16 கைரேகை

16 கைரேகை

ஆழ்வி எதிர்பார்த்தது போலவே ஒரு புதிய கைபேசியுடன் வந்த நித்திலா, ஆழ்வியின் அறையின் கதவை தட்டினாள். கதவை திறந்தாள் ஆழ்வி.

"நான் உள்ள வரலாமா?" என்று புன்னகை புரிந்தாள் நித்திலா.

"இது உங்க வீடு. இதுக்குள்ள வர நீங்க பர்மிஷன் கேட்க தேவையில்ல"

"இல்ல ஆழ்வி, இது இனியவன் பாலகுமாரனோட ரூம். இதுக்குள்ள அப்படி எல்லாம் பர்மிஷன் இல்லாம யாரும் நுழைஞ்சிட முடியாது"

தான் கொண்டு வந்த கைபேசியை அவளிடம் கொடுத்தாள்.

"இது உங்களுக்காக"

மீனாவையும் சித்த மருத்துவரையும் தொடர்பு கொள்ள  அவளுக்கு ஒரு கைபேசி அவசியம் என்பதால், அந்த கைபேசியை பார்த்தவுடன் அவள் நிம்மதி அடைந்தாள். எனினும், அதை உடனே அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், நித்திலா தன் மீது எந்த விதத்திலும் சந்தேகம் கொள்ளக்கூடாது என்று எண்ணினாள் அவள்.

"எனக்கு எதுக்கு இந்த ஃபோன்? நான் யார்கிட்டயும் பேச போறதே இல்லையே. உங்களுக்கு நல்லா தெரியும், என் ஃபேமிலியில கூட எனக்குன்னு யாருமில்ல"

"ஆனா, நீங்க உங்க ஃப்ரெண்ட் மீனா கூட பேசலாமே... இப்போ வேணும்னா இது உங்களுக்கு தேவையில்லாம இருக்கலாம். ஆனா, கூகுள்ல ஏதாவது தேடி தெரிஞ்சுக்கணும்னா இது உங்களுக்கு தேவைப்படும்"

நித்திலா ஏதாவது என்று குறிப்பிட்டது என்ன என்பது அவளுக்கு புரிந்தே இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றி தெரிந்து கொள்ள அது அவளுக்கு உதவும். அதன் பிறகு அவள் அதை மறுக்கவில்லை.

"தேங்க்ஸ்" என்று அதை அவளிடம் இருந்து பெற்றுக்கொண்டாள்.

"அதுல சிம் கார்டும் போட்டிருக்கு. இந்தாங்க, உங்க ஆதார் கார்டு" என்று அவளிடம் கொடுத்தாள் நித்திலா.

"இதுலயும் கொஞ்சம் கையெழுத்து போட்டுடுங்க" சில காகிதங்களை கொடுத்தாள் நித்திலா.

அவளிடம் இருந்து அந்த காகிதங்களை பெற்று, அதில் கையொப்பமிட்டாள் ஆழ்வி.

"நீங்க அதை படிச்சு பாக்கலயா?"

"என்கிட்ட எதுவும் இல்ல... அதனால இழக்கவும் எதுவும் இல்ல... அப்படி இருக்கும் போது, நான் ஏன் அதை படிக்கணும்?"

"நீங்க படிச்சு பாக்காம கையெழுத்து போடுற கடைசி டாக்குமெண்ட் இதுவா தான் இருக்கணும். ஏன்னா, நாளையில இருந்து உங்க பேர்ல எதுவும் இல்லன்னு உங்களால சொல்ல முடியாது" என்று கூறிவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து சென்றாள் நித்திலா.

தன் அழகிய முகத்தை சுருக்கி நின்றாள் ஆழ்வி. நித்திலா அதை எந்த அர்த்தத்தில் கூறினாள் என்று அவளுக்கு புரியவில்லை. தன் கையில் இருந்த புதிய ஐஃபோனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவள் மீனாவுக்கு ஃபோன் செய்ய, அவள் கடைசி மணியில் அந்த அழைப்பை ஏற்று,

"யார் பேசுறீங்க?" என்றாள்.

