32 மிஸஸ் பாஸ்
32 மிஸஸ் பாஸ்
கமலி அலுவலகம் வரத்துவங்கி பத்து நாட்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும், வித்தியாசமான துறையில் ஒரு குறிப்பிட்ட வேலையை அவளுக்கு கொடுத்து, அவளை செய்ய வைத்தான் ஆதித்யா. இன்று அவளுக்கு வழங்கப்பட்ட துறை, *வருமானவரி*. இன்னும் இரண்டு நாளில் அவளது விடுமுறை முடிய போகிறது. இது தான், கமலி அலுவலகம் வரும் கடைசி நாள். வழக்கம் போல, ஃபைனான்ஸ் பிரிவுக்கு சென்று தனக்கு வழங்கப்பட்ட வேலையை துவங்கினாள் கமலி.
முதல் நாள் தான் கற்றுக்கொண்ட அனைத்தையும் ஒரு முறை மீண்டும் ஞாபகப்படுத்தி பார்த்துவிட்டு, அதன் பிறகு வருமானவரி பிரிவில் நுழைந்தாள். சென்ற ஆண்டிற்கான இன்ட்காம் நிறுவனத்தின் வரவையும், லாபத்தையும் பார்த்து அவளுக்கு பெருமையாக இருந்தது. தங்களது நிறுவனத்திலிருந்து செலுத்தப்பட்ட வருமான வரியை ஒப்பிட்டுப் பார்த்த போது அதில் ஏகப்பட்ட வித்தியாசம் தெரிந்தது. தங்கள் நிறுவனத்தின் முழு வருமானத்திற்கான வருமானவரி செலுத்த பட்டிருக்கவில்லை. உண்மையான வருமானத்திற்கும், வருமான வரி செலுத்த பட்டிருந்த தொகைக்கும் கிட்டத்தட்ட ஐம்பது கோடி ரூபாய் வித்தியாசம் இருந்தது. ஏதோ ஒரு கோப்பை சரி பார்த்துக் கொண்டிருந்த சரவணனின் மீது அவளது பார்வை திரும்பியது.
"சரவணன் அண்ணா..."
"சொல்லுங்க, கமலி"
"போன வருஷம் நம்மளோட வருமானத்துக்கான ஃபுல் இன்கம்டாக்ஸ்ஸை நாம ஏன் பே பண்ணல?"
கமலி கேட்ட அந்த கேள்வியினால், தாங்கள் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு, சரவணனை பார்த்த அந்தப் பிரிவின் ஊழியர்களின் மீது தன் கண்களை ஓட்டினான் சரவணன். அனைவரும் தலை குனிந்து வேலையை தொடர்ந்தார்கள். கமலியிடம் வந்தான் சரவணன்.
"எல்லாத்தையும் இப்படி நம்ம ஃஸ்டாப் முன்னாடி நீங்க கேட்கக் கூடாது, கமலி"
"ஏன் நம்ம இன்கம்டாக்ஸ் சரியா கட்டல?" என்றாள் விடாப்பிடியாக. ஆனால் இரகசியமாக.
"இது தான் பிசினஸ். நம்மளுடைய மொத்த வருமானத்தையும் கணக்கில் காட்ட மாட்டோம், நம்மளுடைய லாபத்துக்கான முழு வருமான வரியையும் கட்ட மாட்டோம்"
"ஆனா ஏன்? இப்படி ஏமாத்துறது தப்பில்லையா, அண்ணா?"
"இல்ல கமலி, இது தான் பிசினஸ் ட்ரிக்ஸ்"
"ஒருவேளை, நம்ம கம்பெனிக்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்துச்சின்னா பிரச்சனையாகும் இல்லையா? அது நம்ம கௌரவத்தை பாதிக்காதா?"
"நீங்க ஆதித்யாவை பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? அவர் எவ்வளவு பவர்ஃபுல்லான ஆளுன்னு உங்களுக்கு தெரியுமா? அவருடைய கம்பெனியை ரெய்ட் பண்ற எண்ணத்தோட இந்த கம்பெனிக்குள்ள கால் எடுத்து வைக்க இன்னும் ஒருத்தன் பொறக்கல..."
அதைக் கேட்டு அதிர்ச்சியில் மென்று முழுங்கினாள் கமலி.
