22 கேள்வியும் பதிலும்

22 கேள்வியும் பதிலும்

அந்த நாள் முழுவதும், நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அனைத்து பொறுப்புகளையும் அவள் தன் கையில் எடுத்துக் கொண்டு விட்டதால், குறிப்பிட்ட நாளுக்குள், அனைத்தையும் முடித்து வைக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருந்தது. அந்த நாள் ஐஸ்வர்யாவை தனக்காக எடுத்துக் கொண்டுவிட்டது. அவர்களுடைய அடுத்த நிகழ்ச்சி நல்லபடியாக வர வேண்டும் என்பதற்காக அவள் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தாள். மாலை ஆறு மணி ஆகி விட்டிருந்த நேரத்திலும், அவளால் வேலையை முடித்து கொண்டு கிளம்ப முடியவில்லை.

விஷால் அவளுடைய அறைக்கு வந்தான்.

"மேடம், ரொம்ப நேரமாயிடுச்சு. மீதி வேலையை நாளைக்கு பாத்துக்கலாம்" என்றான்.

"இல்ல விஷால். இந்த வேலையை என்னால பாதியில் நிறுத்த முடியாது. நீங்க எனக்காக காத்திருக்க வேண்டாம். நீங்க கிளம்புங்க. நான் வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன்"

"ஆமாம். நீ கிளம்பு. நான் தான் இங்க இருக்கேன்னே" என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தார்கள். அங்கு வசீகரன் நின்றிருந்தான்.

"தேங்க்யூ, சார்"

வசீகரனுக்கு நன்றி கூறிவிட்டு, அவர்களிடமிருந்து விடை பெற்றான் விஷால்.

தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு, வசீகரனை பார்த்தாள் ஐஸ்வர்யா.

"நீ கவலை படவேண்டாம், உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ உன் வேலையை பாரு. நான் என்னோட ரூம்ல இருக்கேன். ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு."

ஐஸ்வர்யா நிம்மதிப் பெருமூச்சு விடுவதை பார்த்து, சிரித்துக் கொண்டு தன் அறையை நோக்கி சென்றான் வசீகரன்.

ஐஸ்வர்யா, தான் ஆரம்பித்த வேலையை, நிம்மதியாக தொடர்ந்தாள். வசீகரன் உடன் இருக்கிறான் என்ற நினைப்பு, அவளுக்கு அந்த பாதுகாப்பு உணர்வை கொடுத்தது. வசீகரன் தான் அவளுக்கு பாதுகாப்பு என்பதை, அவள் வெளிப்படையாக சொல்லாவிட்டால் என்ன? அவளுடைய மனம் ஒத்துக் கொள்ளாமலா போய்விடும்? நேரம் சென்று கொண்டிருப்பதை கூட கவனிக்கவில்லை அவள், ரத்னா அனுப்பியிருந்த இரவு உணவை, வசீகரன் எடுத்துக்கொண்டு, அவள் அறையில் நுழையும் வரை.

"சாப்பிட்டுட்டு வேலைய பாரு"

"நான் அப்புறமா சாப்பிடறேன்"

"முதலில் சாப்பிடு,
மத்தியானம் கூட நீ சரியா சாப்பிடலை" என்றான்.

"தயவுசெய்து நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க, எனக்கு வேலைல இருக்கிற "டச்" விட்டுப் போய்டும்"

"சரி, நீ வேலை செய்"

பரபரவென கொண்டுவந்திருந்த சாப்பாட்டை பிரித்தவன், அதைத் தட்டில் பரிமாறி, ஐஸ்வர்யாவின் பக்கத்தில் வந்து நின்று, அவள் வாய் அருகில் நீட்டினான். ஒரு பொய்யான கோபத்துடன் அவனைப் பார்த்தாள் ஐஸ்வர்யா.

"மறுபடியும், என்கிட்ட நீ வாதாட ஆரம்பிச்சா, உனக்கு வேலையில் இருக்கிற "டச்" போயிடும். அதனால, எதுவும் பேசாம, நான் கொடுக்குறத சாப்பிட்டுகிட்டே உன் வேலையை செய்" என்றான் வசீகரன்.

