66 சித்திரவேலின் முயற்சி
66 சித்திரவேலின் முயற்சி
இனியவனை முத்து வியப்படையச் செய்தான் என்று கூறுவதை விட, திகைப்படைய செய்தான் என்று தான் கூற வேண்டும். இனியவனுக்கு முன் நின்று தன் குரலை உயர்த்த எப்பொழுதும் துணியாத முத்து, அவனது வாழ்வில் ஆழ்வியின் பங்கு எப்படிப்பட்டது என்று கூறத் தயங்கவில்லை. அவன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாதாரணமானவை அல்ல. அதில் அக்கறை தேங்கி இருந்தது. இனியவனுக்கு தன் முன்னாள் யாரும் குரலை உயர்த்துவது பிடிக்காது என்று தெரிந்தும், அதை செய்ய அவன் தயங்கவில்லை. அதனால் தானே அவனது குடும்பத்தார் கூட தங்கள் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள்! இனியவன், மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது, அவனுக்காக உளமாற முத்து வருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆழ்வி அவனுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்த பிறகு அவனிடம் ஏற்பட்ட மாற்றம் தான் அவனுக்கு ஆழ்வியிடம் ஒரு பெருமதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தனக்கு இப்படி ஒரு விசுவாசமான வேலைக்காரன் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான் இனியவன்.
முத்துமிடமிருந்து இப்படி ஒரு எதிர்வினையை ஆழ்வியே கூட எதிர்பார்க்கவில்லை. இனியவன் குடும்பத்தினரே அதை செய்ய தயங்கிய போது, தன் மனதில் இருப்பவற்றை வார்த்தையில் கொண்டு வந்து முன்னிறுத்த தயங்கவில்லையே முத்து! அவன் நெத்தியடி போல அல்லவா பேசினான்! அவனை நினைத்து பெருமைப்பட்டாள் ஆழ்வி.
இனியவனின் குடும்பத்தாரின் நிலையோ சொல்லில் அடங்கவில்லை. முத்துவால் இவ்வளவு பேச முடியும் என்று அவர்கள் அன்று தான் அறிந்து கொண்டார்கள். அவர்கள் எதையோ தவற விடுகிறார்களா? முத்து கூறியது அவர்களுக்கு சாதாரணமாய் படவில்லை. அவன் தன் உள்ளத்தில் இருந்து அதை கூறியதாகவே அவர்கள் உணர்ந்தார்கள். இனியவனுக்காக ஆழ்வி செய்த ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு மகிழ்வை தந்திருக்க வேண்டும். யாராலும் செய்ய முடியாததை ஆழ்வி செய்தாள் என்பதை ஒப்புக்கொண்டு தானே தீர வேண்டும்? எதையோ தீவிரமாய் சிந்தித்தபடி இனியவன் நின்று இருப்பதை கண்டார்கள் அவர்கள். அவனது முகத்தில் தோன்றிய பாவனையை இதற்கு முன் அவர்கள் கண்டதில்லை.
ஆழ்வியை ஆழமாய் உற்று நோக்கினான் இனியவன். அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்று புரியவில்லை யாருக்கும். முத்துவின் வார்த்தைகள் அவன் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று எண்ணினார்கள். இனியவன் அங்கிருந்து அமைதியாய் நடந்தான்.
இரவு
சமையல் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான் முத்து. அப்பொழுது தனக்கு பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்த அவன், பின்னால் திரும்பிப் பார்க்க, அங்கு சித்திரவேல் அவனை பார்த்தபடி நின்றிருந்தான். அவனுக்குத் தெரியும், சித்திரவேல் ஏன் அங்கு வந்திருக்கிறான் என்று. தன்னை சமாளித்துக் கொண்டு அவனைப் பார்த்து புன்னகை புரிந்தான் முத்து.
"அந்த மருந்தை எதுக்கு எடுத்து பத்திரமா வச்ச?"
"அண்ணி சொன்னாங்கன்னு எடுத்து வச்சேன்" என்றான் பயம் இல்லாமல்.
"அன்னைக்கு நான் அதை கிச்சன் சிங்கில் கொட்டினதை நீ பாக்கலையா?"
"ஓஹோ... அன்னைக்கு அந்த மருந்துன்னு நினைச்சு தான் நீங்க அதை கிச்சன் சிங்கில் கொட்டுனீங்களா? நான் நீங்க சக்கரையை கொட்டறீங்கன்னு நினைச்சேன்"
"சக்கரையா?"
"ஆமாம், அன்னைக்கு நீங்க கொட்டுனது சக்கரை தான்" என்றான் அமைதியாக.
"எதுக்காக நீ என்கிட்ட எதுவும் சொல்லல?"
"நீங்க என்கிட்ட எதுவும் கேட்காதப்போ நான் எப்படி சொல்ல முடியும்?"
