14 ஆழ்வியின் அதிர்ச்சி
14 ஆழ்வியின் அதிர்ச்சி
இனியவனின் புகைப்படத்தை பார்த்தவாறு கட்டிலில் படுத்தாள் ஆழ்வி.
"நீங்க யாரு? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீங்க என் வாழ்க்கையில எதுக்காக வந்தீங்க? உங்க தகுதிக்கு நான் சமமானவள் இல்லன்னு எனக்கு தெரியும். நான் உங்களுக்கு மனைவியானது நம்ம விதி. எதிர்காலம் நமக்குன்னு என்ன சேத்து வச்சிருக்குன்னு எனக்கு புரியல. நீங்க என்னை ஏத்துக்குவீங்களா மாட்டீங்களான்னு கூட எனக்கு தெரியல. உங்க கூட என்னோட எதிர்காலம் அமையும்னு நினைக்கிறது பேராசைன்னு நான் நினைக்கிறேன். என்னை மாதிரி சாதாரண பொண்ணு, உங்களை மாதிரி மகாராஜனுக்கு மனைவியாக முடியாது. ஆனா உங்க அக்கா என்னை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிட்டு வந்திருக்காங்க. அந்த பணத்துக்கு தகுதியான வேலையை நான் நிச்சயம் செய்வேன். இப்போதைக்கு சத்தியமா நான் என்ன செய்யப் போறேன்னு எனக்கே புரியல. ஆனா, என்னால முடிஞ்சதை நான் நிச்சயம் செய்வேன்"
என்ன செய்யப் போகிறோம், எங்கிருந்து துவங்கப் போகிறோம், என்ற எந்த தெளிவும் இல்லாத நிலையிலும், இனியவனை பற்றி நினைத்தபடி உறங்கினாள் ஆழ்வி.
மறுநாள் காலை குளித்து முடித்து தன் அறையை விட்டு வெளியே வந்தாள் ஆழ்வி. அப்பொழுது,
"குட் மார்னிங்" என்ற குரல் கேட்டு நின்றாள்.
பின்னால் திரும்பிப் பார்த்த அவள், சித்திரவேல் அவளை நோக்கி புன்னகையுடன் வருவதை கண்டாள்.
"குட் மார்னிங்"என்றாள் சாம்பிரதாயமாக.
அவள் அருகில் வந்த அவன்,
"உன் வாழ்க்கையில நடந்த எல்லாத்துக்கும் ரொம்ப சாரி, மா" என்றான்.
அவன் பேச்சில் குறுக்கிட நினைக்காத அவள், அமைதி காத்தாள். இனியவனின் வீட்டில் அது தான் அவளுக்கு முதல் நாள். அதனால், ஒவ்வொருவரையும் ஊன்றி கவனிப்பது என்று முடிவெடுத்திருந்தாள் அவள்.
"உங்க கல்யாணத்தை நிறுத்த முடியாத நிலைமையில நான் இருந்தேன். என் மனைவியோட விருப்பத்துக்கு எதிரா எதுவும் செஞ்சு அவளை வருத்தப்பட வைக்க என்னால் முடியாது"
புரிந்தது என்பது போல் தலையசைத்தாள் ஆழ்வி.
"பார்கவி என்னோட மச்சினி கிடையாது. அவ என்னோட மக மாதிரி. இப்போதிலிருந்து நீயும் எனக்கு அப்படி தான். நீ எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கேன். நீ என்கிட்ட எதை வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் கேட்கலாம். இங்க உனக்கு ஒரு அண்ணன் இருக்கான்னு நினைச்சுக்கோ"
சரி என்று மென்மையாய் புன்னகைத்தாள் ஆழ்வி. சித்திரவேலின் அணுகுமுறை அவளுக்கு வெகுவாய் பிடித்திருந்தது.
"உன்னை யார் கட்டாயப்படுத்தினாலும் இனியவனோட ரூமுக்கு மட்டும் போகாத. நீ அதை செய்ய வேண்டிய அவசியம் இல்ல. அது ரொம்ப ஆபத்தான ஒரு விஷயம். உன்னை விட அதைப்பத்தி வேற யாருக்கு தெரிய போகுது? நீ எச்சரிக்கையா இருமா"
ஆழ்வி வியப்படைந்தாள். உண்மையிலேயே இதையெல்லாம் பேசுவது சித்திரவேலா?
"நான் இப்படி எல்லாம் பேசுறது உனக்கு ஆச்சரியமா இருக்கலாம். ஆனா, ஒரு நல்ல மனுஷனா, மனநிலை சரியில்லாத ஒருத்தனுக்கு பொண்டாட்டியா இருக்க சொல்லி, யாரா இருந்தாலும் உன்னை கேட்க கூடாது. என்னைப் பொறுத்த வரைக்கும், நீயும் பார்கவியும் ஒன்னு தான். அதை ஞாபகத்துல வச்சுக்கோ"
இதமாய் தலையசைத்தாள்.
