part 5
பாகம் 5
கோயம்புத்தூர்
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஆனால், 14வயது அபி அந்த மேட்சின் காரணமாக கொதித்து கொண்டிருக்கவில்லை. அதற்கு வேறொரு காரணம் இருந்தது.
அப்போது அங்கு வந்த வேலையாள், அவனை அவன் அம்மா, அழைப்பதாக கூறினார்.
"நினைச்ச மாதிரியே, அந்த குண்டுசட்டி, என்னைப்பத்தி அம்மாகிட்ட பத்த வச்சுட்டா போலிருக்கு." முணுமுணுத்துக் கொண்டே தன் அம்மாவை காணச் சென்றான் அபி.
அபியின் அம்மா, ரத்னா, தன் மகள், அஞ்சலியின் திருமணத்திற்காக வந்திருந்த, தன்னுடைய நாத்தனார் மஹாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
"அம்மா, என்னை கூப்பிட்டீங்களா?" சுளுக்கென்று முகத்தை வைத்து கொண்டு கேட்டான் அபி.
"சின்னா, நீ யாழினிய திட்டுனியா?"
தனது சாக்லேட் கவரை பிரித்துக்கொண்டிருந்த ஆறு வயது யாழினியை முறைதான், அபி.
"அம்மா, இந்தியா, பாகிஸ்தான் ஃபைனல் மேட்ச் போய்கிட்டு இருக்கு. ஆனா இவ கார்டடூன் வைக்கணும்னு அடம்பிடிக்கிறா. அதனால தான் திட்டினேன்."
"அவ ரொம்ப சின்ன பொண்ணு, சின்னா. அவளுக்கு என்ன தெரியும்? அவ நம்ம விருந்தாளி. நம்ம தான் அவள நல்லா பாத்துக்கணும். நீ என்னடானா அவள அழ வைக்குற."
"அம்மா, உங்களுக்கு புரியலையா? இங்க யாரோ பயங்கரமா பொறாமை பட்றா மாதிரி தெரியல...? எல்லாரும் யாழினியை கொஞ்சுறது பிடிக்கல போல இருக்கு." அஞ்சலி கிண்டலடித்தாள்
"நான் யாரையும் பார்த்து பொறாமைப்படல. அவ என்னை மாமான்னு கூப்பிட்டு வெறுப்பேதுறா. அப்படி கூப்பிடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல."
"மாமாவ, மாமான்னு தானேடா கூப்பிடனும்? ரத்னா எதிர்கேள்வி கேட்டார்.
"ஒன்னும் தேவையில்லை. அவள ஒழுங்கா என்னை, அபிசார்னு கூப்பிட சொல்லுங்க".
அபி சீரியஸாக கூறினான்.
"என்னது? சாரா? காமெடி பண்ணாத, சின்னா. நீ ரொம்ப சின்னவன் தான், மறந்துடாத."
களுக்கென்று சிரித்தாள் அஞ்சலி.
"நீ அவளுக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா, நீ இப்படி எல்லாம் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ இப்படி பண்ணா நாங்க எங்க போறது?" முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, வராத
கண்ணீரை துடைத்தார் மகா.
"ப்பா... எல்லாரும் நல்ல நாடக நடிகைங்க... ஒருத்தியைத் தவிர. பாருங்க, இங்க எல்லாரும் அவளுக்காக சண்டை போட்டுடு இருக்கோம். ஆனா அவ, எதுவுமே தெரியாத மாதிரி சாக்லேட் தின்னுக்கிட்டிருக்கா. " என்றான் யாழினியை பார்த்து.
அனைவரும் குபீரென்று சிரிக்க, டிவி ரிமோட்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடினான் அபி. அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, தோட்டத்தில் கால்பந்து விளையாட ஆரம்பித்து விட்டான்.
அவன் உதைத்த பந்து, யாழினி மீது பட்டு அவள் கீழே விழுந்து, வாயை பொத்திக் கொண்டு அழுதாள். அபி அவளை நோக்கி ஓடினான்.
"ஏய், உனக்கு அடி பலமா பட்டுச்சா? நீ எதுக்காக இங்க வந்த?"
தன் கையில் இருந்த டிவி ரிமோட்டை காட்டினாள் யாழினி.
"இத குடுக்க வந்தியா?"
ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள் யாயினி.
