34 மலர்க்கணைகள்...
34 மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்...
அமைதியகம்
ஆதித்யா கூறியதை நினைத்தபடி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள் கமலி. அது என்னவாக இருக்கும்? மற்றவர்களின் உள்ளுணர்வை எப்படி தெரிந்து கொள்வது? அவள் அமைதியாய் அமர்ந்திருந்ததை பார்த்த ஷாலினி,
"என்ன ஆச்சு, மாமி? ஏன் டல்லா இருக்கீங்க?" என்றாள்.
"இல்லையே... நான் நல்லா தானே இருக்கேன்..."
"பாத்தா அப்படி தெரியலையே..."
"அப்படியா சொல்ற? நான் நல்லா தான் இருக்கேன்னு உன்னை நம்ப வைக்க என்ன செய்யணும்?"
"கண்ணாமூச்சி விளையாடலாமா?"
"விளையாடலாமே... போய் ஒளிஞ்சிக்கோ. நான் உன்னை கண்டு பிடிக்கிறேன்."
கமலி கண்களை மூடிக்கொள்ள, அங்கிருந்து ஒளிந்து கொள்ள இடம் தேடி ஓடிச் சென்றாள் ஷாலினி. சமையலறையில் ஒளிந்து கொண்டிருந்த ஷாலினியை சுலபமாய் கண்டுபிடித்துவிட்டு, கைகொட்டி சிரித்தாள் கமலி.
"மாட்டிக்கிட்டியா...?"
ஆமாம் என்று சோகமாய் தலையசைத்தாள் ஷாலினி.
இதற்கிடையில்...
தனது மனைவியின் *புடவை தரிசனத்திற்காக* வீடு வந்து சேர்ந்தான் ஆதித்யா. காலையில், தான் மந்திரித்து விட்ட கோழியைப் போல் ஆனதை எண்ணி பார்த்தான். இப்பொழுது, அது போல் ஆகிவிடக்கூடாது என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வந்தான் அவன்.
இப்பொழுது, ஒளிந்து கொள்ள வேண்டியது கமலியின் முறை. கண்ணை மூடி எண்ணத் தொடங்கினாள் ஷாலினி. ஆதித்யா வீட்டிற்கு வந்துவிட்டது தெரியாத கமலி, ஒளிந்துகொள்ள தங்கள் அறைக்கு ஓடினாள்.
நேராக தன் அறைக்கு வந்த ஆதித்யா, தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி சோபாவின் மீது வீசினான். அப்பொழுது, கமலி பதட்டத்துடன் ஓடி வருவதை பார்த்த அவன், அவள் இன்னும் புடவையில் இருந்ததை பார்த்து செயலிழந்து நின்றான். ஏன் இந்தப் பெண் புடவையில் இவ்வளவு வித்தியாசமாய் இருக்கிறாள், என்று எண்ணியபடி. அவனைப் பார்த்து கமலியும் சில நொடி கூட திகைத்து நின்றாள். பிறகு ஒளிந்து கொள்ள இடம் தேடினாள். அவள் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருப்பது தெரியாத ஆதித்யா, அவள் நிலை கொள்ளாமல் தவித்ததைப் பார்த்து பதட்டம் அடைந்தான்.
"என்ன ஆச்சு, கமலி?"
தனது வாயின் மீது விரலை வைத்து,
"ஷ்ஷ்ஷ்...." என்றபடி இங்குமங்கும் ஒளிந்து கொள்ள இடம் தேடினாள், எதுவும் சொல்லாமல். அது ஆதித்யாவை மேலும் பதட்டமாக்கியது.
"கமலிலிலி...." என்று குரலேழுப்பினான் ஆதித்யா.
அவனை நோக்கி சில அடிகள் வேகமாய் எடுத்து வைத்து, அவன் வாயை பொத்தினாள் கமலி, அவர்களுக்கு இடையிலான முதல் *பேட் டச்*சை தொடங்கிவைத்து. அப்படியே அவனை பின்நோக்கி தள்ளி கொண்டு நகர்ந்து, நீச்சல் குளத்தின் மிகப்பெரிய கண்ணாடி கதவுக்கு போடப்பட்டிருந்த திரைச்சீலையின் பின்னால் சென்று தங்களை திரைச்சீலையினால் மறைத்துக் கொண்டாள்.
