30 அலுவலகத்தில் கமலி

30 அலுவலகத்தில் கமலி

ஆதித்யாவுடன் அலுவலகம் செல்ல தயாரானாள் கமலி. வழக்கம் போல ஆதித்யாவின் நெற்றியில் குங்குமம் வைத்து விட வந்தாள் ரேணுகா. அவளைத் தடுத்து நிறுத்திய ஆதித்யா,

"கமலிக்கு வச்சு விடுங்க கா" என்றான்.

அவன் கமலியை கைகாட்டி அழைக்க, ஓடி வந்து அவன் அருகில் நின்றாள். அவளுக்கு குங்குமம் வைத்து விட்டாள் ரேணுகா. அப்போது அங்கு, தயிரும், சர்க்கரையும் கலந்த கலவையுடன் வந்தார் பாட்டி.

"இதை சாப்பிடு கமலி, எல்லாத்துலயும் உனக்கு வெற்றி கிடைக்கும்" கமலியை நோக்கி ஒரு தேக்கரண்டி நிறைய தயிரும் சர்க்கரையும் கலந்த கலவையை நீட்டினார்.

அதை சாப்பிட்ட கமலி, பாட்டியின் கையில் இருந்து அந்த கிண்ணத்தை வாங்கி, ஒரு தேக்கரண்டி தயிர் சர்க்கரை கலவையை ஆதித்யாவை நோக்கி நீட்டினாள். அவளை ஆதித்யா ஆச்சரியமாய் பார்க்க,

"உங்களுக்கும் எல்லாத்துலயும் வெற்றி கிடைக்கட்டும் ஆதிஜி" என்றாள்.

"ஆதிக்கு தயிர், சர்க்கரை பிடிக்காது. அவன் எப்பவும் அதை சாப்பிடவே மாட்டான்" என்றாள் ரேணுகா.

கமலியின் முகத்தில் இருந்த சந்தோஷம் வடிந்து போனது. அவள் தன் கையை கீழேயிறக்கும் முன், அவள் கையைப் பற்றி அந்த தயிர் கலவையை உண்டான் ஆதித்யா. அது மீண்டும் கமலியின் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்தது.

"கிளம்பலாம்" என்றான்.

அனைவரையும் நோக்கி கையசைத்துவிட்டு அவனுடன் கிளம்பிச் சென்றாள் கமலி.

இண்ட்காம் அலுவலகம்

ஆதித்யாவுடன் அலுவலகத்தில் நுழைந்த கமலி, அன்று தன்னை தடுத்து நிறுத்திய வரவேற்பாளர் பெண்ணை நோக்கி ஒரு பார்வையை வீச தவறவில்லை. தன் தலையை உயர்த்தி மிடுக்காய் நடந்த கமலியை பார்த்து, அந்த வரவேற்பாளர் பெண்,

"குட்மார்னிங் மேடம்" என்றாள்.

தன் தலையை அசைத்தபடி பெருமையுடன் ஆதித்யாவுடன் நடந்தாள் கமலி.

அவளை *ஃபைனன்ஸ்* பிரிவுக்கு அழைத்து சென்றான் ஆதித்யா. அந்தப் பிரிவின் தலைவனான ரேணுகாவின் கணவன், சரவணன் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான்.

"வெல்கம் கமலி" என்றான்.

ஆதித்யா ஏதோ கூற போக, சரவணனே தொடர்ந்தான்.

"நீங்க ஏற்கனவே கமலிக்கு நிறைய சொல்லி கொடுத்துட்டீங்க. இந்த தடவை, அந்த கவுரவத்தை எனக்கு கொடுங்களேன் ஆதித்யா" என்றான் சரவணன்.

கமலியைப் பார்த்து புன்னகைத்தான் ஆதித்யா.

"உனக்கு என்ன சந்தேகமானாலும் மாமாகிட்ட தாராளமாக கேட்கலாம்" என்றான் ஆதித்யா.

"நீங்க போங்க ஆதிஜி. நான் பார்த்துகிறேன்" என்றாள் கமலி.

"முடிஞ்சதுக்கு பிறகு என்னோட கேபினுக்கு வா"

சரி என்று தலையசைத்தாள் கமலி. அங்கிருந்து தன் அறைக்கு சென்றான் ஆதித்யா.