"நீங்க என்ன நினைக்கிறீங்கனு எனக்கு தெரியும், கமலி. பிசினஸ்னு வந்தா எல்லாருமே இப்படித் தான். இதைப் பத்தி எதுவும் கேட்டு, ஆதித்யாவை சங்கட படுத்தாதீங்க ப்ளீஸ்."
சரி என்று சோகமாய் தலையசைத்தாள் கமலி. அதன் பிறகு, அங்கு இருக்க அவளுக்கு பிடிக்கவில்லை. அவளது மனம் வருமான வரித்துறை கணக்குகளில் சுழன்று கொண்டிருந்தது. கம்ப்யூட்டரை லாக் அவுட் செய்துவிட்டு, தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் கமலி.
கமலியை இன்ட்காம் அலுவலகத்தில் பார்த்த ஒரு நபர், அதிர்ச்சி அடைந்தாள். அவள் வேறு யாருமல்ல ஷில்பா தான். தனது அப்பாவின் சார்பாக ஒரு முக்கியமான கோப்பை பிரபாகரனிடம் வழங்க வந்திருந்தாள் அவள்.
வருமான வரி கணக்கை பற்றி யோசித்துக் கொண்டு வந்த கமலியும் அவளை பார்த்து நின்றாள். தன்னை பார்த்தவுடன், கமலி வழக்கம் போல் பதட்டம் அடைவாள் என்று நினைத்த ஷில்பாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தன்னம்பிக்கையுடன் காணப்பட்டாள் கமலி. ஷில்பா என்ற ஒருத்தி, அங்கு இல்லவே இல்லை என்பதைப் போல் அனாயாசமாய் ஆதித்யாவின் அறையை நோக்கி நடந்தாள் கமலி. அவள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அவளை நோக்கி விரைந்து வந்து, அவள் வழியை மறித்து நின்றாள் ஷில்பா.
முக்கியமான கான்ஃபரன்ஸ்ஸை முடித்துக்கொண்டு வெளியே வந்த ஆதித்யாவும், பிரபாகரனும் ஷில்பா கமலியை வழி மறிப்பதை பார்த்தார்கள். அவர்களை நோக்கி பிரபாகரன் செல்ல முயன்ற போது, அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்தி, *வேண்டாம்* என்று தலை அசைத்தான் ஆதித்யா. அது பிரபாகரனுக்கு அதிர்ச்சியை தந்தது. அவர்கள் இருவரும், நேர் எதிரான மனநிலையில் கமலியை பார்த்துக் கொண்டு நின்றார்கள். பிரபாகரனுக்கு பதட்டம் உச்சத்தை தொட்டது. ஆனால் ஆதித்யாவோ, தங்களுக்கிடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்த பிறகு, கமலிக்கு போதுமான நம்பிக்கையைத் தான் வழங்கிவிட்ட பிறகு, இந்த சூழ்நிலையை கமலி எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்று பார்க்கும் ஆவலில் நின்றான்.
"நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்றாள் ஷில்பா.
சில நொடி யோசித்த கமலி, அந்தப் பக்கம் சென்ற வரவேற்பாளர் பெண்ணை அழைத்தாள்.
"கேரலின்..."
கமலி தன்னை அழைப்பதைப் பார்த்து, அவளை நோக்கி ஓடிவந்தாள் கேரலின்.
"எஸ், மேம்?" என்றாள் பணிவுடன்.
"நான் யாரு?" என்றாள் கமலி.
ஒன்றும் புரியாத கேரலின்,
"மேம்....?" என்றாள்
"நான் யாருன்னு கேட்டேன்..."
"மிஸஸ் பாஸ்" என்றாள் கேரலின்.
"கொஞ்சம் சத்தமா சொல்லுங்க"
"மிஸஸ் பாஸ்" என்றாள் தன் குரலை உயர்த்தி கேரலின்.
"நான், என்னோட ஹஸ்பண்ட் கேபினுக்கு போறேன். எனக்கு சூடா ஒரு கப் காபி அனுப்புங்க... சர்க்கரை தூக்கலா..." என்றாள் ஷில்பாவை பார்த்தபடி.
"எஸ் மேம்" என்றாள் கேரலின்.
