3 அதிர்ச்சி செய்தி
3 அதிர்ச்சி செய்தி
விஷயத்தை உடைப்பில் போடாமல், தில்லைராஜனிடம் கூறிய படியே தனது வக்கீலிடம் பேசினார் மணிமாறன். விஷயத்தை கேள்வியுற்ற அவரது வக்கீல் பூபதி, அதிர்ச்சி அடைந்தார்.
"இது ரொம்ப சிக்கலான பிரச்சனை. இது சம்பந்தமான பேப்பர்ஸை எல்லாம் எனக்கு உடனே அனுப்ப சொல்லுங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் எல்லா சொத்தையும் அவரோட ஒய்ஃப் பேர்லயும், டாட்டர் பேர்லயும் மாத்தி எழுத வேண்டியது அவசியம். ஏன்னா, இதுவே ரொம்ப லேட். கடந்த ஆறு மாசமா, வாங்குன லோனுக்கு இஎம்ஐ கட்டாம இருக்காரு கைலாசம். எந்த நேரமும் தில்லைராஜன் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும்"
"நீங்க சொத்துக்களை மாத்துறதுக்கு தேவையான எல்லா பேப்பர்ஸையும் ரெடி பண்ணுங்க. தில்லைராஜனோட சொத்து விவரங்களை இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் உங்களுக்கு அனுப்புறேன்"
"சரிங்க சார்"
"சொத்துக்களை மாத்தி எழுதறதுனால தில்லைராஜனுக்கு எந்த பிரச்சனையும் வராதே?"
"நிச்சயம் வரும் சார். அவரை போலீஸ் அரெஸ்ட் செய்வாங்க. ஆனா அதை நம்ம பாத்துக்கலாம். குறைஞ்சபட்சம் நம்ம அவரை சொத்தையாவது காப்பாத்தலாம்"
பெருமூச்சு விட்டார் மணிமாறன்.
"நமக்கு வேற சாய்ஸ் இல்ல சார். இல்லன்னா, ஒரு நயா பைசா விடாம அவர் இழக்க வேண்டி இருக்கும்"
"சரி"
அழைப்பை துண்டித்து விட்டு, உடனடியாய் தில்லைராஜனுக்கு ஃபோன் செய்தார் மணிமாறன். ஆனால், அவரது அழைப்பை தில்லைராஜன் ஏற்கவில்லை. அது மணிமாறனுக்கு கலக்கத்தை தந்தது. அவரிடம் காப்பி குவளையை தந்த மின்னல்கொடி,
"ஏன் டென்ஷனா இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?" என்றார்.
"தில்லை என்னோட ஃபோனை எடுக்க மாட்டேங்கிறான்" என்றார் சங்கடத்துடன்.
"ஏதாவது வேலையா இருந்திருப்பாரு"
"இல்ல, அவன் எப்படியும் என்னோட காலை அட்டென்ட் பண்ணுவான். பிஸியா இருந்தா, ஒரு மெசேஜாவது போடுவான்"
"இருங்க, நான் சிவகாமிக்கு ஃபோன் செஞ்சு பாக்குறேன்"
"கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாரேன்"
தனது கைபேசியை அவர் எடுத்த போது, அவர்கள் வீட்டு வேலைக்காரன் அவர்கள் அறையின் கதவை தட்டினான்.
"என்ன விஷயம் தண்டபாணி?"
"குமரேசன் சார் அவங்க குடும்பத்தோட உங்களை பார்க்க வந்திருக்காரு"
மணிமாறனும் மின்னல்கொடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"இந்த நேரத்துல இவன் வேற எதுக்காக இங்க வந்திருக்கான்?" முணுமுணுத்தார் மணிமாறன்.
"அவங்கள போய் பார்த்தா தானே, அவர் எதுக்காக இங்க வந்திருக்கார்ன்னு தெரிஞ்சிக்க முடியும்?" லாஜிக் பேசினார் மின்னல்கொடி.