அப்பொழுது, அந்த பிரிவில் இருந்த வேறு ஒரு நபரின் மீது கமலியின் பார்வை விழுந்தது. அது வேறு யாருமல்ல. சுமித்ராவின் கணவன் சுரேஷ் தான். சுமித்ராவின் கழுத்தில் இருந்த சிவப்பு நிற காயத்தை நினைத்து பார்த்து, மென்று முழுங்கினாள் கமலி. அது அவர்களின் சொந்த விஷயம் என்றெண்ணி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவனை அழைத்தாள்.

"சுரேஷ் அண்ணா..."

அவளைப் பார்த்து சங்கடத்துடன் சிரித்தான் சுரேஷ். கமலி அவனுடைய பாஸ் ஆயிற்றே. சிரித்தபடி எழுந்து நின்ற சுரேஷ்,

"குட் மார்னிங் மேடம்" என்றான்.

அவன் தன்னை *மேடம்* என்று அழைத்தது, கமலிக்கு என்னவோ போல் இருந்தது.

"உங்களுக்கு சுரேஷை எப்படி தெரியும் கமலி?"  என்றான் சரவணன்.

"அவர் என் ஃப்ரெண்ட் சுமித்ராவுடைய ஹஸ்பண்ட்" என்றாள் கமலி.

"ரொம்ப நல்லதா போச்சு"

சுரேஷின் பக்கம் திரும்பி,

"கமலிக்கு ஃபைனான்ஸ்ல இருக்கிற பேசிக் விஷயங்களை சொல்லி கொடுங்க... இன்வெஸ்ட்மெண்ட், ப்ராஃபிட், லாஸ், அப்புறம் இன்கம்டாக்ஸ்"

"ஓகே சார்" என்றான் சுரேஷ்.

சரவணனை குழப்பமாய் பார்த்தாள் கமலி. தான் அவளுக்கு கற்றுக் கொடுப்பதாக தானே ஆதித்யாவிடம் கூறினான்? பிறகு ஏன் சுரேஷிடம் கற்றுக் கொடுக்கச் சொல்லி கூறுகிறான்?

"உட்காருங்க மேடம்" என்றான் சுரேஷ்.

அமைதியாய் அமர்ந்தாள் கமலி. அவளுக்கு அடிப்படை விஷயங்களை கற்றுத் தர தொடங்கினான் சுரேஷ். ஒன்றரை மணி நேரத்தில், அவன் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் கற்றுக் கொண்டுவிட்டாள் கமலி.

"சார், பேசிக் சொல்லிக் கொடுத்திட்டேன்" என்றான் சுரேஷ், சரவணனிடம்.

"அப்படியா? சுரேஷ் சொல்லிக் கொடுத்ததில் இருந்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கட்டுமா?" என்றான் சரவணன்.

சரி என்று ஆர்வமுடன் தலையசைத்தாள் கமலி. சரவணன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் டான், டான் என்று கமலி பதில் கூற, அசந்து போனான் சரவணன்.

"நான் நெனச்சதை விட நீங்க ரொம்ப புத்திசாலியா இருக்கீங்க கமலி. இன்னைக்கு இது போதும்" என்றான் சரவணன்.

சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து ஆதித்யாவின் அறைக்கு கிளம்பினாள் கமலி.

ஆதித்யாவின் அறைக்கு அவள் வந்த போது அங்கு அவன் இல்லை. அவனுடைய மடிக்கணினியை பார்த்தவுடன், அவளுக்கு ஆர்வமானது. ஓடிச் சென்று அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்தாள் கமலி. அவனது மடிக்கணினியை உயிரூட்ட நினைத்த போது, அவளது கை அப்படியே நின்றது, அவனது மேசையில் இருந்த தனது புகைப்படத்தை பார்த்த போது.

நகத்தை கடித்தபடி தனது புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.  அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று அவளுக்கு தெரியவில்லை. அதை ஆதித்யா அவனது அலுவலகத்தில் வைத்திருக்கிறான் என்று எண்ணிய போது அவளது இதழ்கள் புன்னகையுடன் விரிந்தன. சந்தோஷமாய் அந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி அவள் சுற்றிய போது, அவள் எதிரில் தன் கைகளை கட்டிக்கொண்டு ஆதித்யா நின்று கொண்டிருந்தான்.

