24 இடைவெளி
24 இடைவெளி
ஐஸ்வர்யாவின் அறைக்கு வந்த வசீகரன், அவளை வேலையை முடித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அவள் எதிரில் அமர்ந்து கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். உண்மையில் சொல்லப் போனால், அவனுக்கு அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. "அவளை வேலையை முடித்துக் கொள்" என்று சொன்னால், அவள் அவ்வளவு சீக்கிரத்தில் அதை செய்ய மாட்டாள். அவளை சீக்கிரமாக கிளப்ப வேண்டும் என்றால், இது தான் ஒரே வழி. இனி ஐஸ்வர்யா தானாகவே, அனைத்து வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு, கிளம்பி விடுவாள். இவன் இப்படி அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தால், அவளுக்கு நிச்சயம் வேலை செய்யத் தோன்றாது என்பது அவனுக்குத் தெரியும்.
தனது கம்ப்யூட்டரை லாக் அவுட் செய்து விட்டு எழுந்தாள் ஐஸ்வர்யா. சிரித்தபடி அவளுடன் கிளம்பினான் வசீகரன். அவர்களுடைய கார், அவளுடைய அம்மா வீட்டை நோக்கி செல்வதை பார்த்த போது, ஐஸ்வர்யாவிற்கு குழப்பமாக இருந்தது.
"நாம, எங்க அம்மா வீட்டுக்கு போறோமா?" என்றாள்.
"எஸ்"
"ஆனா ஏன்? நான் தான் உங்ககிட்ட எனக்கு அங்க போறதுல விருப்பம் இல்லன்னு சொன்னேனே..."
"அவசியம்ங்கறதால தான் போறோம்"
"ஏதாவது பிரச்சினையா? எல்லாரும் நல்லா இருக்காங்க இல்ல?"
"ஏன் எப்போதும் தப்பாவே நினைக்கிற? நல்லது நடக்கவே நடக்காதா?"
ஐஸ்வர்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
"சரி, சொல்லுங்க என்ன விஷயம்?"
"ரொம்ப ஆர்வமா இருக்க போல இருக்கு... நீயே இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுக்குவ"
"உங்களுக்கு என்னை காக்க வைக்கிறதுல ரொம்ப சந்தோஷம். அப்படித் தானே?"
"என்ன செய்றது? என்னோட சேர்க்கை அந்த மாதிரி... உன் கூட சேர்ந்ததிலிருந்து, நானும் உன்னை மாதிரியே நடந்துக்க ஆரம்பிச்சிட்டேன். நீயும் தானே என்னை எல்லாத்துக்கும் காக்க வச்சிக்கிட்டு இருக்க? இல்லன்னு சொல்லு பாக்கலாம்?"
அவனுக்கு பதில் கூறாமல், முகத்தை சுளித்துக் கொண்டு, ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தாள் ஐஸ்வர்யா.
"உங்க அப்பாவும், அண்ணனும், ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்காங்க. அவங்க வீட்ல இல்ல. நான் ஏற்கனவே விசாரிச்சுட்டு தான் உன்னை கூட்டிகிட்டு போறேன். அதனால நீ கவலைப்பட வேண்டியதில்ல."
ஐஸ்வர்யாவிற்கு "அப்பாடா" என்று இருந்தது. அதற்குள் அவர்கள் இளவரசன் இல்லத்தை அடைந்து விட்டிருந்தார்கள். மீனாட்சியும், நிலாவும், அவர்களுக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது அவளுக்கு குழப்பமாக இருந்தது. அவர்கள் வரப்போகிறார்கள் என்று ஏற்கனவே இவர்களுக்கு தெரியுமா என்ன?
"என்ன ஒரு பங்ச்சுவாலிட்டி. சொன்ன டைமுக்கு கரெக்டா வந்துட்டீங்க" என்று சிலாகித்தாள் நிலா.
"அப்படியா சொல்றீங்க? ஆனா ஐஸ்வர்யாவுக்கு அதுல மாற்றுக் கருத்து இருக்கே. நான் அவளை காக்க வைக்கிறதா, அவ என்னை குறை சொல்றா. அப்படி தானே?" என்றான் வசீகரன்.