"உனக்கு என்ன ஆச்சு ஏன் வாயை மூடிட்டு இருக்க? பேசு"
வாயை பொதியிருந்த கையை மெதுவாக எடுத்துவிட்டு, சொன்னாள் யாழினி.
"நான் கையை எடுத்துட்டு பேசுனா, எல்லாரும் இங்க வந்துருவாங்க. அப்பறம் உங்களை திட்டுவாங்க"
"என்னை யாரும் திட்டக்கூடாதுனு ஏன் நினைக்கிறே?
"என்னா, அம்மா சொன்னாங்க, நீ நல்ல பையன்னு."
கண்ணீரை துடைத்துக் கொண்டு பதில் சொன்னாள் குட்டி யாழினி.
"ஆனா, நான் தான் உன்னை அடிச்சிட்டேனே" அவன் குரலில் வருத்தம் தெரிந்தது.
"யாராவது வேணும்னு அடிப்பாங்களா? மாட்டங்க தானே?"
அவள் பதில் அவனுக்கு ஆச்சரியதை தந்தது.
அபி, நிச்சயம் நினைத்திருக்கவில்லை, இந்த குட்டி பெண்ணுக்கு இவ்வளவு முதிர்ந்த அறிவு இருக்கும் என்று. இந்த பெண்ணை, பந்தால் அடித்ததற்காக மிகவும் வருத்தப்பட்டான். அவன் தெரியாமல் தான் அடித்தான் என்றாலும்....
"ஐம் ரியலி சாரி. நம்ம ரெண்டு பேரும் பழம் விட்டுக்கலாமா?"
"நான் உங்க பேச்சு காய் விடலையே, அபி சார்". குழந்தைதனம் மாறாமல் கேட்டாள் யாழினி.
"அம்மா சொன்ன மாதிரி, நீ, என்னை மாமானு கூப்பிடு. சரியா?"
"நெஜமாவா?"
"நெஜமா தான்"
இப்படித்தான், அபியும், யாழினியும் ஒருவருடைய வாழ்க்கையில் மற்றொருவர் நுழைந்தார்கள். அதன் பிறகு, ஒட்டுமொத்த குடும்பமும், அவர்கள் நட்பின் வளர்சியை கண்கூடாக பார்த்தது. ஒவ்வொரு கல்யாண சடங்கின் போதும், யாழினி, அபியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். அதே நேரம், அபியின் பார்வையும், அவளையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது.
அபி அவனுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது யாழினி அங்கு வந்து அவனிடம் கேட்டாள்.
"இவங்கெல்லாம் யாரு மாமா?"
"அவங்க எல்லாம் என்னோட பிரெண்ட்ஸ்."
"அப்ப, அவங்களையும் நான் மாமான்னு தான் கூப்பிடனுமா?"
அவளை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றான். சிறிது தொலைவு வந்த பிறகு, ஒரு நாற்காலியின் மீது நிற்க வைத்துக் கொண்டான்.
"என்னைத் தவிர வேறு யாரையும் நீ மாமா ன்னு கூப்பிட வேண்டியது இல்லை. புரிஞ்சுதா? அவங்கள நீ அண்ணான்னு கூப்பிடு"
சரி என்பது போல தலையசைத்த யாழினிக்கு, அவன் ஒரு சாக்லேட் கொடுத்தான். இப்போதெல்லாம், அவர்களுக்கிடையில் இது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு பதிலாக யாழினியிடமிருந்து அழகான முத்தத்தை பரிசாகப்பெற்றான். அழகாக சிரித்துக் கொண்டு திரும்பிய அபிக்கு, சங்கடமாக போனது. ரத்னா, அஞ்சலி, மகா மூவரும் அவனை பார்த்து, கிண்டலாக சிரித்து கொண்டிருந்தார்கள்.
"அம்மா, இப்பல்லாம் யாரோ, ரொம்ப ஓவரா ஒருத்தி பின்னாடி சுத்துற மாதிரி தெரியல?" அஞ்சலி வழக்கம் போல கிண்டல் அடித்தாள்.
"என்ன ஆச்சி, சின்னா? உன்னை மாமான்னு கூப்பிட வேணாம்னு சொன்ன? இப்ப என்னடான்னா, உன்னை தவிர வேற யாரையும் மாமான்னு கூப்பிட கூடாதுன்னு சொல்ற? என்ன ஆச்சு? ரத்னா சீரியசாக கேட்டாள்.
