8 தீர்வு

8 தீர்வு

இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்த ரத்னாவை பார்த்து சிரித்தார் அரவிந்தன். ரத்னாவிற்கு ஏற்பட்டதைப் போல, தன் மகனின் வாழ்க்கையில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம் அவருக்கு இல்லை அல்லவா...?

"உனக்கு வாக்கிங் போகணும்னா சொல்லு, நான் உன்ன கூட்டிட்டு போறேன். எதுக்காக வீட்டுக்குள்ளேயே இப்படி நடந்துகிட்டு இருக்க? " என்று கேலி செய்தார்.

ரத்னா அவர் அருகில் சென்று அமர்ந்த போது, அவர் ஏதோ தவிப்பில் இருப்பதை அவர் உணர்ந்தார்.

"ஏதாவது பிரச்சினையா? ஏதாவது சொல்லணும் நினைக்கிறியா?"

"எனக்கு எல்லாமே தப்பா தோணுது"

"தெளிவா பேசு"

மூன்று நாட்களாக, ரத்னா கவனித்து வந்த வசீகரன் மற்றும் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளை, அவர் அரவிந்தனுடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய தவிப்பு அரவிந்தனையும் தொற்றிக்கொண்டது.

"ஐஸ்வர்யாவை தனியா விட்டுட்டு, வசீகரன் ஆஃபிஸிலேயே தங்குறது எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்ல. இதுக்கு ஏதாவது செஞ்சாகணும்"

அவரது மனதில் எழுந்த யோசனையை அரவிந்தனிடம் கூறினார்.

"இதுக்கு வசீ ஒத்துக்குவான்னு நீ நினைக்கிறாயா?" என்றார்.

"அவன் நிச்சயம் ஒத்துக்குவான். எனக்கு என் புள்ளையை பத்தி நல்லாவே தெரியும். அவன் ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு எவ்வளவு ஆசையா இருந்தான்னு எனக்கு தெரியாதா? அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு. அது நிச்சயமா வசீகரனால இல்லைங்கிறது எனக்கு தெரியும்"

"சரி என்ன செய்யணும்? நானும் கூட இருக்கேன். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும் எனக்கு" என்றார் அரவிந்தன்.

இரவு உணவிற்காக அனைவரும் ஒன்று கூடிய போது, பேச்சை துவங்கும் படி அரவிந்தனுக்கு சைகை செய்தார் ரத்னா.

"வசி, ராமநாதனோட போஸ்டுக்கு யாரைப் போடுறதுன்னு ஏதாவது முடிவு பண்ணியிருக்கியா?" என பேச்சை துவங்கினார்...

"இல்லப்பா. நான் அதை பத்தி எதுவும் யோசிக்கல. எனக்கு என்னமோ, அவருடைய இடத்துக்கு யாரும் சரியா வருவாங்கன்னு தோணல. அவரு ரொம்ப நேர்மையான நல்ல ஒரு டிசைனர்"

"ஐஸ்வர்யா... இளவரசன் சொன்னான், நீ ஃபேஷன் டிசைனிங்கில் கிராஜுவேஷன் முடிச்சிருக்கேனு. அப்படியாம்மா?" என்றார்

ஆமாம் என்று ஐஸ்வர்யா தலையசைக்க, தனது தட்டில் கோடுகளை வரைந்து கொண்டிருந்தான் வசீகரன். அடுத்து வரப்போவது என்ன என்பதை அவன் ஓரளவு ஊகித்து விட்டான். உண்மையில் சொல்லப் போனால், அவனுடைய மனதிலும் அந்த எண்ணம் இருக்கத் தான் செய்தது. அவனுடைய பெற்றோர்கள் அவனை விட வேகமாக செயல்படுவதை நினைத்த போது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. அவனுக்கு இன்னொன்றும் புரிந்து போனது. அவன் அம்மா உண்மையை ஊகித்திருக்க வேண்டும் என்பது.

"அப்போ, நீ வசியோட ஆஃபிஸில் ஜாயின் பண்ணலாமே" என்றார் ரத்னா.

அந்த யோசனை, ஐஸ்வர்யாவிற்கு பிடித்திருக்கவில்லை. தன் கணவனுடன் நாள் முழுக்க, வீட்டிலும் அலுவலகத்திலும் இருப்பது என்பது நல்ல யோசனையாக அவளுக்கு தோன்றவே இல்லை. அவள் மறுக்க முயன்ற போது, ரத்னாவின் அடுத்த வரிகள் அவளை தடுத்து நிறுத்தியது.

