25 திருமணமானவள்
25 திருமணமானவள்
ஜெகதீஷும், நந்தகோபாலும் தன்னை காதலிக்கிறார்கள் என்று தெரிந்த மீரா அதிர்ச்சிக்கு ஆளானாள். அவர்கள் யாருக்கும் இது நல்லதல்ல. அவர்களை உடனே தடுத்து நிறுத்தியாக வேண்டும். அப்போது, நந்தகோபால் ஜெகதீஷின் அறைக்கு செல்வதை அவள் கண்டாள். அது அவளுக்கு ஆச்சரியம் அளித்தது. அவர்கள் இருவரும் அவளை காதலிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. அது எவ்வளவு உயர்ந்த குணம். தன்னால் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று எண்ணினாள் அவள். ஜெகதீஷின் அறையை நோக்கி நடந்தாள். அவர்கள் அவளைப் பார்த்து இதமாய் புன்னகைத்தார்கள்.
"நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்"
"மீரா, தயவு செய்து யோசிக்காம, எதுவும் சொல்லிடாதீங்க" என்ற ஜெகதீஷை அதிர்ச்சியுடன் பார்த்தான் நந்தகோபால். அப்படி என்றால், மீராவை காதலிக்கும் விஷயத்தை ஜெகதீஷ் அவளிடம் கூறி விட்டானா?
"இதுல யோசிக்க எதுவும் இல்லை ஜகா. ஏன்னா, நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ" என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் குட்டை உடைத்தாள் மீரா.
"என்ன்னனது?" இருவரும் அதிர்ந்தார்கள்.
"ஆமாம்"
"நீங்க பொய் சொல்றீங்க" என்றான் ஜெகதீஷ், இல்லை என்றபடி தலையசைத்து.
"எனக்கு சென்னை தான் சொந்த ஊரு. கல்யாணத்துக்கு பிறகு என் புருஷனோட இருக்கணும்னு தான் நான் மும்பைக்கு வந்தேன்"
"நீங்க கல்யாணம் ஆனவங்களா இருந்தா, அதை ஏன் என்கிட்ட நீங்க முன்னாடியே சொல்லல?" என்றான் நந்தகோபால்.
"நான் கல்யாணம் ஆனவன்னு யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு நான் என் புருஷன் கிட்ட சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன்"
"ஆனா ஏன்?" என்றான் ஜெகதீஷ்.
"என்னை மன்னிச்சிடுங்க ஜகா. அதை என்னால சொல்ல முடியாது. ஏன்னா, அது எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற சொந்த விஷயம்"
இருவரும் பேயறைந்தது போல் நின்றார்கள்.
"இன்னும் என் மேல உங்களுக்கு நம்பிக்கை வரலைனா, இத பாருங்க" என்று தான் மறைத்து வைத்திருந்த தாலியை வெளியில் எடுத்து அவர்களிடம் காட்டினாள்.
அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. நந்தகோபால் அதிர்ச்சியின் எல்லைக்கு செல்ல, கண்கலங்கி நின்றான் ஜெகதீஷ்.
"என்னை மன்னிச்சிடுங்க ஃப்ரெண்ட்ஸ். நான் எப்பவும் உங்க கூட ஃபிரண்டா இருக்கணும்னு தான் நினைக்கிறேன். இந்த விஷயத்தால நம்ம நட்புல எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதுன்னு நம்புறேன். ஒருவேளை, உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் ஏற்பட, ஏதோ ஒரு விதத்துல நான் காரணமா இருந்திருந்தா, தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றாள் மீரா.
தன் நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தான் ஜெகதீஷ்.
"ரிலாக்ஸ் ஜகா" என்றான் நந்தா.
"என்ன கொடுமைடா இது? என்னால நம்பவே முடியல... மீரா மாதிரி ஒரு பொண்ணு இப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை ஃபேஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களா?"
"வாசு தான் சொன்னானே, தேவதைகள் அவங்களோட மரியாதை தெரியாத இடத்தில் தான் போய் சிக்குவாங்கன்னு... மீரா விஷயத்துலயும் அது தான் நடந்திருக்கு"
"ஒருவேளை அது உண்மையா இருந்தா, நான் சும்மா இருக்க போறது இல்ல"
"நீ என்ன சொல்ல வர?"
