51 அது வேறு...
51 அது வேறு...
அறைக்குள் வந்த ஆதித்யா கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.
"ஆதிஜி..."
அவளுக்கு எந்த பதிலும் இல்லை.
"நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்..." என்றாள் கெஞ்சலாக.
"நான் ரொம்ப டயர்டா இருக்கேன். ஒரு வாரமா நான் சரியா தூங்கல. என்னை தூங்க விடு" என்றான் உறுதியான குரலில்.
கமலிக்கு வருத்தமாய் இருந்தது. ஆதித்யாவை பார்த்தபடி கட்டிலில் படுத்துக் கொண்டாள். அதற்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல், விரைவிலேயே தூங்கிப் போனான் ஆதித்யா. அவன் கூறியது போல் அவன் உண்மையிலேயே மிகவும் களைப்பாக தான் இருந்தான்.
மறுநாள் காலை
சமையலறையில் பரபரப்பாய் வேலை செய்து கொண்டிருந்தாள் கமலி. காலை சீக்கிரம் எழுந்து, ஆதித்யாவுக்கு பிடித்த பேன்கேக்கை சமைத்துக் கொண்டிருந்தாள். எப்படியாவது ஆதித்யாவை சமாதானம் செய்து விட வேண்டும் அவளுக்கு. அவன் அவளிடம் பேசாமலும், ஒட்டாமலும் இருந்ததை அவளால் தாங்கவே முடியவில்லை. தான் சமைத்த பேன்கேக்கை உணவு மேஜைக்கு எடுத்து வந்தாள் கமலி. அலுவலகம் செல்ல தயாராகி வந்தான் ஆதித்யா.
"ஆதிஜி, உங்களுக்கு பிடிச்ச பேன்கேக் சமைச்சிருக்கேன்"
அவள் அவனுக்கு அதை பரிமாற போக, அவள் கையிலிருந்த தட்டை வாங்கி, அதிலிருந்து ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்தத் தட்டை ராகுலிடம் நீட்டினான் ஆதித்யா. சட்டென்று வதங்கிப் போன கமலின் முகத்தை பார்த்த ராகுல்,
"எனக்கு வேண்டாம் ஆதி... எனக்கு இட்லியே போதும்" என்றான்.
அந்தத் தட்டை தீபக்கை நோக்கி நோக்கி நீட்டினான் ஆதித்யா. ஒன்றை மட்டும் தயக்கத்துடன் எடுத்துக்கொண்டான் தீபக், ஆதித்யாவை மறுக்கும் தைரியமில்லாமல். ஒரு பேன்கேக்கை மட்டும் சாப்பிட்டுவிட்டு இரண்டு இட்லிகளை சாப்பிட்டான் ஆதித்யா. அவன் கமலியை ஒரு முறை கூட ஏறெடுத்தும் பார்க்க வில்லை. கமலிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஆதித்யாவின் கடுமையை அவளால் தாங்கவே முடியவில்லை. அவளுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது,
"கமலி, நமக்கு லேட் ஆகுது. சீக்கிரம் சாப்பிடு" என்றாள் மயூரி
"எனக்கு பசிக்கல" என்று அவள் அங்கிருந்து போக நினைக்க, ஆதித்யாவின் கண்டிப்பான குரல் அவளை தடுத்தது.
"உக்காந்து சாப்பிடு"
அவனது கடுமை நிறைந்த முகத்தை பார்த்தபடி, பயத்துடன் அமர்ந்தாள் கமலி. அவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது மற்றவர்களுக்கு.
"சுரேஷ்..." என்றான் ஆதித்யா.
"சொல்லுங்க ஆதி"
"இவங்களை காலேஜ்ல விடச்சொல்லி இளவரசன்கிட்ட சொல்லுங்க" என்றான்.
"சரிங்க ஆதி"
கமலியிடம் சொல்லிக் கொள்ளாமல் அலுவலகம் கிளம்பினான் ஆதித்யா.
கல்லூரியில்
சோகமாய் இருந்த கமலியை பார்த்து என்ன நடந்தது என்று கேட்டாள் லாவண்யா.
"ஆதி அண்ணன் கமலிகிட்ட பேசுறது இல்ல" என்றாள் மயூரி.
"ஏன்?"
"அவரை விட்டுட்டு போனதுக்காக கமலி மேல கோவமா இருக்காரு"
அருவி என கண்ணீரை பொழிந்து கொண்டிருந்த கமலியை பார்த்து பரிதாபபட்டாள் லாவண்யா.
"அழாத கமலி. அவர் அப்செட்டா இருக்கார். அதனால தான் அப்படி நடந்துக்கிறாரு" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றாள் லாவண்யா.
"அவர் இந்த மாதிரி எப்பவுமே இருந்ததில்ல" என்றாள் கமலி தேம்பியபடி.
