23 கமலியின் அன்பு
23 கமலியின் அன்பு
மிக பிரசித்தி வாய்ந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாசலில் காரை நிறுத்தினான் ஆதித்யா. அதை பார்த்தவுடன் கமலியை பதற்றம் தொற்றிக்கொண்டது.
"வா, கமலி..."
"ஆதிஜி, நான் இப்படிப்பட்ட ஹோட்டலுக்கு வந்ததே இல்ல..."
"இதையெல்லாம் நீ பழகிக்கணும்"
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு"
"நான் தான் இருக்கேன்ல...? அப்புறம் எதுக்காக பயப்படுற?"
தயங்கியபடி அவனுடன் உள்ளே சென்றாள் கமலி. ஒரே ஒரு மேசை போடப்பட்டிருந்த தனி அறைக்கு அவளை அழைத்துச் சென்றான் ஆதித்யா. நிம்மதி பெருமூச்சுவிட்டாள் கமலி.
"உனக்கு பிடிச்ச டிஷை ஆர்டர் பண்ணு..." என்று மெனு கார்டை அவளிடம் நீட்டினான்.
தனக்கு தெரிந்த உணவு வகைகளை தேடிப் பிடித்தாள் கமலி.
"ஹைதராபாத் பிரியாணி, சில்லி சிக்கன்..." என்று கமலி ஆர்டர் செய்ய,
பேபி கார்ன் சூப், அமெரிக்கன் சாப்ஸி, ரவியோலி பாஸ்தாவை ஆர்டர் செய்தான் ஆதித்யா.
அவர்கள் தாங்கள் ஆர்டர் செய்த உணவின் வருகைக்காக காத்திருந்தார்கள். உணவு வந்த பின், தான் ஆர்டர் செய்திருந்ததை ஆதித்யா சாப்பிட தொடங்கியதை பார்த்து, விழி விரித்தாள் கமலி.
"அது நான் ஆடர் பண்ணது..."
"உனக்குப் பிடிச்சதை நான் சாப்பிட்டு பார்க்குறேனே... எனக்கு பிடிச்சது எப்படி இருக்கும்னு நீயும் தெரிஞ்சுக்கோ..."
அது நல்ல யோசனையாக தெரிந்தாலும், *ஆதித்யா வகை* உணவுகளை சாப்பிட தயக்கம் காட்டினாள் கமலி. அது முள்கரண்டியை உபயோகப்படுத்தி சாப்பிட வேண்டிய உணவு.
"ஃபோர்க்கை எப்படி யூஸ் பண்ணணும்னு நான் உனக்கு சொல்லி தரேன்"
"எனக்கு அதைப் பார்த்தா பயம்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"
"அது எல்லாருக்குமே ஏற்படுற பயம் தான்"
ஃபோர்க்கை கையாளும் முறையை கமலிக்கு கற்றுக்கொடுத்தான் ஆதித்யா. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், அவன் கூறியதை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள் கமலி. ஃபோர்கை பயன்படுத்தும் மும்முரத்தில் அவளுக்கு பிடித்த பிரியாணியை கூட அவள் மறந்து போனாள். ஆனால், ஆதித்யாவின் நிலை பரிதாபமாய் இருந்தது. ஹைதராபாத் பிரியாணியும், சில்லி சிக்கனும் அவன் கண்களை கலங்கச் செய்தன.
பிரியாணியிலும், சில்லி சிக்கன்னிலும் எலுமிச்சம்பழத்தை பிழிந்து, காரத்தைக் குறைத்துக் கொடுத்தாள் கமலி. அது ஓரளவிற்கு ஆதித்யாவின் நாக்கை காப்பாற்றியது. ஒருவருக்கு ஒருவரின் உதவியோடு அவர்களுடைய *டின்னர் டேட்* நலமுடன் முடிந்தது.