"மலரவன் கிட்ட கல்யாணத்தை பத்தி பேச சொல்லி, மறுபடியும் என்னை பிச்சு பிடுங்க போறான்"
"மலரவனோட நிலைப்பாடு என்னன்னு நீங்க அவருக்கு தெளிவா சொல்லி புரியவைக்கிறது நல்லது"
"எனக்கு நீ ஒரு உதவி செய்ய முடியுமா?"
"சொல்லுங்க, நான் என்ன செய்யணும்"
"அவங்களுக்கு முன்னாடி மலரவனுக்கு ஃபோன் பண்ணி, ஸ்பீக்கரை ஆன் பண்ணி, அவன்கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசு. அப்போ தான், இந்த விஷயத்துல நம்மால செய்ய முடிஞ்சது எதுவும் இல்லைன்னு அவங்களுக்கு புரியும்"
"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? மலர் என்ன சொல்லுவான்னு உங்களுக்கு தெரியாதா? மறுபடியும் நான் அவன்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசினா, என் மேல எறிஞ்சு விழுவான். இந்த ஆட்டத்துக்கு நான் வரல. அவன்கிட்ட நீங்க பேசினா எனக்கு அத பத்தி எந்த பிரச்சனையும் இல்ல. ஏன்னா ல், இதுவரைக்கும் நீங்க அவன்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசினதே இல்ல. ஆனா அதை நான் ஏற்கனவே செஞ்சிட்டேன். ஆளை விடுங்க"
"என்னை ஏன் நீ பிரச்சினையில மாட்டி விட பாக்குற?"
"நீங்களும் எனக்கு அதை தானே செய்ய நினைக்கிறீங்க? நானும் என் பிள்ளையும் ஒத்துமையா இருக்கிறது உங்களுக்கு பொறுக்கலயா...? மகா மோசமான ஆளு நீங்க..."
"அப்புறமா அவன்கிட்ட உண்மையை சொல்லி நீ சமாதானப்படுத்திடுவ. உண்மை தெரிஞ்சா அவன் உண்மையிலேயே உன்னை நினைச்சி சந்தோஷம் தான் படுவான்"
"அப்படியா? அப்படின்னா அதை நீங்க செய்யுங்க. அதுக்கப்புறம் அவன் கிட்ட உண்மையை சொல்லி நான் சமாதானப்படுத்திக்கிறேன்"
"நிச்சயமா தானே சொல்ற? எனக்காக நீ அவனை சமாதானப்படுத்திடுவ இல்ல?"
"நிச்சயமா செய்றேன்... ஆனா இதுல நீங்க என்னை இழுத்து விட்டுடாதீங்க"
நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு தரைதளம் விரைந்தார் மணிமாறன். அவரை பின்தொடர்ந்தார் மின்னல்கொடி. குமரேசன் குடும்பத்தார் கவலையுடன் அமர்ந்திருந்ததை கண்டார்கள், முக்கியமாய் கீர்த்தி. வழக்கமாய் ஒப்பனையுடன் ஜொலிக்கும் அவளது முகத்தில், துளி கூட ஒப்பனை இல்லை. அவளது முகம் வெளுத்துப் போயிருந்தது.
"வாங்க சுஜா"
"பாருங்க மின்னல், என் குழந்தை எப்படி உடைஞ்சி போயிருக்கா. மலரவன் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுல இருந்து அவ எதுவுமே சாப்பிடல. உங்களுக்கு மருமகளா வரணும்னு அவ எவ்வளவு ஆசைப்பட்டா தெரியுமா? உங்களை மாதிரி ஒரு நல்ல மாமியார் தான் தனக்கு வேணும்னு அவ விரும்பினா"
"என்னால புரிஞ்சுக்க முடியுது சுஜா. ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்க மலரவன் விரும்பலன்னா அதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்?"
"நீங்க எப்படிங்க இப்படி பேசுறீங்க? உங்க பிள்ளை தானே? பெத்தவங்க பேச்சைக் கேட்டு நடக்க வேண்டியது ஒரு பிள்ளையோட கடமை இல்லையா? ஏன் அவன் இவ்வளவு மரியாதை இல்லாமல் இருக்கான்? அவன் பெரிய பிசினஸ்மேனா இருந்தா என்ன? நல்ல நடத்தையோடு இருக்க வேண்டியது அவசியம் இல்லையா? கீர்த்தி என்ன சொல்ல வறான்னு கூட கேட்காம எப்படி அவன் அவளை இன்சல்ட் பண்ணலாம்?" புத்தி கெட்டு பேசினார் சுஜாதா.