அந்த நாற்காலியில் இருந்து எழ முயன்ற போது, இரண்டு எட்டில் அவளை அடைந்து, அவள் தோளை அழுத்தி மீண்டும் அமர வைத்தான். அவளை நோக்கி குனிந்தவன்,

"என்னோட சேரில் உட்கார்ற தைரியம் யாருக்கும் இருந்ததில்ல..."

அவனை பயத்துடன் ஏறிட்டு பார்க்க, அணிலை போல இருந்த அவள் முகத்தை  தீர்க்கமாய் பார்த்துக்கொண்டு நின்ற ஆதித்யா, தன் முகபாவத்தை மாற்றாமல்,

"ஆனா நீ உட்காரலாம்... அணில்குட்டி" என்று புன்னகைத்தான்.

அவன் தன்னை *அணில்குட்டி* என்று அழைத்ததை கேட்டு  அவள் கண்ணம் சிவந்து போனது.

"நான் அணில்குட்டியா?"

"உன்னோட முகம் அப்படித் தான் இருக்கு"

அவனது நாற்காலியிலிருந்து அவள் எழ முயன்ற போது,

"உட்காருன்னு சொன்னேன்" என்று மீண்டும் அவள் தோள்களை அழுத்தி அமர வைத்தான்.

மீண்டும் அவனது நாற்காலியில் அமர்ந்தாள் கமலி.

"ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? நிறைய கத்துக்கணும்னு உனக்கு விருப்பமில்லையா?"

"இன்வெஸ்ட்மெண்ட், ப்ராஃபிட், லாஸ், இன்கம்டாக்ஸ் பத்தி சுரேஷ் அண்ணன் சொல்லிக் கொடுத்தாரு"

"சுரேஷா...? மாமா சொல்லி கொடுக்கலையா?"

இல்லை என்று தலையசைத்தாள் கமலி. ஆதித்யாவின் முகம் மாறியதை அவள் கவனித்தாள்.

"பரவாயில்லை ஆதிஜி. சுரேஷ் அண்ணன் ரொம்ப நல்லா சொல்லிக் கொடுத்தாரு"

சரி என்று தலையசைத்துவிட்டு, இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டுகொண்டு அவள் அருகில் அமர்ந்தான் ஆதித்யா.

"ஆதிஜி, நான் அந்த சேர்ல உட்காந்துக்குறேன். நீங்க இதுல உட்காருங்க"

"ஏன்?"

"நீங்க தான் இங்க பாஸ். உங்க ஆஃபிஸ் ஸ்டாஃப் யாராவது பார்த்தா ஏதாவது பேச போறாங்க..."

"பேசட்டுமே... அவங்களுடைய பாஸுக்கு யார் பாஸ்ன்னு அவங்க தெரிஞ்சுக்கட்டும்"

கமலியின் கண்கள் பாப்கான் பொறிவதை போல் பொறிந்தது.

"ஆதி.... ஜி....."

"ம்ம்ம்?"

"பாஸுக்கு பாஸ் யாரு?"

"என்னோட சேர்ல உட்காந்திருக்கும் மேடம் தான்"

அவளது விழிகள் அவன் முகத்தில் பதற்றத்துடன் பதிந்து நின்றது. அவள் ஏதோ சொல்ல நினைக்க, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. அவள் அந்த நாற்காலியில் இருந்து ஏழ முயன்ற போது, ஆதித்யாவின் கூரிய பார்வை அவளை மீண்டும் அமர செய்தது. அப்போது ஆதித்யாவின் அறையில் நுழைந்தான் சரவணன். சிஇஓ நாற்காலியில் அமர்ந்திருந்த கமலியை பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தான். அவனைப் பார்த்தவுடன் தலையை குனிந்து கொண்டாள் கமலி.

"சொல்லுங்க மாமா"

"இந்த ஃபைலில் நீங்க சிக்னேச்சர் போடணும்"

"நான் சைன் பண்ணி அனுப்பி வைக்கிறேன்"

அந்தக் கோப்பை ஆதித்யாவின் மேசையின் மீது வைத்துவிட்டு அங்கிருந்து சென்றான் சரவணன்.

"ஆதிஜி ப்ளீஸ் இப்படி பண்ணாதிங்க"

"ஏன் கமலி?"

"எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு"

"இதுல சங்கடப்பட என்ன இருக்கு?"

"மத்தவங்க முன்னாடி இந்த சேர்ல உட்கார எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு"

அதை கேட்டு சிரித்தான்.

"வெக்கமா? ஏன் அணில்குட்டி?" என்றான் கிண்டலாக.

"என்னை அப்படி கூப்பிடாதீங்க. அப்புறம் நான் இங்கிருந்து போயிடுவேன்" என்றாள் சிணுங்கலுடன்.

"அப்படியா?" என்றான் தன் கைகளை கட்டிக்கொண்டு.

அமைதியாய் இருந்தாள் கமலி.

"பதில் சொல்லு. போயிடுவியா?" என்றான் அதிகாரமாக.

உதட்டை சுழித்து, மாட்டேன் என்று தலையசைத்தாள்.

"தட்ஸ் குட்" என்று சிரித்தான் ஆதித்யா.

தங்களது உறவில் ஏற்பட்டிருந்த அதீத முன்னேற்றத்தை நினைத்தபடி தனது மடிக்கணினியை உயிர்ப்பித்தான் ஆதித்யா.

இன்ட்காம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, ஃபைனான்ஸ் பிரிவில் நுழைந்தான். *கடவுச்சொல்*லை பதிவிட சொல்லி கேட்டதால், ஆதித்யாவின் முகத்தை பார்த்தாள் கமலி.

"Intfin2021 ன்னு டைப் பண்ணு கமலி" என்றான்.

கமலி அதை தட்டச்சு செய்தாள்.

"இது தான் நம்ம ஃபைனான்ஸ் டிபார்ட்மென்ட் பாஸ்வேர்ட். என்னையும் மாமாவையும் தவிர இது வேற யாருக்கும் தெரியாது"

"இப்போ எனக்கும் தெரிஞ்சுருச்சே"

"ஆமாம், அதை ஞாபகத்தில் வச்சுக்கோ. யார்கிட்டயும் சொல்லாம ரகசியமாக இருக்கட்டும். இதை ஓபன் பண்ணி, என்ன இருக்குன்னு நீ எப்ப வேணும்னாலும் பார்க்கலாம். உனக்கு ஏதாவது டவுட் இருந்தா என்னை கேளு"

"உங்களுக்கு எதுவும் வேலை இல்லையா?"

"நிறைய இருக்கு"

"அப்படின்னா நீங்க அந்த வேலையை செய்யுங்க. நான் ஃபைனான்ஸ் டிபார்ட்மென்ட்க்கு போறேன்"

"சரி. லஞ்சுக்கு இங்க வந்துடு"

"ஓகே ஆதிஜி"

மீண்டும் ஃபைனான்ஸ் பிரிவுக்கு சென்றாள். அப்பொழுது அங்கு சரவணன் இல்லை. அவளுக்கென்று ஒரு கணினியை ஒதுக்கி கொடுத்தான் சுரேஷ். அதில் அமர்ந்து, ஆதித்யா கூறிய கடவு சொல்லை பயன்படுத்தி, ஃபைனான்ஸ் பிரிவின் உள்ளே நுழைந்தாள்.

அந்த வருடத்திற்கான *இன்ட்காமின்* வரவு, செலவுகளை கவனமாய் பார்வையிட துவங்கினாள். ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே வந்தவளின் கரங்கள் ஓரிடத்தில் அப்படியே நின்றது. அது, ஒரு கோடி ரூபாயை, நன்கொடையாக அவளது கல்லூரிக்கு அளித்ததற்கான பரிவர்த்தனை.

"ஒரு கோடி ரூபாயா?" என்று முணுமுணுத்தாள் கமலி.

அந்த தேதியை பார்த்த போது, அது, அவள் கல்லூரியில் சேர்ந்த அதே தேதியாக இருந்தது. சுரேஷை அழைத்தாள் கமலி

"சுரேஷ் அண்ணா..."

அவளை நோக்கி அவன் திரும்ப, தன்னிடம் வருமாறு கையசைத்தாள் கமலி. அவளிடம் ஓடோடி வந்தான் சுரேஷ். அந்த குறிப்பிட்ட பண பரிவர்த்தனையை காட்டிய போது, சுரேஷின் கண்கள் அகல விரிந்தது. இன்ட்காமின் மிக இரகசியமான தளத்தில் எப்படி நுழைந்தாள் கமலி?