ஷில்பாவை நோக்கி ஒரு அலட்சிய பார்வையை வீசி விட்டு, ஆதித்யாவின் அறையை நோக்கி நடந்தாள் கமலி. தனது கண்களையும், காதுகளையுமே நம்ப முடியவில்லை ஷில்பாவால். தன்னை பார்த்தாலே நடுநடுங்கிய கமலியா இது?
அவளது தெனாவெட்டான இந்த நடவடிக்கையை பார்த்த ஆதித்யாவும், பிரபாகரனும் பிரமித்துப் போனார்கள். அவள் ஷில்பாவை இவ்வளவு சாதாரணமாய் *தூசி தட்டி விட்டு* செல்வாள் என்பதை ஆதித்யாவே கூட எதிர்பார்க்கவில்லை. பெருமையும் சந்தோஷமும் கலந்த புன்னகையை உதிர்த்தான் ஆதித்யா.
"பார்... முழுசா மிஸஸ் ஆதித்யாவா மாறி இருக்கிற உன் மனைவி கமலியை பார்... " என்று சந்திரமுகி படத்தில் வரும் வசனத்தை பேசினான் பிரபாகரன் சிரித்தபடி.
கலகலவென்று சிரித்தான் ஆதித்யா.
"கமலி கலக்கிட்டாங்க. எவ்வளவு கூலா, கேரலினை வச்சி அவளுக்கு பதில் சொன்னாங்க பார்த்தியா...!"
ஆமாம் என்று பெருமையுடன் தலையசைத்தான் ஆதித்யா.
"தான் யாருன்னு நேரடியா பதில் சொல்லாம, செயலால காட்டிட்டாங்க...! இந்த தெனாவெட்டு எல்லாம் அவங்களுக்கு உன்கிட்ட இருந்து தான் வந்திருக்கனும்..." என்று அவன் கூற, மீண்டும் வாய் விட்டு சிரித்தான் ஆதித்யா.
அப்படி அனைத்தையும் அவள் தன்னிடமிருந்து கற்றுக் கொண்டுவிட்டால், அவனை விட சந்தோஷப்பட போவது வேறு யார்? புன்னகையுடன் தன் அறையை நோக்கி நடந்தான் ஆதித்யா.
இதற்கிடையில்...
ஆதித்யாவின் அறைக்கு வந்த கமலி, லாவண்யாவுக்கு ஃபோன் செய்தாள்.
"சொல்லுமா, இன்ட்காம் குயின்..."
"எதுக்காக இப்பல்லாம் என்னை இந்த பேர் சொல்லி கூப்பிடுற நீ?" என்றாள் கமலி.
"ஏன்னா, அது தான் நீ..."
"இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?"
"என்ன நடந்தது?"
"நீ நடக்கணும்னு ஆசைப்பட்ட விஷயத்தை நான் செஞ்சிட்டேன்"
"என்ன செஞ்ச?"
"அன்னைக்கு சுமித்ரா வீட்ல நீ சொன்ன இல்ல, என்னோட பவர் என்னன்னு ஷில்பாவுக்கு தெரியணும்னு...?"
"மை காட்... நிஜமாவே நீ யாருன்னு அவளுக்கு காட்டிட்டியா?"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி..." என்றாள் கமலி.
"என்ன பண்ண?"
நடந்ததை அவளிடம் விவரித்தாள் கமலி. அதைக்கேட்ட லாவண்யா வாயடைத்துப் போனாள்.
"அய்யையோ... நான் அங்க இல்லாம போயிட்டேனே... இருந்திருந்தா அங்கேயே உன்னைக் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுத்திருப்பேன்... அந்த சீனை ஆதித்யா பாத்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்..." என்றாள் லாவண்யா கவலையுடன்.
அதைக் கேட்டு கமலிக்கும் கூட கவலையாகத் தான் போனது. ஆதித்யா அந்த காட்சியை கண்டுகளித்த விஷயம், அவர்களுக்குத் தான் தெரியாதே...
"நீ இப்போ என்ன செஞ்சுகிட்டு இருக்க?" என்றாள் கமலி.
"டேட்டிங் போக ரெடியாயிகிட்டு இருக்கேன்"
"டேட்டிங்கா...? யார் கூட?"
"நீ என்னை இன்சல்ட் பண்ணிட்ட கமலி. உனக்கு தெரியாதா நான் யாரை காதலிக்கிறேன்னு?" என்றாள் சோகமான குரலில் லாவண்யா.