அந்த நாளைய நிகழ்வுகள், கமலியின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆதித்யாவை பற்றிய அவளது எண்ணம் முழுதாய் மாறிப்போனது. ஷில்பாவிடம் அவன் நடந்து கொண்ட விதத்தால், கையில் பிடிக்க முடியாத அளவிற்கு சந்தோஷத்தில் திளைத்தாள் கமலி. எப்பொழுதும் அவளுக்காக தான் துணை நிற்பேன் என்றும் ஆதித்யா கூறிவிட்டான் அல்லவா?
அதோடு மட்டுமல்லாது, *உன்னுடன் நான் டேம் இட்* என்ற நேரடியான அவனது வார்த்தைகள், அவளது காதில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. இது தான் முதல் முறை, அவள் இது போன்ற வார்த்தைகளை கேட்பது... அதுவும், அந்த வார்த்தைகளை உதிர்த்து அவளுக்கு மிகவும் பிடித்த ஆதிஜி. அவன் அதை வெறும் வார்த்தைகளால் மட்டும் குறிப்பிடவில்லை அதை கூறுவதற்கு முன்பே செயலாலும் அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறான்... ஆதிஜி தன்னை காதலிப்பது எவ்வளவு பெருமையான விஷயம்...!
தன்னுடைய மனைவியிடம் தான் கொண்டுள்ள எதிர்பார்ப்பு என்ன என்பதை ஆதித்யா கூறினான் அல்லவா, அதை மீண்டும் நினைத்துப்பார்த்தாள் கமலி. தனது குடும்பத்தை, அவளது குடும்பமாக நினைக்க வேண்டும் என்றும், அவர்களை மதிக்க வேண்டும் என்றும் கூறினான் இல்லையா...! ஆதித்யா தனது குடும்பத்தினர் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளான் என்று விளங்கியது அவளுக்கு. அப்படி என்றால், அவர்கள் குடும்பத்தினர் சந்தோஷமாக இருந்தால் ஆதித்யாவும் சந்தோஷமாக இருப்பான். அதற்கு அவன் குடும்பத்தாரை சந்தோஷப்படுத்துவது என்று தீர்மானித்தாள் கமலி.
கமலி முன்பை விட அதிகமாய் தன் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதை கவனிக்காமல் இல்லை ஆதித்யா. ஒரு விதத்தில் அவனுக்கு அது சந்தோஷம் தான். ஆனால் அதே நேரம், அவளை தங்களது அறையில் பார்க்கவே முடியவில்லை ஆதித்யாவால்.
பாட்டி சென்று வந்த சத்சங்கத்தைப் பற்றி அவருடன் விவாதிப்பது, ரேணுகாவுடன் கோவிலுக்கு செல்வது, பள்ளி கால நினைவுகளை சித்தப்பா புஷ்பராஜுடன் பகிர்ந்து கொள்வது, முகப்பூச்சு அணிந்துகொள்ள இந்திராணிக்கு உதவுவது, தனக்கு பிடித்த சூர்யாவின் படத்தை ராகுலுடன் சேர்ந்து பார்ப்பது, சுசித்ராவுடன் ஷாப்பிங் செல்வது, ஷாலினியுடன் கண்ணாமூச்சி விளையாடுவது... என்று பரபரப்பாகி போனாள் கமலி. தனது குடும்பம் ஆதித்யாவிற்கு முக்கியம் தான்... ஆனால் அதற்காக, அவர்களுடன் மட்டும் தான் இருப்பேன் என்று கூறினால் எப்படி? அவன் அந்த அர்த்தத்தில் கூறவில்லை அல்லவா?
ஆனால், நமது கமலியின் பிரச்சனையே வேறு... அவளைப் பாடாய்ப் படுத்திய ஒரு வித்தியாசமான உணர்வினால் அவள் கதிகலங்கிப் போயிருந்தாள். ஆதித்யா அவள் அருகில் வந்த போதெல்லாம் அவளது இதயம் தாறுமாறாய் துடித்தது. அவன் அவளைப் பார்த்து புன்னகைத்த போதெல்லாம் அது படபடத்தது. அவனது புன்னகை, ஏன் அவள் வயிற்றை ஏதோ செய்தது என்று அவளுக்கு புரியவில்லை. அவன் அருகில் செல்லவே பயந்தாள் கமலி.