"ஆனா ஒண்ணு, நீ ஆஃபீஸ்ல இருக்குற பொண்ணுங்க, வசீகரனோட நடவடிக்கைகளை பார்த்து ரசிப்பதை பார்த்து பொறாமை படக்கூடாது" என்று சிரித்தார் ரத்னா.

ரத்னா கூறியதைக் கேட்டு வசீகரனும் கள்ள புன்முறுவல் செய்ய, அவன் கேட்ட *ஆதாரம்* அவள் நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அவன் கேட்ட ஆதாரம், அவனுடைய அலுவலகத்தில் அவளுக்கு கிடைக்கலாம். வசீகரன் அவளை ஏறெடுத்து பார்க்கவே இல்லை. அவளுடைய பதிலுக்காக அவன் காத்திருந்தான். பெரும்பாலும் அவள் வேண்டாம் என்று கூறுவாள் என்று தான் எதிர்பார்த்தான். ஆனால் அவனுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்குவது போல,

"நிச்சயமா ஆன்ட்டி... அவருக்கு எதுவும் பிரச்சினை இல்லன்னா நான் நிச்சயமா ஜாயின் பண்றேன்" என்றாள்.

"என் பொண்டாட்டி என் கூட இருக்கிறதுல எனக்கு என்ன பிரச்சினை? " என்றான் புன்னகையுடன் வசிகரன்.

"நான் இதுக்கு முன்னாடி எங்கேயும் வேலை செஞ்சதில்ல. எனக்கு போதிய அனுபவம் இல்லன்னு சொல்ல வந்தேன்" என்றாள் ஐஸ்வர்யா.

"டிசைனருக்கு நல்ல கற்பனை வளம் தான் வேணும். அது இருந்தாலே போதும்" என்றார் அரவிந்தன்.

"கற்பனை வளத்தில், உங்க மருமக எவ்வளவு சிறந்தவள்னு உங்களுக்கு தெரியாது பா. அவ எவ்வளவு கற்பனை வளம் கொண்ட பொண்ணுனு உங்களால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது. உங்களுக்கு தெரிஞ்சா நீங்க அசந்து போயிடுவீங்க"என்றான் சிரித்தபடி.

"நிஜமாகவா?" என்றார் அரவிந்தன்.

"அவள் கற்பனை பண்ற மாதிரி, யாராலும் கற்பனை பண்ண முடியாது. நான் சொல்றது சரி தானே?" என்றான், அவள் தன்னைப் பற்றி தவறாக கற்பனை செய்து கொண்டுள்ளதை எடுத்துக்காட்டி.

தனக்குள் ஏற்பட்ட பதட்டத்தை வெளிக்காட்டாமல், சிரித்து மழுப்பினாள் ஐஸ்வர்யா.

"உனக்கு எப்போ தோணுதோ, அப்ப நீ எங்க கூட ஆஃபீஸ்க்கு வரலாம்" என்றார் அரவிந்தன்.

"நாளைக்கு வரலாமா?" என்ற கேள்வியை கேட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாள் ஐஸ்வர்யா.

"நிச்சயமா. என்ன சொல்ற வசி?" என்றார் அரவிந்தன்

"ஷ்யுர்... கண்டிப்பா" என்றான் வசீகரன்.

"அப்போ நாளைக்கு தேவையானதை எல்லாம் நான் ரெடி பண்றேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய அறையை நோக்கி ஓடினாள் ஐஸ்வர்யா.

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்ட ரத்னா, வசீகரனை ஒரு பார்வை பார்க்க, அவனிடமிருந்து புன்னகையை பதிலாக பெற்றார்.

"உங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன தான்டா நடக்குது?" என்றார்.

வசீகரன் அமைதி காக்க,

"ஏதாவது ரொம்ப சீரியஸா?" என்றார் அரவிந்தன்.

ஆமாம் என்று தலையசைத்தான் வசீகரன்.

"ரொம்ப சீரியஸ் தான் பா" ஐஸ்வர்யா ஒரு *மிஸ்ஸாண்ட்ரிஸ்ட்*. ஆம்பிளைங்களையே அடியோடு வெறுக்கிறவ"

"என்ன?" என்று நம்ப முடியாமல் கேள்வி எழுப்பினார் ரத்னா.

"அவ இப்படி மாறுனதுக்கு காரணம், மூணாவது மனுஷனோ, இந்த சொசைட்டியோ இல்ல. அவங்க அப்பா, அண்ணனோட கீழ்த்தரமான நடவடிக்கைகள் தான்..."

"நாங்க அவகிட்ட பேசி பாக்கட்டுமா?" என்றார் ரத்னா.