"நான் இனியவனோட டாக்டரை இங்க வர சொல்லி இருக்கேன். நீ அவர்கிட்ட நேரடியா என்ன வேணுமானாலும் பேசிக்கலாம். இனியவனை பத்தி உனக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் நீ அவர்கிட்ட கேளு. உன்னோட ஐடியாவையும் நீ அவருக்கு சொல்லலாம்"
"ரொம்ப தேங்க்ஸ், அண்ணா"
புன்னகையுடன் அங்கிருந்து சென்றான் சித்திரவேல். உற்சாகமாய் உணர்ந்தாள் ஆழ்வி. சித்திரவேலின் பேச்சு, அவளுக்கு பலம் ஊட்டியது என்று கூறலாம்.
பாட்டியும் நித்திலாவும் திறந்த நிலையில் இருந்த அழகிய பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். கருமாரி அம்மனின் மிகப் பெரிய படம் அந்த பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த ஆழ்வி, அவர்களுடன் நின்று கொண்டாள். அவளைப் பார்த்து அவர்கள் புன்னகைத்தார்கள்.
"நான் கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு நினைக்கிறேன்" என்றாள் ஆழ்வி
"நானும் உங்க கூட வரட்டுமா?" என்றாள் நித்திலா.
"இல்ல, நான் மட்டும் போயிட்டு வரேன்"
"கார்ல போயிட்டு வாங்க"
"நோ தேங்க்ஸ்... கோவில் இங்கிருந்து அஞ்சு நிமிஷம் தானே... நடந்தே போறேன்."
"சித்ரா சொன்னாரு, இன்னைக்கு டாக்டர் உங்களை பார்க்க வராராம்"
"என்கிட்டயும் சொன்னாரு. அவர் வர்றதுக்கு முன்னாடி, நான் கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன்"
சரி என்று தலையசைத்தாள் நித்திலா.
"உங்க கூட பார்கவியையாவது கூட்டிக்கிட்டு போங்களேன்"
"கவலைப்படாதீங்க, நான் ஓடிட மாட்டேன்"
வாயடைத்து நின்றாள் நித்திலா. மேலும் அங்கு தாமதிக்காமல், அந்த இடம் விட்டு சென்றாள் ஆழ்வி.
"இது உனக்கு போதுமா? என்றார் பாட்டி.
கலங்கிய கண்களுடன் அங்கிருந்து சென்றாள் நித்திலா. அவர்கள் இருவருக்காகவும் பரிதாபப்பட்டார் பாட்டி. அதற்காக அவர் ஒன்றும் செய்யக்கூடிய நிலையில் இல்லை.
ஆழ்வி வரவேற்பறையை கடந்த போது, அவர்கள் வீட்டின் லேண்ட் லைன் மணி அடித்தது. யாராவது இருக்கிறார்களா என்று இங்கும் அங்கும் பார்த்தாள். அங்கு யாரும் இல்லாமல் போகவே, தயக்கத்துடன் அந்த அழைப்பை ஏற்றாள்.
"ஹலோ...
"ஆழ்வி, நான் மீனா பேசுறேன்"
"ஹாய் மீனா, எப்படி இருக்க?"
"நான் நல்லா இருக்கேன். நேத்து ராத்திரி நான் கவிக்கு ஃபோன் பண்ணேன். நீ அவளோட அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னா"
"ம்ம்ம்"
"நான் அவளோட நம்பருக்கு அரை மணி நேரமா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். அவளோட ஃபோன் எங்கேஜ்டா இருக்கு. அதனால தான் லேண்ட் லைனுக்கு ஃபோன் பண்ணேன்"
"நீ கவி கிட்ட பேசணுமா?"
"இல்ல, நான் உன்கிட்ட பேச தான் ஃபோன் பண்ணேன். உன்கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்"
"சொல்லு மீனா"
"நான் என்னோட கசின் கல்யாணத்துக்காக, என் சொந்த ஊருக்கு வந்திருக்கேன்"
"ஆமாம், எனக்கு தெரியும். நீ தான் ஏற்கனவே சொன்னியே..."
"இந்த இடம் ஒரு விஷயத்துக்கு ரொம்ப ஸ்பெஷல்னு நான் தெரிஞ்சுகிட்டேன்"
"எதுக்கு ஸ்பெஷல்?"
"மெண்டல் பேஷண்டை ட்ரீட் பண்றதுல ரொம்ப ஸ்பெஷலாம்..."