"ஷ்ஷ்... ஷாலினி என்னை தேடிக்கிட்டு இருக்கா" என்றாள் ரகசியமாக.
தன் மீது சாய்ந்து கொண்டு, தனக்கு வெகு நெருக்கமாய் நின்றிருந்த கமலியை நம்ப முடியாமல் பார்த்தான் ஆதித்யா. அப்போது அவர்கள், ஷாலினி, கமலியை அழைப்பதைக் கேட்டார்கள்.
"மாமி, நான் உங்களை சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவேன்..."
அதை கேட்ட கமலி, ஆதித்யாவின் சட்டையை இருக்கமாய் பற்றிக்கொண்டு, அவன் கழுத்தில் முகம் புதைத்தாள். இந்தப் பெண்ணுக்கு ஒளிந்துகொள்ள வேறு இடமா கிடைக்கவில்லை...! தன் கணவனின் கழுத்தின் இடுக்கில் அல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறாள்...!
ஆதித்யா, அடக்கி வைக்க நினைத்த பொல்லாத ஹார்மோன்கள், தங்களது வேலையை காட்ட துவங்கின. தனது மனைவியின் உயிர் வாங்கும் நெருக்கத்தை எதிர்பார்க்காத ஆதித்யா, கண்களை மூடி குத்துக் கல்லைப் போல் நின்றான். தனது மனைவியை புடவையில் பார்த்து விட முடியாதா என்ற எண்ணத்தில் தான் அவன் இங்கு வந்தான்... ஆனால், இந்த சந்தர்ப்பத்திற்காக மலர்க்கணையுடன் காத்திருந்த காமதேவன், அதை கமலியின் மீது எய்து, ஆதித்யாவின் உதவிக்கு வந்தான்.
ஆதித்யாவுக்கு வெகு நெருக்கமாய் நின்றிருந்த கமலியை, ஆதித்யாவின் மீது வீசிய வாசம் மதிமயங்க செய்தது. அந்த வாசனையை நுகர்ந்த போது, அதுவரை ஏற்படாத ஏதோ ஒரு மாற்றம், அவளுக்குள் நிகழ்ந்தது. அவன் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை நுகர்வது அவளுக்குப் புதிதல்ல என்றாலும், அதை ஆதித்யாவின் வாசத்துடன் சேர்த்து நுகர்ந்த போது அவளது சித்தம் கலங்கிப் போனது. அதை மேலும் நுகர வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. தன்னிலையை மொத்தமாய் இழந்த கமலி, அவனது கழுத்தை சுற்றி வளைத்து ஆழமாய் மூச்சை இழுத்தாள். மலர்கணைகள் பாய்ந்துவிட்டால், கமலியே ஆயினும் தன்னிலை இழந்து தானே தீர வேண்டும்...!
ஆதித்யாவின் நிலையோ பரிதாபமாக இருந்தது. இப்பொழுது, தான் என்ன செய்யவேண்டும் என்பதே அவனுக்கு புரியவில்லை. அவனுக்கு தெரியும், அவள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள் என்பது. ஆனாலும், அவளது செய்கை, அவன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்த அனைத்தையும் தகர்த்தெறிந்தது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திற்காக அவன் எவ்வளவு ஏங்கியிருப்பான்... அவனது மனைவி, அவனுக்கு பக்கத்தில்... வெகு நெருக்கமாக... அவனை அணைத்துக் கொண்டு நிற்கிறாள். அவனது உடல் சூடு, ஜிவ்வென்று ஏறி போனது. தனது கைவிரல்களை இறுக்கமாய் மூடிக் கொண்டு, ஏதும் செய்து விடக்கூடாது என்று திடமாய் நின்றான். அதேநேரம், இந்த நெருக்கம் ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது என்றும் அவன் நினைத்தான். உலகம், தனது சுழற்சியை அப்படியே நிறுத்திவிட்டால் என்ன...!