"மீனு, நான் தான் ஆழ்வி பேசுறேன்"

"ஆழ்வி, இது யாரோட நம்பர்?"

"என்னோட நம்பர் தான். நித்திலா இப்ப தான் வாங்கி கொடுத்தாங்க. நான் பேசுற முதல் ஆள் நீ தான்" என்றாள்.

"ரொம்ப நல்லதா போச்சு. அங்க என்ன பிரச்சனை? இப்ப சொல்லு"

"நித்திலாவோட வீட்டுக்காரர் நான் நினைச்ச மாதிரி நல்லவர் இல்ல. இனியவனோட நிலைமைக்கு அவர் தான் மூல காரணம்"

"என்ன சொல்ற ஆழ்வி?" 

"ஏதோ ஒரு மருந்தை கொடுத்து, அவரை இந்த நிலைமையில அவர் வச்சிருக்கார்"

அனைத்தையும் மீனாவிடம் விவரமாய் கூறினாள் ஆழ்வி.

"என்னால இதை நம்பவே முடியல"

"என்னாலயும் தான். எனக்கு உன்னோட உதவி வேணும். அவரை அங்க கூட்டிகிட்டு வராம, அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க முடியுமான்னு தயவு செஞ்சி கொஞ்சம் டாக்டர் கிட்ட கேளு"

"அது அந்த அளவுக்கு பலன் கொடுக்காதுன்னு நினைக்கிறேன்"

"பரவாயில்ல. வேகமான முன்னேற்றம் இல்லனாலும் பரவாயில்ல. ட்ரீட்மெண்ட்டை மாத்துனா போதும்"

"நீ சொல்றதும் சரி தான். சம்திங் இஸ் பெட்டர் தென் நத்திங்"

"இல்ல மீனா, சம்திங் இஸ் பெட்டர் தென் ஒர்ஸனிங். அவர் நிலைமை ஒர்ஸ்ட் ஆகாம இருந்தா போதும்" என்றாள் கவலையுடன்.

"சரி, நான் அண்ணனை பத்தி டாக்டர்கிட்ட சொல்றேன். அவர் உன் கூட பேச விருப்பப்பட்டா, நீ பேசுவியா?"

"நிச்சயம் பேசுறேன். அவருக்கு கொடுத்துக்கிட்டு இருக்குற மருந்தை கூட நான் எடுத்து வச்சிருக்கேன். அதை லேப்ல கொடுத்து, டெஸ்ட் பண்ணி, அதுல என்ன கலந்திருக்குன்னு கண்டுபிடிச்சு, அந்த ரிசல்ட்டை கூட நான் அனுப்பி வைக்கிறேன்"

"வேணாம். நீ அதை செய்யாத. அதை நேரடியா இங்க இருக்கிற டாக்டருக்கு அனுப்பி வச்சிடு. அவங்களே அதை அவங்களுக்கு வேண்டிய விதத்தில் டெஸ்ட் பண்ணிக்குவாங்க"

"சரி, தயவு செய்து இந்த விஷயத்தை பார்கவிகிட்ட பேசிடாத"

"சரி"

"இந்த வீட்ல யாரை நம்புறதுன்னு எனக்கு தெரியல. அதனால இதை ரகசியமா வச்சிருக்கலாம்."

"ஆனா, யாருடைய ஹெல்பும் இல்லாம, இதை நீ எப்படி தனியா செய்ய போற?"

