6 விவாகரத்து
6 விவாகரத்து
ஐஸ்வர்யாவும், ரத்னாவும் இணைந்து காலை சிற்றுண்டிகான ஏற்பாடுகளை செய்து முடித்தார்கள். அரவிந்தனும் வசீகரனும் அவர்களுக்குரிய இடங்களை ஆக்கிரமித்துக் கொள்ள, அவர்களுக்கு பரிமாறிவிட்டு, தாங்களும் அமர்ந்து கொண்டார்கள், ஐஸ்வர்யாவும், ரத்னாவும். ஐஸ்வர்யா சாப்பிடத் தொடங்கும் முன், அவளுடைய கையை மேசையின் அடியில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் வசீகரன். தனது கையை விடுவித்துக் கொள்ள, ஐஸ்வர்யா எவ்வளவு முயன்றும் அவளால் அது இயலவில்லை. அவளின் முகபாவனைகளை கண்டு, தனது மகன் சேட்டை செய்வதை புரிந்து கொண்ட அரவிந்தன், அவர்கள் பக்கம் பார்க்காமல் இருக்கும்படி ரத்னாவிடம் சமிக்ஞை செய்தார். அவர்கள் இருவரும், ஏதோ அங்கு வேறு யாருமே இல்லை என்பது போல, விரைவாக சாப்பிட்டு முடித்து, அவர்கள் அறையை நோக்கி கிளம்பி சென்று விட்டார்கள்.
அதன் பிறகு, ஐஸ்வர்யாவிற்கு வசீகரன் ஊட்டிவிட எத்தனித்த போது அவள் எதிர்ப்புறமாக தனது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"என்ன விளையாட்டு இது? என்றாள் முகத்தை வேறு பக்கம் திருப்பியவாறு.
"நான் இன்னும் என் விளையாட்டை ஆரம்பிக்கவே இல்ல, திருமதி ஐஸ்வர்யா வசீகரன்...! மேலும் ஹஸ்பண்ட் தன்னுடைய வைஃப்க்கு ஊட்டிவிட நினைக்கிறது, விளையாட்டா எனக்கு தெரியல" என்றான்.
"ஆனா, எல்லாத்துக்குமே ஒரு லிமிட் இருக்கு. பெரியவங்க முன்னாடி இப்படி எல்லாம் செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்ல" என்றாள்.
"ஓகே... ஐ அம் சாரி. இப்ப சாப்பிடு. அவங்க தான் இல்லையே" என்றான்.
"ஏன், என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க?" என்றாள்.
"நீ எதையுமே பேசாம இருக்கிற வரைக்கும், என்னால எப்படி புரிஞ்சுக்க முடியும்?" என்றான் வசீகரன்.
"பேசறதுக்கு, நீங்க, எங்க சந்தர்ப்பம் கொடுத்தீங்க?" என்றாள் அமைதியாக.
"சாப்பிட்டு முடிச்சிட்டு ரூமுக்கு வா" என்று கூறிவிட்டு அவனது அறையை நோக்கி சென்றான் வசீகரன்.
அவனுடன் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டே சாப்பிட தொடங்கினாள் ஐஸ்வர்யா. சாப்பிட்டுவிட்டு அவள் அறைக்கு வந்த போது, வசீகரன் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.
"வாவ்... ஒரு வழியா என்கிட்ட பேச உனக்கு தைரியம் வந்துடுச்சு போலிருக்கு?" என்றான்.
"ஆமாம்... எனக்கு தைரியம் வந்துடுச்சு" என்றாள் கீழே குனிந்தவாறே.
அவளுடைய பேச்சு தொணியில் வித்தியாசத்தை உணர்ந்தான் வசீகரன். ஆனால், அவள் என்ன நிலைமையில் இருக்கிறாள் என்பதை அவனால் உணர முடியவில்லை. அவன் ஏதோ சொல்ல முயல, அதற்கு முன் ஐஸ்வர்யா உதிர்த்த வார்த்தைகள் அவன் காதுகளில் திராவகம் என பயந்தன.
