25 பார்வை ஒன்றே போதுமே
25 பார்வை ஒன்றே போதுமே
அன்பு இல்லம்
வசீகரனும் ஐஸ்வர்யாவும், அன்பு இல்லம் வந்து சேர்ந்தார்கள். ரத்னா சமையலறையில் வேலையாக இருந்தார். வசீகரன், லண்டனுக்கு செல்வதால், அவனுக்கு பிடித்த உணவை ரத்னா தயாரித்து கொண்டிருப்பதாக ஐஸ்வர்யா நினைத்தாள். சமையலறையிலிருந்து வெளியே வந்த ரத்னா அவர்களைப் பார்த்து,
"நீங்க வந்தாச்சா?" என்றார்.
"ஆமாம்மா. எனக்கு பேக்கிங் வேலை இருக்கு."
"ஐஸ்வர்யா, நீ அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றியா?"
"சரிங்க, ஆன்ட்டி" என்று கூறிவிட்டு தங்கள் அறையை நோக்கி சென்றாள் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவை பார்த்தவுடனேயே, ரத்னாவுக்கு புரிந்தது, அவள் நன்றாக இல்லை என்பது. அவர் 'என்ன ஆயிற்று?' என்று பார்வையின் மூலமாக வசீகரனை கேட்க, அவன் 'ஏதும் இல்லை' என்பது போல தோள்களை குலுக்கினான். அந்த நேரம் அங்கு வந்த ஒரு இளைஞன், ஒரு பேக் செய்யப்பட்ட டப்பாவை வசீகரனிடம் கொடுத்தான்.
"விஷால் சார் இதை உங்ககிட்ட குடுக்க சொன்னார்" என்றான்.
"ஓ.. இதுவும் வந்தாச்சா?" என்றார் ரத்னா.
"ஆமாம்மா"
"சரி, உன் ரூமுக்கு போ. நேரம் ஓடிக்கிட்டிருக்கு. இருக்கிற கொஞ்சம் நேரத்தை, அவகிட்ட எந்த வம்பும் செய்யாம, அவ கூட யூஸ்ஃபுல்லா செலவு பண்ணு."
அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் வசீகரன்.
"வம்பு செய்யறது யூஸ்ஃபுல்லா இருக்காதுன்னு நினைக்கிறீர்களா? என்றான்.
"அது யூஸ்ஃபுல்லா இல்லயாங்கிறது, அவ எடுக்க போற முடிவுல தான் தெரியும்"
"ஆமாம்" என்று சிரித்த படி தலையசைத்தான் வசகரன். விஷால் கொடுத்தனுப்பி இருந்த டப்பாவின் மீது, அதே சிரிப்புடன் ஏதோ எழுதிவிட்டு, அவன் அறைக்கு வந்த போது, ஐஸ்வர்யா அவனுடைய பொருள்களை எல்லாம் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அவன் எடுத்து வந்திருந்த டப்பாவை அவளை நோக்கி நீட்ட, கேள்வி பொதிந்த பார்வை ஒன்று பார்த்தாள்.
"என்ன இது?"
"கேள்வி கேட்கிறத நிறுத்திட்டு, திறந்து பாரு"
அவள் கையை பிடித்து, அந்த டப்பாவை அவள் கையில் வைத்துவிட்டு, அவளை கவனிக்காதது போல் வேறு பக்கமாக திரும்பிக் கொண்டான். அந்த டப்பாவின் மீது எழுதி இருந்த வாசகத்தை பார்த்தவுடன், ஐஸ்வர்யாவின் முகம் மின்னியது.
"என் வாழ்வின் வரமாய் வந்தவளுக்கு எளிய பரிசு"
அவள் முகத்தில் தோன்றிய பெருமிதத்தை மறைக்க படாதபாடுபட்டாள் ஐஸ்வர்யா. வசீகரனும், அதை கவனிக்காதவன் போலவே இருந்தான், அவன் அம்மா கூறியதை நினைவுபடுத்திக் கொண்டு. அவர் தான் நேரத்தை உபயோகமாக செலவழிக்க சொல்லியிருக்கிறாரே.
வசீகரன் தன்னை பார்க்கவில்லை என்பதை நன்றாக உறுதிப்படுத்திக் கொண்டு, மெதுவாக அந்த டப்பாவை திறந்தாள் ஐஸ்வர்யா. அதனுள் ஒரு ஐபோன் இருந்தது.