"என்னது...??? ராகுல் உன்னுடைய ப்ரொபோஸலை அக்சப்ட் பண்ணிட்டாரா?" என்றாள் அதிர்ச்சியாக கமலி.
தன் நாக்கை கடித்தாள் லாவண்யா. அவள் அதைப் பற்றி கமலியிடம் கூறவே இல்லையே...
"சாரி டார்லிங்... நான் உன்கிட்ட சொல்லல"
"அப்புறம் எனக்கு எப்படி தெரியுமாம்?"
"சாரி, சாரி, ஆயிரம் சாரி..."
"பரவாயில்ல... ஆனா, நான் ராகுலை சும்மா விடமாட்டேன். அவர் கூட என்கிட்ட எதுவும் சொல்லல"
"நீயாச்சு, உன்னோட மச்சினன் ஆச்சு..."
"சரி, நீ கிளம்பு. உனக்காக ராகுல் காத்திருப்பாரு"
"தேங்க்யூ ஸ்வீட் ஹார்ட், பை..." போனுக்கு முத்தமிட்டு அழைப்பை துண்டித்தாள் லாவண்யா.
சிரித்துக்கொண்டே திரும்பிய கமலி, ஆதித்யா அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்ததை பார்த்தாள்.
"நீங்க வந்துட்டீங்களா ஆதிஜி"
ஷில்பாவை அவள் வெளுத்து வாங்கியதை பற்றி பேச வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது கோட்டை கழட்டி, நாற்காலியின் மீது வைத்த ஆதித்யா, கமலி கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.
"நான் வீட்டுக்கு போறேன், ஆதிஜி"
"என்ன ஆச்சு கமலி, உடம்புக்கு முடியலையா?"
"இல்ல ஆதிஜி, சும்மா தான்..."
"சரி" என்றான் மெல்லிய குரலில்.
"நீங்க அப்செட் ஆயிட்டீங்களா?"
இல்லை என்று தலையசைத்தான் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.
"நீங்க அப்செட் ஆயிட்டீங்க. எனக்கு தெரியும்."
"பின்ன என்ன? இது தான் நீ இங்க வர்ற கடைசி நாள். இன்னைக்கு ஃபுல்லா நீ என் கூட இருப்பேன்னு நினைச்சேன்"
"காலேஜுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைக்கணும்ல ஆதிஜி? அதுக்குத் தான் வீட்டுக்கு போகணும்னு நினைச்சேன்"
"நாளைக்கு சண்டே தானே...? நாளைக்கு செய்யலாம் இல்ல?"
சரி என்று தலையசைத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள் கமலி. அவள் அங்கு இருந்தால், அவளது நாக்கு அவளை சும்மா இருக்க விடாது. வருமான வரியை பற்றி அவனை ஏதாவது கேட்டு வைத்து விடுவாளோ என்ற பயத்தில் தான் அங்கிருந்து செல்ல நினைத்தாள் கமலி.
"நீ இங்க வந்த பத்து நாளும் உனக்கு யூஸ் ஃபுல்லா இருந்திருக்குமுன்னு நினைக்கிறேன்"
ஆமாம் என்று தலையசைத்தாள் கமலி.
"உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா என்னை கேளு"
"நீங்க எப்படி இன்கம்டாக்ஸ் கட்டுவீங்க?" சட்டென்று கேள்வி வந்தது கமலியிடம் இருந்து.
"நம்மோட மொத்த டர்ன் ஓவருக்கும் சேர்த்து இன்கம்டேக்ஸ் கட்டுவோம்"
"மொத்த டர்ன் ஓவருக்குமா?" என்றாள் கமலி அதிர்ச்சியாக.
"ஆமாம்"
"பிசினஸ்ல யாருமே நேர்மையா இருக்க மாட்டாங்களாமே...? அவங்களுடைய உண்மையான லாபத்தை மறைச்சி, பாதி இன்கம்டாக்ஸ் தான் கட்டுவாங்களாமே...?"
தன் புருவத்தை உயர்த்தினான் ஆதித்யா ஆச்சரியமாய்.
"நீ இதையெல்லாம் எங்கிருந்து கேட்ட?"
"சினிமாவில் பார்த்தேன்" என்றாள் திணறி.