அவன் கன்னத்தை உரசிய கமலியின் மென்மையான காதுமடல், அவனது பொறுமையை ரொம்பவே சோதித்துப் பார்த்தது. தன்னை பிணைத்து வைக்கப்பட்டிருந்த சங்கிலியை உடைத்துக்கொண்டு, அவனது கரங்கள், அவளை சுற்றி வளைத்துக் கொண்டன. அவனும் தன்னை மறந்து தான் போனான். அவள் கன்னத்துடன் தன் கண்ணம் உரசினான். தன் உடலில் அதிர்வலைகளை உணர்ந்தாள் கமலி. விழுந்துவிட போகிறோமோ என்ற எண்ணத்தில் அவனை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.
அப்பொழுது அவர்கள்,
"மாமி...." என்று ஷாலினி கத்துவதை கேட்டார்கள்.
தனது மாமியை *கையும் களவுமாய்* பிடித்துவிட்ட அந்த சின்னப்பெண்,
"நான் உங்களை பிடிச்சிட்டேன்" என்று கைதட்டி குதித்தாள்.
அதுவரை, யாருமற்ற அயல் கிரகத்தில் தன் கணவனுடன் இருந்த கமலி, அதிர்ச்சியுடனும், ஏக்கத்துடனும் தன்னை பார்த்துக்கொண்டிருந்த ஆதித்யாவை ஏறிட்டாள். அவனது அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ஷாலினியை இழுத்துக் கொண்டு, அங்கிருந்து ஓடிச் சென்றாள், ஆதித்யாவை சொல்லவொண்ணா உணர்வுகளுக்கு இடையில் விட்டு.
கண்களை மூடி, சுவற்றில் சாய்ந்து நின்றான் ஆதித்யா. சற்று நேரத்திற்கு முன், தனக்கு நிகழ்ந்தவற்றை நம்பவே முடியவில்லை அதித்யாவால். கமலி அவனை அணைத்துக் கொண்டாளே...! எவ்வளவு நேரம் அந்த திரைசீலையின் பின்னால் அவன் அப்படி நின்றான் என்று அவனுக்கு புரியவில்லை.
திடுக்கிட்டு கண் விழித்தான் ஆதித்யா. எப்படி அவன் இவ்வளவு பலவீனமடைந்தான்...? கொதித்துக் கொண்டிருந்த இரத்ததை குளிர்விக்க குளியலறை நோக்கி சென்றான். அணிந்திருந்த உடைகளை கூட அவிழ்க்கத் தோன்றாமல், அப்படியே ஷவரின் அடியில் நின்று தண்ணீரில் நனைந்தான். சிறிது நேரத்திற்கு பிறகு தலையை துவட்டியபடி குளியல் அறையை விட்டு வெளியேறினான். உடையை மாற்றிக்கொண்டு வந்து அமர்ந்தவன், தனக்குத் தானே புன்னகை புரிந்து கொண்டான், தனது வாழ்வின் மிக இதமான நொடிகளை நினைத்து கொண்டு.
ஆழமாய் மூச்சை இழுத்து விட்டு, நிதானமாய் யோசிக்கத் தொடங்கினான். கமலி, ஷாலினியுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் ஒளிந்து கொள்ள இடம் தேடித்தான் அங்கு வந்தாள். அதிர்ஷ்டவசமாகவோ, அல்லது துரதிஷ்டவசமாகவோ, தன்னையும் உடன் சேர்த்துக்கொண்டு ஒளிந்து கொண்டாள். அது எதிர்பாராதது. இதை அவன் எப்படி எடுத்துக் கொள்வது? அவன் முதலிரவில் அவளிடம் கூறியதைப் போல் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வதா?
"நீயாக என்னை தொடும் வரை நான் உன்னை தொட மாட்டேன்" என்று அவன் கூறினான் அல்லவா...?
உண்மையிலேயே அவனைத் தொட வேண்டும் என்று தான் அவள் தொட்டாளா? நிச்சயம் இல்லை. இது அவர்கள் இருவருமே எதிர்பாராதது... ஒரு விபத்து...
தனக்கு மிகவும் பிடித்தவர்களின் மீது வீசும் நறுமணம், சித்தத்தை கலக்கும் என்று அவன் எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. ஆம், கமலியும் கூட தன் மீது வீசிய வாசத்தை நுகர்ந்த பின் தான் தன்னிலை இழந்தாள். இதற்கு ஏதாவது பிரத்தியேக காரணம் இருக்க முடியுமா?
