ஆர்வத்துடன்.
"நெஜமாவா சொல்றீங்க?" என்றான் சமீர் சந்தோஷமாக.
"ஆமாம்"
"நான் ரெடி" என்றாள் மயூரி.
"நானும் தான்" என்றாள் லாவண்யா.
"நாங்களும் வறோம், சமீர்" என்றாள் கமலி.
"ரொம்ப சந்தோஷம் நான் உங்களுக்கு லொகேஷன் ஷேர் பண்றேன்"
"ஓகே" அழைப்பைத் துண்டித்து விட்டு ஆதித்யாவை பார்த்தாள் கமலி.
"உங்க ப்ரோக்ராம் மாறிடுச்சு போல இருக்கு?" என்றான் ஆதித்யா.
"Pஆமாம் ஆதிஜி. சமீருக்கு பார்ட்டியில் விருப்பம் இல்ல"
"ஓ..."
"நாங்க எல்லாரும் சமீர் கூட ஒரு ஆர்ஃபனேஜ் போறோம்"
"தட்ஸ் இம்பிரஸிவ். போயிட்டு வாங்க. அவனுக்கு பார்ட்டி பிடிக்காது அப்படிங்கிறதால கிஃப்ட் கொடுக்காம விட்டுடாத"
"என்ன கிஃப்ட் கொடுக்கிறது?"
"மொபைல்?"
"நெஜமாவா?"
"ஆமாம். சாயங்காலம் உன் கைக்கு கிடைச்சுடும். நாளைக்கு கொண்டு போய் அவனுக்கு கொடு"
"தேங்க்யூ சோ மச் ஆதிஜி" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு மயூரியை பார்க்க ஓடிப்போனாள் கமலி.
பெருமூச்சுவிட்டான் ஆதித்யா, அவளாவது சந்தோஷமாய் இருக்கட்டும் என்று எண்ணியபடி.
மறுநாள்
சமீர்கான் அனுப்பியிருந்த முகவரிக்கு சென்றடைந்தார்கள் கமலி, லாவண்யா, மயூரி மூவரும். அவன் அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தான். அவர்களை பார்த்ததும் புன்னகைத்தான்.
"வாங்க. நீங்களும் வந்து கொடுங்க" என்றான்.
"அதுக்கு முன்னாடி இதை வாங்கிக்கோ" என்று ஒரு கைபேசியை அவனிடம் நீட்டினாள் கமலி.
"ஏன் கமலி இதெல்லாம்?"
"இது ஆதிஜி வாங்கிக் கொடுத்த கிஃப்ட். அதை வேண்டாம்னு சொல்லுவியா நீ...?"
கண்களை சுழற்றி,
"அவருக்கு தேங்க்ஸ் சொல்லு" என்றான் பெருமூச்சுவிட்டபடி.
"ஷ்யூர் "
பிள்ளைகளுக்கு மீண்டும் இனிப்பு வழங்க துவங்கினான் சமீர். அங்கிருந்த சிறிய குழந்தைகளையும், வயதான பெரியோர்களையும், மாற்றுத்திறனாளி பிள்ளைகளையும் பார்த்த போது வேதனையாய் இருந்தது அவர்களுக்கு. அவர்கள் அணிந்து கொள்ள நல்ல உடை கூட இருக்கவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
ஆதித்யாவுக்கு போன் செய்தாள் கமலி.
"நீங்க போய் சேர்ந்துட்டிங்களா கமலி?"
"ஆமாம் ஆதிஜி. நாங்க மதர் தெரசா ஆர்ஃபனேஜ் வந்துட்டோம். இங்க நிறைய குழந்தைகளும் பெரியவங்களும் இருக்காங்க. அவங்களுக்கு போட்டுக்க நல்ல டிரஸ் கூட இல்ல... அதான்..."
அவள் பேச்சை துண்டித்து,
"நான் அனுப்பி வைக்கிறேன். சந்தோஷமா?"
"தேங்க்யூ ஆதிஜி. எப்போ அனுப்புவீங்க?"
"மத்தியானத்துக்குள்ள அனுப்புறேன்"
"ஐ லவ் யூ சோ மச் ஆதிஜி" அழைப்பைத் துண்டித்தாள் கமலி.
புன்னகை புரிந்தான் ஆதித்யா. ஆதித்யா, பிரபாகரன், தீபக், மூவரும் பம்பரமாய் சுழன்று, கமலி கேட்ட உடைகளையும் அந்த குழந்தைகளுக்கு தேவையான, மற்ற அத்தியாவசிய பொருட்களையும் அனுப்ப முனைந்தார்கள்.
அவன் கூறியதற்கு முன்னதாகவே, தேவையான பொருட்கள் அனைத்தும் அந்த இல்லத்தை சென்றடைந்தன. சமீர்கானின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
"ரொம்ப தேங்க்ஸ் கமலி. நீ ரொம்ப நல்லவ" என்றான் நெகிழ்ச்சியுடன்.
"என்னை அப்புறமா புகழலாம். இப்போ குழந்தைகளுக்கு எல்லாத்தையும் குடு" என்றாள் கமலி.
மயூரியும், லாவண்யாவும் சந்தோஷமாய் அவனுடன் இணைந்து குழந்தைகளுக்கு பொருள்களை கொடுக்கத் துவங்கினார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட உடைகளையும், பொருட்களையும் பார்த்த குழந்தைகளின் ஒளிவெள்ளம் பரவிய முகத்தை பார்க்கவே அவர்களுக்கு சந்தோஷமாய் இருந்தது.
அப்போது ஒரு சிறுமி கமலியிடம் வந்து அவளது துப்பட்டாவை பிடித்து இழுத்தாள். அவளைப் பார்த்த கமலி, அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தாள்.
"உனக்கு எல்லாம் கிடைச்சிதா?"
"கெடச்சது கா. ரொம்ப தேங்க்ஸ்"
"யூ ஆர் வெல்கம்"
"அந்த ரூம்ல ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு ரொம்ப ஜுரம் அடிக்குது. அவளுக்கும் டிரஸ் கொடுக்கிறீர்களா?" என்றாள்.
"ஜுரம் அடிக்குதா? எங்க இருக்கா அவ?"
"வாங்க நான் உங்களுக்கு காமிக்கிறேன் "
அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்றாள் கமலி. அருகில் இருந்த வேறு ஒரு கட்டிடத்திற்கு அவளை அழைத்துச் சென்றாள் அந்த சிறுமி. அங்கு, தன்னந்தனியாய் ஒரு சிறுமி பழைய பாயில், தலையணை கூட இல்லாமல் படுத்துகிடந்தாள். அவளிடம் ஓடிச் சென்ற கமலி, அவளை திருப்பி படுக்க வைத்தாள். அவளைப் பார்த்த கமலியின் ரத்தம் அதிர்ச்சியில் உறைந்து போனது. அவள் கண்ணில் கண்ணீர் பெருகியது. அந்த சிறுமி வேறு யாருமல்ல ஆதித்யாவின் அக்காள் ரேணுகாவின் மகள் ஷாலினி தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top