மணிமாறனோ, மின்னல்கொடியோ அவர் பேசிய விதத்தை துளியும் விரும்பவில்லை. சுஜாதா பேசியது யாரைப் பற்றி? அவர் யார் மலரவனை பற்றி பேச?
"எங்க பிள்ளைகிட்ட நல்ல நடத்தை இருக்கு. அது எங்களுக்கு நல்லாவே தெரியும். எங்க பிள்ளையோட விருப்பத்தைத் தவிர வேற எதை பத்தியும் நாங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. அவனுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லைனா, அவனை நாங்க கட்டாயப்படுத்த மாட்டோம். இதுக்கு மேல இதை பத்தி பேச நாங்க விரும்பல" தடாலடியாய் கூறினார் மின்னல்கொடி.
தன் மனைவி செய்துவிட்ட தவறை உணர்ந்தார் குமரேசன்.
"இல்லம்மா மின்னல். நாங்க அந்த அர்த்தத்துல சொல்லல. கீர்த்தியை பாருங்க... அவளை இப்படி பார்த்ததுனால தான் சுஜாதாவுக்கு தாங்க முடியல. ஒரு அம்மாவா இருந்துகிட்டு தன் பிள்ளையை இப்படிப் பார்க்க கஷ்டமா இருக்கும் இல்லையா?"
"நீங்க என்ன பேசுறீங்க அண்ணா? கீர்த்தி ஏன் இப்படி இருக்கான்னு எனக்கு ஒன்னும் புரியல. என்னமோ அவ மலரவனை பல வருஷம் காதலிச்ச மாதிரியில்ல நடந்துக்கிறா... நான் தான் அவளை சின்ன வயசுல இருந்து பாத்துட்டு இருக்கேனே... நிச்சயம் இல்லாத ஒரு விஷயத்துக்காக உடைஞ்சு போறவ இல்லையே அவ..."
"அதே தான் நானும் சொல்றேன். எதுக்கும் உடைஞ்சி போகாத அவ, இன்னைக்கு மலரவனால இப்படி இருக்கா"
"இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன், கல்யாணத்துல விருப்பமே இல்லாம இருக்கிற ஒருத்தனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தா, அவ சந்தோஷமா இருப்பான்னு நீங்க நினைக்கிறீங்களா?" என்றார் மணிமாறன்.
"நீ அப்படி சொல்லாத மாறா. கல்யாணத்துக்கு பிறகு நிச்சயம் மலரவன் கீர்த்தியை புரிஞ்சுக்குவான்"
"நீ கல்யாணத்துக்கு அப்புறம் நடக்க போற விஷயத்தை பத்தி பேசுற. ஆனா அவன் கல்யாணமே வேண்டாம்னு சொல்றான். நீ அதை புரிஞ்சுக்கோ"
"மலரவன், தன் குடும்பத்து மேலையும், பெத்தவங்க மேலையும் ரொம்ப மரியாதை உள்ள பிள்ளை. அதனால நீங்க சொன்னீங்கன்னா அவன் உங்களை மறுக்க மாட்டான்"
'என்ன தொல்லை இது?' என்பது போல் மணிமாறனும் மின்னல்கொடியும் பார்த்துக் கொண்டார்கள்.
"எங்களுக்காக கடைசியா ஒரு தடவை முயற்சி பண்ணிப் பாருங்களேன். அவன் மட்டும் மாட்டேன்னு சொல்லிட்டா, அதுக்கப்புறம் நிச்சயம் நாங்க உங்களை தொல்லை பண்ண மாட்டோம். அவன், மகிழனோட கல்யாணத்துக்கு இந்தியா வரும் போது நேரடியா நான் அவன்கிட்ட பேசி பாத்துக்குறேன்"
அதிர்ச்சியில் புருவம் உயர்த்தினார் மின்னல்கொடி. இவர்கள் பேசுவதை பார்த்தால், அவர்கள் மலரவனை விடுவதாக இல்லை போல் தெரிகிறது. மலரவனின் நிலைப்பாட்டை நேரடியாய் பார்க்காமல் இவர்கள் நிச்சயம் புரிந்து கொள்ள போவதில்லை.