"அவர் உங்கிட்ட தான் இப்படி எல்லாம் இருந்ததில்லை. இது தான் உண்மையான ஆதித்யா. அவருக்கு உன் மேல ரொம்ப பிரியம் ஜாஸ்தி. அதனால தான், அவருடைய கோபத்தை உன்கிட்ட இது வரைக்கும் அவர் காட்டியதில்ல" என்றாள் லாவண்யா.
"அவரை எப்படி சமாதானப் படுத்துறதுன்னே எனக்கு தெரியல"
"ரெண்டு மூணு நாள்ல எல்லாம் சரியாயிடும் கமலி. கொஞ்சம் கோபம் குறையட்டும். அதுவரை பொறுமையா இரு"
"நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்தா உனக்கு எதுவும் தோணாது. முதல்ல இந்த சோகத்திலிருந்து வெளியில வந்து, ரிலாக்ஸா யோசி... நிச்சயம் உனக்கு ஏதாவது ஐடியா கிடைக்கும்" என்றாள் மயூரி.
"உனக்கு வேணும்னா நாங்க கூட ஏதாவது ஐடியா கொடுக்கிறோம்" என்றாள் லாவண்யா.
"ஆமாம்..."
"நிதானமா யோசிச்சு, ஆதியோட வீக் பாயிண்ட்ல அடி" என்றாள் லாவண்யா.
"ஆமாம், உனக்கு மட்டும் தான் தெரியும், எது அண்ணனோட வீக் பாயிண்ட்னு"
அவர்கள் களுக் என்று சிரிக்க, கண்ணீரை மீறிய வெட்கம் தெரிந்தது கமலியின் முகத்தில். அவள் ஆழமாய் சிந்திக்கத் துவங்கியவுடன் அவர்கள் அவளை தொந்தரவு செய்யவில்லை.
அமைதியகம்
வழக்கத்திற்கு மாறாய், வேண்டுமென்றே அன்று தாமதமாய் வீட்டுக்கு வந்தான் ஆதித்யா. வழக்கம் போல் அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள் கமலி. குளித்து முடித்து உணவு மேஜைக்கு வந்தான் ஆதித்யா. அவனை பார்த்தபடியே அவனுக்கு உணவு பரிமாறினாள் கமலி. அது அவனுக்கும் தெரியும். அமைதியாய் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள் கமலி. சாப்பிட்டு முடித்து விட்டு அவன், அவர்கள் அறையை நோக்கி செல்ல, வழக்கமாய் தானே அனைத்தையும் சுத்தப்படுத்தும் கமலி, அன்று முத்துவிடம் அதை செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டு விட்டு அவன் பின்னால் ஓடினாள்.
அவர்கள் தங்கள் அறைக்கு வந்தவுடன், அவனை வழிமறித்து நின்றாள் கமலி.
"என்கிட்ட பேச மாட்டீங்களா ஆதிஜி?"
அவளுக்கு பதில் கூறாமல் அவன் அங்கிருந்து செல்ல முயன்ற போது,
உரத்த குரலில்,
"ஆதிஜி, என்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லுங்க... அதுக்கப்புறம் நான் உங்களை தொல்லை பண்ண மாட்டேன்" என்றாள்.
தன் புருவத்தை உயர்த்திய ஆதித்யா, அவள் தோளை பிடித்து லேசாய் தள்ளி விட்டுச் சென்றான். நேராகச் சென்று கட்டிலில் படித்தவன், தனக்குத் தானே புலம்பத் தொடங்கினான். அவனைப் பார்க்க அவளுக்கு கவலையாக இருந்தது. ஏனென்றால், அவன் *அவளை* போல் நடந்து கொண்டிருந்தான்.
"இந்தம்மா பெரிய அதிமேதாவி... இவங்களாவே ஒரு முடிவை எடுத்து, என்னை விட்டுட்டுப் போயிடுவாங்க... எவ்வளவு தைரியம்...? எங்கிருந்து இந்த தைரியம் வந்துச்சுன்னு தெரியல... நான் இல்லாம வாழ முடியும் நினைச்சுட்டாங்க போல இருக்கு..." என்று மென்று முழுங்கினான்.
"நான் ஒரு முட்டாள்... எனக்குன்னு ஒருத்தி கிடைச்சுட்டான்னு நான் சந்தோஷப்பட்டேன்... இந்த உலகத்துல யார் என்னை ஏமாத்தினாலும், என்னோட கமலி எனக்கு உண்மையா இருப்பான்னு நம்பினேன்... யார் என்னை விட்டுட்டு போனாலும் அவ என் கூட கடைசி வரைக்கும் இருப்பான்னு நெனச்சேன்... ஆனா..."