"எனக்கு விவாகரத்து வேணும்" என்றாள் ஐஸ்வர்யா.
நம்ப முடியாத ஒரு சிரிப்பை உதிர்த்தவாறு இல்லை என்று தலை அசைத்தான் வசீகரன்.
"நீ என்கிட்ட விளையாடுற தானே?" என்றான்.
அவள் இல்லை என்று தலை அசைத்தாள், குனிந்தவாறே.
"ஐஸ்வர்யா, இது விளையாட்டில்ல"
"நான் விளையாடல. என்னை இந்த கல்யாணத்துலயிருந்து விடுவிச்சிடுங்க" என்றாள் தீர்க்கமாய்.
"நான் உன்னை சங்கட படுத்தியிருந்தா, தயவு செய்து என்னை மன்னிச்சிடு. ஆனா, அதுக்கு பதில் குடுக்குறதுக்கு இது சரியான வழி இல்ல." என்றான் வலி நிறைந்த தொணியில்.
கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அவனை ஏரெடுத்து பார்த்தாள் ஐஸ்வர்யா. அவளின் கண்ணீர், அவள் கூறுவது எத்தனை உண்மை என்பதை விளக்கியது. அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். அவர்களுக்கு இடையில் நடக்கும் இந்த விவாதத்தை, அவன் பெற்றோர் கேட்பதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை. மாடிக்கு சென்று, அவளை தன் பக்கமாக திருப்பி, அவள் தோள்களைப் பற்றிக் கொண்டு கத்தினான்.
"நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? ஏ...ன்? என்ன பிரச்சினை உனக்கு? கல்யாணமாகி ரெண்டு நாள் தான் ஆச்சு, அதுக்குள்ள உனக்கு டைவர்ஸ் வேண்டுமா? (சட்டென்று நிறுத்தி எதையோ யோசித்தவன்) நீ வேற யாரையாவது காதலிக்கிறாயா?" என்றான்.
"நிச்சயமா இல்ல" என்று ஐஸ்வர்யா கூற, நிம்மதி பெருமூச்சு விட்டான்.
"அப்பறம் ஏன்? இப்பவாவது உண்மையை சொல்லு. ஏதாவது பேசு" என்றான்.
"ஏன்னா, எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல. நான் கல்யாணத்தை வெறுக்கிறேன்... ஆம்பளைங்கள வெறுக்கிறேன்... முக்கியமா உங்கள... "
தன் தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் உணர்ந்தான் வசீகரன். அவள் தன்னை வெறுக்கிறாள். ஆனால் ஏன்? என்ன தான் நடக்கிறது அவன் வாழ்க்கையில்? அவன் அவளை தன் அருகில் இழுத்து பிடித்தான்.
"அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்ட? நான் உனக்கு ஃபோன் பண்ணப்பவே என்கிட்ட சொல்ல வேண்டியது தானே? முன்னாடியே என்கிட்ட நீ ஏன் சொல்லல?"
"ஏன்னா, எனக்கு உங்கள புடிக்கலன்னு தெரிஞ்ச பிறகும், நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதமா இருந்தீங்க"
"என்ன? எனக்கு உண்மை தெரியுமா? தெரிஞ்சும் நான் பிடிவாதமா இருந்தேனா? யார் சொன்னது?" என்றான் குழப்பத்துடன்.