"அவங்க எதுக்காக தனக்கு கல்யாணமான விஷயத்தை மறைக்கணும்? அதுக்கு என்ன அர்த்தம்? அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இல்ல... அவங்க புருஷன் கூட அவங்க சந்தோஷமா இல்ல... அப்படி இருக்கும் போது, அவங்க எதுக்காக அவங்க புருஷனோட வாழணும்? எதுக்காக அவனை சகிச்சுக்கணும்? தேவையில்லை... அவங்க மதிப்பு தெரிஞ்ச நான் இருக்கும் போது, அவங்க அப்படி வாழ வேண்டிய அவசியமில்ல"
"ஆனா, மீரா அந்த மாதிரி பொண்ணு இல்ல ஜகா. அவங்க இன்டர்வியூல கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னாங்கன்னு நீ மறந்துட்டியா? அவங்க புருஷன் மேல ரொம்ப அன்பு வச்சவங்களா இருக்கணும். அதனால தான் அவனை அனுசரிச்சு வாழ்ந்துகிட்டு இருக்காங்க"
"அவனை சகிச்சுக்கிட்டு இருந்தாங்கன்னா, அவங்களுக்கு வேற சாய்ஸ் இல்ல. ஆனா இப்போ, அவங்களுக்கு நான் இருக்கேன். இனிமே அவங்க அவனை சகிச்சுக்க வேண்டிய அவசியம் இல்ல" என்றான் கோபமாய் ஜெகதீஷ்.
"கோபப்படுறதுக்கு பதிலா, நம்ம அவங்க புருஷனோட சேர்ந்து வாழ உதவி செய்யலாம்" என்றான் நந்தகோபால்.
அமைதியானான் ஜெகதீஷ்.
"ஆனா மீரா அவங்க பிரச்சனையை நம்ம கிட்ட சொல்லுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்ல"
"யாருடா அவங்க புருஷன்? அவங்களோட அருமை தெரியாத பரதேசி???" எரிச்சலுடன் கூறினான் ஜெகதீஷ்.
"எனக்கு மீராவை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றான் ஜெகதீஷ்.
கைக்குட்டையால் தன் முகத்தை துடைத்துக் கொண்ட ஜெகதீஷ்,
"நாம இதைப் பத்தி வாசு கிட்ட சொல்லணும்" என்றான்.
ஆம் என்று நந்தகோபால் தலையசைக்க, அவர்கள் இருவரும் வாசுதேவனின் அறையை நோக்கி சென்றார்கள். அவர்களை பார்த்து புன்னகைத்தான் வாசுதேவன். ஆனால் அவர்கள் இருவரும் புன்னகைக்காமல், அவன் முன் வந்து அமர்ந்தார்கள்.
"என்ன ஆச்சு? எதுக்காக உங்களுடைய முகமெல்லாம் இருளடஞ்சு போயிருக்கு?"
"எங்களோட மனசு உண்மையிலேயே இருளடஞ்சு தான் போயிருக்கு"
"என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு விரக்தியா பேசுறீங்க?"
"மீராவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி"
"என்னது? நீ இப்போ என்ன சொன்ன?" என்றான் நம்ப முடியாத வாசுதேவன்.
"அவங்களே அதை எங்க கிட்ட சொன்னாங்க"
"உங்களை அவாய்ட் பண்றதுக்காக தான் அவங்க அப்படி சொல்லி இருப்பாங்க"
"அவங்க கழுத்துல தாலி இருக்கு. எங்க கிட்ட அதை காட்டினாங்க" என்றான் ஜெகதீஷ் தொண்டை அடைக்க.
"என்னடா சொல்ற? அப்படி அதை மறைச்சி வைக்க வேண்டிய அவசியம் அவங்களுக்கு என்ன வந்தது?"
"அவங்க புருஷனுக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்காங்களாம்"
வாசுதேவனின் கோபம் பீறிட்டு எழுந்தது.
"எதுக்கு?" என்றான்.
"தெரியல" என்றான் ஜெகதீஷ் இயலாமையுடன்.