ஏதோ சொல்ல, ஐஸ்வர்யா வாய் திறக்க, அவள் வாயில் சாப்பாட்டை திணித்தான் வசீகரன். மிகவும் பசியோடு ஐஸ்வர்யா இருந்ததால், சுவையான ரத்னாவின் சாப்பாடு, அவளை வாயடைக்கச் செய்தது. அவள் சாப்பிட்டுக்கொண்டே அவள் வேலையை தொடர்ந்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை, பொறுமையாக அவளுக்கு ஊட்டி விட்டுக்கொண்டு அருகில் நின்று இருந்தான் வசீகரன். வழக்கத்திற்கு மாறாக, சற்று நிரம்பவே சாப்பிட்டுவிட்டதை கூட, ஐஸ்வர்யா கவனிக்கவில்லை.

வசீகரனுக்கு சாப்பிடவே தோன்ற வில்லை. அவனுடைய மனம் ஏற்கனவே நிரம்பி விட்டதால், அவனுக்கு வயிறு நிறைந்தது போல இருந்தது. இன்று இரவு, அவன் திட்டமிட்டபடி செய்ய வேண்டிய ஒரு வேலையை செய்ய, அவன் சற்றேனும் சாப்பிட வேண்டும். அதற்காக ஓரளவு சாப்பிட்டு கொண்டான் வசீகரன்.

ஐஸ்வர்யாவின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது. "டச்" விட்டு விடக்கூடாது என்பதற்காக, அவள் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால் எப்பொழுது வசீகரன் அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தானோ, அப்பொழுதே, வேலையின் மீது இருந்த, அவளுடைய ஒட்டு மொத்த "டச்" ம் விட்டுப் போனது. அவள் செய்துகொண்டிருந்த வேலையை அவள் நிறுத்தவில்லை தான், அதே நேரம், அவள் எதிர்பார்த்ததை போல், அதை அவளால் செய்யவும் முடியவில்லை. ஆனால், அவள் அதைப் பற்றி கவலைப்பட்டாள் என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் அவள் சாப்பிடுவதை நிறுத்தவில்லையே... இந்த வேலையை வேண்டுமானால் மறுபடி செய்து கொள்ளலாம். ஆனால், இந்த ஒரு சந்தர்ப்பம் மறுபடி அவளுக்கு கிடைக்குமா என்ன? கேட்டால் வசீகரன் ஊட்டி விடுவான் தான். ஆனால், அதன் பிறகு அவனுடைய அலப்பறையை யார் சமாளிப்பது?

இது போல, ஒரு அன்பான காட்சியை, அவளுடைய பிறந்தகத்தில் அவள் பார்த்ததே இல்லை. அவளுடைய அம்மாவிற்கோ, அண்ணிக்கோ, இதெல்லாம் வாய்திருக்கவில்லை. குறைந்தபட்ச கவனிப்புகள் கூட அவர்கள் கணவர்கள் இடத்திலிருந்து அவர்களுக்கு கிடைக்கவில்லை.

ஐஸ்வர்யா மிகவும் சஞ்சலம் அடைந்திருந்தாள். "வேலை" என்று கூறும் எதையோ அவளுடைய கைகள் செய்து கொண்டு தான் இருந்தன. ஆனால், அவளுடைய புத்தியும், மனமும், அவளுடைய எதிரில் அமர்ந்து கொண்டு, அவள் வேலை செய்வதை ரசித்துக் கொண்டிருந்த அந்த ஒருவனிடம் மண்டியிட்டு கொண்டிருந்தன.

உண்மையில் சொல்லப் போனால், அவள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தாள். செய்து முடிக்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்த வேலையை நினைத்தபடி செய்து முடிக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. பிறகு, வேலை செய்து கொண்டிருப்பதில் என்ன பலன் இருக்கிறது? நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, உறங்கினால் கூட, நாளைக்கு சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். அவள் வேலையை முடித்துக் கொண்டாள்.

"வேலைய முடிச்சிட்டியா" என்றான் வசீகரன்.

"இல்ல. மீதி வேலையை நாளைக்கு செய்யறேன்"

"தூக்கம் வருதா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் ஐஸ்வர்யா.