அதேநேரம், அவனை விட்டு விலகவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவளது இதயம் அவனது அருகாமையை நாடியது. அவனுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணியது. அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் பாவம், அதன் காரணம் தான் அவளுக்கு புரியவில்லை. குழம்பிப் போயிருந்த மனதுடன் அவள் ஆதித்யாவை ஓரக்கண்ணால் திருட்டுத்தனமாய் பார்க்க தொடங்கினாள்.
ஆதித்யாவின் குடும்பத்தினருடன் அவள் ஏற்படுத்திக் கொண்டிருந்த உறவு நல்ல பலனைக் கொடுத்தது. அவர்கள் கமலியின் நற்குணங்களுக்கு அடிமையானார்கள். எப்பொழுதும் ஒன்றாய் சேர்ந்து இருப்பது அவர்களுக்கு வழக்கம் தான் என்றாலும், கமலியை போல் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொள்ள இதுவரை யாரும் ஆர்வம் காட்டியதில்லை. அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்ட முதல் நபர் கமலி தான். கமலி அவர்களுக்காக ஒதுக்கிய *நேரம்* இதுவரை அவர்கள் யாரிடமிருந்தும் பெறாத ஒன்று. அவர்களது இதயத்தை கமலி கொள்ளை கொண்டாள் என்று தான் கூறவேண்டும். ஆனால், அது கமலிக்கு தெரியாது. ஏனென்றால், அவளது அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. அது ஆதித்யாவின் குடும்பத்தினருக்கு புரிந்திருந்தது. அந்த கள்ளம் கபடமற்ற அன்பு தான் அவர்களை கட்டிப்போட்டது. ஆதித்யாவின் குடும்பத்தின் தவிர்க்க முடியாத நபராகிப் போனாள் கமலி.
........
படிப்பு விடுமுறையில் இருந்தாள் கமலி. அவளை பார்க்கும் சந்தர்ப்பம் கூட ஆதித்யாவிற்கு கிடைக்கவில்லை. ஏனென்றால், காலை முழுவதும் படித்து விட்டு, மாலையில் அனைவருடனும் நேரம் செலவழித்துக் கொண்டிருந்தாள் அவள். காலை நேரத்தில் அவர்களுடன் இருந்துவிட்டு, மாலையில் அவன் வீட்டிற்கு வரும் நேரம் படித்தால் என்ன என்று தோன்றியது ஆதித்யாவிற்கு. அவனுக்கு எப்படி தெரியும், தனது இதயத்துடிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அவனிடமிருந்து அவள் தப்பித்து கொண்டிருக்கிறாள் என்று?
அன்றும் அலுவலகத்திலிருந்து வழக்கம் போல வீடு திரும்பினான் ஆதித்யா. வழக்கம் போல, கமலி அவர்களது அறையில் இல்லை. அவளைத் தேடி சென்றான் அவன். அவன் போகும் இடமெல்லாம், *அவள் இப்பொழுது தானே இங்கிருந்து சென்றாள்* என்ற பதில் கிடைத்தது.
கடைசியில் அவள் தோட்டத்தில் ஜிம்மியுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டான் அவன். அவள் முன் சென்று தன் கைகளை கட்டிக் கொண்டு நின்றான். மெல்ல தலையை உயர்த்திய கமலி, அவனைப் பார்த்தவுடன் எழுந்து நின்று தடுமாற்றத்துடன் புன்னகைத்தாள்.
"என்ன செய்றீங்க மேடம்?" என்றான் கிண்டலாக.
"ஒன்னும் செய்யல சார்..." என்றவள், தன் நாக்கை கடித்து,
"ஒன்னும் இல்ல ஆதிஜி..." என்றாள்.
"ஸ்டடி ஹாலிடேஸ் கொடுக்கிறது படிக்கிறதுக்காக... ஜிம்மி கூட விளையாட இல்ல..."
