5 தொலைபேசி அழைப்பு

5 தொலைபேசி அழைப்பு

கமலி, ஆட்டோவில் ஏறி செல்வதை பார்த்து, ஆதித்யாவும் பிரபாகரனும் திகைத்து நின்றார்கள். ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள்.

"அவ போய்ட்டா, டேமிட்..." என்று அலறினான் ஆதித்யா.

தன் சுய நினைவுக்குத் திரும்பிய பிரபாகரன்,

"அடக்கடவுளே..." என்று தன் காரை நோக்கி ஓடினான். எப்படியும் அவளைப் பிடித்தாக வேண்டும். ரேணுகாவோ, சுந்தரியோ கேட்டால் அவன் என்ன பதில் கூறுவான்? காரை, டாப் கியரில் கிளப்பினான். பத்து நிமிட துரத்தலுக்கு பின், கமலி சென்ற ஆட்டோவை மடக்கி பிடித்தான். காரை விட்டு கீழே இறங்கி சென்று, அவளை தன்னுடன் வருமாறு வேண்டினான். காரில் ஆதித்யா இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவனுடன் செல்ல சம்மதித்தாள் கமலி.

"என்ன கமலி இது? நீங்க தனியா உங்க வீட்டுக்கு போனா, உங்க அத்தை எங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க?" என்றான் வருத்தத்துடன்.

"நான் அவர் கூட போக மாட்டேன்" என்றாள் தலையை குனிந்தபடி.

"ஏன் மா?"

"அவர் என் கையை பிடிச்சி இழுத்தார் தெரியுமா?"

"நெஜமாவா? எப்போ?" என்றான் உண்மையிலேயே அவன் அதிர்ச்சியடைந்துவிட்டது போல்.

ஆமாம் என்று தலையை அசைத்தபடி,

"நேத்து, கோவிக்கு வந்தார்ல, அப்போ..."

"என்னது...??? ஆதித்யா கோவிலுக்கு வந்தானா?"

ஆமாம் என்று தலையாசைத்தாள்.

"அப்படியா? எனக்கு தெரியாதே... நெஜமாவே அவன் கோவிலுக்கு வந்தனா?"

அவள் மறுபடியும் ஆமாம் என்று தலையசைத்தாள்.

"என்னால இதை நம்பவே முடியல. ஏன்னா, அவன் இதெல்லாம் முன்னாடி எப்பவும் செஞ்சதே இல்ல"

அமைதியாக இருந்தாள் கமலி.

"அவன் ஏன் எல்லாத்தையும் புதுசு புதுசா செய்றான்னு எனக்கு புரியவே இல்ல... "

"அப்படின்னா?"

"முதல்ல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிகிட்டு இருந்தான். ஆனா இப்போ, உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றான். கோயிலுக்கெல்லாம் போக அவனுக்கு பிடிக்காது. ஆனா, உங்கள பார்க்க கோவிலுக்கு வந்திருக்கான். இதுக்கு முன்னாடி அவன் எந்த பொண்ணையும் தொட்டதில்ல. ஆனா, உங்க கைய பிடிச்சிருக்கான். ஏம்மா இப்படி எல்லாம் செய்றான்?" என்று அவளையே கேள்வி கேட்டான் பிரபாகரன்.

"எனக்கு தெரியல"

"அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்" என்றான்.

ஆதித்யாவின் பெயர்  வரையப்பட்டிருந்த அவளுடைய கைகளை நோக்கி அவளது கண்கள் அனிச்சையாய் சென்றது. அவள் முகத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான் பிரபாகரன்.

கமலியை அவர்களது வீட்டில் விட்டு, அவளுடைய அம்மா, அத்தையிடமிருந்து விடைபெற்று திரும்பினான் பிரபாகரன்.

"நீ எதுவும் பைத்தியக்காரத்தனமா செஞ்சி வைக்கல இல்ல?" என்றார் சுந்தரி.

*இல்லை* என்று தலை அசைத்தாள் கமலி, அவள் எப்படி அவர்களின் வீட்டை விட்டு ஓடி வந்தாள் என்பதை எண்ணியபடி.  பிரபாகரன் கூறியது சரி தான். அவள் வீட்டிற்கு தனியாக வந்திருந்தால், சுந்தரி என்ன நினைத்திருப்பார்? ஆனால், ஆதித்யாவின் கூரிய பார்வை, அவளுக்கு பீதியை கிளப்பினால், அவள் என்ன செய்வாள்?