அன்பு நிலையம் நோக்கி அவர்கள் பயணபட்டார்கள். சிறிது நேரத்திலேயே தூங்கிப் போனாள் ஐஸ்வர்யா. அரை மணி நேரத்தில், அவர்கள் அன்பு நிலையம் வந்தடைந்தார்கள். காரை நிறுத்தியது கூட தெரியாமல் ஐஸ்வர்யா உறங்கிக்கொண்டிருந்தாள். அவளுடைய தூக்கத்திற்கு பங்கம் விளைவிக்காமல் அவளை அப்படியே தன் கையில் தூக்கிக் கொண்டான் வசீகரன். வேலை மிகுதியின் களைப்பில், ஐஸ்வர்யாவிற்கு ஒன்றுமே தெரியவில்லை. அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு, தான் செய்ய வேண்டிய வேலையை துவங்கினான் வசீகரன்.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்து, ஐஸ்வர்யாவை, கன்னத்தில் தட்டி எழுப்பினான். தூக்கக் கலக்கத்தின் உச்சத்தில் இருந்த ஐஸ்வர்யா, அவனுடைய கைகளை தட்டிவிட்டாள்.

"ஐஷு... "

"ம்ம்ம்"

"நேரமாச்சி எழுந்திடு"

"அம்மா, தாயே, எதுக்காக இவ்வளவு சீக்கிரமா சூரியனை அனுப்பி வச்சுட்டீங்க?" தூக்கத்தில் உளறிக் கொட்டினாள் ஐஸ்வர்யா.

அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் வசீகரன்.

"ஆமாம், சீக்கிரம் எழுந்திடு. ஆபீஸ்க்கு போகணும். நிறைய வேலை பாக்கியிருக்கு"

அதைக் கேட்டு அதிர்ந்து எழுந்து உட்கார்ந்தாள் ஐஸ்வர்யா. அவள் மிகவும் சோர்வாக காணப்பட்டாள். அவளை பார்க்க, பாவமாக இருந்தது வசீகரனுக்கு. ஆனால், அவனுக்கு வேறு வழியில்லை. ஐஸ்வர்யா கடிகாரத்தின் மீது விழியை பதிக்க, மணி பன்னிரண்டு ஆக சில நொடிகளே இருந்தன. தலையணையை எடுத்து வசீகரனை அடிக்கத் தொடங்கினாள்.

"அடிக்கிறதை நிறுத்து"

அவள் கைகளைப் பற்றி தடுத்து நிறுத்தினான்.

"ஹாப்பி பர்த்டே"

அவன் கைகளிலிருந்து தனது கையை விடுவித்துக் கொள்ள அவ்வளவு நேரம் போராடிக் கொண்டிருந்தவள், சற்றே நிறுத்தி, விழி விரிய அவன் முகத்தைப் பார்த்தாள்.

"ஐ அம் சாரி. நான் உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்."

தூக்கக் கலக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாமலிருந்த ஐஸ்வர்யாவிற்கு, என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள். அவள் நிலையை புரிந்து கொண்ட அவன், அங்கிருந்த ஸ்விட்ச்சசை ஆன் செய்தான். அந்த அறை முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. அதில் தனது மனதை ஐஸ்வர்யா பறி கொடுத்தாள் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

"வந்து, இந்த கேக்கை கட் பண்ணு"

அப்பொழுது, அங்கே வைக்கப்பட்டிருந்த, அவளுக்கு மிகவும் பிடித்த, சாக்லேட் கேக்கை பார்த்து, மெய்சிலிர்த்து போனாள் ஐஸ்வர்யா.

"சீக்கிரமா வந்து கேக்கை கட் பண்ணினா, சீக்கிரமா தூங்கலாம். நேரத்தை வீணாக்காம, இங்க வா"

தூக்கமா? இதை அனைத்தையும் பார்த்த பிறகா? வாய்ப்பே இல்லை.

கூப்பிட்டவுடன் ஓடி விட்டால், அவள் ஐஸ்வர்யாவே இல்லையே. ஏதாவது சேட்டை செய்தால் தானே ஐஸ்வர்யாவிற்கு அழகு...! அவள் அவனையே பார்த்தபடி நின்றாள். தனது விழிகளை சுழல விட்டவன், அவளை இழுத்துக்கொண்டு, கேக் வைத்திருந்த மேஜையின் அருகே வந்தான்.