சற்று நேரத்திற்கு முன், அவர்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை, அவன் இங்கே இழுத்துக் கொண்டு வருவான் என்று அவள் நினைக்கவில்லை.
"ஒருவேளை, ஒரு புருஷனா நீங்க அதை செஞ்சிருக்கீங்களோ என்னவோ" என்றாள் நிலா சிரித்தபடி.
"உண்மைய சொன்னா , *காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடின்னு* பாட வேண்டிய ஆள் நான் தான். அதை, ஐஸ்வர்யா கூட மறுக்க மாட்டா. நான் சொல்றது சரி தானே?"
"நெஜமாவா? நீ அப்படி செய்றவ இல்லயே, எதுக்காக நீ வசீகரனை காக்க வைக்கிறே?" என்றார் மீனாட்சி.
என்ன கூறுவது என்று தெரியாமல், விழித்துக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவளை சிறிது நேரம் தவிக்க விட்டு வேடிக்கை பார்த்த பின், வலிய தானே அவளுடைய உதவிக்கு வந்தான் வசீகரன்.
"தன்னை தயார்படுத்திக்க, அவ ரொம்ப அதிக நேரம் எடுத்துக்குறா"
என்று நிறுத்தி விட்டு
"நாங்க எங்கயாவது வெளியில போகும் போது..." என்று முடித்தான் வசீகர புன்னகையுடன். ஐஸ்வர்யாவிற்கு, போன உயிர், திரும்பி வந்தது போலிருந்தது.
"எதுக்குமா எங்களை வர சொன்னீங்க?" என்றாள் ஐஸ்வர்யா மீனாட்சியிடம்.
"என்னது, நாங்க வர சொன்னோமா? மாப்பிள்ளை தான், லண்டன் போறதுக்கு முன்னாடி எங்களை பாக்கணும்னு சொன்னாரு"
லண்டனா? என்பது போல் அதிர்ச்சியாக பார்த்தாள் ஐஸ்வர்யா. வசீகரன் லண்டனுக்கு செல்கிறானா? ஆனால், அவன் அதைப் பற்றி அவளிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஆனால் அவள் அம்மாவிடமும் அண்ணியிடமும் கூறிவிட்டு இருக்கிறான். அவன் தன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்?
"ஆமாம், ஆன்ட்டி, நான் திரும்பி வர ஒரு மாசம் ஆயிடும். அதனால தான், போறதுக்கு முன்னாடி, உங்களை பார்த்துட்டு போகலாம்னு நினைச்சேன்."
ஒரு மாதமா? இது மற்றுமொரு அணுகுண்டு. நியாயமாக பார்க்கப் போனால், அவன் தன்னுடன் இருக்கப் போவதில்லை என்பதை நினைத்து அவள் சந்தோஷம் தானே பட வேண்டும்? ஆனால், ஏனோ இந்தப் பாழும் மனது அப்படி நினைக்க மறுத்தது. அவள் தொண்டையை அடைத்த ஏதோ ஒன்றை, விழுங்கி தொலைக்க படாதபாடுபட்டாள் ஐஸ்வர்யா. அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும், அவளுடைய கணவனின், கிண்டல்கள், கேலிகள், சீண்டல்கள், தொந்தரவுகள், இரட்டை அர்த்த பேச்சுக்கள், ஏதும் இருக்கப் போவதில்லை என்பதை நினைக்கும் பொழுது அவளுக்கு வெறுப்பாக இருந்தது.
"நீங்க வரும் போது, அவர் இருந்திருந்தா, நல்லா இருந்திருக்கும். ஆனா, அவருக்கு ஒரு மீட்டிங் இருக்கு. அதனால அவரு வீட்டுல இருக்க முடியாம போச்சு" என்று வருத்தப்பட்டார் மீனாக்ஷி.