"அது எனக்கும் தெரியல. இந்த வாழ்க்கையில நான் தனியா தான் அடி எடுத்து வச்சேன். இந்த வீட்டுக்கும் நான் தனியா தான் வந்தேன். அதனால, இதையும் தனியாவே செஞ்சு பாக்குறேன்"

"ஆனா, அவர் மனநிலை சரியில்லாதவர். அவரை தனியா கையாள்றது உனக்கு அவ்வளவு சுலபமா இருக்காது"

"நான் முதல்ல டாக்டர்கிட்ட பேசணும். அதுக்கப்புறம் தான் என்ன செய்யணும்னு என்னால முடிவு பண்ண முடியும்"

"சரி, எங்க சித்தப்பாகிட்ட சொல்லி நான் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட்டை வாங்க சொல்றேன்"

"ரொம்ப தேங்க்ஸ், மீனா"

"நான் இந்த தேங்க்ஸையெல்லாம் ஒத்துக்க மாட்டேன். அண்ணன் குணமான பிறகு எனக்கு நீ ட்ரீட் கொடுக்கணும்"

"நிச்சயம் கொடுக்கிறேன்" என்று சிரித்தாள் ஆழ்வி.

அவர்கள் அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள்.

மாலை

தேநீர் தயாரித்துக் கொண்டு வந்த ஆழ்வி, அதை அனைவருக்கும் கொடுத்தாள்.

"நீங்க ஏன் இதையெல்லாம் செய்றீங்க ஆழ்வி?" என்றாள் நித்திலா.

"நான் போடுற டீ எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை எனக்கு மட்டும் போட்டுக்க வேண்டாம்னு தான் உங்க எல்லாருக்கும் போட்டுக் கொண்டு வந்தேன்"

"தன்னோட வேலையை நீங்க எடுத்துக்கிறதை பார்த்து, முத்து டென்ஷனாக போறான்" என்று சிரித்தான் சித்திரவேல்.

"அவர் டென்ஷனை குறைக்க அவருக்கும் ஒரு கப் டீ கொடுத்துட்டு தான் வந்தேன்" என்று சிரித்தாள் ஆழ்வி.

"எக்ஸலன்ட் டீ..." என்றான் சித்திரவேல்.

"ஆமாம் ஆழ்வி, டீ ரொம்ப பிரமாதமா இருக்கு" என்றார் பாட்டி.

அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்க, கதவை திறக்க ஓடினாள் பார்கவி. அங்கு புன்னகையுடன் நின்றிருந்தான் குருபரன். அவனைப் பார்த்து முகம் மலர்ந்தாள் பார்கவி.

உள்ளே வந்த குருபரன், நித்திலாவிடம் ஒரு வங்கி கணக்கு  புத்தகத்தை கொடுத்து விட்டு, அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.

"ஆழ்வி, இவர் குருபரன் நம்ம இன்னுவோட ஃபிரண்ட், நம்ம கம்பெனி மேனேஜர்" அவனை அறிமுகம் செய்து வைத்தாள் நித்திலா.

"வணக்கம்" என்றான் குருபரன்.

"வணக்கம்" என்று தன் கரங்களை கூப்பினாள் ஆழ்வி.

"நீங்க இனியவனை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். நாங்க சீக்கிரமே எங்க பழைய இனியவனை பார்ப்போம்னு நம்புறேன்"

அதைக் கேட்டவுடன், சட்டென்று முகம் மாறிய சித்திரவேலின் முகபாவத்தை ஆழ்வியின் கண்கள், அனிச்சையாய் கவனித்தது. அதை கவனித்த குருபரன், முகம் சுருக்கினான். அங்கிருந்த அனைவரையும் விட்டுவிட்டு ஆழ்வி ஏன் சித்திரவேலை பார்த்தாள்?

"ஏற்கனவே அண்ணன் அவரை நல்லா கவனிச்சுக்கிட்டு இருக்காரு. அவரை விட அதிகமா என்னால எதுவும் செஞ்சிட முடியும்னு எனக்கு தோணல" என்றாள் தன் ஓரக்கண்ணால் சித்திரவேலை பார்த்தவாறு.