"மலருக்கு கால் பண்ணுங்க" என்றார் மின்னல்கொடி, மணிமாறனிடம் திடமாய்.
அலுப்புடன் தனது கைபேசியை எடுத்து, மலரவனுக்கு ஃபோன் செய்தார் மணிமாறன். அழைப்பை ஏற்ற மலரவன், தூக்க கலக்கத்துடன் பேசினான். லண்டனில் அப்போது மணி காலை 6:30. லண்டனில் நிலவிய சிலேன்ற கால நிலையால், இன்னும் கட்டிலை விட்டு எழவில்லை மலரவன். ஸ்பீக்கரை ஆன் செய்யுமாறு ஜாடை காட்டினார் மின்னல்கொடி. ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினார் மணிமாறன்.
"குட் மார்னிங் மலரா..."
தன் அப்பாவின் குரல் கேட்டு, கட்டிலில் எழுந்து அமர்ந்தான் மலரவன். அவன் கடிகாரத்தை பார்க்க, அது, 6:30 என்றது.
"எதுவும் பிரச்சனை இல்லையே, பா?"
"ஒன்னும் பிரச்சனை இல்ல"
"அப்புறம் எதுக்குப்பா இவ்வளவு காலையில் எனக்கு ஃபோன் பண்ணீங்க? மணி 6:30 தான் ஆகுது"
அப்பொழுது தான் அவர் இந்தியாவுக்கும் லண்டனுக்கும் இருந்த நேர வித்தியாசத்தை தான் மறந்து விட்டதை உணர்ந்தார். குமரேசன் கொடுத்த குடைச்சலில் அவர் அதை மறந்து தான் போனார்.
"சாரி மலரா... விஷயம் கொஞ்சம் முக்கியமானது. அதனால் தான் உனக்கு ஃபோன் பண்ணேன்"
"ஏதாவது சீரியசான விஷயமா?"
"ஆமாம்"
"என்ன விஷயம் பா?"
"நானும், உங்க அம்மாவும் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறோம்"
சுருக் என்று கோபம் வந்தது மலரவனுக்கு.
"இது தான் நீங்க சொன்ன முக்கியமான விஷயமா?" சீறி விழுந்தான்.
"இது முக்கியம் இல்லையா?"
"நிச்சயமா இல்ல..."
"இல்ல மலரா..."
"அப்பா, தயவு செய்து எனக்கு என்ன வேணும்னு புரிஞ்சுக்கோங்க. என்னோட வேல்யூவும், என்னோட டைமுக்கு இருக்கிற வேல்யூவும் எனக்கு நல்லாவே தெரியும். அதை கீர்த்திங்குற ஒரு யூஸ்லெஸ் பொண்ணுக்காக செலவு பண்ண நான் விரும்பல. புரிஞ்சிதா உங்களுக்கு?"
குமரேசன் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மணிமாறன் கீர்த்தியின் பெயரை கூறுவதற்கு முன்பு, மலரவனே அவளது பெயரையும் கூறி, அவளை நிராகரித்தும் விட்டான்.
"நீ எவ்வளவு நாளைக்கு தனியா இருக்க முடியும்?"
"என்ன பேசுறீங்க நீங்க? எனக்கு நீங்களும் அம்மாவும் இல்லையா?"
"உன்னோட ஃப்யூச்சர்ல பத்தி யோசிச்சு பாரு. உனக்குன்னு ஒருத்தி வேண்டாமா?"
"எனக்கு பிடிச்ச யாரையாவது நான் பார்த்தா, அப்ப நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்"
"அப்படின்னா நான் குமரேசனுக்கு என்ன பதில் சொல்றது?"