"நான் இன்னைக்கு ஃபுல்லா படிச்சுக்கிட்டு தான் இருந்தேன் ஆதிஜி"
"நெஜமாவா?" என்ற கேள்விக்கு,
"நிஜமா" என்று பல குரலில் பதில் வந்தது. அது அவனது குடும்பத்தினரிடம் இருந்து வந்தது.
"ஆதி, நீ கமலியை பத்தி கவலைப்பட வேண்டியதில்ல. அவ ரொம்ப புத்திசாலி பொண்ணு. நீ ஆஃபீசுக்கு போனதிலிருந்து அவ படிச்சுக்கிட்டு தான் இருந்தா" என்றார் பாட்டி
"ஆமாம் ஆதி, நான் வாங்கின புது புடவையை அவகிட்ட காட்ட உங்க ரூமுக்கு போனப்ப, அவ படிச்சிக்கிட்டு இருந்ததை நான் பாத்தேன்..." என்றார் இந்திராணி.
"அவ படிக்கணும்னு தான், நான் ஷாப்பிங் ப்ரோக்ராமை கூட தள்ளி வச்சிட்டேன். அவளுடைய எக்ஸாம் முடிஞ்ச பிறகு தான் நாங்க ஷாப்பிங் போக போறோம்" என்றாள் சுசித்ரா.
அவர்கள் கூறுவதைக் கேட்டு நான் கண்களை சுழற்றினான் ஆதித்யா.
"சரி, நீ எந்த அளவுக்கு எக்ஸாமுக்கு ரெடியா இருக்கேன்னு நான் பாக்குறேன்"
அவளை யாரும் தங்களுடன் அழைத்து செல்வதற்கு முன், அவள் கையை பற்றிக்கொண்டு தன் அறையை நோக்கி நடக்கத் துவங்கினான் ஆதித்யா. மென்று விழுங்கியபடி அவனை பின்தொடர்ந்தாள் கமலி.
ஒரு கேள்வித்தாளை தயார் செய்து அதை கமலியின் கையில் கொடுத்தான் ஆதித்யா.
"உனக்கு மூனு மணி நேரம் டைம். உன்னுடைய பேப்பர், எக்ஸாம் பேப்பர் மாதிரி இருக்கணும். ரோல் நம்பர், சப்ஜெக்ட், டேட், கொஸ்டின் நம்பர் எல்லாம் கரெக்டா எழுதணும்"
சரி என்று தலையசைத்துவிட்டு எழுதத் துவங்கினாள் கமலி. தனது பரிட்சையில் மொத்தமாய் மூழ்கிப் போனாள். அவளுக்கு எதிரில் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டான் ஆதித்யா. எப்படியோ தனது அறையில் அவளை கட்டிப் போட்டாகிவிட்டது.
பரீட்சை எழுதி முடித்து, விடைத்தாளை அவன் கையில் கொடுத்தாள் கமலி சந்தோஷ சிரிப்புடன். அப்பொழுது தான் கடிகாரத்தைப் பார்த்தான் ஆதித்யா. மூன்று மணி நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை அவனுக்கு. விடைத்தாளை வாங்கிக்கொண்டு, அவளை அருகில் அமருமாறு சைகை செய்தான். அவள் எழுதிய விடைகளை சரிபார்க்க துவங்கினான் ஆதித்யா. கமலியோ தனது கணவனின் முகத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஆதித்யாவிற்கு மிக திருப்தியாய் இருந்தது.
"குட்" என்றான்.
"மார்க் போட மாட்டீங்களா?"
புன்னகையுடன் தனது பேனாவை எடுத்து, மதிப்பெண் வழங்க துவங்கினான். வெகு சாதாரண தவறுக்காக கூட, அரை மதிப்பெண்ணை அவன் குறைத்த போது முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள் கமலி.
"போங்க ஆதிஜி, உங்களை விட எங்க ப்ரொஃபஸர் எவ்வளவோ மேல்..." என்றாள் உதடு சுழித்து.