அவன் நிறுத்தினான்... இல்லை... பேசாமல் தடுக்க பட்டான்... கமலி அவன் இதழை சிறைபிடித்ததன் மூலம் அவன் உதிர்த்துக் கொண்டிருந்த வார்த்தைகளையும் சிறை பிடித்தாள். அவள் எச்சில் ஈரத்தில், அவனது வார்த்தைகள் உலர்ந்து போயின. அவ்வளவு தான், கலகலத்துப் போனான் ஆதித்யா. பெங்களூருவில் இருந்து வந்ததிலிருந்து, இந்த நொடிக்காக தான் அவன் ஏங்கிக் காத்திருந்தான். ஆனாலும், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். அவ்வளவு எளிதாய் விட்டுக் கொடுத்து விட அவன் தயாராக இல்லை. தனது கைவிரல்களை இறுக்கமாய் மடித்து, தன் உணர்வுகள் தன்னை அடிமைப்படுத்தி விடாமல் இருக்க பிரயத்தனப் பட்டான் ஆதித்யா. ஆனால் எவ்வளவு நேரம் தான் அவனும் தாக்குபிடிக்க முடியும்? முத்தக் கலையில் கமலி எப்போது இவ்வளவு தேறினாள் என்று அவனுக்கு ஆச்சரியமாய் போனது. எப்போதும் அவனே முந்திக்கொண்டு இருந்ததால், அதை அவன் கவனிக்காமல் போயிருக்கலாம். நொடிக்கு நொடி தன்வசம் இழந்து கொண்டிருந்தான் ஆதித்யா. அவன் உடலுக்குள் இருந்த *சைத்தான்* ஹார்மோன்கள் குத்தாட்டம் போடத் தொடங்கி விட்டிருந்தன. சில நாட்களாகவே கடுமையான பசியில் இருந்த அவைகள், அவனை சுரண்டித் தின்ன துவங்கின.
அவன் இதழ்களை விடுவித்த கமலி, அவனை உற்று நோக்கினாள். அவன் ஒன்றும் செய்யாமல், உறுதியாய் இருந்ததிலிருந்தே, அவன் எவ்வளவு கோபமாய் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் கமலி. அவன் இப்படியெல்லாம் இருந்ததே இல்லை. உண்மையில் சொல்லப் போனால், வழக்கமாய் கச்சேரியை ஆரம்பிப்பதே அவன் தானே...
அவன் முகத்தை மென்மையாய் பற்றினாள் கமலி.
"என்னை மன்னிச்சிடுங்க ஆதிஜி. உங்களை விட்டுட்டு போகனும்ங்குறது என்னுடைய எண்ணம் இல்ல. எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா? உங்களை விட்டுட்டு நான் எங்க போகப் போறேன்? நீங்கன்னு வரும் போது, இந்த உலகத்துல, வேற எதுவுமே எனக்கு பெருசில்ல. அப்படி இருக்கும் போது, உங்க உயிருக்கு ஆபத்துன்னா நான் என்ன செய்ய முடியும்? நீங்க வர்ற வரைக்கும் நானும் பாதுகாப்பா இருக்க நெனச்சேன். நீங்க எனக்காக இங்க செஞ்சு வச்சுட்டு போன ஏற்பாடு எதையும் நீங்க என்கிட்ட சொல்லல. அதைப் பத்தி எதுவும் தெரியாம தான் நான் இங்கிருந்து போயிட்டேன். அதேநேரம், இந்த விஷயத்தை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னும் எனக்கு புரியல. உங்ககிட்ட பேசும் போதெல்லாம் உங்களை ஏமாத்துறோம்னு எனக்கு உறுத்தலா இருந்தது. உங்களைப் பார்த்தா, எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிடுவேன்னு எனக்கு தெரியும். சொன்னா என்ன ஆகுமோன்னு பயந்து தான் நான் அங்கேயே இருந்துட்டேன்"
மீண்டும் ஒருமுறை அழுத்தமாய் அவள் இதழ் மீது இதழ் பதித்து விட்டு,
"குட் நைட் ஆதிஜி" என்று கூறிவிட்டு, அவனுக்கு எதிர்ப்புறமாய் திரும்பி படுத்துக்கொண்டாள்.
அவள் அப்படி செய்வதை பார்த்து பல்லைக் கடித்தான் ஆதித்யா. அவள் கையை பிடித்து இழுத்து, தன் பக்கம் திருப்பினான்.
"குட் நைட்டா....???? உனக்கு எவ்வளவு திமிரு...!!! என்னை உசுப்பேத்தி விட்டுட்டு நிம்மதியா தூங்குவியா நீ?" என்று அவள் இதழ் மீது இதழ் மோதினான்.