"பரவாயில்ல, ஆன்ட்டி. ஒரு பிசினஸ்மேனா இருந்து, இத கூட என்னால புரிஞ்சுக்க முடியாதா? சரி, நான் கேட்டது ரெடியா?" என்றான்
மீனாட்சியும் நிலாவும் 'ஆம்' என்று தலையசைத்து கொண்டார்கள், ஒருவரையொருவர் பார்த்தபடி. ஐஸ்வர்யாவிற்கு ஆத்திரம் தாங்க வில்லை. என்ன தான் நடக்கிறது இங்கே?
நிலா உள்ளே சென்று ஐஸ்வர்யாவின் பிங்க் டெடிபியரை கொண்டு வந்து, வசீகரனிடம் கொடுத்தாள். அதை தன் கையில் வாங்கிக் கொண்டவன், வழக்கம் போல அதனுடன் பேசத் தொடங்கினான்.
"சொல்றத கவனமா கேட்டுக்கோ, நான் திரும்பி வர்ற வரைக்கும் நீ தான் என் ஒய்ஃப் கூட இருக்கணும். அவளுக்கு தூங்கும் போது காலை போட யாராவது ஒருத்தர் நிச்சயமா வேணும். அந்த ஈடு இணையில்லாத இடத்தை உனக்கு நான் கொடுத்துட்டு போறேன்."
மீனாட்சியும், நிலாவும், சிரிப்பை அடக்கிக் கொண்டு, சமையலறைக்கு ஓடினார்கள், வசீகரனையும் ஐஸ்வர்யாவையும், வரவேற்பறையில் தனியே விட்டு. அவன் பேசியதை கேட்டு, வாயை பிளந்தபடி நின்றிருந்தாள் ஐஸ்வர்யா.
டெடி பியரை அவளிடம் கொடுத்துவிட்டு,
"இதை உன்னோட வச்சுக்க. பாவம், எவ்வளவு தான் அது உன்கிட்ட உதை வாங்க போகுதோ..." என்றான்.
"எதை நிரூபிக்க இதெல்லாம் செஞ்சுகிட்டு இருக்கீங்க?"
"பெருசா ஒன்னும் இல்ல. உன்னால தனியா தூங்க முடியாது... நான் இல்லாம"
"நான் தூங்குவேன்"
"தூங்கி தான் ஆகணும்... ஒரு முழு மாசமும்"
"நீங்க லண்டனுக்கு போறத பத்தி ஏன் என்கிட்ட எதுவும் சொல்லல? இது தான் நீங்க என்மேல வச்சிருக்கிற லவ்வா?"
தன் மனதில் இருந்ததை அப்படியே வெளியில் கொட்டினாள் ஐஸ்வர்யா.
"நீ இப்படி பேசறத கேட்டா, உன்னை ரொம்ப பொசசிவ்வான ஒய்ஃபுன்னு எல்லாரும் தப்பா நினைச்சுக்குவாங்க. பாரு, நீ பேசுனத கேட்டு என் உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சு"
அவள் கையை இழுத்து தன் கன்னத்தில் வைத்தான். கோபமாக தனது கையை இழுத்துக் கொண்டாள்.
"தேவையில்லாததை எல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க"
"இன்னைக்கு காலையில தான் இந்த ட்ரிப் கன்ஃபார்ம் ஆச்சி. போன வாரத்தில் இருந்தே இதை நான் எதிர்பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்னாலும், நிச்சயமா எதுவும் எனக்கு தெரியல. சரியா தெரியாம எதையும் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். ஒருவேளை நீ உன் மனசுல, நான் இல்லாம சந்தோஷமா இருக்கலாம்னு கற்பனை கோட்டை கட்டி, அதுக்கப்புறமா அது கேன்சல் ஆயிடுச்சின்னா, நீ ஃபீல் பண்ணுவியேன்னு தான், நான் உன்கிட்ட சொல்லல. இப்ப பாரு, நீ நிச்சயமா சந்தோஷமா, ஜாலியா இருக்கலாம். உன்னுடைய டெடிபியர கூட உன்கிட்ட நான் கொடுத்துட்டேன். நீ எந்த தயக்கமும் இல்லாம நிம்மதியா தூங்கலாம். நான் தூங்குற வரைக்கும், நீ இனிமே காத்திருக்க தேவையில்ல. சரி தானே?"