அவளுக்கு தெரியும், வசீகரன் ஏன் அதை அவளுக்குக் கொடுக்கிறான் என்று. அப்போது தானே அவன் லண்டன் போன பின் அவளுடன் பேச முடியும்.
அவள் மனதில் நினைத்ததை கேட்டு விட்டதை போல கூறினான் வசீகரன்.
"கவலப்படாத. உன்கூட பேசுறதுக்காக இத நான் உனக்கு கொடுக்கல. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். இந்த இடைவெளியை, நான் இல்லாம, நீ தனியா சந்தோஷமா அனுபவிக்கலாம். என்னோட டார்ச்சர் இல்லாம நீ சந்தோஷமா இரு."
ஐஸ்வர்யா, அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? அவன் அவளுடன் பேச போவதில்லையா? உண்மையிலேயே அவனால் அது முடியுமா?
இல்லை... அவளுடன் பேசாமல் அவனால் இருக்க முடியாது. அவளை சீண்டி பார்க்காமல், அவனால் இருக்கவே முடியாது. ஒருவேளை... அவன் பேசாமல் இருந்துவிட்டால்? அதுவும் ஒரு மாதம் முழுவதும்? யாரோ அவள் இதயத்தை குத்திக் கிழிப்பது போலிருந்தது.
"அப்புறம், எதுக்காக இந்த ஃபோனை எனக்கு கொடுக்குறீங்க?"
"உங்க அம்மாவோட பேசுறதுக்கு. நீ தான் தினமும் உங்க அம்மாகிட்ட பேசுவியே. அப்போ, உனக்கு ஒரு ஃபோன் வேணும் தானே? அம்மாகிட்ட சொல்லி உன்னை ஒவ்வொரு வீக் எண்டும் உங்க அம்மா வீட்ல விட சொல்லி இருக்கேன். நீ அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம். உனக்கு வேற ஏதாவது வேணும்னா, விஷால்கிட்ட கேலு. நீ கேக்குறதை அவன் செய்வான். "
அவன் செய்திருந்த ஏற்பாடுகள் எல்லாம் உண்மையிலேயே சிறப்பானவை தான். ஆனால், அவற்றையெல்லாம் கேட்கும் போது, அவளுடைய தொண்டை ஏனோ வற்றிப் போனது. ஏதோ, முன்பு எப்போதும் அவனைப் பார்க்காதவள் போல, அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைசியில், அடக்க மாட்டாமல் கேட்டே விட்டாள்.
"என்னை தனியா விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்னு சொன்னீங்க? நான் எங்க போனாலும் அங்க வருவேன்னு சொன்னீங்க? ராமன், சீதை எல்லாம் உதாரணமா கொண்டு வந்து நிறுத்தினிங்க? அதெல்லாம் காத்துல போன மாதிரி தெரியுது? வெறும் பேச்சுக்குத் தானா அதெல்லாம்?"
"நான், ராமனை மாதிரி 14 வருஷம் ஒன்னும் போகலையே..? ஒரு மாசம் தானே... அது சரி, எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது, நீ என்னை ஏற்கனவே மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னு...?" புன்னகை மாறாமல் கேட்டான் வசீகரன்.
"நான் ஏன் உங்கள மிஸ் பண்ண போறேன்? எப்ப பாத்தாலும் வெறுப்பேத்திகிட்டே இருக்கிறவங்களை யாராவது மிஸ் பண்ணுவாங்களா?" எங்கோ பார்த்துக் கொண்டு, அவனைப் பார்க்காமல் பதில் சொன்னாள் ஐஸ்வர்யா.
"நிச்சயமா நீ மிஸ் பண்ணுவ... இந்த வெறுப்பேத்துறதெல்லாம், காதல் மிகுதியால தான் நடக்குதுன்னு நீ புரிஞ்சுக்குற நாள்ல, நீ நிச்சயமா என்னை மிஸ் பண்ணுவ"
"நான் அப்படி எல்லாம் நினைக்கல" அவள் தட்டுத்தடுமாறி, கலங்கிய கண்களுடன் கூறினாள்.
"எனக்கு தெரியும். உண்மையிலேயே நீ அதை உணர்ந்தால் கூட, வெளியில காட்டிக்க மாட்ட. ரொம்ப அழுத்தக்காரி நீ"
"அப்புறம் ஏன், என் மனசுல காதலை ஏற்படுத்தியே தீருவேன்னு பிடிவாதமா இருக்கீங்க?"