நித்திலா மற்றும் பாட்டியின் முகங்களில் ஏமாற்றம் தெரிந்தது. ஆனால் சித்திரவேலின் முகம் பிரகாசம் அடைந்தது. அது குருபரனுக்கு சந்தேகத்தை தந்தது. ஆழவிக்கு குருபரனை பற்றி அப்படி என்ன தெரிந்து விட்டது என்று அவள் இந்த அளவிற்கு அவனை நம்புகிறாள் என்று எண்ணினான் அவன்.

"நான் உங்களுக்கு டீ கொண்டு வரேன்" என்று எழுந்து நின்ற ஆழ்வி, அதற்கு மேல் சித்திரவேலை புகழ மனமில்லாமல் சமையலறையை நோக்கி சென்றாள்.

"இனியா எப்படி இருக்கான்?" என்றான் குருபரன்.

"வழக்கம் போல தான்... எந்த முன்னேற்றமும் இல்ல" என்று பெருமூச்சு விட்டார் பாட்டி.

சித்திரவேல் அமைதியாய் இருந்தான்.

"நான் போய் அவனை பார்த்துட்டு வரேன்" என்று அவனது அறையை நோக்கி நடந்தான் குருபரன்.

அவன் இனியவனின் அறையை  நோக்கி செல்வதை கவனித்த ஆழ்வி, தேனீர் குவளையுடன் அவனை பின்தொடர்ந்தாள்.

இனியவன் கட்டிலில் படித்துக் கொண்டு மோட்டுவளையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் குருபரனுக்கு எதிர்ப்புறம் படுத்திருந்ததால், அவன் முகத்தை குருபரனால் பார்க்க முடியவில்லை. அங்கு வந்த ஆழ்வி, அவனிடம் தேநீர் குவளையை  நீட்டினாள்.

"தேங்க்யூ" என்று அதை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டான்.

புன்னகைத்து விட்டு இனியவனை நோக்கி திரும்பினாள் ஆழ்வி.

"சித்திரவேல் உங்களுக்குள்ள நம்பிக்கை விதையை விதைச்சிட்டார் போலருக்கு..." என்றான் அவன்.
 
அதைக் கேட்டு திடுக்கிட்ட அவள், தன்னை சமாளித்துக் கொண்டாள்.

"அவரைப் பத்தி உங்களை விட வேற யாருக்கு நல்லா தெரிஞ்சிட போகுது? நீங்க எல்லாரும் எப்பவும் ஒண்ணா இருக்கிறவங்க தானே?"

"நீங்க என்ன சொல்றீங்க?"

"பிகே இண்டஸ்ட்ரிசை இப்போ கவனிச்சுக்கிட்டு இருக்கிறது அண்ணன் தானே?"

"இல்லயே... சித்திரவேல் கம்பெனி விஷயத்தில் எப்பவும் தலையிட்டதே இல்ல. அதை இப்போ கவனிச்சுக்கிட்டு இருக்கிறது நித்திலா தான். அவங்க தான் இனியவனுக்கு சார்பா அதை கவனிச்சுக்கிட்டு இருக்காங்க"

"அப்படின்னா இன்னமும் எல்லாமே இனியா பேர்ல தான் இருக்கா?"

"ஆமாம், நித்திலா எதையும் மாத்தல"

ஆழ்வி யோசனையில் அழ்ந்தாள். சித்ரவேல் அலுவலக பொறுப்பை ஏற்கவில்லை என்றால், அவன் ஏன் இனியவன் குணமடைவதை விரும்பவில்லை?

"என்ன ஆச்சி, ஆழ்வி?"

ஒன்றுமில்லை என்று தலையசைத்து,

"அவர் தூங்குறாருன்னு நினைக்கிறேன்" என்றாள்.

"இல்ல, அவன் தூங்க மாட்டான் . ராத்திரியில் கூட அவன் தூங்குறது இல்ல"

"அப்படியா?" என்று ஆச்சரியமடைந்தாள் ஆழ்வி.

