2

'முருகா முருகா ஓம் முருகா.. முத்தமிழ் இறைவா வடிவேலா'

அதிகாலையில் ஒலிப்பெருக்கிகளின் சங்கீதம் காதைப் பிளந்து கண்களையும் திறக்கவைக்க, முனகிக்கொண்டே எழுந்தாள் சஞ்சனா.

"ஊருக்கெல்லாம் கேட்டதைக் கொடுக்கறயே முருகா.. உன் ஊர்க்காரிக்கு கொஞ்சம் நிம்மதியா தூங்கற பாக்கியத்தைக் குடுக்க மாட்டியா?"

முன்னறைச் சுவரில் மாட்டியிருந்த காலண்டர்க் கடவுள் பழனியாண்டவரிடம் முறையிட்டவாறே வெளியே வந்தவளை, வாசலுக்கு நீர் தெளித்துக்கொண்டிருந்த பக்கத்துவீட்டு அக்காள் நிமிர்ந்து ஏறிட்டார்.

"என்னடி சஞ்சனா, லீவு நாள்லயும் சீக்கரமே எழுந்திரிச்சுட்ட?"

"ஆமா.. மலையில முருகனுக்கு தனியா இருக்க போரடிக்குதாம், அதான் கூடவே உக்காந்துக்கலாம்னு கிளம்பறேன்!"

"நீ என்னத்துக்குப் போற, அதான் உன் இனம் ஏகப்பட்டது ஏற்கனவே மலையில தாவிக்கிட்டும் ஓடிக்கிட்டும் கிடக்குதுகளே!"
பின்னிருந்து வந்த அன்னையின் குரலைக் கேட்டவள், திரும்பாமல் பெருமூச்சு விட்டாள்.

"என் இனம்னா, உனக்கும் உறம்பரை தான? நான் வேணாப் போயி விசாரிச்சிட்டு வரவா?"

கீதா வந்து தோளில் இடித்தார் அவளை.
"அந்த வாயை எங்கிருந்துதான் வாங்கிட்டு வந்து பொறந்தயோ! போய் பல்லை வெளக்குடி! அப்பாவுக்கு காபி போட்டுக் குடுத்துட்டு, மீதிப் பால் இருந்தா நீயும் போட்டுக் குடி"

அம்மாவுக்குப் பழிப்புக் காட்டிவிட்டு அவள் உள்ளே செல்ல, கீதா நின்று பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் புலம்பத் தொடங்கினார்.
"எப்படித்தான் இந்தக் காலத்துல பொண்ணை வளக்கறாங்களோ மத்த வீடுங்கள்ல!? தினம்தினம் மாமியாருகூட மல்லுக்கட்டற மாதிரியே படுத்தறா என்னை!"

"பரவால்லக்கா, நீயாச்சும் பொண்ணை வச்சுட்டுப் பொலம்புற... எங்க வீட்டுல இருக்குதே எருமை மாடுங்க ரெண்டு! நாள்பூரா அந்த செல்லுல ஒயரை சொருகிட்டுப் பாட்டுக் கேட்டுட்டுப் படுத்துக் கிடக்குதுங்க! தலையைப் பரட்டையா உட்டுக்குதுங்க! பேண்ட்டை கிழிச்சு உட்டுக்குதுங்க! கேட்டா பேஷனுங்குதுங்க! ஸ்கூலுக்குப் போறப்பவே இப்படித் திரியுதுங்க, இனி காலேஜெல்லாம் போனதுங்கன்னா அம்புட்டுத்தான்!"

தன்னையே தூக்கிச் சாப்பிட்டுவிடுமளவு அந்தப்பெண் புலம்ப, கீதா வாய்மூடித் தலையாட்டிவிட்டு வீட்டினுள் வந்தார்.

"ஏய்.. காபி போட்டியாடீ சஞ்சனா?"

"பாலை அடுப்புல வெச்சிருக்கேன்.. இன்னும் காயல"

அவர் வந்து சமையலறைக்குள் எட்டிப்பார்த்துவிட்டு, "சிம்ல வெச்சா எப்ப காயும்!? அடுப்பை ஏத்தி வைக்கணும்" என்றவாறு அவளை நகர்த்திவிட்டு அடுப்படியில் நிற்க, சஞ்சனா தோளைக் குலுக்கிவிட்டு வெளியே வந்தாள்.