"அப்போ இன்னைக்கு இனியவனுக்கு மட்டும் எதுக்கு அவ்ளோ பெரிய லெக்சர் கொடுத்த?"
"அண்ணன் ஆழ்வி அண்ணியை அண்ணின்னு கூப்பிட வேண்டாம்னு சொன்னாரு. அதனால என் மனசுல தோணுனதை சொன்னேன். எல்லாத்துக்கும் மேல, நீங்க சர்க்கரையை கிச்சன் சிங்கில் கொட்டும் போது, நீங்க அந்த மோசமான மருந்தை அப்புறப்படுத்துறீங்கன்னு எனக்கு தெரியாது. அது சரி, எதுக்காக நீங்க அந்த மருந்தை கொட்டுனீங்க? டாக்டரை மோசமானவன்னு நிரூபிக்க நமக்கு அந்த மருந்து வேணும்னு உங்களுக்கு தெரியாதா?" என்றான் முகத்தில் குழப்பக் குறி காட்டி.
அந்த கேள்வியை எதிர்பார்க்காத சித்திரவேல் திகைத்து நின்றான். அவனை கேள்வி கேட்பது முத்துவா? அவனுக்கு பதில் அளிக்காமல் சமையலறையில் இருந்து நடையை கட்டினான் சித்திரவேல். உள்ளூர புன்னகை புரிந்தான் முத்து.
இதற்கிடையில்...
முத்துவின் வார்த்தைகளை எண்ணியபடி கட்டிலில் படுத்திருந்தாள் ஆழ்வி. இனியவனின் பெயர் தன் கைபேசியில் ஒளிர்ந்ததை பார்த்து, அந்த அழைப்பை ஏற்றாள்.
"நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணலையே?"
"நிச்சயமா இல்ல"
"அப்படின்னா கதவை திற"
"நீங்க வெளியிலயா நிக்கிறீங்க?" என்று ஓடி சென்று கதவை திறந்தாள்.
உள்ளே வந்த இனியவன் கதவை சாத்தி தாழிட்டான்.
அடுத்த நொடி அவளை இறுக்கமாய் தழுவிக் கொண்டான். அவனது அந்த செய்கை அவளை தடுமாறச் செய்தது. அதற்கு என்ன காரணம் என்று அவளுக்கு புரியவில்லை. அவளது கரங்கள் மெல்ல உயர்ந்து, அவனை தழுவிக் கொண்டன.
"என்னங்க..."
அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவன் அப்படியே நின்றான். அவளும் அவனை அப்படியே இருக்க விட்டாள், எந்த தொந்தரவும் செய்யாமல்! சில நிமிடங்களுக்கு பிறகு, அவள் அணைப்பிலிருந்து வெளிவந்த அவன், அவளது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
அதேநேரம் சமையலறையில் இருந்து வெளியே வந்த சித்திரவேல், ஆழ்வியின் அறைக்கு இனியவன் செல்வதை பார்த்து குழப்பம் அடைந்தான். இந்த நேரத்தில் எதற்காக இனியவன் ஆழ்வியின் அறைக்குள் செல்ல வேண்டும்? அவளைத் தன் மனைவியாய் ஏற்க முடியாது என்றும், அவர்கள் நண்பர்களாக மட்டுமே இருக்கப் போவதாகவும் கூறினானே...?
ஆழ்வியின் அறையை நோக்கி ஓடிச் சென்று கதவை லேசாக தள்ளி பார்த்தான். அது உட்புறமாக தாளிடப்பட்டிருந்ததை உணர்ந்த அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்க முயன்றான். ஆனால் அவன் காதில் ஒன்றும் விழவில்லை. இங்கு என்ன நிகழ்கிறது? ஏதோ நிச்சயம் தவறாகத் தான் நடக்கிறது. தன் அறையை நோக்கி விரைந்தான் சித்திரவேல்.