ஒரு வார பிரிவு... அந்த பிரிவு ஏற்படுத்தியிருந்த இடைவெளி... அந்த இடைவெளி தந்த தாக்கம்... அந்த தாக்கம் ஏற்படுத்தியிருந்த ஏக்கம்... அனைத்தும் முடிவுக்கு வந்தது. தன் கோவத்தை தூக்கிஎறிந்துவிட்டு, அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டான். தன் கோவம், தாபம் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு ஓய்ந்தான் ஆதித்யா.
"ஐ அம் சாரி ஆதிஜி..."
அவளைத் தன் நெஞ்ஜோடு இருக்கமாய் தழுவிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். அன்று இருவரும் நிம்மதியாய் உறங்கினார்கள்
மறுநாள் காலை
குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் கமலி. அவள் ஆதித்யாவை பார்த்து புன்னகைக்க, அவன் அவளுக்கு எதிர் புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவளைப் பார்க்காதவன் போல் குளியலறைக்குள் சென்றான். அவன் தன்னை பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டாள் கமலி.
தன் தலையை துவட்டியபடி குளியலறையை விட்டு வெளியே வந்தான் ஆதித்யா. அவனுக்கு முன் சென்று, அவனை பார்த்து சிரித்தாள் கமலி. இந்த முறையும் அவன் அவளைப் பார்த்து சிரிக்காமல் போகவே, அவனது கையைப் பிடித்து நிறுத்தினாள் கமலி.
"எதுக்காக என்னை பார்த்து சிரிக்க மாட்டேங்கிறீங்க?" என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.
"உனக்கு தெரியாத மாதிரி கேக்குற...? நான் உன் மேல கோவமா இருக்கேன்" என்றான் ஆதித்யா தெனாவட்டாக.
"ஆனா, நேத்து ராத்திரி..."
அவள் பேச்சை துண்டித்து,
"நேத்து ராத்திரி என்ன...? அது வேற... இது வேற... அது வேற *டிபார்ட்மெண்ட்*. இதையும் அதையும் சேர்த்து பார்க்காதே" என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
அதைக் கேட்டு வாயைப் பிளந்தாள் கமலி.
"இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல" என்றாள் முகத்தை சுளுக்கு என்று வைத்துக்கொண்டு.
"நீ செஞ்சது மட்டும் நியாயமா? என்னை விட்டுட்டு போனல்ல...???"
"நான் தான் உங்ககிட்ட சாரி சொல்லிட்டேனே..." என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.
"பொல்லாத சாரி... நான் உன்னோட சாரியை ஏத்துக்கல"
"அப்போ நான் என்ன தான் செய்யறது?"
அவளுக்கு எந்த பதிலும் கூறாமல், சிரிப்பை அடக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான் ஆதித்யா. கமலிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இந்த அளவிற்கா ஆதித்யாவுக்கு அவள் மீது கோபம்? ஆதித்யா அவளிடம் சற்று கடுமையாகத் தான் நடந்து கொள்கிறான். அப்போது தான், அவன் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்று அவளுக்குப் புரியும். அவளுடைய மன்னிப்பை அவன் எளிதில் ஏற்றுக் கொள்ள வில்லை என்றால் தான், அவள் இனி எப்போதும் இப்படி ஒரு முடிவை எடுக்கத் துணிய மாட்டாள், என்று நினைத்தான் ஆதித்யா.
அன்று முழுவதும் கமலிக்கு சிம்மசொப்பனமாய் விளங்கினான் ஆதித்யா. அன்று அவன் அலுவலகம் செல்லவும் இல்லை... அன்று முழுவதும் கமலியை தன்னிடம் நெருங்க விடவும் இல்லை... எல்லாவற்றிற்கும் மேலாக, அன்று வழக்கத்திற்கு மாறாய், விரைவிலேயே தூங்கிப் போனான் ஆதித்யா.
கமலிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆதித்யா இப்படி செய்வான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஒரு வழியாக அவனை சமாதானப்படுத்தி விட்டதாய் அவள் மனக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ, அவளை சுத்தலில் விட்டு வேடிக்கை பார்க்கிறான்.
"இந்த மாதிரி ஒரு ஏமாத்துக்காரரை நான் பார்த்ததே இல்ல... என்னை மன்னிச்சிட்டா மாதிரி நம்ப வச்சு, *காரியத்தை* முடிச்சிட்டு, இது வேற, அது வேறன்னு சொல்லிட்டாரு... இருங்க ஆதிஜி... நான் யாருன்னு உங்களுக்கு காட்றேனா இல்லையான்னு பாருங்க... நாளைக்கு விடிய போற விடியல் என்னுடையது. நாளைக்கு நீங்க புது கமலியை பார்க்க போறீங்க..." என்று சபதம் எடுத்தாள் கமலி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top