2
நிலா காயுமோ
வகுப்பு இடைவேளையில் கணக்கு வீட்டுப்பாடத்திற்காக மஹியின் குறிப்பேட்டைக் கேட்டான் விஷ்வா.
அப்போது, "எந்தாடா கடலை இவிட..?" என்றபடி ஜோஷி வகுப்பறைக்குள் வந்துவிட, மஹிமாவின் கவனம் திரும்பியது. எனவே விஷ்வா நாமே எடுத்துக் கொள்ளலாமென அவளது புத்தகப்பையை எட்டி எடுத்தான்.
அழகிய கருநிற புத்தகப் பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்தான் விஷ்வா. 'ACCOUNTANCY' என அதன் விளிம்பில் எழுதியிருந்தது. சற்றே பழைய நோட்டாகத் தெரிந்தது. வீட்டுப்பாடம்தான் போலும் எனத் திறந்த விஷ்வா, அதன் பக்கங்களில் வேறு ஏதோ கிறுக்கியிருக்க, என்னவென்று உற்றுப் பார்த்தான்.
'அவனும் நானும்..'
'காதல் என்றால்..'
'ஒரு மாலை நேரம்..'
ஒரு கதைக்கு தொடக்கவரி எழுத முயன்றதுபோல் இருந்தது. எழுதி எழுதி அடிக்கப்பட்ட வரிகள் நிறைய இருந்தன அந்த நோட்டில்.
"என்னது மஹி இது?"
ஜோஷியிடம் பேசிக்கொண்டிருந்தவள் திரும்பினாள் அவன்புறமாய்.
அவன் என்ன கேட்கிறான் என்பதைப் பார்த்ததும் கலவரமாகி, பதில் சொல்லாமல் வெடுக்கென்று நோட்டைப் பிடுங்கினாள் மஹிமா.
"அது பழைய நோட். ஹோம்வர்க் நோட் இதோ இங்க இருக்கு" என்றபடி வேறொரு நோட்டை எடுத்துத் தந்தாள். ஆனால் வீட்டுப்பாடம் செய்யும் நினைப்பெல்லாம் எப்போதோ விடைபெற்றுவிட்டது விஷ்வாவின் மனதிலிருந்து.
"சரி.. இது இருக்கட்டும். அது என்ன நோட்?என்ன எழுதியிருந்த? ஏதோ கதை மாதிரி இருந்துச்சே?"
"ஒன்னும் இல்லயே"
"ஹே! சொல்லு மஹி... என்னது?"
"ப்ச், ஒன்னும் இல்லன்னா விடேன் விஷ்வா?! ஏன் தொல்லை பண்ற? ஹோம்வர்க் தானே வேணும்.. அதை மட்டும் எழுது."
ஜோஷியும் வேணியும் வேறு விவாதத்தில் ஈடுபட்டிருந்ததால் இவர்களின் வாக்குவாதத்தைப் பெரிதாகக் கவனிக்கவில்லை இருவரும்.
அவன் மேலும் ஏதும் கேட்க முடியாத வண்ணம் இடைவேளை முடிந்து மணியடித்தது. மணிச்சத்தம் ஓய்ந்த உடனே ஆசிரியர் மாறன் உள்ளே நுழைந்தார். அந்தப் பள்ளியில், Punctuality =Maaran Sir என்று ஒரு சமன்பாடே எழுதலாம். அந்த அளவு நேரந்தவராமை. மாணவர்களுக்கும் அவரது குணம் பிடிக்குமென்பதால் இடைவேளை முடியும் முன்னரே வகுப்பிற்கு வந்துவிடுவர்.
அனைவரும் அவசர அவசரமாக அவரவர் வேலைகளை நிறுத்திவிட்டு வகுப்பிற்குத் தயாராகினர். இன்முகத்தோடு அன்றைய கணக்குப் பாடத்தைத் தொடங்கினார் ஆசிரியர். ஆனால் விஷ்வாவுக்கோ கணக்கு வகுப்பில் மனம் செல்ல மறுத்தது. மஹிமாவின் பேச்சுதான் மனதில் ஓடியது.
அவளை அழைக்க முயன்று பலமுறை தோற்றான் அவன். ஆசிரியர் வேறு நடுநடுவே ஓரொருவரை எழுப்பிச் சமன்பாடுகள் ஒப்பிக்கச் சொன்னார். கேள்விகளும் கேட்டார். மஹிமாவை எழுப்பிய போது, வழக்கம்போல் மின்னலென விடைகூறினாள் அவள். ஜோஷியும் அவனது பாணியில் ஏதோ சிரிப்பாகக் கூற, வகுப்பு கலகலப்போடு இருந்தது.
விஷ்வா மட்டும் வேறுலகத்தில் இருந்தான்.
'ஏன் மஹிமா அவ்வாறு கோபப்பட்டாள்? நாம் என்ன தவறாகக் கேட்டோம்? அவள் என்ன எழுத நினைத்தாள்? ஏன் மறைக்கிறாள்?' என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்ததால் ஆசிரியர் அழைக்கையில் அவன் கேட்கவில்லை. அவர் அவனருகில் வந்து நிற்கும் வரை அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அனைவரும் தன்னைத் திரும்பிப் பார்ப்பதுபோல் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான் விஷ்வா.
ஆசிரியர் மாறன் முகத்தில் எவ்வித சலனமும் காட்டாமல், வெறுமனே கண்களால் துளைத்தெடுக்க, ஏதும் பேசாமல் எழுந்து நின்றான் அவன். அவர் ஒன்றும் கூறாமலே, தானாகவே வெளியே சென்று கதவருகில் நின்றான். ஆசிரியர் மாறன் சற்று கண்டிப்பானவர்தான்... ஆனால் திருவிழாவில் தொலைந்த குழந்தை போலப் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு வெளியே சென்ற விஷ்வாவைப் பார்த்து அவருக்கும்கூட சிரிப்பு வந்தது. வகுப்பில் சிலர் வாய்விட்டே சிரித்துவிட, ஆசிரியர் என்பதால் அவர் அதை அடக்கிக் கொண்டு, "Come, sit inside Vishwa. Just be more attentive in my class" என்று மன்னித்து விட்டார்.