"என் அப்பா தான் சொன்னாரு. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும், நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதமா இருக்குறதா, அவரு தான் என்கிட்ட சொன்னார். அதனால, உங்ககிட்ட பேசுறதுல எந்த பிரயோஜனமும் இருக்காதுன்னு சொன்னார்"
தனது கண்களை இறுக்க மூடிக்கொண்டான் வசீகரன். ஐஸ்வர்யாவிற்கும் புரிந்து போனது, அவளுடைய தந்தை ஆடிய ஆட்டம் என்னவென்று. இளவரசன் பொய் சொல்லி அவளை வசீகரனுக்கு திருமணம் முடித்திருக்கிறார். ஐஸ்வர்யாவும், வசீகரனும் ஒருவரையொருவர் இயலாமையுடன் பார்த்துக் கொண்டார்கள். வசீகரன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"உங்க அப்பா ஏன் உன்கிட்ட பொய் சொன்னார்னு எனக்கு தெரியாது. ஆனா, அவர் பொய் சொல்லி உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காருனா, அதுக்கு ஏதாவது ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கும். அவரை நீ நம்பு"
"நம்புறதா? எங்க அப்பா அதுக்கு தகுதி இல்லாதவர். தன் மனைவிக்கு உண்மையா இல்லாத யாரும் நம்பிக்கை என்ற வார்த்தைக்கு தகுதி இல்லாதவங்க"
"நீ என்ன சொல்ற?"
"அவர் ஒரு கீழ்த்தரமான பெண்பித்தர்னு சொல்றேன். தன்னோட மனைவியை கண்ணீரில் தவிக்க விட்டுட்டு, தன்னோட சந்தோஷத்தை பத்தி மட்டுமே கவலைப்பட்ட ஒரு கீழ்த்தரமான மனுஷன்னு சொல்றேன். அவர் மனுஷன்னு சொல்றதுக்கு தகுதி இல்லாதவர். தன்னுடைய சந்தோஷத்தையும், தனக்கு என்ன தேவைங்குறதை பத்தி மட்டும் தான் அவர் கவலைப்பட்டார். இப்போ அவர் என்னோட வாழ்க்கையிலயும் விளையாடிட்டார். எனக்கு ஆம்பளைங்க மேல இருக்கிற அதீதமான வெறுப்பு தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட, என்னோட விருப்பத்துக்கு மாறா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டார்" என்று சீறினாள் ஐஸ்வர்யா.
அன்று, ஐஸ்வர்யாவின் புதிய பக்கத்தை கண்டான் வசீகரன். பொங்கி வந்த அவளுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, அவள் பேசியதை அவனால் உணர முடிந்தது. அவனுக்குத் தான் இருக்கும் கட்டம் எப்படிப்பட்டது என்றும் புரிந்து போனது. அவன் தன்னை தயார் படுத்திக் கொண்டான்.
"உன்னுடைய நிலைமை என்னன்னு எனக்கு புரியுது. ஒரு தடவை நிதானமா யோசிச்சு பாரு"
"இல்ல.... உங்களால என்னை புரிஞ்சுக்க முடியாது. இதெல்லாம், பெண்ணோட உணர்வுகள் பற்றிய சமாச்சாரம். இதெல்லாம் ஆம்பளைங்களால புரிஞ்சுக்கவே முடியாது. ஆம்பளைங்கள பார்க்கும் போதெல்லாம் எனக்கு கோவம் பொத்துகிட்டு வருது. என் கூட வாழணும்னு நினைச்சு, உங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக்காதீங்க. என்கிட்டயிருந்து நிச்சயமா உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. எனக்கு ஆம்பிளைங்களையே பிடிக்காது. முக்கியமா உங்கள." தனது கண்களை இறுக மூடிக்கொண்டு, வேதனையுடன் கூறினாள் ஐஸ்வர்யா.
"ஆனா, ஏன்?" என்று முழுங்கினான் வசீகரன்.
"ஏன்னா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றாள் ஐஸ்வர்யா.
வசீகரனுக்கு சிரிப்பதா, அழுவதா என்பதே புரியவில்லை. அவன் மிகவும் காதலிக்கும், அவனுடைய மனைவி, அவன் அழகாக இருப்பதாக ஒத்துக் கொண்டுவிட்டாள். ஆனால், அதே நேரம், அவள் அவனை வெறுப்பதற்கும் அதுவே காரணமாக அமைந்திருப்பதை நினைக்கும் போது, தன்னை பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது. அவன் ஐஸ்வர்யாவை நம்ப முடியாத பார்வை பார்த்தான்.