தனது மடிக்கணினியை திறந்து அதைப்பற்றி வலைத்தளத்தில் தேட துவங்கினான். அவன் நினைத்தது சரி தான்.
*சித்தத்தை கலக்கும் திறன் நறுமணத்திற்கு இருக்கிறது. குறிப்பாக, தங்கள் மனதிற்கு பிடித்த ஆண்களின் மீது வீசும் நறுமணத்தில் பெண்கள் சுலபமாய் தன்னிலை இழக்கிறார்கள். அது பெண்களின் பாலுணர்வை தூண்டுவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால் எல்லா ஆண்களின் நறுமணமும் அதை சாதித்து விடுவதில்லை* என்று படித்த போது அவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.
கமலியையே மதி மயங்கச் செய்யும் திறன், தன் மீது வீசும் நறுமணத்திற்கு இருக்கிறது என்பது அவனுக்கு பெருமை தானே. அவனும் கூட தன்னிலை இழந்ததற்கு கமலியின் மீது வீசிய நறுமணமும் ஒரு காரணம் தான். தன்னை கட்டுப்படுத்த அவன் பட்ட பாடு அவனுக்கு தானே தெரியும்...! இருந்தாலும் அவன் தோற்று தான் போனான்.
அப்பொழுது தான் அவனுக்கு சுருக் என்றது. கமலி எங்கே போனாள்? என்ன செய்து கொண்டிருக்கிறாள்? தற்போது அவளுடைய நிலை என்ன? அவளது விசித்திரமான மனம், என்னவெல்லாம் யோசித்துக்கொண்டு இருக்கிறதோ...! அவளைத் தேடிச் செல்லலாமா என்று யோசித்தான். ஒருவேளை, அவனை பார்த்து அவள் எங்காவது ஓடி விட்டால் என்ன செய்வது? அலசி ஆராய்ந்து பார்த்ததில், இது ஒரு விபத்து தான். ஆனால் அது கமலிக்கு புரியுமா...? எப்படி அவன் அவளை சமாதானப்படுத்த போகிறான்?
ஆதித்யா நினைத்தது சரி தான். ஸ்டோர் ரூமில் ஒளிந்துகொண்டு, அழுதபடி தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள் கமலி.
"உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் கேவலமா நடந்துக்கிற? உன்னைப் பத்தி ஆதிஜி என்ன நினைச்சாரோ...( தலையில் அடித்துக் கொண்டாள் ) உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா? ஏன் நீ இப்படி மாறிட்ட? எப்படி ஆதிஜி முகத்துல முழிக்க போற? ஏன் இப்படி செஞ்சன்னு கேட்டா, அவருக்கு நீ என்ன பதில் சொல்லுவ? எல்லாத்துக்கும் மேல, ஆதிஜியும் பதிலுக்கு என்னை கட்டிப்புடிச்சுட்டாரு. இதை எல்லாம் பார்த்தா, என்னோட ஃபிரண்ட்ஸ் சொன்னதெல்லாம் உண்மையா தான் இருக்கும் போல இருக்கு. அவருக்கும் என்னை தொடனும்னு மனசுல ஆசை இருக்கு போல இருக்கு... மறுபடியும் அவர் என்னை தொடுவாரோ...? அவர் தான் முதலிரவில் சொன்னாரே, நான் அவரை பேட் டச் பண்ண பிறகு தான் அவர் என்னை பேட் டச் செய்வேன்னு... இப்போ நான் என்ன பண்றது? அவர் என்னை பேட் டச் பண்ணுவாரா? இல்ல... அவரு அப்படி எல்லாம் செய்ய மாட்டாரு. அவரு ரொம்ப நல்லவரு. எனக்கு பிடிக்காததை செய்ய மாட்டார்." கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே சென்றாள் கமலி.
........
தனது அறைக்கு, இரவு உணவை கொண்டு வந்த ரேணுகாவை குழப்பத்துடன் பார்த்தான் ஆதித்யா. இருந்தாலும் எந்த கேள்வியும் கேட்காமல், அவளாகவே கூறட்டும் என்று அமைதி காத்தான்.