பதில் பேசாமல் உள்ளே சென்று அமர்ந்தவனை மொத்த வகுப்பும் வேடிக்கை பார்த்தது. ஆனாலும், அவன் ஓரக்கண்ணால் மஹிமாவை ஏறிட்டபோது, அவள் தன் நோட்டில் மூழ்கியிருந்தாள். கணக்குப் புத்தகத்தின் அடியில் இந்தக் கலவரத்திற்குக் காரணமான ரஃப்நோட்!
**
மாலை ஆறு மணி. ஸ்பெஷல் க்ளாஸ் முடிந்து நண்பர்கள் நால்வரும் பள்ளியின் கேண்ட்டீனில். அலுப்பும் சலிப்புமாக அங்குமிங்கும் மாணாக்கர்கள் அலைந்துகொண்டிருக்க, அவர்களைக் கூட்டிச் செல்ல பெற்றோரும் பேணுவோரும் கால்கடுக்கக் காத்திருக்க, வெள்ளைக் குழல்விளக்கின் வெளிச்சத்தில் ஆளுக்கொரு சமோசாவும் டீயுடனும் அமர்ந்திருந்தனர் நால்வரும்.
காலை முதல் கேட்காமல் போனதை இப்போது மீண்டும் தொடங்கினான் விஷ்வா.
"மஹிமா நீ எதாவது கதை எழுத முயற்சி பண்றியா? ஏன் என்கிட்ட சொல்லல?"
"ஆமா உன்கிட்ட ஏதும் சொல்லல. இப்போ என்ன?"--இது வேணி. அவள் எப்போதும் 'நேர்படப் பேசு'. எதற்கும் அலட்டிக் கொள்கிறது இல்லை.
ஆனால் மஹிமா அப்படி இல்லை. நிறைய யோசிப்பாள். நிறைய கற்பனைகள் செய்வாள். அவளுக்கு சட்டென்று ஒரு முடிவு எடுப்பது பிடிக்காது. அலசி ஆராய வேண்டும். அதோடு அவசரத்தில் ஒரு முடிவு எடுத்துவிட்டு, பின்னர் வருந்துவது முட்டாள்தனம் என்பாள். இயன்றவரை வேணியையே தனக்காகப் பேச விட்டுவிடுவாள். ஆனால் ஏனோ இம்முறை தானே பேசவேண்டும் என்று இருந்தது. எனவே இருகணங்கள் அமைதிகாத்து, விஷ்வாவை மட்டும் பார்த்து மெல்லப் பேசினாள் அவள்.
"விஷ்வா, do you believe in personal space?"
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளே தொடர்ந்தாள்.
"My rough note is my personal space, and i sincerely don't appreciate any intrusion there"
"அவ்வளவு பெரிய ரகசியமா மஹி? என்னன்னு கேட்டது தப்பா? நாம எத்தனை வருஷ ஃப்ரெண்ட்ஸ்.. நமக்குள்ள என்ன boundaries?"
"அவங்க அவங்களுக்குன்னு, சில பக்கங்களாவது வாழ்க்கையில் இருக்கணும் விஷ்வா."
அவன் மறுப்பாக ஏதோ சொல்லத் தொடங்க, சமாதானத் தூதுவன் இடைவெட்டினான்.
"இதெந்தாடா....ஒரு ஷிரிய ப்ரஷனம்... ஓள் ஏதும் பரய இஷ்டப்பட்டு இல்லெங்கில் விடு"
ஜோஷிதான் சமாதானம் செய்து வைத்தான்.
"எடா விஷ்வா, நீ மிண்டாதிரு! ஒரு நாளாச்சும் உன் கவிதை நோட்டை காணிச்சதுண்டோ எங்களுக்கு? வெறுமே நாலஞ்சு வரிகளை பேப்பரில் இட்டுத்தானே க்ளாஸில் காட்டும்? உன் சொந்த நோட்டை எப்போழும் காணிச்சிட்டில்லே?"
"ஆமாமா, கரெக்டா சொன்னடா ஜோ! நீ மட்டும் என்ன விஷ்வா, மஹிமாவுக்கும் எங்களுக்கும் உன் கவிதை நோட்டை காட்டிட்டா இருக்க? மஹிமாவோட பர்சனல் நோட்டை பார்க்க மட்டும் உனக்கேன் துடிக்குது? நாங்கள்லாம் இல்ல, அவளோட ப்ரைவசிக்கு மரியாதை தந்து?"
வேணியின் கேள்விக்கு விஷ்வா முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவனுக்கு ஏனோ மூவரில் வேணி மீது கொஞ்சம் அபிப்பிராயம் கம்மி. ஜோஷி கூட இரண்டாமிடம் தான். முதலிடம் யார் என்பது உங்களின் யூகத்துக்கு.
மஹியை மட்டும் ஓரக்கண்ணால் பார்த்தான் அவன். அவள் முகம் சலனமற்றிருக்க, பெருமூச்சுடன் தன் சிற்றுண்டியை உண்டுவிட்டு யோசனையில் மூழ்கினான்.
பள்ளியிலிருந்து கிளம்பும்போது மணி ஏழு.
விஷ்வா மனதில் ஆயிரம் சலனங்கள். ஒரேயொரு கேள்வி.
"ஏன் மஹிமா ?"
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top