பொதுக் குளியலறையில் குளித்துவிட்டுத் தந்தை வீட்டுக்குள் வர, அவரது சீருடைச் சட்டையை எடுத்து நீட்டினாள் அவள்.

"லீவா இன்னிக்கு? என்ன பண்ணப்போறதா உத்தேசம்?"

"ஒருவாரம் தானப்பா லீவு.. வீட்ல ரெஸ்ட் எடுக்கறனே..?"

சாரதி மகளை ஏமாற்றமாகப் பார்க்க, சஞ்சனா சோர்வாக முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள்.
"மதியம் நானே சூடா சாப்பாடு கொண்டுவர்றேன் உங்களுக்கு"

"வேணாம்.. இந்த வாரம் நீ கொண்டுவருவ, அதுவே பழகிடுச்சுன்னா சுடுசோத்துக்கு நான் எங்க போவேன்? நீ லைப்ரரிக்குப் போயி, எதாவது படிச்சிட்டு இரு.. இல்ல மலைக்குப் போயிட்டு வா. வீட்டுல இருக்காத. உங்கம்மாவும் நீயும் சண்டைகட்ட ஆரம்பிச்சா வீடு வீடா இருக்காது!"

"சரிதான்.. அப்பாவே சொல்லிட்டாருன்னு சொல்லி நான் வெளிய சுத்த கிளம்பிடறேன்.. எனக்கு நோ ப்ராப்ளம்! உங்களுக்கு ஓகேதானப்பா?"

காபியுடன் வந்த கீதா இருவரையும் முறைத்துவிட்டு, "கழுதையாட்டாம் ஊரைச் சுத்தவா உன்னைக் காலேஜ்ல படிக்க வெக்கறோம் நாங்க? ஒழுங்கா அப்பா சொன்னதுபோல லைப்ரரிக்குப் போயி என்னத்தையாச்சும் படி! வெளிய எங்கயாச்சும் உன்னைப் பார்த்ததா சேதி வந்துச்சு, காலை உடைச்சிடுவேன்!" என கர்ச்சித்துவிட்டுப் போனார்.

சஞ்சனா அதற்கொரு கொட்டாவியை பதிலாக அளித்துவிட்டுக் குளிக்கச் செல்ல, காபியை அருந்தியவாறே, "எதுக்கு அவளை இந்த மிரட்டு மிரட்டுற? அவ நீ சொல்றதையெல்லாம் கேட்டு ஒழுக்கமாத் தானே நடந்துக்கறா... கொஞ்சம் அனுசரிச்சுப் பேசுனாத்தான் என்ன?" என்றார் சாரதி மெதுவாக.

கீதா உதட்டை சுழித்து மோவாயைத் தோளில் இடித்துக்கொண்டார்.
"பொண்ணைப் பெத்தவங்க நித்தமும் கண்ணசராம பொண்ணைப் பாத்துக்கணும். கண்டிச்சு வளர்த்தாத் தான், பொண்ணு பொண்ணா வளரும். இதுக்குக்கூட பெத்தவளுக்கு உரிமை இல்லையாக்கும்?"

"நீ என்னவேணா பண்ணும்மா.. நீயாச்சு உம் பொண்ணாச்சு.. நான் கிளம்பறேன்!"

சாப்பாட்டுப் பையைத் தூக்கிக்கொண்டு அவர் சைக்கிளில் ஏறி விரைய, குளித்துத் தயாராகி வந்து, தட்டில் வைத்த இட்லியை உண்டுவிட்டு, தோள்பையைக் கழுத்தில் குறுக்காக மாட்டிக்கொண்டு வெளியே நடந்தாள் சஞ்சனா.