"அது மட்டும் இல்லமா, இப்பல்லாம் அவனோட கவனம் முழுக்க அவ மேல தான் இருக்கு."
அஞ்சலி எடுத்துக் கொடுத்தாள்
"ஆமா, ஏன்னா அவ என் பின்னாடி இருந்தா, நான் எப்பவும் போலவே, அம்மாவுக்கு ஸ்பெஷலாவே இருப்பேன் இல்லையா? எப்படி என் ஐடியா?"
திறமையாக சமாளித்தான் அபி.
"நான் நம்பிட்டேன்"
சீரியஸாக கூறினாள் அஞ்சலி.
'நானும் தான்" மகா சொல்ல, மூவரும் சிரித்தார்கள்.
"எப்போதிலிருந்து பொய்யெல்லாம் சொல்ல ஆரம்பிச்ச, சின்னா?" புன்னகையுடன் கேட்டாள் ரத்னா.
"சரி, ஒத்துக்குறேன். அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. ஓகேவா?" அங்கிருந்து ஓடியே போனான் அபி.
அவனுடைய மரியாதைகுரிய பெண்களின், கிண்டலையும், கேலியையும் தாங்க முடியாமல்.
........
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, எல்லாமே தலைகீழாக மாறிப்போனது. அஞ்சலியின் திருமண நாளன்று, அபியின் அப்பாவுக்கு இருந்த தகாத உறவு பற்றி ரத்னாவுக்கு தெரியவர, அவர் அதை தங்க முடியாதவாராய் தன்னை மாய்த்துக் கொண்டார். அபியின் அப்பா அரவிந்தன், குற்றவுணர்ச்சியில் தானும் தற்கொலை செய்து கொண்டார். அஞ்சலியின் திருமணம் நின்று போனது. அபியும், அஞ்சலியும் தங்களது சொந்த சித்தப்பாவின் மூலமாகவே, அவகளுடைடைய சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். ரத்னாவுடைய அம்மா, தேவயானி, அபியையும், அஞ்சலியையும் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்.
அவர்களுடைய கதையை கேட்டு மிகவும் வருத்தப்பட்டாள், யாழினி. அவளுக்கு அபி மாற்றும் அஞ்சலி மீது ஒரு தனி பாசம் ஏற்பட்டது.
"அதுக்கு அப்புறம் அபி, அவங்க அம்மாவை எந்தளவுக்கு நேசிச்சானோ, அந்தளவுக்கு அவனுடைய அப்பாவை வெறுக்க ஆரம்பிச்சுட்டான். கடுமையா படிச்சதால, அமெரிக்காவின் ஹாவரட் யூனிவர்ஸிட்டியில் படிக்க அவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சது. ஒரு மிக பெரிய பிசினஸ் மேனா விஸ்வரூபமெடுத்து நின்னான் அபி. எந்த வீட்டிலிருந்து அவங்க சித்தப்பா அவங்கள துரத்தி விட்டாரோ, அந்த வீட்டையே வாங்கி, தன்னுடைய நிலைப்பாட்டை நிரூபிச்சிக் காட்டினான் அபி." என்று சொல்லி முடித்தார், மகா.
யாழினி, அபியால் வெகுவாகக் கவரப்பட்டாள். அபியின் மீது மரியாதை ஏற்பட்டது அவளுக்கு. அவனைப் புகழ்ந்து பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை.
சாந்தி நிலையம்
நீச்சல் குளத்தின் பக்கத்தில் நின்றுகொண்டு, அபி, யாழினியின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுடைய பாட்டி அவனை சென்னைக்கு அழைத்து வந்த, அந்த நாளில், அவன் தனது பாட்டி வீட்டில் தனியாக அமர்ந்து கொண்டிருந்தான். பொங்கிய கண்ணீரை அடக்க முடியவில்லை அவனால். அப்போது யாரோ அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தான். அது யார் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது.
"மாமா நீ அழறியா?"
அபி, இல்லை என்று தலையசைத்தான்.
"நீ ரத்னா மாமிய தான நினைச்சிகிட்டு இருக்க?"
அழகாக கேட்டாள் யாழினி.
எதுவும் பதில் பேசாமல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் அபி.