"மிஸ்டேக்ஸ்ஸை குறைக்கத் தான் நம்ம பிராக்டீஸ் பண்றோம். இப்போ நீ செஞ்சிருக்கிற மிஸ்டேக்ஸை குறைச்சிகிட்டா, எக்ஸாம்ல நான் கொடுத்த மார்க்கை விட அதிகமா வாங்கலாம்."
சரி என்று தலையசைத்துவிட்டு, தான் செய்திருந்த பிழைகளை கவனித்தாள் கமலி.
"இந்த மிஸ்டேக் எல்லாம் மறுபடி வராம பார்த்துக்கோ"
"நிச்சயம் வராது"
"சரி வா, சாப்பிட போகலாம்"
சரி என்று விடைத்தாளுடன் எழுந்து நின்றாள் கமலி.
"அதை எதுக்கு எடுத்துக்கிட்டு வர?"
"எல்லார்கிட்டயும் காட்டத்தான்" என்று கூறிவிட்டு வெளியில் ஓடினாள் கமலி.
தன் கண்களை சுழற்றி சிரித்தான் ஆதித்யா. கதவருகில் நின்ற கமலி அவனை நோக்கி திரும்பினாள்.
"எல்லா சப்ஜெக்ட்க்கும் எனக்கு கொஸ்டின் பேப்பர் ப்ரிப்பேர் பண்ணி கொடுக்குறீங்களா?" என்றாள் ஆர்வமாக.
அவள் கேட்டு, இல்லை என்று கூறி விடுவானா ஆதித்யா? சரி என்று புன்னகையுடன் தலையசைத்தான்.
ஆதித்யா உணவு மேஜைக்கு வந்த போது, இந்திராணியுடன் ஹை- ஃபை தட்டிக் கொண்டிருந்தாள் கமலி. அவனது மனைவியுடன் சேர்ந்து, அவன் குடும்பத்தினரும் அவளைப் போலவே மாறிவிட்டதை பார்த்து அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
.......
தனது முதல் செமஸ்டர் தேர்வுகளை வெற்றிகரமாய் முடித்தாள் கமலி. ஆனால் அவள் சந்தோஷமாய் இல்லை. இன்னும் இரண்டு நாளில் அவளது தோழி சுமித்ராவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்குப் பின் அவளை எப்போதும் பார்க்க முடியாது அல்லவா? அவள் முகத்தில் வருத்தம் இழையோடியதை கவனித்தான் ஆதித்யா.
உணவு மேசை
அமைதியாய் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் கமலி.
"கமலி, உங்களுக்குத் தான் காலேஜ் லீவு விட்டுட்டாங்களே, நீங்க ஏன் உங்க அம்மா, அத்தையோட போய் கொஞ்ச நாள் இருக்கக் கூடாது?" என்றாள் ரேணுகா.
அதைக் கேட்ட ஆதித்யாவின் தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டது. அவன் இருமினான். அவனை நோக்கி தண்ணீரை நீட்டினாள் கமலி. அவன் முதுகை தட்டிக் கொடுத்தான் ராகுல்.
"இன்னும் ரெண்டு நாள்ல என்னோட ஃப்ரெண்டுக்கு கல்யாணம் இருக்கு கா. நானும் லாவண்யாவும் அதுக்கு போகலாம்னு இருக்கோம்" என்றாள் கமலி.
"அப்படின்னா கல்யாணத்துக்கு பிறகு உங்க அம்மா வீட்டுக்கு போகலாமே அண்ணி" என்றான் தீபக்.
"ஆமாம் கமலி, உங்களுக்கும் ஒரு மாற்றம் வேணும். உங்க அம்மா, அத்தையோட கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துட்டு வாங்க" என்றான் சரவணன்.
அவர்களை ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. இவர்களுக்கு எல்லாம் என்ன ஆகிவிட்டது? எதற்காக கமலியை இங்கிருந்து அனுப்ப இவர்கள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்? அவனுக்கு மட்டும் மாற்றம் தேவை இல்லையா? அவனும், அவனது அறிவுகெட்ட குடும்பத்தாரும்...