தேர்வீதியைத் தாண்டி பேருந்து நிலையத்தைக் கடந்து வலதுபுறம் திரும்பி நடந்து மாவட்டத் தலைமை நூலகத்தின் கட்டிடத்தை தூரத்தில் கண்டதும், சாலையைக் கடப்பதற்கான இடத்தில் இறங்க, அப்போது ஏற்கனவே சாலையைக் கடந்து பாதிதூரம் சென்றிருந்த ஒரு முதிய பெண்மணியை விர்ரென வந்த ஒரு பல்சர் பைக் உரசிச்செல்ல, அந்த மூதாட்டி சுருண்டு விழுந்தார் சாலையில். கைகால்கள்களில் சிராய்த்து, நெற்றியிலும் இரத்தம் வழிய, அவர் வலியில் கத்தவும் சஞ்சனா திடுக்கிட்டு அவருக்கு உதவிட ஓடினாள்.

நிறுத்தாமல் சென்ற அந்த 'பைக்'காரனை சாலையில் நின்றோர் வசைபாட, திடீரென எங்கிருந்தோ வந்த பச்சை வண்ண பீர் பாட்டில் பல்சரின் முன்பக்க சக்கரத்தில் அடித்து உடைய, அதைத்தொடர்ந்து மறுகணமே வந்த மற்றொரு பாட்டில் பைக்கை ஓட்டியவனின் ஹெல்மெட்டைப் பதம்பார்க்க, நிலைதடுமாறி சாலையில் குப்புற விழுந்தன வண்டியும் வண்டிக்காரனும்.

சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றுவிட, நடந்துசென்ற மக்களும் வேடிக்கைபார்க்க நின்றுவிட, மூதாட்டியைத் தாங்கிப் பிடித்து எழுப்பிய சஞ்சனாவும் இச்செயலைச் செய்தவனைத் தேடிக் கண்களால் அலசினாள் சாலையை.

தெருவோரம் இருந்த டாஸ்மாக் வாசலிலிருந்து வெளியே வந்த அழுக்குச் சட்டை ஆள் ஒருவன், சாலையில் கிடந்த வண்டிக்காரனின் சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கி, அவன் முகத்தில் இரண்டு அறை விட்டான்.
"ரேஸா ஓட்டுற நாயே!? வயசான கெழவிய இடிச்சிட்டு நீபாட்டுல ஓட்டற? உங்கப்பன் வீட்டு ரோடாடா நாயே??"

தூரத்திலிருந்த சஞ்சனாவே அதைக்கண்டு வலியில் முகம்சுழித்தாள் என்றால், வாங்கியவனுக்கு அது இனித்தது என்று சொல்லத் தேவையில்லை. வண்டிக்காரனின் பாக்கெட்டில் கைவிட்டுப் பணப்பையை எடுத்தவன், மூதாட்டியை நோக்கி வர, மக்கள் இரண்டடி பின்வாங்கிட, சஞ்சனா மட்டும் அம்மூதாட்டியின் அருகே நிற்க, பயத்தில் வியர்த்துவிட்டது அவளுக்கு.

வந்தவனோ அவளது கையில் அந்தப் பர்ஸைத் தந்து, "கிழவிக்கு அடிபட்டிருக்குது பார், ஆஸ்பத்திரியில போய் கட்டுப்போடு" என்றுவிட்டு மீண்டும் டாஸ்மாக் கடையினுள் சென்றுவிட, சஞ்சனா மிடறுவிழுங்கினாள்.

அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாட்டியை அழைத்துச்சென்று காட்டியபோது, மருத்துவம் இலவசம் என்பதால் பர்ஸை என்ன செய்யவெனத் தெரியாமல் தனது பைக்குள் வைத்துக்கொண்டாள் அவள். பின் நூலகத்திற்கு வந்தவள் பத்து நிமிடத்திற்கு மேல் அமைதியில் இருக்கப்பிடிக்காமல் எழுந்து எதிரிலிருந்த பூங்காவிற்கு வந்து அமர்ந்தாள்.

இரண்டொரு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க, வீடில்லாத மக்கள் அங்குமிங்கும் படுத்திருக்க, மரத்தடியில் ஒரு பெஞ்ச்சில் அமர்ந்தவள் கைபேசியை எடுத்து முதலாவது எண்ணிற்கு அழைத்தாள்.