"நீ என்னை குழப்புற. அழகா இருக்கிறதுகாக, யாராவது, ஒருத்தரை வெறுப்பாங்களா? நீ என்ன தான் சொல்ல வர?" என்றான்.
"பார்க்க ரொம்ப சுமாரா இருக்குற, எங்க அப்பாவுக்கும் அண்ணனுக்குமே பல பெண்கள் தேவைப்படும் போது, நீங்க ஒழுக்கமாவா இருந்துட போறீங்க? நீங்க எங்க காலேஜ்க்கு சீஃப் கெஸ்ட்டா வந்தப்ப, பொண்ணுங்க உங்க மேல தானா வந்து விழுந்ததை தான் நான் கண்கூடா பார்த்தேனே. உங்க மடியில வந்து விழுறதை வேண்டாம்னு சொல்ல நீங்க என்ன முனிவனா?"
சற்றே நிறுத்தியவள்...
"நான் உங்களை குறை சொல்லல. இது உங்க வாழ்க்கை. நீங்க எப்படி வேணா வாழுங்க. ஆனா, தயவுசெஞ்சி என்னை விட்டுடுங்க. எங்கம்மாவை மாதிரியும், எங்க அண்ணியை மாதிரியும் அழுதுகிட்டே காலம் தள்ள நான் தயாரா இல்ல. காலம் முழுக்க கண்ணீர் வடிக்கவும் என்னால முடியாது.( தனது கண்களை இறுக்கி மூடி கொண்டு பல்லை கடித்தபடி சொன்னாள்) ஒருவேளை, என் புருஷன் வேற யார் கூடவோ இருந்ததை நான் கேள்விப்பட்டா, நான் உங்கள சத்தியமா கொலை பண்ணிடுவேன். அந்த அளவுக்கு ஓர் இக்கட்டான நிலைமைக்கு, இந்த உறவை நான் கொண்டு போக விரும்பல. அதனால, தயவுசெய்து என்னை விட்டுடுங்க. நீங்க, உங்க வாழ்க்கையை, உங்க இஷ்டத்துக்கு வாழ்ந்துகங்க"
"அப்படி ஒருவேளை நீ என்னைப் பத்தி கேட்டா, நீ என்னை தாராளமா கொல்லலாம்"
"தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க. நமக்கு இப்ப தான் கல்யாணம் ஆகியிருக்கு. இந்த ஜோர்ல, சாத்தியப்படாத எல்லாத்தையுமே நீங்க பேசுவீங்க. எங்கப்பா பொய் சொல்லி என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு, உங்க வாழ்க்கையை கெடுத்துட்டார். ஏற்கனவே நான் அந்த குற்ற உணர்ச்சியில் செத்துகிட்டு இருக்கேன். மேற்கொண்டு எந்த ஒரு நம்பிக்கையையும் உங்களுக்கு கொடுக்க நான் விரும்பல. நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகியிருக்கு. நீங்க இதிலிருந்து சுலபமா வெளியில் வந்துட முடியும். புத்திசாலித்தனமா யோசிங்க. நான் எல்லாரையும் விட்டு விலகி போகணும்னு நினைக்கிறேன். என்னோட அம்மாவையும், அண்ணியையும் கண்காணாத தூரத்துக்கு கூட்டிக்கிட்டு போயிடணும்னு நினைக்கிறேன். தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோங்க. ப்ளீஸ்"
ஜீரணிக்கவே முடியாத, அந்தக் கடுமையான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, அங்கிருந்து சென்றாள் ஐஸ்வர்யா, தனது கணவனின் அழகான கனவுகளை பொடியாக்கிவிட்டு.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top