"இல்லம்மா... இது பேசி தீர்க்கற விஷயமில்ல. இது அவ மனசுல புரையோடி போயிருக்கிற ஒரு விஷயம். அதை பேசித் தீர்க்க முடியாது. அவ ரொம்ப அதிகமா நேசிச்ச, அவங்க அம்மாவோட அழுகையை பார்த்து வளர்ந்திருக்கா. அது ஆணித்தரமா அவ மனசில் பதிஞ்சிபோயிருக்கு. போதாத குறைக்கு, அவங்க அண்ணனும், அவங்க அப்பா மாதிரியே மாறியிருக்கான். கிட்டத்தட்ட, அவங்க ரெண்டு பேர் மேலயும் அவ கொலைவெறியில் இருக்கா."

அவர்களிடம் அனைத்து விஷயங்களையும் சொல்லி முடித்தான், அவர்களுடைய விவாகரத்துக்கான ஏற்பாடு வரை. அது அந்த பெற்றோர்களை அடியோடு சாய்த்தது. அவர்களை சமாதானப்படுத்தினான் வசீகரன்.

"நான் இதை பத்தி இளவரசன் கிட்ட பேசட்டுமா?" என்றார் அரவிந்தன்

"இல்லப்பா... அது நிச்சயமா பிரச்சினையை இன்னும் மோசமாக்கும். ஐஸ்வர்யா அதை தனக்கு சாதகமா பயன்படுத்தி, நம்ம வீட்டை விட்டு போக வாய்ப்பிருக்கு. அது நிச்சயமா நடக்கக் கூடாது. என்னை நிரூபிச்சி காட்ட, அவ என்கூட இருந்தா மட்டும் தான் என்னால முடியும். அடுத்த ஆறு மாசம் எனக்கு சோதனை காலம். ஆனா அதே நேரத்துல, அது ஒன்னு தான் எனக்கு இருக்கிற வாய்பும் கூட. உங்களுக்கு எல்லாம் தெரியும்னு அவளுக்குத் தெரிய வேண்டாம். நீங்களும் எதுவும் தெரியாத மாதிரி நடந்துக்கோங்க. அது போதும்."

"இதுல நீ ஜெயிக்க முடியும்னு நினைக்கிறியா?" என்றார் ரத்னா பரிதாபமாக.

"நான் ஜெயிப்பேன்னு என்னால சொல்ல முடியாது. ஆனா, நிச்சயமா நான் அவளை இழக்க மாட்டேன் மா"

"நான் இளவரசனை கண்மூடித்தனமா நம்பியிருக்க கூடாதுன்னு நினைக்கிறேன். அவனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்குறது எனக்கு தெரியாம போச்சு" என வருத்தத்துடன் சொன்னார் அரவிந்தன்.

"இல்லப்பா, இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல. ஐஸ்வர்யாவுக்கு நம்பகமான ஒரு ஆள் தேவை, அவளுடைய எண்ணங்களை அடியோடு மாத்த. அந்த ஒருத்தனா, நான் இருக்கணும்னு நினைக்கிறேன். அவளும் தப்பானவ கிடையாது. அவ வாழ்கையில பார்க்க கூடாததை, சின்ன வயசிலேயே பார்த்திருக்கா. அதனால தான் அவளுக்கு அவங்க மேல அவ்வளவு கோபம். கல்யாணத்தையும் ஆம்பளைங்களயும் வெறுக்க, அதுவே காரணமாக அமஞ்சி பேச்சு. ஏன்னா, இதுவரைக்கும், ஒரு நல்ல ஆம்பளையையே அவ பாக்கல. அதுக்கான சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கவே இல்ல. அது அவளுடைய தப்பில்லயே. பாவம், வாழ்க்கை அவளுக்கு தப்பான படத்தை மட்டும் காமிக்கும் போது, அவ அதிலிருந்து வேற என்ன கத்துக்க முடியும்? அவளுடைய பாதுகாப்பற்ற உணர்வுக்கும் அது தான் காரணம். ஒரு புருஷனா, அவளை அதிலிருந்து வெளியில கொண்டு வர வேண்டியது என் கடமை. அதுக்காக எனக்கு உங்களுடைய ஹெல்ப் வேணும்பா" என்றான்.