"ஆமாம், ராத்திரியில அவன் தூங்காம விசித்திரமான சத்தம் எழுப்பிக்கிட்டு இருக்கிறதா பார்கவி சொல்லி இருக்கா"

"ஆனா எப்படி ஒருத்தரால தூங்காமலேயே இருக்க முடியும்?" என்று புருவம் உயர்த்தினாள்.

"அவன் அப்நார்மலா இருக்கிறது தான் உங்களுக்கு தெரியுமே"

ஆம் என்று யோசனையுடன் தலையசைத்துவிட்டு அந்த இடம் விட்டு, அமைதியாய் நகர்ந்தாள். அவள் வரவேற்பறைக்கு வந்த போது, அங்கு சித்திரவேல் இருக்கவில்லை.

அவளிடம் வங்கி கணக்கு புத்தகத்தை கொடுத்த நித்திலா,

"இதை வச்சுக்கோங்க" என்றாள்.

அந்த புத்தகத்தை திறந்த அவள், அந்த கணக்கில் சில லட்சங்கள்  இருப்பதை பார்த்தாள்.

"இது அவசியம் இல்ல"

"இல்ல ஆழ்வி, நீங்க பணம் இல்லாம இருக்க கூடாது. உங்களுக்கு தேவை படலனாலும் வச்சுக்கோங்க"

"நீங்க ஏற்கனவே எங்க அம்மாவுக்கு ஒரு கோடி ரூபா குடுத்திருக்கீங்களே..."

"அது வேற. நீங்க உங்க அம்மாகிட்ட இருந்து உங்களுக்காக எந்த பணமும் வாங்கிக்கலன்னு எனக்கு தெரியும். ஒரு மொபைல் ஆப்பை டவுன்லோடு பண்ணிக்கிட்டா, நீங்க ஆன்லைன் ட்ரான்ஸ்ஷாக்ஷன் கூட பண்ணிக்கலாம்"

ஆழ்வியின் கண்கள் ஒளிர்ந்தது. அவள் எப்படி இதை யோசிக்காமல் விட்டாள்? இனியவனின் மருத்துவ செலவுக்கு அவளுக்கு பணம் தேவை ஆயிற்றே... தனது நகைகளை விற்று விடலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது அதற்கு தேவை இருக்காது.

"தேங்க்யூ" என்றாள்.

புன்னகையுடன் அங்கிருந்து சென்றாள் நித்திலா.

குருபரன் கூறியதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் ஆழ்வி. அனைவரும் உறங்கட்டும் என்று அவள் காத்திருந்தாள். அனைவரும் உறங்கி விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, மெல்ல இனியவனின் அறைக்கு வந்தாள். அவன் இங்கும் அங்கும் உலவிக்கொண்டு இருந்தான். அவள் நின்றிருந்தது இருட்டான பகுதி என்பதால், அவனால் அவளை பார்க்க முடியவில்லை. அவனது கண்கள் தூக்க கலக்கமின்றி பளிச்சென்று இருந்தது. உண்மையிலேயே இரவில் கூட இவன் உறங்குவதே இல்லையா? எப்படி இவனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது? இதுவும் கூட அந்த மருந்தின் தன்மையாக இருக்குமோ? யோசித்த படி தன் அறைக்கு திரும்ப சென்றாள்.

மறுநாள் காலை

குளித்து முடித்து தன் அறையை விட்டு வெளியே வந்தாள் ஆழ்வி. தன் கைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்த பார்கவியை பார்த்து புன்னகை புரிந்தாள்.

"நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டு அவளிடம் வந்தாள் பார்கவி.

"நமக்கு எப்போ ரிசல்ட் வருது?" என்று சாதாரணமாக தன் உரையாடலை துவங்கினாள் ஆழ்வி.

"அடுத்த மாசம் வரும்னு நினைக்கிறேன்"

"அப்படியா...? (சற்று நிறுத்தி) உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..."

"சொல்லு ஆழ்வி"

"இனியா ரூமை யார் திறப்பா?"