"தீபா.. என்னடி பண்ற?"

எதிர்முனை தூக்கக் கலக்கத்தில் சிணுங்கியது.

"லீவுடி இன்னைக்கு! எக்ஸாமெல்லாம் முடிஞ்சு நிம்மதியாத் தூங்கிட்டு இருந்தேன்!! என்ன பண்றேன்னு கேக்கதான் கூப்பிட்டியா?"

"போரடிக்குது தீபா.. எங்கயாச்சும் போலாமா?"

"நீ வேணா வீட்டுக்கு வாயேன்.. ஹோம் தியேட்டர்ல புதுப்படம் எதாச்சும் பார்க்கலாம்.."

"ப்ச்.. வேணாம். நான் ரம்யாவை கூட்டிட்டு பாலாறு டேம் போயிட்டு வர்றேன்"

"ரம்யா அவங்க பெரியம்மா வீட்டுக் கல்யாணத்துக்கு பெதப்பம்பட்டி போயிருக்கா... சரசுவும் செந்திலும் ஜோடியா கொடைக்கானல் போயிருக்காங்க. இப்ப உன் ரோஷத்தை கொஞ்சம் குறைச்சுக்கிட்டு எங்க வீட்டுப் பக்கம் வருவியா?"

சஞ்சனா லேசாக சிரித்தாள்.
"வரேன். வை போனை"

பழனியில் வசதியான குடும்பங்கள் வசிக்கும் ஆர்.ஆர் நகரில், மற்ற வீடுகளைக் காட்டிலும் சற்றே பெரிதாக இருந்த பச்சைநிற வீட்டின் கேட்டை அரைமணியில் அடைந்தாள் சஞ்சனா. கேட்டைத் திறந்து அவள் உள்ளே நுழைய, தீபாவின் அன்னை இருந்தார் வரவேற்பறையில்.

"வா சஞ்சனா.. எக்ஸாமெல்லாம் நல்லா எழுதினயா? ஊருக்கு எங்கயும் போகலையா?"

அவரிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கையில், வெண்மஞ்சள் நிறம்கொண்ட வட்டமுகம் ஒன்று மாடியறையிலிருந்து எட்டிப் பார்த்தது.
"ஹேய் சஞ்சு! மேல வா!!"

"ஹாய் தீபா.."
சஞ்சனா தயக்கமாக நிமிர, தீபாவின் அன்னை தீபாவைப் பார்த்து ரகசியமாக முறைக்க, அதை சஞ்சனாவும் கவனித்தாள். அதற்குள் தீபாவே கீழிறங்கி வந்தாள். முழங்காலைத் தாண்டும் அனார்கலி சுடிதார் அணிந்திருந்தாள் அவள். சஞ்சனாவின் தந்தையின் மாத சம்பளத்தால்கூட வாங்கமுடியாது அதுபோன்ற ஆடையை. முதுகைத் தாண்டிப் படரும் கருங்கூந்தலில் ஈரம் சொட்ட, அதில் ஒரு க்ளிப்பை செருகியிருந்தாள். கண்களுக்கு மையிட்டு, உதட்டுக்குச் சாயமிட்டு, கிட்டத்தட்ட இளவரசியைப் போல இருந்தவளை சஞ்சனா முறுவலித்துப் பார்க்க, அவளும் சஞ்சனாவைக் கலப்படமற்ற அன்போடு பார்த்துச் சிரித்தாள்.

தன் அம்மாவை வினோதமாகப் பார்த்தவள், சஞ்சனாவின் தோளில் கைபோட்டுக்கொண்டு, "வா.. வெளிய நடக்கலாம்" என அழைத்துச்சென்றாள்.

"நான்தான் வீட்டுக்கு வரலைன்னு சொன்னேன்ல.."
சஞ்சனா முனக, தீபா சோகமான பார்வையுடன் "சாரிடி.. எங்க அம்மா குணம் அப்படி.. 21ம் நூற்றாண்டுலயும் இப்படி மனுஷங்க இருக்காங்க.. என்ன பண்ண!" என்றாள்.