"நிச்சயமா.. இதுக்கு என்னென்ன செய்யணுமோ அத்தனையும் நாங்க செய்வோம். எனக்கும் அவ நம்மள விட்டு போறதுல கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது. அவ நம்ம வீட்டுக்கு வந்த மருமகள். அவ நம்மளோட சொத்து. அவ சந்தோஷமா இருக்கணும். அது தான் எனக்கு முக்கியம். அதே நேரத்துல, இன்னொன்னும் நான் சொல்லணும். நீ பொறந்தப்ப நான் பட்ட சந்தோஷத்துக்கு மேல, இன்னிக்கு உன்னை நினைச்சு நான் ரொம்ப பெருமை படுறேன். ஒருவேளை உன்னுடைய இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, மூடப்பட்ட வழிகளை மட்டும் நெனச்சு, எல்லாத்தையும் கைவிட்டிருபாங்க. ஐஸ்வரியாவுடைய குடும்பத்து மேலயும் கோபப்பட்டிருப்பாங்க. ஆனா நீ அப்படி எல்லாம் செய்யாம, உனக்கு இருக்கிற வழியை தேர்ந்தெடுத்தது பத்தி ரொம்ப சந்தோஷமா இருக்கு " என்றார் ரத்னா பெருமையாக.

"ரத்னா சொல்றது உண்மை தான். எப்படிடா இவ்வளவு இக்கட்டான நிலைமைலயும் நல்லத மட்டுமே பார்க்கிறே?" என்றார் அரவிந்தன்.

"நம்ம உண்மையா, மனசார யாரையாவது நேசிக்கும் போது, அவங்ககிட்ட இருக்கிற குறைகள் நமக்கு தெரியாதுப்பா. அதனால தான் என் கையிலிருந்து நூல் நழுவுறதுக்கு முன்னாடி, அதோட முனையை கெட்டியா பிடிச்சிகிட்டேன். என் கையில் இருக்கிறது நூலோட முனை தான். அவ தனக்கு விடுதலை கிடைச்சதா நினைச்சு, காத்தாடி மாதிரி உயரமா பறக்கட்டும். ஆனா, அவளுடைய அந்த நூல் நுனி என் கையில் தான் இருக்கு... என் கையில் தான் இருக்கும்." என்றான் நம்பிக்கையுடன்.

அரவிந்தனும் ரத்னாவும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள், தங்களுடைய மகனை நினைத்து. இன்று அவர்கள் நிம்மதியாக உறங்கி போவார்கள், அனைத்தையும் தன் மகன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன்.

வசீகரன் அவன் அறைக்குள் செல்ல முயற்சி செய்யும் முன் அவனை நிறுத்தினார் ரத்னா.

"நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்க. ஒருவேளை அவ உன்கிட்ட வன்முறையா நடக்க ஆரம்பிச்சிட்டா என்ன பண்றது?" என்றார் கவலையுடன்.

ரத்னா எந்த விஷயத்தில் தெளிவு பெற விரும்புகிறார் என்பதை வசீகரன் புரிந்து கொண்டான்.

"அதைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்மா. நான் அவளைப் பத்தி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சிக்க, மூன்று நாள் முழுசா செலவு பண்ணியிருக்கேன். ஒரு மனநிலை மருத்துவரையும் கலந்தாலோசனை பண்ணியிருக்கேன். அவங்க ஐஸ்வர்யாவைப் பத்தியும், அவள் என் கிட்ட பேசினது பத்தியும், எல்லாத்தையும் தெளிவா கேட்டு தெரிஞ்சிட்டாங்க. நான் அவகிட்ட, சில சமயங்கள்ல, குறும்பு பண்ணும் போது அவ எப்படி நடந்துக்கிட்டானு அவங்க என்கிட்ட கேட்டாங்க. அவ என்கிட்ட எந்த ஒரு அருவருப்பையோ, கோபத்தையோ, வெளிப்படுத்தினதே இல்ல. பதட்டத்தையும் பயத்தையும் மட்டும் தான் வெளிப்படுத்தியிருக்கா. அவளுக்கு என் மேல எந்த கோபமும் இல்ல. அதே நேரத்துல, அவ இன்னொரு ஒரு வார்த்தையும் சொன்னா. அவங்க அப்பா, என்னோட வாழ்க்கையை பாழாக்கிட்டதால், அவ குற்ற உணர்ச்சியில் தவிக்குறதா சொன்னா. அதனால அவ நிச்சயமா என்கிட்ட எந்த ஒரு வன்முறையையும் பிரயோகிக்க மாட்டா. அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் மறந்துடாதீங்க."

என்று நிறுத்தி குறும்பாய் சிரித்தான். என்ன என்பது போல ரத்னா பார்க்க,

"அவளே ஒத்துகிட்டா, நான் ரொம்ப அழகா இருக்கேன்னு. அவ எப்படி என்னை காதலிக்காம போறான்னு நான் பார்க்கிறேன்" என்றான்.

"அப்படின்னா அவ தூங்குறதுக்கு முன்னாடி உள்ள போ" என சிரித்தார் ரத்னா.

"தூக்கமா? இன்னிக்கு நிச்சயம் அவ தூங்கவே போறதில்ல" என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் வசீகரன்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top