......

பிரபாகரனுக்காக தனது அறையில்  காத்திருந்தான் ஆதித்யா. அவனால் ஓரிடத்தில் உட்கார முடியவில்லை. என்ன பெண் இவள்? அவள் விஷயத்தில் அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒருவேளை, முதலிரவு அறையிலிருந்து அவள் இப்படி ஓடிப் போனால் என்ன செய்வது? தனது எண்ணத்தை எண்ணி தானே சிரித்தான். அவன் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பிரபாகரன்.

"அவளை வீட்ல விட்டுட்டியா?"

"விட்டுட்டேன்"

"ஏதாவது சொன்னாளா?"

"நீ அவ கையைப் பிடிச்சதை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணா"

"நான் அவளுக்கு ஹெல்ப் பண்ண தான் நினைச்சேன்"

"நீ அதைப் பத்தி ஏற்கனவே என்கிட்ட சொல்லியிருந்த. ஆனா, அது தான் உன் மேல அவளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கு"

ஆமாம் என்று தலையசைத்தான்.

"நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் மச்சான். அவ ரொம்ப குழந்தை தனமா இருக்கா. நீ நடந்துக்கிற விதம், அவளை பாதுகாப்பா உணர வைக்கணும். நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்"

புரிந்தது என்பது போல தலையசைத்தான் ஆதித்யா. அவன் அறையிலிருந்து சென்றான் பிரபாகரன். கட்டிலில் அமர்ந்தபடி கமலியைப் பற்றி சிந்தித்தான் ஆதித்யா.

பிரபாகரன் கூறுவது ஒன்றும் தவறில்லை. அவனுடைய ஒரே ஒரு தவறான நடவடிக்கை, அனைத்தையும் ஒட்டு மொத்தமாய் சிதைத்து விடக்கூடும். இன்னும் மூன்று நாட்களில் திருமணம்... அவள், அவனது அறையில், அவனுடன் இருப்பாள். அந்த நொடிப்பொழுதுகளை எதிர்கொள்ள ஆர்வமானான். அவள் முகத்தில் தோன்றப் போகும் விலைமதிப்பற்ற பாவனைகளை கண்டு ரசிக்க...!

மறுநாள்

ஆதித்யாவின் அறைக்கு ஓடி வந்தான் பிரபாகரன்.

"உனக்கு தெரியுமா கமலியோட அம்மாவும், அத்தையும் கூட சென்னைக்கு ஷிஃப்ட் ஆக போறாங்க..."

"அப்படியா...? இது உண்மையிலேயே நல்ல விஷயம். கமலி கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பா" என்றான் சந்தோஷமாய்.

"ஆமாம். ஆனா, மூணு, நாலு மாசத்துக்கு பிறகு...! அவங்க அத்தையோட வீட்டை வாடகைக்கு விட்டிருக்காங்களாம். அவங்க வீடு காலி பண்ற வரைக்கும் வெயிட் பண்ணனுமாம்"

"ஓ..."

ஆதித்யாவின் கையில் ஒரு சீட்டைக் திணித்தான் பிரபாகரன்.

"என்ன இது?"

"கமலி வீட்டு ஃபோன் நம்பர்"

அதைக் கேட்டவுடன் ஆதித்யாவின் முகம் ஒளிர்ந்தது.

"ஃபோன் பண்ணு"

"அவங்க அம்மாவாவது, அத்தையாவது எடுத்தா என்ன செய்யறது?"

"முயற்சி திருவினையாக்கும். கீப் ட்ரையிங்"

"அவ என்கிட்ட பேசுவான்னு நினைக்கிறாயா?"

"அது நீ பேசுற விதத்தைப் பொறுத்தது" என்றபடி அங்கிருந்து நடந்தான் பிரபாகரன்.

இது மிகவும் சாதுரியமாக கையாள வேண்டிய விஷயம். விஷயம் கமலியை பற்றியது என்றாலே, அது சாதுரியமாக தான் கையாளப்பட வேண்டும். அவள் தன் மீது கொண்டிருக்கும் பயத்தைப் போக்க வேண்டும் என்று நினைத்தான் ஆதித்யா. ஆனால், அது எப்படி சாத்தியம்? நிதானமாய் யோசித்தான். அவன் நினைத்ததை செய்ய வேண்டுமென்றால், அதற்கு முதலில் அவளுடைய அம்மா, அத்தையிடம் இவன் பேச வேண்டும். அவர்களுடைய வீட்டு எண்ணுக்கு ஃபோன் செய்தான். அந்தப் பக்கம் மணியடித்தது.