*எங்க முதுகுக்கு பின்னாடி இனியவனும் ஆழ்வியும் ஏதோ செய்றாங்க. அவனுக்கு ஏதோ உண்மை தெரிந்திருக்கு. என்னை பத்தி கூட அவனுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. என் உண்மை சொரூபத்தை வெளியில கொண்டுவர, அவன் நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கான் போலிருக்கு. அதுக்கு முன்னாடி, அவங்க ரெண்டு பேரும் ரகசியமா சந்திக்கிறதை நித்திலாவுக்கும் இந்த குடும்பத்தாருக்கும் சொல்லியாகணும். அப்போ தான், நான் பிடிபட்டா கூட, நித்திலா நம்ப மாட்டா. ஆனா இனியவன் மனசுல என்ன இருக்கு? இனியவன், ஆழ்வி, முத்து, குரு இவங்க நாலு பேரும் சேர்ந்து ஏதோ செய்றாங்க. ஆழ்வி தான் என்னைப் பத்தி இனியவனுக்கு சொல்லியிருக்கணும். அப்படின்னா டாக்டரை அரெஸ்ட் பண்ணும் போது என்னை ஏன் ஆழ்வி அரெஸ்ட் பண்ண வைக்கல? அவள் நித்திலாவை பத்தி யோசிச்சிருக்கணும். அது என்னவா வேணாலும் இருக்கட்டும். இந்த விஷயத்தை எனக்கு சாதகமா மாத்திக்க இது தான் நல்ல சந்தர்ப்பம். நான் யாருன்னு அவங்களுக்கு காட்றேன். எனக்கு எதிரா அவங்களால எதுவும் செய்ய முடியாதுன்னு அவங்க புரிஞ்சுக்கட்டும்* என்று எண்ணியபடி தன் அறைக்கு வந்தான் சித்திரவேல்.
இதற்கிடையில்...
தன் இதழ்களை ஆழ்வியின் நெற்றியில் இருந்து பிரித்தான் இனியவன்.
"என்ன ஆச்சுங்க?"
"ஐ அம் ரியலி சாரி. என் ஆட்டத்துக்கு நான் உன்னை பகடை காயா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்றான் வருத்தத்தோடு.
"ஏன் இப்படி எமோஷனல் ஆகுறீங்க? நம்ம குற்றவாளியை பிடிக்கத் தானே இதையெல்லாம் செய்றோம்...? என்னால புரிஞ்சுக்க முடியுது"
"இல்ல, ஆழ்வி. நீ எனக்காக என்னெல்லாம் செஞ்சிருக்கேன்னு எனக்கு தெரியும். ஆனா என்னை சேர்ந்தவங்களோட மனசை அடி ஆழத்துக்கு போய் தொட்டுப் பார்க்கிற அளவுக்கு நீ எனக்காக செஞ்சிருக்கேன்னு நான் இதுவரைக்கும் நினைச்சு பாக்கல... முத்து உனக்காக வாதாடுற வரைக்கும். முத்து எனக்கு எதிரா நின்னு ஒரு வார்த்தை கூட பேச மாட்டான் தெரியுமா? ஆனா, இன்னைக்கு அவன் அதை செய்ய தயங்கல..."
ஆழ்வி ஏதோ சொல்ல முயல அவளை தடுத்து நிறுத்திய அவன்,
"நான் அவனை குற்றம் சொல்லல. எது அவனை அப்படி பேச வச்சதுன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. அவன் இந்த குடும்பத்தோட விசுவாசமான வேலைக்காரன். உன்னோட தன்னலம் இல்லாத உழைப்பு தான் அவனை இப்படி பேச வச்சிருக்கு. அதனால தான் எதைப் பத்தியும் கவலைப்படாம இன்னிக்கு எல்லார் முன்னாடியும் அவன் உன்னை புகழ்ந்து பேசினான்"
"முத்து ரொம்ப நல்லவரு. அவர் தான் எனக்கு ஹெல்ப் பண்ணாருன்னு நான் உங்ககிட்ட சொல்லி இருக்கேன்"
"ஆமாம், சொன்ன. ஆனா இந்த அளவுக்கு அவன் நல்லவனா இருப்பான்னு எனக்கு தெரியாது" என்று சிரித்தான்.
"ஆமாம், உங்ககிட்ட தெரிஞ்ச முன்னேற்றத்தை பார்த்து அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டார்னு உங்களுக்கு தெரியாது"
"ம்ம்ம்"
"இப்போ எதுக்காக என் ரூமுக்கு வந்தீங்க?"
"உன்னை பாக்கணும்... கட்டிப் பிடிக்கணும் முத்தம் கொடுக்கணும்னு தோணுச்சு..."
"என்ன்னனது? முதல்ல உங்க ரூமுக்கு போங்க"
"ஏன்?"
"நீங்க இங்க இருக்கிறதை யாராவது பார்த்தா என்ன ஆகும்? எதற்காக ரிஸ்க் எடுக்குறீங்க?"
"இது தான் எனக்கு எரிச்சலை தருது"
"இன்னும் கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் பொறுத்துக்கோங்க"
"முயற்சி பண்றேன்" என்று கட்டிலில் படித்துக் கொண்டான்.
"என்ன செய்றீங்க நீங்க?" என்றாள் பதற்றத்துடன்.
"நான் இன்னிக்கு இங்க தான் தூங்க போறேன்... உன் கூட..."
"எனக்கு பயமா இருக்கு" என்று கையை பிசைந்தாள்.
அவளை தன்னை நோக்கி இழுத்தான். அவள் அவன் மீது விழ, அவனை அணைத்துக் கொண்டு,
"இப்படித்தான் இருக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு" என்றான்.