அவ்வளவு நேரம் அணை கட்டி வைத்திருந்த கண்ணீர் வெளிப்பட்டது.
"நான் உன் மனசுல காதலை உருவாக்க முயற்சி பண்ணலை. என்னுடைய காதலை, உனக்கு புரிய வைக்கத் தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா, இப்போ நீ சொன்னது எனக்கு ஆச்சரியமா இருக்கு. அப்படின்னா, உன் மனசுல நான் காதலை ஏற்படுத்திட்டேனா என்ன?"
தான் விரித்த வலையில், தானே சிக்கிக் கொண்டு தவித்தாள் ஐஸ்வர்யா. அவள் மனதில் இருப்பவற்றை, அவளை அறியாமலேயே, அவள் கணவன் முன் கொட்டிக் கொண்டிருக்கிறாள் அந்த பாவப்பட்ட பெண்.
அப்பொழுது, அவர்கள் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. வேலைக்கார ராமு நின்றிருந்தான்.
"அம்மா உங்க ரெண்டு பேரையும் கீழே கூப்பிடுறாங்க. ஐஸ்வர்யா அண்ணியோட குடும்பத்தார் இங்க வந்திருக்காங்க" என்று கூறிவிட்டு சென்றான்.
வசீகரனின் பார்வை சட்டென ஐஸ்வர்யாவின் பக்கம் திரும்பியது. அவன் எண்ணியது போலவே, அவள் தன் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.
அவளுடைய அப்பாவும் அண்ணனும் இருக்குமிடத்தில் இருக்க அவள் விரும்புவது கிடையாது... அதுவும் நிச்சயமாக அவள் மாமியார் வீட்டில் கிடையவே கிடையாது. அவள் மாமியார், மாமனார் முன்பு, அவர்களுடன் சுமூகமான உறவு இருப்பது போல் நடிக்க அவளால் முடியாது. அவளது அந்த நடவடிக்கை, ரத்னாவிற்கும் அரவிந்தனுக்கும் மன வருத்தத்தை தரலாம். என்ன இக்கட்டான சூழல் இது? யார், அவர்களை இப்பொழுது இங்கே வரச் சொன்னது? ஒருவேளை அவளுடைய தந்தை, அவள் மாமனார், மாமியார் முன்பு, அவள் எதுவும் செய்ய மாட்டாள் என்ற தைரியத்தில் அவளிடம் பேச முற்படலாம். அப்படி அவர் பேச முற்பட்டால் அவள் என்ன செய்யப் போகிறாள்?
அவளுடைய பதட்டத்தை வசீகரன் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை கூட அவள் கவனிக்கவில்லை. அவள் எதிர்பார்த்திராத வண்ணமாக, இரண்டு அடிகளை எடுத்து வைத்து, அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான் வசீகரன்.
உண்மையிலேயே அந்த அரவனைப்பு அவளுக்கு தேவைபட்டது. அவள் அதை வேண்டாம் என்று மறுக்கவும் இல்லை, அவனை கட்டி அணைக்கவும் இல்லை. ஏதோ உணர்ச்சியற்றவள் போல அப்படியே நின்றாள், வசீகரன் அவள் தலையை மெல்ல தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ளும் வரை.
"நான் இருக்கும் போது நீ ஏம்மா இப்படி பதட்டப்படுற? நான் உன் கூட இருக்கேன். நான் உன்னை சங்கடப்பட விடமாட்டேன். என்னை நம்பு."