"நீ ஃபிங்கர் பிரிண்ட் பத்தி கேக்குறியா?"

"ஆமாம்"

"அண்ணனோட ரூமை ஹாண்டில் பண்றது மாமா தான்"

"ஏதாவது எமர்ஜென்சி டைம்ல என்ன செய்வீங்க? ஒருவேளை அண்ணன் வீட்டில் இல்லாதப்போ அவருக்கு அடிபட்டுடிச்சுன்னா என்ன செய்வீங்க?"

பதில் கூற முடியாமல் திகைத்தாள் பார்கவி. ஏனென்றால், அப்படிப்பட்ட சூழ்நிலையை இதுவரை அவர்கள் சந்தித்ததில்லை.

"நான் அவரோட ரூம்ல மாட்டிக்கிட்டப்போ, நீ என்னை காப்பாத்த முடியாம தவிச்சி போன. ஒருவேளை அந்த ரூமோட கண்ட்ரோல் உன்கிட்டயும் இருந்திருந்தா, அன்னைக்கு நீ என்னை  காப்பாத்தி இருக்க முடியும் இல்ல?"

"அந்த சென்சார்ல ஒருத்தரோட ஃபிங்கர் பிரிண்ட் மட்டும் தான் வைக்க முடியும்"

"அப்படி பார்க்க போனா, எப்பவும் வீட்லயே இருக்கிற முத்துவோட ஃபிங்கர் பிரிண்ட்டை தானே நீங்க அதுல வச்சிருக்கணும்?"

ஆமாம் என்று யோசனையுடன் தலையசைத்தாள் பார்கவி.

"சொல்லணும்னு தோணுச்சி..." என்று அந்த இடம் விட்டு நகர்ந்தாள் ஆழ்வி. அவளுக்கு தெரியும், அவள் பேசிக் கொண்டிருந்ததை நித்திலா கேட்டுக் கொண்டிருந்தாள் என்று. அவள் கேட்க வேண்டும் என்று தானே அவள் பேசினாள்...!

*இந்த விஷயத்தில் நித்திலா என்ன முடிவெடுக்கிறார் என்று பார்க்கலாம்* என எண்ணிய படி சென்றாள் ஆழ்வி.

தன் அறைக்குச் சென்ற நித்திலா, அங்கு சித்திரவேல் ஏதோ ஒரு கோப்பை சரி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள்.

"சித்ரா, என்கூட வாங்க" என்றாள்.

"எங்க நித்தி?"

"வாங்கன்னா வாங்க"

முகத்தை சுருக்கியபடி அவளை பின்தொடர்ந்தான் சித்திரவேல்.

"முத்து... போய் ஆழ்வியை கூட்டிக்கிட்டு வா" என்றாள் நித்திலா.

ஆழ்வியின் அறையை நோக்கி ஓடினான் முத்து. பார்கவியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றாள், எதற்காக நித்திலா ஆழ்வியை அழைக்கிறாள் என்று தெரிந்து கொள்ள.

இனியவனின் அறைக்கு நித்திலா செல்வதை பார்த்து குழப்பம் அடைந்தான் சித்திரவேல். அவர்கள் அங்கு வந்ததை கண்ட இனியவன், கதவருகே ஓடி வந்து, கிரில் கதவின் இடைவெளியில் கைவிட்டு கத்தியபடி அவளை பிடிக்க முயன்றான்.

"என்னை எதுக்காக இங்க கூட்டிகிட்டு வந்த நித்தி?"

"இந்த சென்சார்ல இருந்து உங்க ஃபிங்கர் பிரிண்ட்டை ரிமூவ் பண்ணுங்க"

"என்னது... ஃபிங்கர் பிரிண்ட்டை ரிமூவ் பண்ணணுமா? ஆனா ஏன்?"

"இன்னுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அவனுக்கு இப்ப பொண்டாட்டி இருக்காங்க. அவங்க இனிமே அவனை பார்த்துக்கட்டும்"

"நீ சுயநினைவோட தான் பேசுறியா?"