"எதுக்காக எங்க காலேஜ்க்கு ஒரு கோடி ரூபாயை டொனேஷனா நம்ம கம்பெனியில் இருந்து கொடுத்திருக்காங்க?" என்றாள்.

"அது எனக்கு தெரியாது மேடம். ஆனா, உங்களுடைய காலேஜ் சீட்டுக்காக ஆதித்யா சார் ஒரு கோடி ரூபாயை டொனேஷன் கொடுத்தார்னு சுமித்ரா என்கிட்ட சொன்னா"

அதைக் கேட்டு கமலியின் விழி பிதுங்கியது. தனது கல்லூரி சீட்டுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்தாரா ஆதிஜி? தான் நல்ல மதிப்பெண் பெற்றதால் தனக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததாக தானே தன்னிடம் கூறினார்? அப்படி என்றால் அவளது மதிப்பெண்ணுக்காக அவளுக்கு இடம் கிடைக்கவில்லையா? ஆதிஜி கொடுத்த பணத்தினால் தான் கிடைத்ததா? அதுவும் ஒரு கோடி ரூபாய்...! அதைப் பற்றி தன்னிடம் ஒன்றும் கூற கூட இல்லை ஆதிஜி... சிலை போல் அமர்ந்திருந்தாள் கமலி.

அந்த நேரம் அங்கு வந்த சரவணன், அவள் கணினியின் திரையை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததை கண்டான். அவள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் மூச்சு முட்டியது. தனக்கும் ஆதித்யாவிற்கும் மட்டுமே தெரிந்த கடவுச்சொல் கமலிக்கு எப்படி தெரிந்தது?

"கமலி, இந்த சைட்டை நீங்க எப்படி ஓபன் பண்ணிங்க? உங்களுக்கு பாஸ்வேர்ட் எப்படி தெரிஞ்சது?"

"ஆதிஜி சொன்னாரு"

"ஓஹோ..."

அந்த கணினியை லாக் அவுட் செய்துவிட்டு, வெளியே வந்தாள் கமலி. தனது கைப்பேசியை எடுத்து லாவண்யாவுக்கு ஃபோன் செய்தாள்.

"என்னம்மா, இன்ட்காம் குயின்..." என்றாள் லாவண்யா.

"நான் கேட்கிற கேள்விக்கு உண்மையை தான் சொல்லுவேன்னு எனக்கு சத்தியம் பண்ணு லாவண்யா"

"கண்டிப்பா சொல்றேன்"

"என்னுடைய காலேஜ் சீட்டுக்காக ஆதிஜி எவ்வளவு டொனேஷன் கொடுத்தாரு?"

லாவண்யா அமைதியானாள்.

"ப்ளீஸ் சொல்லு லாவண்யா"

"ஒரு கோடி ரூபா"

"என்னோட மார்க்குகாக எனக்கு சீட் கிடைக்கலையா?"

"90% க்கு மேலே மார்க் இருக்கிறவங்களுக்கு தான் நம்ம காலேஜ்ல காசில்லாம சீட்டு கிடைக்கும்... நான் என்னோட சீட்டுக்கு அஞ்சு லட்சம் கொடுத்தேன்"

"ஆனா, நான் உன்னை விட நிறைய மார்க் தானே எடுத்திருந்தேன்? அப்படி இருக்கும் போது, எதுக்காக இவ்வளவு பணம் கொடுத்தார் ஆதிஜி?"

"காலேஜில உனக்கு எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது, காலேஜை சேர்ந்தவங்க உன்னை நல்லா பாத்துக்கணும்னு தான் ஆதித்யா அவ்வளவு பணம் கொடுத்தார்"

"நிஜமாவா?"

"உன்னை ரொம்ப பிடிச்சதனால தான் ஆதித்யா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு நான் தான் உன்கிட்ட சொன்னேனே..."

"ம்ம்ம்"

அழைப்பை துண்டித்து விட்டு ஆதித்யாவின் அறைக்கு சென்றாள் கமலி.

"ஆதிஜி, நான் வீட்டுக்கு போகட்டுமா?"

"என்ன ஆச்சு கமலி?"