"நீ கேக்கை கட் பண்ணலனா விடு" என்று, ஒரு சிறிய கேக் துண்டை எடுத்து, அவள் எதுவும் கூறுவதற்கு முன், அதை அவள் வாயில் திணித்தான்.

"இன்னைக்கு ஒரு நாள் கூட, உங்களால சேட்டை செய்யாமல் இருக்க முடியாதா?"

"நான் செய்யறதை எல்லாம், இன்னைக்கு ஒரு நாளைக்காவது, அடம் பிடிக்காம உன்னால ஏத்துக்க முடியாதா?"

"நான் ஏன் ஏத்துக்கணும்?"

"இப்படி கேட்டா என்ன அர்த்தம்?"

"எதுக்குன்னா..."

அவளை ஏதும் பேச விடாமல் அவள் வாயை பொத்தினான்.

"எதுக்குன்னு நான் சொல்லட்டுமா? நான் மறுபடியும் மறுபடியும் நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவள்னு சொல்றதை நீ கேக்கணும். நான் உனக்காக செய்யறது எல்லாமே உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா, நான் இதெல்லாம் செய்வேன்னு நீ எதிர்பார்க்கவே இல்லை. நான் உன் கூடவே இருக்க விரும்புவேன்னு நீ எதிர்பார்க்கல. நான் உன்னை விட்டு பிரிஞ்சி போயிடுவேன்னு நீ நெனச்ச. நான் அதை செய்ய மாட்டேன்னு நிச்சயமா உனக்கு தெரிஞ்சதுக்கப்புறம், நான் என்னுடைய நிலைப்பாட்டுல உண்மையா இருக்கேனான்னு சோதிச்சி பார்க்கிறதுக்காக, வேணும்னே நீ என்னை தவிர்த்துகிட்டு இருக்க."

அப்படி எல்லாம் இல்லை என்று தலை அசைத்தாள் ஐஸ்வர்யா அவசர அவசரமாக.

"அது அப்படித் தான். உனக்குள்ளே இருக்கிற பாதுகாப்பற்ற உணர்வால தான் நீ இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க. நீ, உன்னை என்கிட்ட முழுசா ஒப்படச்சதுக்கு அப்புறம், நான் மாறிடுவேன்னு நீ பயப்படுற."

இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கண்களில், சாந்தம் தெரிந்தது.

"எப்பவுமே நான் என்னுடைய வார்த்தையை காப்பாத்துவேன். இது, நான் உன்னுடைய பிறந்த நாள் அன்னைக்கு உனக்கு கொடுக்குற உறுதிமொழி. இந்த உலகத்துல எல்லாத்தையும் விட அதிகமா நான் உன்னை காதலிக்கிறேன்"

அவன் கூறியதை கேட்டு ஐஸ்வர்யா உணர்ச்சிவசப்பட்டாள் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவளை அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தால் அது வசீகரன் இல்லையே...!

"சரி போதும், ஓவர் எமோஷன் உடம்புக்கு நல்லதில்ல. அதனால எனக்கு ஒரு முத்தம் கொடு" என்றான்.

அவனுக்கு எதுவும் பதில் சொல்லாமல் அவனையே ஐஸ்வர்யா பார்த்துக் கொண்டிருக்க, தானே முந்திக் கொண்டு அவள் இதழ்களில் தனது இதழ்களை ஒற்றி எடுத்துவிட்டு, சிரித்துக்கொண்டே பின் நோக்கி நகர்ந்தான். அவனுடைய செயலைக் கண்டு அவனை அடிக்க ஐஸ்வர்யா முற்பட, அவளிடமிருந்து தப்பிக்க வெளியே ஓடினான். அவனை தூரத்திய ஐஸ்வர்யா, அவனை பின்னாலிருந்து தள்ள, நீச்சல் குளத்தில் விழுந்தான் வசீகரன்.

அதை பார்த்து, வாய்விட்டு சிரித்தாள் ஐஸ்வர்யா. ஆனால், அவளுடைய முகம் களை இழுந்தது, தண்ணீரில் அவன் தடுமாறியதை பார்த்த போது.

கடவுளே, அவனுக்கு நீச்சல் தெரியாதா என்ன?