"நீ சொல்றது சரி தான். நிறைய பேர் அப்படித் தான் செய்யறாங்க. ஆனா, நம்ம கம்பெனி அப்படி கிடையாது."
அங்கிருந்த ஷோ கேஸை சுட்டிக்காட்டி
"அங்க பாரு"
அங்கு சில சான்றிதழ்கள், அழகாய் சட்டம் அடித்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தாள் கமலி.
"அது என்ன ஆதிஜி?"
"போய் என்னன்னு பாரு"
அதன் அருகில் சென்று, அவை என்ன சான்றிதழ்கள் என்று பார்த்தாள் கமலி.
"அதெல்லாம் கோல்டன் சர்டிஃபிகேட்ஸ்"
"இது எதுக்கு?"
"கரெக்டா இன்கம்டாக்ஸ் பே பண்றவங்களுக்கு கிடைக்கிற சர்டிபிகேட். போன மூணு வருஷமா நம்ம கம்பெனிக்கு அது கிடைச்சிகிட்டிருக்கு"
கமலிக்கு தூக்கிவாரிப்போட்டது. சரியாக வருமான வரி செலுத்துவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ஆனால், அதற்கு நேர்மாறாக அல்லவா சரவணன் கூறினார்? இங்கு என்ன நடக்கிறது?
கமலியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை விசித்திரமாய் பார்த்தான் ஆதித்யா.
"நமக்கு கிடைச்ச சர்டிஃபிகேட்ஸை நினைச்சு நீ சந்தோஷப்படுவேன்னு நினைச்சேன்" என்றான்.
"எனக்கு ரொம்ப சந்தோசம் தான், ஆதிஜி... எனக்கு பேச்சே வரல... நம்ம கம்பெனிக்கு எவ்வளவு நேர்மையானது..." என்றாள் தட்டுத் தடுமாறி.
"நேர்மைங்குறது வேற ஒன்னும் இல்ல... சுய ஒழுக்கம் தான். நம்ம நேர்மையா இருந்தா, யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்ல."
ஆமாம் என்று பொய் சிரிப்பை உதிர்த்தாள் கமலி.
"நம்ம கம்பெனியோட எல்லா அக்கவுண்ட்டையும் நீங்க செக் பண்ணுவீங்களா?" என்றாள் தயக்கத்துடன்.
அதைக்கேட்டு சிரித்தான் ஆதித்யா.
"எவ்வளவு ஈசியா கேட்டுட்ட கமலி? அது அவ்வளவு சுலபமான விஷயம்னு நினைக்கிறாயா? ஆரம்பத்தில் எல்லாத்தையும் நான் தான் செக் பண்ணிக்கிட்டு இருந்தேன். நம்ம கம்பெனி ரொம்ப பெருசா வளர்ந்ததுக்குப் பிறகு, எல்லா வேலையையும் என்னால தனியா செய்ய முடியல. அதனால தான், அந்தந்த வேலைக்கு தகுதியானவங்ககிட்ட அந்த பொறுப்புக்களை நான் ஒப்படைச்சேன்"
"ஆனா, உங்ககிட்ட ஃபைனான்ஸ் டிபார்ட்மென்ட் பாஸ்வேர்ட் இருக்கே..."
"பின்ன? நான் பாஸ் ஆச்சே..." என்று சிரித்தான்.
கமலிக்கு குழப்பமாய் போனது. தனக்கு தெரிந்ததை ஆதித்யாவிடம் கூறுவதா வேண்டாமா என்று தவித்தாள் அவள். அவனிடம் கூறினால், அது அவனுக்கும் சரவணனுக்கும் இடையில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தும். அது ரேணுகாவை வெகுவாய் பாதிக்கும். அந்த பாதிப்பு குடும்பத்திலும் எதிரொலிக்கும். ஆதித்யா தனது அக்கா ரேணுகாவை மிகவும் நேசிக்கிறான். சரவணன் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறான். அவள் எப்படி இந்த உண்மையை ஆதித்யாவிடம் கூறுவது? உண்மை தெரிந்தால் ஆதித்யா உடைந்து போய் விட மாட்டானா? ஆனால், அதே நேரம், அவனிடமிருந்து எப்படி உண்மையை மறைப்பது? கமலிக்கு அழுகையாய் வந்தது...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top