"அங்க பாரு, உங்க அம்மா அங்க தான் இருக்காங்க. (வானத்தை நோக்கி கை நீட்டினாள்) உனக்கு தெரியுமா, நமக்கு பிடிச்சவங்க யாராவது இறந்து போய்ட்டாங்கனா, கடவுள் அவங்கள நட்சத்திரமாக மாத்தி, நம்மள பார்க்க வைப்பார். பாரு, மாமி கூட அங்க இருந்து உன்ன தான் பாத்துட்டு இருக்காங்க. நீ இப்படி அழுதா, அவங்க வருத்தப்படுவாங்க தானே?"
அபிக்கும் தெரியும் இதெல்லாம் பெரியோர்களால் சொல்லி வைக்கப்பட்ட கட்டுகதைகள் என்று. யாரோ பேசியதை இவள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த பெண் சொல்லும் போது, அவன் மனதுக்கு இதமாக இருந்தது.
"மாமா நீ அழாதே. நான் எப்பவும் உன் கூடவே இருக்கேன். பிராமிஸ். ப்ளீஸ் அழாத."
அந்த சிறு பெண், அவன் கண்களில் ஒரு தேவதையாக தெரிந்தாள். தன் வயதுக்கு மீறிய ஒரு மனமுதிர்ச்சி அவளிடம் காணப்பட்டது. இந்த சின்ன வயதில், அடுத்தவருடைய வலியை, அவளால் உணர முடிந்திருந்தது. அபிக்கு அவளுடன் பொழுதை போக்க மிகவும் பிடித்துப்போனது. தினமும் அவன், அவளுடன் நேரம் செலவழிக்க தொடங்கினான். அவர்களுடன் சேர்ந்து, அவர்களின் நட்பும் வளர்ந்தது.
சில வருடங்களுக்கு பிறகு, அது *தனக்கு மட்டும் சொந்தம்* என்றளவில் மாறிப்போனது. தன்னைத்தவிர வேறு யாரும் அவளிடம் பேசுவது அபிக்கு பிடிக்கவில்லை. அவளை கிண்டலும் கேலியும் செய்பவர்களை அடிக்க கூட அவன் தயங்கவில்லை. மொத்த குடும்பமுமே அவனை நினைத்து கவலைப்பட ஆரம்பித்து விட்டது. அவன் அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலைகழகதிற்கு, படிக்க சென்ற போது, அந்த புது சூழல், அவனை மாற்றிவிடும் என்று அனைவரும் நம்பினார்கள். ஆனால் தான் மாறுவதற்கு பதிலாக, அங்கிருந்தபடி அஜய்கும், நந்தாவுக்கும், அவளை பார்த்துக் கொள்ள, கட்டளையிட்டு கொண்டிருந்தான், அபி.
யாழினிக்கு இது பிடித்திருந்தது என்று சொல்வதற்கில்லை. அவனுடைய சுபாவத்தை பார்த்து அவள் பயந்துதான் போயிருந்தாள். அவனிடம் நேரடியாக சொல்லியும் விட்டாள். அது அவனை மிகவும் கோபப்படுத்தியது. அன்று முழுவதும் அவன் அவளிடம் பேசாமல், முகத்தை தூக்கிவைத்து கொண்டிருந்தான். ஆனால், யாழினிக்கு தெரியும், எப்படி தனக்கு சாதகமாக சூழ்நிலையியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று. அவள் அவனுக்கு பிடித்த சிவப்பு நிற புடவையை உடுத்திக்கொண்டு, தெனாவெட்டாக அவனிடம் பேசாமல், வலம் வந்து, அவனை அந்நாள் முழுவதும் தன் பின்னால் அலைய வைத்து படாதபாடு படுத்திவிட்டாள்.
இவற்றையெல்லாம் நினைத்த போது அபியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவனுடைய முகம் திடீரென மாறிப்போனது. அவள் தன்னை பற்றி இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பாள்? உண்மையில் அவள், அவனை பற்றி நினைப்பாளா? அவர்கள் இருவருக்கும் இடையில் வருவது ஒரு *நபராக* இருக்கும் பட்சத்தில், அவர்களின் எலும்பை எண்ண இவன் தயங்கப் போவதில்லை. ஆனால் இங்கு பிரச்சனையே வேறு விதமாக இருந்தது. அவளுக்கு எதுவுமே நினைவில்லை. அவள் சகஜமாக இருக்கிறாள் என்பதற்காக அவள் சகஜமாகி விட்டாள் என்று அர்த்தமில்லை. அவளுக்கு கால அவகாசம் தேவை. அனைத்தையும் புரிந்துகொள்ள... ஏற்றுக்கொள்ள...