"ஐஸ்வர்யா, உன் கையை கொடு" என்று கத்தினான், நீச்சல் குளத்தின் உள்ளே அமிழ்ந்து கொண்டு, வசிகரன்.

அதை பார்த்து பயந்துவிட்டாள் ஐஸ்வர்யா. அவள் கையை அவனை நோக்கி நீட்டினாள். வசீகரன் அவள் கையை பிடித்து நீச்சல் குளத்தின் உள்ளே இழுத்துப் போட்டான். முதலில் பயந்து விட்டவள், பிறகு அவளது இடுப்பளவே தண்ணீர் இருந்ததைப் பார்த்து நிம்மதி அடைந்தாள்.

அவளைப் பார்த்து வசீகரன் விழுந்து விழுந்து சிரித்தான். பல்லைக் கடித்துக் கொண்டு, அவன் நெஞ்சில் குத்தினாள் ஐஸ்வர்யா. அவள் அடியிலிருந்து தப்பிக்க, அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான். ஆனால், ஐஸ்வர்யாவோ, விடாமல் அவன் முதுகில் குத்திக் கொண்டிருந்தாள்.

"நான் செத்துருவேன்னு பயந்துட்டியா?"

அதை கேட்டு, அவனை அடிப்பதை நிறுத்தினாள்.

"கவலைப்படாதே. அப்படி எல்லாம் உன்னை விட்டுட்டு நான் போயிடமாட்டேன்...! (என்றவன், சற்று நிறுத்தி) நான் தெரியாம தான் கேக்குறேன், உனக்கு தான் என்னை பிடிக்காதே, அப்புறம் எதுக்காக என்னை காப்பாத்தணும்னு நினைச்ச? என்னை சாகவிட்டா, நீ நிம்மதியாக இருக்கலாமே?"

அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள் ஐஸ்வர்யா. எப்படி அவன் இவ்வளவு மோசமாக அவளைப் பற்றி எண்ணக் கூடும் என்பது போல. அவனை, வேகமாக பிடித்துத் தள்ள முயன்றாள். ஆனால், அவனுடைய பிடி இறுகியது.

"கோவம் வருதா? நான் உன்னை பத்தி மோசமா நினைச்சுட்டேன்னு? நான் மோசமானவன் இல்லேன்னு தெரிஞ்சதனாலே தானே, என்னை, சாக விடக்கூடாதுன்னு நினைச்ச? நீயே சொல்லு, ஏன் என்னை காப்பாத்துன? ஏன்னா, உன்னோட மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னை உனக்கு பிடிக்கலைன்னு சொல்லாத. அப்படி சொன்னா, அது அப்பட்டமான பொய்."

அவனுடைய அணைப்பிற்கு இணையான, அழுத்தமான முத்தம் ஒன்றை, அவள் கண்ணத்தில் பதித்தான். நடு இரவில், நீச்சல் குளத்தின் உள்ளே நின்றிருந்தாலும் கூட, அந்த தண்ணீரின் குளிர்ச்சியை ஐஸ்வர்யா உணரவே இல்லை. அவன் இதழின் வருடல் ஏற்படுத்தியிருந்த கதகதப்பு, அந்த குளிரை அடித்து விரட்டி இருந்தது.

மெதுவாக அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட வசீகரன், அவளை தூக்கி நீச்சல் குளத்தின் சுவற்றின் மீது அமர வைத்து, தானும் குளத்திலிருந்து வெளியேறினான்.

உள்ளே சென்று, ஒரு பூதுவாலையை எடுத்து வந்தவன், அவளின் தலையை துவட்ட தொடங்கினான். அங்கிருந்து ஓடி சென்றவள், குளியல் அறையினுள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

வசீகரன், அவளிடம் கேட்ட கேள்விகளையும், அதற்கு அவனே தந்துவிட்ட பதில்களையும் அவள் எண்ணிப்பார்த்தாள்.

அவன் கேட்ட கேள்விகள் எதற்கும் அவளிடம் பதில் இருக்கவில்லை. அதே நேரம், அவன் அளித்த பதில்களையும் அவள் மறுப்பதற்கில்லை. அவள் தன் நிலை புரியாமல் சிலைபோல் நின்றாள்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top