"என்னோட முழு நினைவோட தான் பேசுறேன். நீங்க எல்லா நேரமும் வீட்ல இருக்கிறதில்ல. நீங்க வீட்ல இல்லாதப்போ ஏதாவது நடந்தா என்ன செய்றது?"

"நீ கூப்பிட்டா நான் என் வேலையை விட்டுட்டு ஓடி வந்துடுவேன்"

"தேவையில்ல. நீங்க உங்க வேலையை பாருங்க. இந்த ஃபிங்கர் பிரிண்ட்டை மாத்துங்க. ஆழ்வியோட ஃபிங்கர் பிரிண்ட் அதுல இருந்தா, நாங்க உங்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்ல"

"என்னது? ஆழ்வியோட ஃபிங்கர் பிரிண்டா?"

"ஆமாம். உங்களுடைய ஃபிங்கர் பிரிண்ட்டுக்கு பதிலா, முத்துவோட ஃபிங்கர் பிரிண்ட் அதுல இருந்திருந்தா, அன்னைக்கு அவன் ஆழ்வியை இன்னுகிட்ட இருந்து காப்பாத்தி இருப்பான். எத்தனையோ பிரச்சனைகளை நம்ம  தவிர்த்திருக்க முடியும்"

சித்திரவேல் மென்று விழுங்கினான்.

"ஆனா, அவரு ரொம்ப ஆபத்தான நிலைமையில இருக்காரு. பாரு, அவர் எப்படி நடந்துக்குறார்னு..."

அப்பொழுது ஆழ்வி அங்கு வருவதை பார்த்தார்கள். அவ்வளவு தான், இனியவனின் முகபாவம் மாறியது. தன் கையை உள்ளே இழுத்துக் கொண்டு, சுவருக்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.

*பாருங்கள்* என்பது போல் சைகை செய்தாள் நித்திலா.

திகைத்து நின்றான் சித்திரவேல். இனியவனுக்கு என்ன ஆனது? எதற்காக அவன் ஆழ்வியை பார்த்து ஒளிந்து கொள்கிறான்?

"ஆழ்வியை பார்த்து இன்னு கண்ட்ரோல் ஆகுறான். அதனால தான் அவங்களோட ஃபிங்கர் பிரிண்ட்டை வைக்கணும்னு நான் சொல்றேன்"

"இல்ல நித்தி, நான் என்ன சொல்றேன்னா..."

"நான் சொல்றதை மட்டும் நீங்க செய்யுங்க" என்றாள் அவன் சொல்வதைக் கேட்க தயாராய் இல்லாத நித்திலா.

பெருமூச்சுவிட்டு தனது கைரேகையை அதிலிருந்து நீக்கிவிட்டு, ஆழ்வியின் கைரேகையை பதிக்குமாறு கூறினான்.

"என்னது? என்னோட கைரேகையா? என்று திணறினாள் ஆழ்வி, ஏதோ அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்பது போல!

"ஆமாம், ஆழ்வி. இதுக்கு பொருத்தமான ஆள் நீங்க தான். இனிமே இன்னுவோட ரூமுக்கு நீங்க தான் பொறுப்பு"

"ஆனா..." என்று தயங்குவது போல் பாசாங்கு செய்தாள் ஆழ்வி.

"ப்ளீஸ், எனக்காக இதை செய்யுங்க" என்று அவள் கையைப் பிடித்து அவள் கைரேகையை அதில் பதித்தாள் நித்திலா.

"இன்னுவோட ரூம் கண்ட்ரோலை வச்சிருக்க சரியான ஆள் நீங்க தான், ஆழ்வி"

முகத்தில் எந்த பாவனையும் இன்றி தலையசைத்தாள் ஆழ்வி, உள்ளுக்குள் புன்னகைத்தபடி.

இனியவனின் அறை அவளது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது... விரைவிலேயே இனியவனும்...!

தொடரும்...


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top