"உன்னுடைய டின்னர்... சாப்பிடு. நீ டின்னர் வேண்டாம்னு சொன்னதா கமலி சொன்னாங்க. அதனால தான், என்னை உன்கிட்ட குடுக்க சொல்லி அனுப்பினாங்க. நான் சொன்னா நீ கேட்பல்ல... அதனால"
ஆதித்யாவுக்கு புரிந்து போனது, அவள் தன் முன் வர தயங்குகிறாள் என்று. அவள் நிச்சயம் எதையாவது திட்டமிட்டுக் கொண்டிருப்பாள். அதற்காகத் தான் இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். ஆனால், எப்படி இருந்தாலும் அவள் இங்கு வந்து தானே ஆக வேண்டும்? என்ன செய்யப் போகிறாள்? சுவாரசியமான ஏதோ ஒன்று, அவனை நோக்கி வந்து கொண்டிருப்பது அவனுக்கு புரிந்தது. அவளாக ஏதாவது செய்யும் வரை, அவளை தொல்லை படுத்த வேண்டாம் என்று நினைத்தாள்.
"கமலி எங்கக்கா?"
"டைனிங் ரூம்ல இருக்காங்க."
சரி என்று தலை அசைத்தான் ஆதித்யா. ரேணுகா அங்கிருந்து சென்ற பின், சாப்பிடத் தொடங்கினான், அடுத்து நடக்கப் போவது என்ன என்ற ஆவலுடன்.
அனைவரும் ஒவ்வொருவராக தங்கள் அறைக்குச் செல்லத் துவங்கினார்கள். அது ஆதித்யாவுக்கு தெரியும். வெளியே வந்து, தன் கண்களை ஓட விட்டான். ஆனால், கமலி இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.
"இந்த அணில் குட்டி எந்த பொந்துல போய் ஒளிஞ்சிருக்கு தெரியலயே..." என்று முணுமுணுத்தான்.
உள்ளே வந்து கதவை சாத்தி, அதை தாளிடாமல் விட்டான்.
அப்பொழுது அவனது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பு, அவனது இல்லத்தின் லேண்ட்லைன் எண்ணில் இருந்து வந்தது. அது யாரிடமிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை... புன்னகையுடன் அழைப்பை ஏற்றான் ஆதித்யா.
"ஹலோ..."
"நான் கமலி பேசுறேன்"
"எங்க இருக்க கமலி?"
"சாரி ஆதிஜி, நான் சொல்ல மாட்டேன்"
"ஏன் சொல்ல மாட்டே?"
"நீங்க இங்க வந்துடுவீங்களே..."
"இல்ல, நான் வரமாட்டேன்"
"நெஜமாவா? "
"நிஜமா தான்"
"ஆதிஜி, ப்ளீஸ், நீங்க தூங்கிடுங்களேன்..."
"ஆமாம் கமலி, எனக்கு பயங்கரமா தூக்கம் வருது. நான் உனக்காகத் தான் காத்திருக்கேன்..."
"நீங்க தூங்கினதுக்கு பிறகு தான் நான் வருவேன்"
"ஏன் கமலி?"
"எனக்கு உங்களைப் பார்க்கவே வெட்கமாயிருக்கு"
"ஏன் கமலி?" என்றான் அவனுக்கு ஒன்றும் தெரியாததைப் போல.
"ஏன்னா... ஏன்னா..."
"ஏன்னா, என்ன?"
ஓவென்று அழுதாள் கமலி.
"ஏன் அழற கமலி?"
"நான் ஏன் அப்படி நடந்துகிட்டேன்னு எனக்கே தெரியல, ஆதிஜி. நான் வேணும்னு உங்களை கட்டி பிடிக்கல..."
"நீ முதல்ல அழுகையை நிறுத்து. நீ வேணுமின்னே செஞ்சிருந்தா கூட அதுல எந்த தப்பும் இல்ல. நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேனே, நீ என்கிட்ட எப்படி வேணாலும் நடந்துக்கலாம்னு..."