இதற்கிடையில்...
தங்கள் அறைக்கு வந்த சித்திரவேல், நித்திலா கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டான்.
"நித்தி, என்கூட வா" என்றான்
அவசரமாக.
கட்டிலில் எழுந்து அமர்ந்து அவனை எரிச்சலோடு ஏறிட்டாள் நித்திலா.
அவளை நோக்கி ஓடிய அவன், அவள் கையைப் பிடித்து
"முதல்ல கீழ இறங்கு" என்று அவளை பிடித்து இழுத்தான்.
"என்ன ஆச்சு? எதுக்காக என்னை கூப்பிடுறீங்க?"
"என் கூட வா. நான் எல்லாத்தையும் கிளியர் பண்றேன்"
"என்ன கிளியர் பண்ண போறீங்க?"
"நம்ம ஏமாத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். நம்மளை சுத்தி நடக்குறது எதுவும் உண்மை இல்ல.
"என்ன பேசுறீங்க நீங்க? எனக்கு தெளிவாக சொல்லுங்க"
"மச்சானும் ஆழ்வியும் நமக்கு முன்னாடி நடிக்கிறாங்க"
"என்ன சொல்றீங்க நீங்க?"
"அவர் ஆழ்வியை மனைவியா ஏத்துக்கிட்டார். ஆனா, நம்மகிட்ட ஏத்துக்காத மாதிரி நடிக்கிறார்"
"ஆனால் ஏன்?"
"உன்னை கஷ்டப்படுத்த தான்"
"என்ன்னனது?"
"இதெல்லாம் ஆழ்வியோட பிளானா தான் இருக்கணும்"
"என்ன சொல்றீங்க நீங்க?"
"ஆழ்வி தான் இனியவனோட மனசை மாத்தியிருக்கணும். ஏன்னா, எல்லாத்துலயும் முதல் உரிமை தனக்கு கிடைக்கணும்னு நினைக்கிறா."
"ஆழ்வி அந்த மாதிரி பொண்ணு இல்ல"
"அப்ப நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறியா?"
"உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? எது உங்களை இப்படி சந்தேகப்பட வச்சது?"
"நான் இனியவன் ஆழ்வியோட ரூமுக்கு போறதை பார்த்தேன்"
"எப்போ?"
"இப்ப தான். இப்போ அவர் அங்க தான் இருக்காரு. அவங்க ரூம்ல இந்த நேரத்துல அவருக்கு என்ன வேலை?"
நித்திலா யோசனையில் ஆழ்ந்தாள்.
"ஆழ்வியை தன் மனைவியை ஏத்துக்க மாட்டேன்னு அவர் சொன்னார் தானே? ஒரு ஃபிரண்ட் கிட்ட பேசுறதுக்கு இது தான் நேரமா? அவகிட்ட பகல்ல பேச முடியாதா? எதுக்கு இந்த திருட்டுத்தனம்?"
"இன்னு ஆழ்வி ரூமுக்கு போறதை நீங்க பாத்தீங்களா?" என்றாள் பதட்டத்தோடு.
"சத்தியமா பார்த்தேன். அவர் அவங்க ரூம்குள்ள போனதை நான் பார்த்தேன். அவங்க ரூம் உள்பக்கமா பூட்டி இருக்கு"
"வாங்க போகலாம்"
நித்திலவை பின் தொடர்ந்து சித்திரவேலும் சென்றான். சித்திரவேல் கூறியது போலவே ஆழ்வியின் அறை உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையின் கதவை தட்டினாள் நித்திலா. கள்ள புன்னகையோடு காத்திருந்தான் சித்திரவேல்.
*இனியவனின் முகமூடி இன்னும் சில நொடிகளில் கிழிய இருக்கிறது* என்று எண்ணினான் அவன்.
கதவு திறக்கப்பட்டது
"அக்கா..." என்று அவளை யோசனையோடு ஏறிட்டாள் கதவை திறந்த ஆழ்வி.
அவளுக்கு எந்த முக்கியத்துவம் கொடுக்காமல், அவள் கையை தட்டிவிட்டு இனியவனை தேடியவாறு உள்ளே நுழைந்த நித்திலா அப்படியே நின்றாள்.
"என்ன ஆச்சு கா? நீங்க இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? என்றான் இனியவன்.
நித்திலா திகைத்து நின்றாள்.
"ஒன்னும் இல்ல, இன்னு. சும்மா தான்..." என்று சித்திரவேலின் மீது ஒரு கோபப்பார்வையை வீசினாள் நித்திலா.
மென்று விழுங்கினான் சித்திரவேல், அங்கு அவர்களுடன் முத்துவும் இருந்ததை பார்த்து.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top