அழைப்பு அந்தப் பக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், நிமிர்ந்து அமர்ந்தான் ஆதித்யா. அழைப்பை ஏற்றது வேறு யாருமல்ல, நமது கமலி தான். அவள் குரலைக் கேட்டவுடன், அழகிய புன்னகை ஆதித்யாவின்  முகத்தை அலங்கரித்தது. அவனிடம் அவள் பேசுவாளா? ஒருவேளை பேசுவது இவன் தான் என்று தெரிந்தவுடன், அழைப்பை துண்டித்து விட்டு, ஓடி விட்டால் என்ன செய்வது? அதே நேரம், எதிர்கால மனைவியிடம் பேச கிடைத்த  அருமையான சந்தர்ப்பத்தையும் நழுவ விட அவன் தயாராக இல்லை. துரிதமாய் யோசித்து, சற்றே அவளுடன் விளையாட நினைத்தான். குரலை மாற்றி அடித்தொண்டையில் பேசினான்.

"ஹலோ" என்றாள் கமலி மீண்டும்.

"யார் பேசுறது?" என்றான் ஆதித்யா.

"நீங்க ஃபோன் பண்ணிட்டு, யார் பேசுறதுன்னு கேக்குறீங்க...? நீங்க யாரு பேசுறதுன்னு முதல்ல சொல்லுங்க" என்றாள் கமலி.

"எனக்கு புரிஞ்சிடுச்சு. நீ யாருன்னு எனக்கு தெரியும். அந்த வீட்டுல ஒரு அழுமூஞ்சி பொண்ணு இருக்குன்னு சொன்னாங்க. அது நீ தானே?"

"என்னது...? அழுமூஞ்சி பெண்ணா? நானா...? எனக்கு கெட்ட கோவம் வரும் ஜாக்கிரதை"

"நீ ரொம்ப அழகா இருப்பியாமே... நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு நெனச்சேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"

"நீங்க யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்கன்னு தெரியுமா?" என்றாள் கோவமாக.

"யார்கிட்ட?" என்றான் ஆர்வமாக.

"நான், ரொம்ப பெரிய குடும்பத்தோட மருமகளாக போறேன். இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு கல்யாணம்"

"அதனால என்ன? எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்றான் சிரிப்பை அடக்கியபடி.

"இப்படியெல்லாம் பேசுறீங்களே... உங்களுக்கு அக்கா தங்கச்சி இல்லையா?"

"இருக்காங்களே... ஆனா, உன்னை மாதிரி அழகான பொண்டாட்டி தான் இல்ல"

"வாயை மூடுங்க"

"நான் உன்னோட நல்லதுக்காகத் தான் சொல்றேன். நீ கல்யாணம் பண்ணிக்க போறவனைப் பார்த்தா நல்லவனா தெரியல. அவனை விட்டுட்டு என்கிட்ட வந்துடு"

"நீங்க ஒன்னும் அவரைப் பத்தி கவலைப்பட வேண்டியதில்ல... நான் பாத்துக்குவேன்..."

"எப்படி பாத்துக்குவ?" என்றான் களுக் என்ற சிரிப்பை உதிர்த்து.

"அதை நீங்க ஒன்னும் தெரிஞ்சுக்க வேண்டாம். அது எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற விஷயம்."

"ஓ அப்படியா? இந்த விஷயம் அவனுக்கு தெரியுமா?"
 
அமைதியானாள் கமலி.

"நீ பொய் சொல்றேன்னு எனக்கு தெரியும். அவன் உன் கைய பிடிச்சதுக்காக நீ அழுததை தான் நான் பார்த்தேனே..."

"அப்போ அவர் யாருன்னு எனக்கு தெரியாது. அதனால அழுதேன்" என்று பொய் உரைத்தாள்.

"இப்போ தான் அவன் யாருன்று உனக்கு தெரிஞ்சிடுச்சே... இனிமே அவனைப் பார்த்தா அழ மாட்டியா?"

"மாட்டேன்" என்றாள் தீர்க்கமாக.

"அப்படின்னா, எதுக்காக நேத்து என்னைப் பார்த்தவுடனே ஓடிப் போயிட்ட?" என்றான் தனது உண்மையான குரலில் ஆதித்யா.