*அடுத்தநாள் மாலை*
சாந்தி நிலையத்தில் நுழைந்த அபி, வாசலிலேயே நின்றுவிட்டான். யாழினி வரவேற்பறையில் அமர்ந்து, எல்லோருடனும் பேசிக்கொண்டிருந்தாள்.
"சின்னா, நீ வந்துட்டியா? நானே உனக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன். நீ வழக்கமா கற்பனை பண்ற மாதிரி, இதுவும் கற்பனைனு நினைச்சுக்காத. யாழினி உண்மையாவே இங்க வந்திருக்கா." அஞ்சலி யாழினியின் மேல் பார்வையை பதித்து சொன்னாள்.
அதைக்கேட்டு யாழினியின் கண்கள் வியப்பால் விரிந்தன. அப்படியென்றால், அபி, அடிக்கடி அது போல கற்பனை செய்வானா என்ன?
"நீ இந்த நேரம் ஆபீஸ்லல இருப்ப?"
அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, மஹா ஃபோன் செய்து, யாழினி, சாந்தி நிலையம் சென்றுள்ள செய்தியை அவனுக்கு கூறினார் என்று.
கேட்ட நந்தாவிற்கு பதில் சொல்லாமல் யாழினியை பார்த்து கேட்டான்.
"ஹாய், எப்போ வந்த?"
"இப்போ தான். வீட்லயிருந்து, சினிமா பாத்து, போர் அடிச்சி போச்சி. அதான் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். "
"நீ இங்க வந்தது உங்க அப்பாவுக்கு தெரியுமா?
பாட்டி கவலையாய் கேட்டார்.
"இல்ல, அவருக்கு தெரியாது"
எல்லோரும் அமைதியானார்கள்.
"உங்களுக்குள்ள அப்படி என்ன தான் நடந்தது? நான் தெரிஞ்சிக்கலாமா?"
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், அனைவரும் அவளையே பார்த்து கொண்டிருந்தனர்.
"நான் உங்கள சங்கடபடுத்திட்டேன்னு நினைக்கிறன். என்னை தப்பா எடுத்துக்காதீங்க. ப்ளீஸ்"
அப்போது, மாமிக்கு மஹா ஃபோட்டோ மற்றும் சர்டிபிகேட் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.
"அஞ்சலி, யாழினிக்கு, அவ நாம கூட இருக்குற போட்டோவை எல்லாம் காட்டேன்."
யாழினியின் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.
"நிஜமாவா? போட்டோஸ் எல்லாம் இருக்கா?"
அவள் ஆவலுடன் பரபரத்தாள்.
"ஆனா, மாமி, எல்லாம் சின்னா ரூம்ல இருக்கு" அஞ்சலி, அபியை பார்த்து தயக்கத்துடன் கூறினாள்.
"அதனால என்ன? சின்னா ரூம், இந்த வீட்ல தானே இருக்கு? ஏதோ வேற கிரகத்துல இருக்குற மாதிரி யோசிக்குற?" பாட்டி கிண்டலடித்தார்.
"ஒருவேளை உங்களுக்கு விருப்பமில்லைனா வேணாம்"
சொன்ன யாழினியை நிறுத்தினான் அபி.
"உன் விஷயத்துல, நாங்க விரும்பாதது எதுவும் இல்ல"
அவனின் ஆணித்தரமான பார்வையால் தடுமாறி, தனது பார்வையை தாழ்த்தி கொண்டாள் யாழினி.
"போகலாம் வா. செம்ம ஜாலியா இருக்கும்." பிரியா அவளை கை பிடித்து இழுத்தாள்.
"யாழினி, இன்னைக்கு நீ தெரிஞ்சிக்க போற, நீ எங்களுக்கு எவ்வளவு கிளோஸ்னு".
சொல்லிவிட்டு சிரித்தபடி எழுந்து நின்றாள் லாவண்யா.
"நானும் அதுக்காக தான் காத்திருக்கேன்" என மனதில் நினைத்துகொண்டாள் யாழினி.
அபி, நாலு கால் பாய்ச்சலில், அவன் அறை நோக்கி ஓடினான். யாழினி வருவதற்க்கு முன், முக்கியமான ஒன்றை அவன் மறைத்தாக வேண்டும்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top