"நான் கமலிக்காக ஒரு ப்ளான் வச்சிருக்கேன். அவளுடைய லீவை அவ யூஸ்ஃபுல்லா செலவு செய்யணும்" என்றான் ஆதித்யா தீர்கமாய்.
"யூஸ் ஃபுல்லான எப்படி?" என்றாள் ரேணுகா.
"அடுத்த செமஸ்டர் பாடத்தை இப்பவே நடத்தப் போறாருன்னு நினைக்கிறேன்" என்று கிண்டலடித்தான் சரவணன்.
அப்படியா என்பது போல் அவனை பார்த்தாள் கமலி.
ஆனால் ஆதித்யாவின் திட்டம் அவர்களை வாயடைக்கச் செய்தது.
"நான் கமலியை ஆஃபீஸுக்கு கூட்டிக்கிட்டுப் போக போறேன். அவளுக்கு அடுத்த செமஸ்டரில் ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் இருக்கு. அதைப் பத்தி அவ ஆஃபீஸ்ல பிராக்டிகலா தெரிஞ்சுக்க முடியும். அது அவளுக்கு ஈஸியாவும் இருக்கும்"
அவனை வித்தியாசமாய் பார்த்தார்கள் அனைவரும்... முக்கியமாய் சரவணன். ஏனென்றால், இது தேவையே இல்லாதது. இரண்டாவது செமஸ்டரில் செயல்முறை கல்வி என்பது அவசியமற்றது. கமலியை அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக எதையோ உளறி வைத்தான் ஆதித்யா.
"உனக்கே இது ஓவரா தெரியலையா? அவங்க காலேஜுக்கும், ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்க்கும் போய்க்கிட்டு பிஸியா இருந்தாங்க. இப்ப தான் ஃபர்ஸ்ட் செமஸ்டர் முடிஞ்சிருக்கு. கொஞ்சமாவது அவங்க ஃப்ரீயா இருக்கட்டுமே... அவங்க லீவை சந்தோஷமா கழிக்க விடு, ஆதி" என்றாள் ரேணுகா.
"அவ சொல்றது சரி... இப்போ தான் அவ ஃப்ரீயா இருக்க முடியும். லீவு முடிஞ்சா, மறுபடியும் காலேஜுக்கு போறதுல பிசி ஆயிடுவா" என்றார் பாட்டி.
"நீ என்ன சொல்ற கமலி?" என்றான் ஆதித்யா.
"எனக்கு ஆஃபீஸுக்கு வரறதுல எந்த பிரச்சனையும் இல்ல" என்றாள்.
"தட்ஸ் குட்.... அதுல மாமாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?" என்றான் ஆதித்யா.
"எனக்கு என்ன பிரச்சனை? வெல்கம் கமலி" என்றான் சரவணன்.
அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் கமலி.
"கமலி, நீ உங்க அம்மா வீட்டுல இருந்து கூட தினமும் ஆபீஸுக்கு போகலாமே" என்ற சுசித்ரா, தான் ஏதோ புத்திசாலித்தனமான யோசனை கூறிவிட்டதைப் போல் அனைவரையும் பார்த்தாள்.
அவளை அனைவரும் பாராட்டத்தான் செய்தார்கள்... ஒருவனைத் தவிர... கமலியின் கணவன் ஆதித்யா...
*அட போங்கடா* என்றானது அவனுக்கு. கமலி, சுசித்ராவை பார்த்து புன்னகைத்த உடன் அவன் முகம் வாடிப்போனது. அவர்களின் திருமணத்திற்கு பிறகு, தனது அம்மா அத்தையுடன் தங்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. அவளுக்கும் ஆசை இருக்கும் தானே...? அவன் சுயநலமாய் இருக்கக் கூடாது. அவர்களை திருச்சியிலிருந்து அவன் இங்கு அழைத்து வந்ததே, கமலி வேண்டும் பொழுது சென்று அவர்களை பார்க்கத்தானே? அப்படி என்றால், அவளை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவனது யோசனை நல்லது தான். அவள் தினமும் அலுவலகத்திற்கு வருவாள் இல்லையா...! இப்போதைக்கு அது போதும்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top