"அதை என்கிட்ட ஏன் கேக்குறீங்க? அவரோட பொண்ணை எனக்கு ஃபோன் பண்ண சொல்லி நானா கேட்டேன்? அவ மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கா? அவளோட போட்டோவை எல்லாம் அனுப்பி என்னை மடக்கிடலாம்னு நினைக்கிறாளா?"
மணிமாறனும், மின்னல்கொடியும், கீர்த்தியை கேள்வியுடன் பார்க்க, அவள் பொறுமலுடன் தலை குனிந்து கொண்டாள்.
"இந்த வேலை எல்லாம் வேற யார்கிட்டயாவது காட்ட சொல்லுங்க... என்கிட்ட வேண்டாம்... இரிடேட்டிங் இடியட்... கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்ல... மட ஜென்மம்... நான் ஃபோனை வைக்கிறேன்" எரிச்சலுடன் கூறி, அழைப்பை துண்டித்து, கைபேசியை கட்டிலின் மீது வீசினான் மலரவன்.
"உன்கிட்ட அவன் பேசவே விரும்பலைனு தெரிஞ்ச பிறகு, எதுக்காக அவனுக்கு நீ போட்டோ அனுப்புன?" என்றார் மின்னல்கொடி
"நாங்க மீட் பண்ணிக்கிட்டதே இல்ல ல்ல... அதனால தான்..."
"நீங்க அவனை இன்னும் சரியா புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன். அவன் வெளி அழகை எல்லாம் பார்த்து மயங்கற பிள்ளை கிடையாது. அவனோட கவனத்தை கவர, அதுக்கும் மேல சில விஷயங்கள் வேணும்" என்றார் மின்னல்கொடி.
"கீர்த்தி கூட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சா, நிச்சயம் மலரவனுக்கு அவளை பிடிக்கும்" என்றார் குமரேசன்.
'நீ என்ன மனுஷன்?' என்பது போல் அவரை வெறுப்புடன் பார்த்தார் மின்னல் கொடி.
அவர்கள் அரைமனதாய் அங்கிருந்து விடை பெற்று சென்றார்கள். மலரவனின் கோப வெடிப்பு கீர்த்தியை அடித்து போட்டது. அவளை தனக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படையாய் கூறி விட்டான் அவன். அதோடு மட்டும் அல்லாது, தனது நேரத்தை கொடுக்கக் கூடிய அளவிற்கு தகுதியில்லாத யூஸ்லெஸ் என்றும், விவஸ்த்தை கெட்டவள் என்றும் கூறிவிட்டான். அதுவும் இருவரது பெற்றோரின் முன்னிலையில். அவனை தன் வழிக்கு கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்தாள் கீர்த்தி.
"எனக்கு இவங்களை சுத்தமா பிடிக்கல" என்றார் மின்னல்கொடி.
பெருமூச்சு விட்டார் மணிமாறன்.
"ஏன் இப்படி கொஞ்சம் கூட மூளை இல்லாத மாதிரி நடந்துக்கிறாங்க? அந்த பொண்ணை அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கலைன்னு ஏன் அவங்களுக்கு புரிய மாட்டேங்குது?"
"மலர் இந்தியாவுக்கு வரும் போது இவங்க என்ன செய்யப் போறாங்களோன்னு எனக்கு இப்பவே பயமா இருக்கு"
"இப்போதைக்கு அது நடக்க வாய்ப்பே இல்ல. தில்லை அண்ணன் தான் கல்யாணத்தை தள்ளிப் போட சொல்லிட்டாரே..."
அப்பொழுது மணிமாறனின் கைபேசி ஒலித்தது. அந்த அழைப்பு, ஒரு புது எண்ணிலிருந்து வந்தது. இருந்தபோதிலும், அந்த அழைப்பை ஏற்றார் மணிமாறன்.
"யார் பேசுறீங்க?"
"மணிமாறன் சார், உங்க ஃபிரண்ட் தில்லைராஜன் தற்கொலை பண்ணிக்கிட்டாரு" என்று முன்பின் தெரியாத அந்த குரல் கூறியது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top