"நான் அப்படி செஞ்சிருக்க கூடாது"
"நீ எதுக்காக பயப்படுறன்னு எனக்கு தெரியும். நான் உன்னை தொடுவேன்னு நினைக்கிற, சரி தானே...?"
அவள் பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள். அந்த அமைதிக்கு ஆமாம் என்று அர்த்தம்.
"பயப்படாதே. நான் உன்னை தொட மாட்டேன்"
"நிஜமாத் தான் சொல்றீங்களா?"
"ஆமாம்"
"ஆனா, நீங்களும் என்னை கட்டிப்பிடிச்சிங்களே?"
புருவத்தை உயர்த்தி, முப்பத்தி இரண்டு பல்லும் தெரிய சிரித்தான் ஆதித்யா. அவளாகவே நெருங்கி வந்து, அவனை அணைத்த போது, அணைக்காமல் இருக்க அவன் என்ன முனிவனா? தன்னை சுதாகரித்துக் கொண்டான் ஆதித்யா.
"நான் எப்போ உன்னை கட்டி பிடிச்சேன்? நீ விழுந்திட போறேன்னு தோணுச்சு. அதனால உன்னை கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்" என்று பொய்யுரைத்தான்.
"நிஜமாவா?" என்ற அவளது குரலில் நிம்மதி தெரிந்தது.
"ஆமாம் "
"எனக்கு தெரியும், நீங்க ரொம்ப நல்லவர்னு"
தன் கண்களை சுழற்றினான் ஆதித்யா.
"சரி கமலி, எனக்கு தூக்கம் வருது. சீக்கிரம் வா."
"நீங்க தூங்குங்க ஆதிஜி. நான் அதுக்கு அப்புறம் வரேன்"
"சரி, நீ அம்பது எண்ணு. அதுக்குள்ள நான் தூங்கிடுவேன். குட் நைட்." சிரித்தபடி அழைப்பை துண்டித்தான் ஆதித்யா.
"அடேய் ஆதித்யா... உன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது டா... அவ வர்றதுக்கு முன்னாடி மரியாதையா தூங்கு. இல்லனா, எங்கேயாவது ஓடிட போறா..."
கண்ணை மூடி படுத்துக் கொண்டான் ஆதித்யா. சரியாக பத்து நிமிடம் கழித்து, மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள் கமலி.
அவன் உறங்கிக் கொண்டிருந்ததை பார்த்து, மெல்ல பூனை போல் உள்ளே நுழைந்தாள். அவளது உடைகளை எடுத்துக்கொண்டு, சத்தமில்லாமல் குளியல் அறை நோக்கி சென்றாள். உடையை மாற்றிக்கொண்டு வந்து, ஆதித்யாவை பார்த்தபடி கட்டிலின் மீது அமர்ந்தாள். அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த நெருக்கமான நொடிகளை அவளால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவளது உடல் குப்பென்று வியர்த்தது. ஆதித்யாவின் முகத்திலிருந்து தனது கண்களை அகற்றாமல் கட்டிலில் படுத்தாள்.
"தேங்க்யூ, ஆதிஜி... ஃபார் எவ்ரிதிங்..." என்று கூறிவிட்டு, சிறிது நேரம் ஆதித்யாவை பார்த்துக் கொண்டிருந்தவளை, தனது கரங்களில் தழுவிக்கொண்டது நித்திரை.
எதிர்பார்த்தபடியே, மெல்ல தன் கண்களைத் திறந்த ஆதித்யா, பெருமூச்சு விட்டான்.
"மிஸஸ் கமலி ஆதித்யா... உனக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருந்த *பெரிய பொண்ணு* இப்ப தான் என்னை பார்க்க ஆரம்பிச்சிருக்கா போலிருக்கு..."
மெல்ல அவளை நோக்கி குனிந்தவன், அவள் மீது வீசிய வாசனையை உள்ளிழுத்து, அப்படியே பின்னால் சரிந்தான்.
"டேம் இட்... எவ்வளவு நாளைக்குத் தான் நல்லவனாவே நடிக்கிறது?" என்று, தலையணையை எடுத்து, தன் முகத்தில் வைத்து அழுத்திக்கொண்டான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top