சில நொடி திகைத்து நின்றாள் ஆழ்வி.
"நீ லைன்ல இருக்கியா?"
"ம்ம்ம்..."
"அவங்க சித்த மருத்துவத்தை ஃபாலோ பண்றாங்க. நீ இனியவன் அண்ணனையும் இங்க கூட்டிகிட்டு வந்தா, நிச்சயம் அவர் குணமாயிடுவாரு"
"ஓ..."
"என்னோட சித்தப்பா, அப்படிப்பட்ட ஒரு மெடிக்கல் சென்டர்ல தான் வேலை செய்றார். நீ மட்டும் சரின்னு சொல்லு, இங்க இருக்கிற ஒரு தலைமை வைத்தியர் கிட்ட உன்னை பேச வைக்கிறேன். நிறைய கைவிடப்பட்ட கேசையெல்லாம் அவர் குணமாக்கி இருக்காராம்" என்றாள் நம்பிக்கையோடு.
"நெஜமாவா?"
"ஆமாம், இந்த இடத்துக்கு வந்ததுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கு. நீ ஏன் முயற்சி பண்ணக்கூடாது?"
"நான் இதைப்பத்தி சித்திரவேல் அண்ணன் கிட்ட பேசுறேன். அவர் ரொம்ப நல்லவரா தெரியறார். அவங்க முடிவு என்னன்னு கேட்டுட்டு நான் சொல்றேன்"
"சரி, நான் இன்னும் ஒரு வாரத்துக்கு இங்க இருப்பேன். இங்க இருக்கிற வைத்தியரை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். ஸும் மீட்டிங்ல நீ அவர்கிட்ட நேரடியா பேசலாம். என்ன சொல்ற?"
"நிச்சயம் செய்யலாம். நான் உனக்கு சாயங்காலம் ஃபோன் பண்றேன்"
"சரி, நான் காத்துக்கிட்டு இருப்பேன்"
"பை"
ஆழ்விக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் இனியவனை திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் இதுவாக கூட இருக்கலாம். இதைப் பற்றி கூற சித்திரவேலை அவள் தேடினாள். அப்படி செய்யும் போது, அவள் இனியவனின் அறையை தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தயக்கத்துடன் நின்றாள். அவனது அறைக்கு அவளை செல்ல வேண்டாம் என்று சித்திரவேல் கூறினானே. ஆனால் அது பூட்டப்பட்டு தான் இருந்தது. அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதால், மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள். இனியவன் கவிழ்ந்து படுத்துக்கொண்டு, தலையணை முனையை சீண்டியபடி இருந்தான். மெல்ல தன் தலையை உயர்த்தி ஆழ்வியை பார்த்த அவன், கட்டிலில் இருந்து எதிரி குதித்து ஓடிச் சென்று கட்டிலுக்கு பின்னால் ஒளிந்து கொண்டான். மெல்ல தன் தலையை தூக்கி அவளை பார்த்து, மீண்டும் தன் தலையை பின்னால் இழுத்துக் கொண்டான். அது அவளுக்கு தைரியத்தை தந்தது. மெல்ல கிரில் கதவின் அருகில் சென்று, அவனை பார்த்துக் கொண்டு நின்றாள். அவனும் மீண்டும் தன் தலையை உயர்த்தி அவளை பார்த்தான். மேலும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன் கையை அவனை நோக்கி நீட்டி இங்கே வா என்பது போல் செய்கை செய்தாள். சிறிது நேரம் அசைவின்றி இருந்த அவன், மெல்ல எழுந்து நின்றான். மெல்ல அடி எடுத்து வைத்து அவளை நோக்கி நகர்ந்தான்.
அப்போது அங்கு வந்த வேலைக்காரன் முத்து,
"அண்ணி இந்த கிளிப் உங்களுடையதா?" என்று அதை அவளிடம் நீட்டினான்.
ஆம் என்று தலையசைத்து, அதை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டாள். அந்த கிளிப்பை பார்த்தான் இனியவன். அவனது முகம் கிலியடைந்தது.
"நோ..." என்று கத்தியபடி அந்த அறையின் மூளைக்கு ஓடிச்சென்று தன் கால்களை கட்டிக்கொண்டு, மூளையில் அமர்ந்து, தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.
ஆழ்விக்கு ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று அவனுக்கு என்ன ஆனது? தன் கையில் இருந்த கிளிப்பையும் அவனையும் மாறி மாறி பார்த்த அவள், அதற்கான காரணத்தை புரிந்து கொண்டாள். அதைக் கொண்டு அவள் தன் கையை கிழித்துக்கொள்வாள் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அவனுக்குத்தான் ரத்தம் என்றால் பயம் ஆயிற்றே! பெருமூச்சு விட்ட அவள்,
"சித்ரா அண்ணன் எங்கே இருக்காரு?" என்றாள் முத்துவிடம்.