அவள் கண்கள் பாப்கார்ன் பொறிவதை போல் பொறிந்தது. பதட்டத்துடன் நகம் கடித்தாள். இவ்வளவு நேரம் அவள் பேசிக்கொண்டிருந்தது ஆதித்யாவிடமா?

"உன்னை பார்க்க நான் வரட்டுமா?"

"வேணா... வேணா..." என்று அழைப்பை துண்டித்து விட்டு ஓடிப் போனாள்.

தனது கைப்பேசியை பார்த்து புன்னகைத்தான் ஆதித்யா. அதற்குப் பிறகு வந்த எந்த அழைப்பையுமே கமலி ஏற்கவில்லை என்பதை நாம் கூற வேண்டிய அவசியமில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் ஃபோன் செய்தான் ஆதித்யா. சுந்தரி எடுத்துப் பேசினார்.

"யாரு  பேசுறீங்க?"

"ஆதித்யா பேசுறேன்"

"நீங்களா தம்பி? எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"ரொம்ப நல்லா இருக்கோம்"

"உங்ககிட்ட ஒரு  முக்கியமான விஷயம் பேச தான் ஃபோன் பண்ணேன்."

"என்ன விஷயம் தம்பி?" என்றார் பதட்டமாக.

"நேர்ல பேசலாமா?"

"நிச்சயமா" என்றார் பதட்டம் குறையாமல்.

"நான் சாயங்காலம் வீட்டுக்கு வரட்டுமா?"

"கண்டிப்பா வாங்க... ஆனா, என்ன விஷயமா பேசணும்?"

"அது ஃபோன்ல பேசற விஷயம் இல்ல. நம்ம சாயங்காலம் நேரில் பேசலாம்."

அழைப்பை துண்டித்தான் ஆதித்யா.

செல்வியை அழைத்தார் சுந்தரி. செல்வியும், கமலியும் ஓடிவந்தார்கள்.

"சொல்லுங்க அக்கா"

"பேசுனது யாருன்னு தெரியுமா?"

தெரியவில்லை என்று தலையசைத்தார் செல்வி.

"மாப்பிள்ளைகிட்ட இருந்து தான் ஃபோன்"

"என்னக்கா சொன்னாரு?"

"நம்மகிட்ட பேசணுமாம்"

"எதைப் பத்தி?"

"எதைப் பத்தி பேசப் போராருன்னு தெரியல. ஆனா, முக்கியமான விஷயம்னு சொன்னார்"

"என்னவா இருக்கும் கா?"

"எனக்கு எதுவும் புரியல. இந்தப் பைத்தியக்கார பொண்ண பத்தி ஏதோ சொல்ல போறாருன்னு நினைக்கிறேன்"

"ஆமா கா. கோவிலில் நடந்த விஷயத்தால அவரு ரொம்ப வருத்தத்தோட இருப்பாருன்னு நினைக்கிறேன்."

"எப்பேர்பட்ட சம்பந்தம்... இந்த பொண்ணு இப்படி பண்ணி வெச்சுட்டாளே" என்றார் சுந்தரி வருத்தத்துடன்.

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தலையை குனிந்து கொண்டாள் கமலி.

"அவர் வருத்தத்தில் இருந்தா, ஏதாவது சொல்லி சமாதானப்படுத்த பாக்கணும் கா."

"ஆமாம். அவரை சமாதானப்படுத்தி தான் ஆகணும். அதை நான் பாத்துக்குறேன்... விடு" என்றார் சுந்தரி.

"எப்ப வரேன்னு சொன்னாரு?"

"சாயங்காலம்" என்று சொல்ல போனவர், கமலியை பார்த்து சொல்லாமல்  நிறுத்தினார்.

"அதைப் பத்தி அவர் எதுவும் சொல்லல" என்றார்.

அதைப் பற்றி அவர் கமலியின் முன் கூற விரும்பவில்லை. அவள் மீண்டும் பதற்றம் அடைந்து, ஆதித்யா வரும் நேரம் பார்த்து எங்காவது சென்று ஒளிந்து கொண்டு விடலாம். ஆதித்யா வரும் பொழுது, அவள் இங்கு இல்லாமல் போனால், அவன் தவறாக நினைத்துக் கொள்ளலாம். இந்த அருமையான வரனை கைகழுவவிட கூடாது என்று தீர்க்கமாய் இருந்தார் சுந்தரி. அதனால் அவர், ஆதித்யா வரும் பொழுது, கமலி அங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top