"விடு பரவால்ல. நான் வீட்டுக்குப் போறேன்.."

"ப்ச்.. சஞ்சு, நீ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் தானே? எனக்காக இருக்க மாட்டயா?"

"இப்படியே ரோட்லயா?"

"சரி, பாலாறு டேம் போலாம். நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்.. வெய்ட் பண்ணு"

தீபா அம்மாவிடம் பேசிவிட்டுத் தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வெளியே வர, சஞ்சனாவும் ஏறிக்கொள்ள, வண்டி பழனியின் நகர எல்லையைத் தாண்டி விரைந்தது.

பாலாறு அணை எனப்படும் பாலசமுத்திரம் கேரளத்திலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியே நுழையும் பாலாற்றையும் பொருந்தலாற்றையும் இணைத்துக் கட்டப்பட்ட நீர்த்தேக்கமாகும். பழனியிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த இந்த அணை, பழனியில் வாழும் இளைஞர் கூட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம். பெரிதாக சுற்றுலா மதிப்பு இல்லையெனினும், நீரும் நிழலும் நல்ல அளவில் இருக்குமிந்த அணைக்கட்டில் சின்னதாக ஒரு கோவிலும் இருக்க, அதற்குமேல் வேறென்ன வேண்டும் தனிமை விரும்பும் மக்களுக்கு!

அணைக்கரையில் வண்டியை நிறுத்திவிட்டு, சஞ்சனாவும் தீபாவும் சென்று கோவிலைப் பார்த்துவிட்டு சிறிதுநேரம் நடந்தனர் அணைமீது. சுடிதாரைப் பற்றிக் கவலைப்படாமல் மண்தரையில் தீபா அமர, சஞ்சனா அதற்காகப் பதறினாள்.
"ஐயோ.. ட்ரெஸ் அழுக்காகுது பாரு.."

"ப்ச். ட்ரை க்ளீனிங் பண்ணிட்டா போச்சு! அதுக்கு ஏன் அலறி எங்க அம்மாவை ஞாபகப்படுத்தற?"

சஞ்சனா சிரித்தாள். "எல்லா வீட்டுலயும் அம்மாக்கள் கதை மாறாது போல?"

"ஹ்ம்ம்.. அதைப் பேசாத. வந்ததே ஜாலியா இருக்கத்தான்! சரி, என்னது உன் ட்ரெஸ்ல ஏதோ கறை?"

என்னவெனக் குனிந்து பார்த்தவள், சாலையில் விழுந்த மூதாட்டிக்கு உதவியபோது இரத்தம் தனது ஆடையிலும் பட்டிருந்ததைப் பார்த்தாள்.

"அது ஒண்ணுமில்ல.. காலைல மெயின் ரோட்டுல ஒரு சம்பவம்..."
நடந்ததை அவள் விளக்கிச்சொல்ல, தீபா அதிசயித்துக் கேட்டாள்.

"பரவாயில்லயே.. நம்ம ஊர்லயும் இந்தமாதிரி ஹீரோக்கள் இருக்கறாங்க போல!"

"ஹீரோவா? ரவுடின்னு சொல்லு! குடிகாரன்! போட்டு அந்த 'பைக்'காரனை எப்படி அடிச்சான் தெரியுமா? பார்த்த எனக்கே அப்படி பயமா இருந்துச்சு!"

"வன்முறையா இருந்தாலும், அதை நியாயத்துக்காக யூஸ் பண்ணானே.. அப்போ அவன் ஹீரோ தானே?"

"அவர் யாரா இருந்தா நமக்கென்ன?? இன்னொரு தடவை அவனைமாதிரி யாரையும் பார்க்காம இருந்தாலே போதும் எனக்கு! பயமுறுத்திட்டான் பயங்கரமா!!"

சஞ்சனா லேசாக நடுங்கியவாறு சொல்ல, தீபா கலகலவென சிரித்தாள்.

ஆனால் சஞ்சனாவின் பையிலிருந்த அந்த லெதர் பர்ஸ் மட்டும், ஏனோ மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்குமெனச் சொன்னது.


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top