"எனக்கு ஒன்னும் இல்ல. வீட்டுக்கு போகணும்னு தோணுது"

"சரி வா, நான் உன்னை ட்ராப் பண்றேன்"

"நீங்க வேலையை பாருங்க ஆதிஜி. நான் இளவரசன் அண்ணா கூட போறேன்"

"எனக்கு இங்க முக்கியமான வேலை எதுவும் இல்ல. மதியானம் தான் ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு தேவையான ஃபைல் வீட்ல தான் இருக்கு. அதை நான் எடுக்கணும்."

சரி என்று தலையசைத்தாள் கமலி. வழிநெடுக அவள் அமைதி காத்ததை கவனித்தான் ஆதித்யா. வீட்டிற்கு வந்தவுடன், தான் எடுக்க வந்த கோப்பை எடுக்க தங்கள் அறைக்குச் சென்றான் ஆதித்யா. ஆனால் கமலியோ, நேராக பூஜை அறைக்கு சென்று கண்களை மூடி, கைக்கூப்பி நின்றாள்.

"மகமாயி... ஆதிஜியை என்னோட வாழ்க்கையில கொண்டு வந்ததுக்காக உங்களுக்கு நன்றி சொல்ல தான் நான் இங்க வந்திருக்கேன். இந்த உலகத்தில இருக்கிற எல்லாரையும் விட அவர் தான் நல்லவர். உங்களுக்கு கோடான கோடி நன்றி மகமாயி" என்று நன்றி கூறியவள், திடுக்கிட்டுக் கண் திறந்தாள்.

சாமி கும்பிடும் போது, அவள் மனதில் உதிக்கும் விஷயத்தை, கடவுளின் ஆணையாக ஏற்று, செய்துவிடுவது அவளது வழக்கம். இப்பொழுதும் அவள் மனதில் அப்படி ஒரு எண்ணம் உதித்திருந்தது. அதை நினைத்த போது அவளுக்கு நடுக்கமாய் இருந்தது. பயத்தில் கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தங்கள் அறையை நோக்கி ஓடினாள்.

அவள், அவர்களது அறைக்கு வந்த போது, ஆதித்யா பிரபாகரனுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

"வந்துகிட்டே இருக்கேன்... இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்"

அழைப்பைத் துண்டித்து விட்டு கமலியை பார்த்து புன்னகைத்தான்.

"ஆதிஜி, உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"

"சொல்லுடா..."

"வந்து... ஆதிஜி..."

"கமலி, நான் ரொம்ப அவசரமா போகணும். உனக்கு பேச நேரம் ஆகும்னா, சாயங்காலம் வந்து பேசுறேன்"

"இல்ல ஆதிஜி, ப்ளீஸ், ப்ளீஸ், எனக்கு அதை இப்பவே சொல்லணும். நான் ரொம்ப கஷ்டப்பட்டு தைரியத்தை வர வச்சிருக்கேன்..."

"தைரியமா...? ஓகே... சொல்லு..."

"அது... வந்து..." என்று மென்று முழுங்கினாள்.

"என்ன விஷயம் கமலி?"

பரபரவென ஓடிச்சென்று கதவை சாத்தினாள் கமலி. அது ஆதித்யாவுக்கு பதட்டத்தை உண்டாக்கியது. நீச்சல் குளத்தின் பக்கமிருந்த கதவையும் சாத்தி தாளிட்டாள். ஒன்றும் புரியாமல் விழித்தான் ஆதித்யா. அவனுக்கு ஆர்வமாகவும் அதே நேரம் பதட்டமாகவும் இருந்தது.

"ஏதாவது சீரியஸான விஷயமா? உன்கிட்ட யாராவது தப்பா நடந்துகிட்டாங்களா?"

இல்லை என்று தலை அசைத்தாள்.

"அப்புறம் என்ன?"

"நான்... வந்து..."

"சொல்லு டேம் இட்... " அவன் பதட்டத்தில் கத்த, திடுக்கிட்டாள் கமலி.

"நானும் அதை தான் சொல்லணும்"

"என்ன?"

கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டு,

"நான் உங்களை ரொம்ப
டேம் இட்... ஐ லவ் யூ, ஆதிஜி..." என்றாள்.

அதை கேட்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போனான் ஆதித்யா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top