அவன் கூறுவது எல்லாம் நடந்து தான் இருக்கவேண்டும். ஆனால், அவை அனைத்தையும் அவனே கூறும் போது அது என்னமோ ஏற்புடையதாக இல்லை.
மீனாட்சி இரண்டு கிண்ணங்களில் பாயசம் கொண்டு வந்து அவர்கள் கையில் கொடுத்தார். அதை ரசித்து ருசித்து சாப்பிட்டான் வசீகரன், ஐஸ்வர்யாவை பார்த்தபடி. ஆனால் அவளோ, பாயச கிண்ணத்தைக் கையில் வைத்து கொண்டு, மேஜை கரண்டியால் கிளறிக் கொண்டே இருந்தாள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தான் வசீகரன்.
"நாங்க கிளம்புறோம் ஆன்ட்டி. நாளைக்கு ட்ரிப்புக்கு தேவையானதெல்லாம் எடுத்து வைக்க வேண்டிய வேலை இருக்கு" என்றான்.
"சாரிப்பா... அவர் வந்துடுவார்ன்னு நினைச்சேன்...." என்றார் மீனாட்சி.
"பரவாயில்ல, ஆன்ட்டி. நான் அப்புறமா ஃபோன் பண்ணி பேசிக்கிறேன்"
அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, அன்பு இல்லம் நோக்கி புறப்பட்டார்கள்.
தனது டெடிபியரை பின் சீட்டில் வைத்து விட்டு, தனது சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டாள் ஐஸ்வர்யா.
"என்ன இருந்தாலும் நீ இப்படி பண்ணி இருக்க கூடாது. பாவம் உன்னுடைய டெடிபியர், எவ்வளவு பாவமா பின்சீட்டில் படுத்திருக்கு பாரு. நான் நினைச்சேன், நீ உன் மடியை விட்டு அதைக் கீழே இறக்க மாட்டேன்னு"
ஒரு கோபப் பார்வையை அவனை நோக்கி வீசிவிட்டு, ஜன்னல் பக்கம் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள் ஐஸ்வர்யா.
"நீ எதுவும் சொல்லலன்னா என்ன? எனக்கு தெரியும் உனக்கு என்ன பிடிக்கும்னு. உனக்கு என் மடியில உட்காரணும், நான் உனக்கு முத்தம் கொடுக்கணும்..."
"வாயை மூடுங்க. நான் அப்படி எல்லாம் ஒன்னும் நினைக்கல" என்றாள் ஐஸ்வர்யா.
"நீ அப்படியெல்லாம் நினைக்கிறேன்னு யார் சொன்னது? நான் உன்கிட்ட பேசிகிட்டு இல்லயே, நான் அந்த டெடிபியர் கிட்டல்ல பேசிகிட்டு இருக்கேன். பாவம், என்னால தான் அது உன்கூட வருது. அது தனியா இருக்கேன்னு, அதுக்கு நான் கம்பெனி கொடுக்கிறேன். தெரியாமத் தான் கேட்கிறேன், நான், காதல், முத்தம், கட்டிப் பிடிக்கிறது, இப்படியெல்லாம் பேசும் போது, அது உனக்காக தான் பேசுவேன்னு ஏன் நினைக்கிறே?"
அதைக்கேட்டு பல்லை நறநறவென்று கடித்தவள், நேராக அமர்ந்து கொண்டு கைகளை கட்டிக் கொண்டாள்.
"திமிர் பிடிச்சவன்" என்று முணுமுணுத்தாள்.
"என் காதுல விழுந்துச்சு"
"விழணும்னு தான் சொன்னேன்" என்றாள்.
சிரித்துக் கொண்டே காரை ஓட்டத் தொடங்கினான் வசீகரன். எதுவுமே சரியாக படவில்லை ஐஸ்வர்யாவிற்கு. அவள் கையிலிருந்து ஏதோ நழுவி கொண்டிருப்பதைப் போல அவள் உணர்ந்தாள். அவளிடமிருந்து செல்ல வசீகரன் தயாராகி விட்டான் என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.... அதே நேரம் வருத்தமாகவும் இருந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top