ஏனென்றே தெரியவில்லை, அவளுக்கு அப்படியே அழ வேண்டும் போல் தோன்றியது. இப்படிப்பட்ட தெய்வீகமான உணர்வை கொடுக்கும் உறவு அமைவதெல்லாம் வரம் தான். அவளுடைய கரங்கள், அவனுடைய தோள்களை, உறுதியாக சுற்றி வளைத்தன. அவள் தன் கண்களை மூடி, அவர்களை சுற்றி இருந்த அனைத்தும் இருண்டு போக செய்தாள். அவன் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கு மிக துல்லியமாக கேட்டது... அதன் ஓசை அதிகரிப்பதாக தோன்றியது... அவளுக்குள் இருக்கும் பதட்டத்தை, வசீகரன் தன்னுள் வாங்கிக் கொள்வது போல் அது இருந்தது. சற்று நேரத்தில் அவன் இதயத்துடிப்பு, அவளுக்கு தாலாட்டு போல் கேட்டது. அவன் தோள்களை இறுகப் பற்றியிருந்த அவளது கரங்கள், தளர்ந்து மெல்ல கீழே இறங்கி, அவன் இடையை சுற்றி வளைத்தன. அவள் கண்களை மூடி, அவன் இதயத்துடிப்பை கேட்டுக்கொண்டு, எவ்வளவு நேரம் அப்படி நின்றிருந்தாளோ தெரியவில்லை. அவளை அமைதியடைய செய்துவிட்டதில், தன்னை ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்ந்தான் வசீகரன்.
யாரோ வரும் சத்தம் கேட்டு, அந்த அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் வசீகரன். தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் குழந்தை, தன் தாயின் கதகதப்பை தேடுவது போல, பரிதவிப்புடன் கண்களை திறந்தாள் ஐஸ்வர்யா.
அவள், நிலா உள்ளே நுழைவதை பார்த்து அமைதியானாள்.
"எப்படி எங்க சர்ப்ரைஸ் விசிட்?" என்ற நிலா, சந்தோஷமாக ஐஸ்வர்யாவை கட்டியணைத்தாள். ஒரு கற்சிலை போல, வசீகரனையே பார்த்துக் கொண்டு, அப்படியே நின்றாள் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவின் கரங்கள் நிலாவின் முதுகை தழுவியவாறு மெல்ல மெல்ல, மேலே உயர்ந்தது. தன் கன்னத்தை நிலாவின் தோளில் புதைத்துக்கொண்டு, வசீகரன் மீதிருந்த தன் பார்வையை அகற்றாமல், அப்படியே அவள் நிலாவை ஆரத் தழுவினாள், எண்ணற்ற உணர்வுகளை தன் முகத்தில் பிரதிபலித்தது, *நான் கட்டி அணைத்து கொண்டிருப்பது என் அண்ணியை அல்ல, உன்னைத் தான்* என்பது போல ஒரு பார்வையை பார்த்துக் கொண்டு.
அதை பார்த்த வசீகரனுக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. நிலாவின் அணைப்பில் இருந்த அவளை, கையைப் பிடித்து இழுத்து "என்னை அணைத்துக் கொள்" என்று கதற வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு.
அன்று கதிரவன் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. *அவள் எல்லாவற்றையும் பேச்சில் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவளுடைய ஒரு பார்வை சொல்லிவிடும் அவள் என்ன சொல்ல நினைக்கிறாள் என்பதை*. ஆம், இன்று அவன், அந்த கொலைகார பார்வையை பார்த்து விட்டான். கொல்லாமல் கொல்லும் பார்வை.
இத்தனை நாளாக, அவளை சுற்றி சுற்றி வந்து, அவன் பேசிய வார்த்தைகளும், செய்த செயல்களும், அந்த ஒரு பார்வையின் முன்பு மண்டியிட்டு போயின. அவனை வேரோடு சாய்க்கும் சக்தி, அவள் கண்களுக்கு இருக்கிறது என்பதை, அவன் இத்தனை நாள் உணராமல் போய்விட்டான். அவன் தன் கால்கள் வலுவிழந்து விட்டதைப் போல உணர்ந்தான். இதயங்கள் ஒன்றுபட்ட பின், உணர்வுகளை வெளிப்படுத்த, தொடுதல்கள் அவசியம் இல்லை, என்பதை இன்று உணர்த்திவிட்டாள் ஐஸ்வர்யா. இந்த ஒரு பார்வையே போதும், சாகும் வரை அவளுக்காக ஏங்கித் தவிக்க. இதயத்தால் உணர முடியும் என்றால், ரத்தம் சிந்தாமலேயே ஒருவரை கொல்ல முடியும் என்பதை இன்று ஒப்புக் கொண்டான் வசீகரன்.
அரவிந்தன் தன்னை கூப்பிடும் சத்தம், வசீகரனுக்கு கேட்டது. செல்ல மனமில்லாமல் அங்கிருந்து சென்றான் வசீகரன், தன் இதயத்தை தன் மனைவியிடம் விட்டுவிட்டு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top