"குளிக்கிறாருன்னு நினைக்கிறேன், அண்ணி" என்றான் அவன்.
அவளுக்கு ஏமாற்றமாய் போனது. பார்கவிக்கு அடுத்தபடியாக, அந்த வீட்டில் அவளுக்கு சித்திரவேலை தான் பிடித்திருந்தது. மீனா கூறியதைப் பற்றி யோசித்தபடி அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள். கோவிலுக்கு சென்று வந்த பிறகு, சித்திரவேலிடம் சித்த மருத்துவம் பற்றி பேசுவது என்று முடிவெடுத்தாள்.
பத்து நிமிடத்தில் கோவிலை வந்தடைந்தாள். அம்மன் விக்ரகத்தை பார்த்து புன்னகை புரிந்த அவள்,
"இதுக்காகத் தான் நான் அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சீங்களா? அவர் எவ்வளவு அழகா, ஹேண்ட்ஸம்மா, ஸ்டைலா இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியாதது என்ன இருக்கப்போகுது? உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே! அவர் என்னை தன் மனைவியா ஏத்துக்குவாருன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. ஆனாலும் நான் அண்ணன் கிட்ட பேசி அவரை நிச்சயம் குணப்படுத்த முயற்சி செய்வேன். நீங்க எனக்காக என்ன செய்யப் போறீங்கன்னு நானும் பார்க்கிறேன். ஆனா ஒன்னு, என்ன நடந்தாலும் அதை நான் ஏத்துக்குவேன்"
மீண்டும் இன்பவனம் நோக்கி நடந்தாள். அவள் அந்த வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த போது, யாரோ ரகசியமாய் பேசுவது அவளுக்கு கேட்டது. அதை உதறிவிட்டு செல்வது என்று அவள் நினைத்தபோது, இனியவனின் பெயரை கேட்டு அசையாமல் நின்றாள். தன் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு, குரல் வந்த திசையை நோக்கி, சத்தம் செய்யாமல் மெல்ல நகர்ந்தாள்.
"இனியவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சே... அவன் பொண்டாட்டி அவனை நான் கவனிச்சிக்கிறேன்னு சொல்லிட்டா என்ன செய்றது?"
"அவன் கிட்ட போற தைரியம் யாருக்கு வரும்? அப்படியே அவள் அவன்கிட்ட போனாலும், அவள் சதையை அவன் கிழிச்சிடுவான்"
"அவளுக்கு நம்மளை பத்தி தெரிஞ்சிட்டா என்ன ஆகிறது?"
"அவனுக்கு குடுக்குற மருந்தை தொடர்ந்து கொடுத்துகிட்டே இரு. இந்த நிலைமையில இருந்து அவனால வெளியில வரவே முடியாது. அவ என்ன வேணும்னாலும் செய்யட்டும். அவன் இப்படித்தான் இருப்பான்"
"ஆமாம், நான் அவனுக்கு ரெகுலரா மருந்து கொடுத்துக்கிட்டு தான் இருக்கேன். அதை முத்து மூலமா அவனுக்கே தெரியாம செஞ்சுகிட்டு இருக்கேன். ஏன்னா அப்ப தான் என் மேல யாருக்கும் சந்தேகம் வராது"
"அப்படின்னா எந்த பிரச்சனையும் இல்ல. இனியவன் காலம் முழுக்க பைத்தியமாவே இருப்பான்"
ஆழ்வி அதிர்ச்சியில் நடுநடுங்கி போனாள். இந்த சதி திட்டத்திற்கு பின்னால் இருப்பவன் யார் என்பதை அவள் அறிந்து கொண்டபோது, அவளது மூச்சு நுரையீரலை விட்டு வெளியே வர மறுத்தது. அது வேறு யாருமல்ல சித்திரவேல் தான்...! அவனுடன் இருந்தது, இனிவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக இருக்க வேண்டும்... இல்லை, மருத்துவம் செய்வது போல் பாசாங்கு செய்யும் பாதகனாக இருக்க வேண்டும்...! இனியவனின் இந்த நிலைமைக்கு இவர்கள் தான் காரணமா? இவர்கள் தான் அவனை பைத்தியமாய் வைத்திருக்கிறார்களா? கடவுளே! இந்த சதியில் இருந்து இனியவனை காக்கத்தான் என்னை இங்கு அழைத்து வந்தாயா? ஆனால் அவள் அதை எப்படி செய்யப் போகிறாள்? புரியவில்லை அவளுக்கு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top