அப்போது அவர்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி, அந்த நிறுவனத்தில் சேர்ந்தவர்களுக்கான நிரந்தர அடையாள அட்டையுடன் அங்கு வந்து, அதை வாசுதேவனிடம் கொடுத்துவிட்டு சென்றார். அதில் மீராவின் அடையாள அட்டையும் இருந்தது. அதை கையில் எடுத்துக் கொண்ட நந்தகோபால், அவளது முகவரியை ஒரு துண்டு சீட்டில் எழுதினான்.
"மீராவோட புருஷன் யாருன்னு நான் நேர்ல போய் பாக்க போறேன்" என்றான்.
அவனது கைகள் எழுதுவதை நிறுத்தியது. அவனது முகம் சுருங்கியது.
"என்ன ஆச்சு?" என்றான் வாசுதேவன்
"இந்த அட்ரஸ் எனக்கு தெரிஞ்ச மாதிரி இருக்கு. இதை நான் வேற எங்கேயோ பார்த்திருக்கேன்" என்றான்.
அவன் கையில் இருந்த அடையாள அட்டையை பிடுங்கி அதை படித்த ஜெகதீஷ்,
"கிளவுட் நைன் அப்பார்ட்மெண்ட்... எனக்கும் அப்படித்தான் தெரியுது" என்றான்.
அவன் கையில் இருந்து அதை பெற்றுக் கொண்ட வாசுதேவன், எதையோ யோசித்தபடி தன் நெற்றியை தேய்த்தான். அவனது நிறுவனத்தின் வலைதள பக்கத்தை திறந்து, தன் நிறுவனத்தில் பணி புரியும் அனைத்து ஊழியர்களின் முகவரியையும் பரிசோதித்தான். மவுஸின் சக்கரத்தை உருட்டிக்கொண்டே வந்த அவனது கரங்கள், *கிளவுட் நைன் அப்பார்ட்மெண்ட்* என்ற முகுந்தனின் முகவரியை பார்த்து அப்படியே நின்றது. அவனது கண்கள் விரிவடைந்தன. மீராவின் முகவரியையும், முகுந்தனின் முகவரியையும் அவன் ஒப்பீடு செய்தான். பெருமூச்சு விட்ட அவன் மற்ற இருவரையும் ஏறிட்டான்.
"என்ன?"
"முகுந்தன்..." என்று கூறிவிட்டு, கணினியின் திரையை அவர்களை நோக்கி திருப்பினான் வாசுதேவன்.
"மீரா, முகுந்தனோட வைஃபா?" என்றான் ஜெகதீஷ் நம்ப முடியாமல்.
"இப்போ தான் எல்லாம் புரியுது. பாவம் மீரா" என்றான் நந்தகோபால்.
"இல்ல... முகுந்தன் முதல்ல இருந்த மாதிரி இப்ப இருக்கிறதா எனக்கு தோணல" என்றான் வாசுதேவன்.
"அப்படின்னா?"
"அவனோட கண்ணுல நான் அடிக்கடி பொறாமையை பார்க்கிறேன். மீரா எப்பெல்லாம் நம்மகிட்ட சிரிச்சி பேசுறாங்களோ, அப்ப எல்லாம் அவனுக்கு எரிச்சல் ஏற்படுறதையும் கோபப்படுறதையும் நான் கவனிச்சிருக்கேன். அவனோட வெறுப்புக்கு என்ன காரணம்னு அப்போ எனக்கு புரியல. ஆனா இப்ப புரியுது. அவன் அபராஜித்தை எப்படி போட்டு துவைச்சி எடுத்தான்னு நம்ம தான் பார்த்தோமே" என்றான் வாசுதேவன்.
"முகுந்தனோட அம்மா அப்பா அவனுக்கு கட்டாயப்படுத்தி மீராவை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்" என்றான் ஜெகதீஷ்.
"காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். நான் இந்த விஷயத்துல மீராவுக்கு உதவி செய்யறதுன்னு முடிவுக்கு வந்துட்டேன். நான் அவங்களை சேர்த்து வைக்காம விட மாட்டேன்" என்றான் நந்தகோபால்.
"அதை நீ எப்படி செய்வ? முகுந்தன் யார் பேச்சையும் கேட்க மாட்டான்" என்றான் ஜெகதீஷ்.
"அவனுக்கு யார் இப்போ அட்வைஸ் பண்ண போறா? மீரா நம்ம கிட்ட பேசினா, அவனுக்கு தான் பொறாமையா இருக்காமே... அதை வச்சே அவனை கவுக்க போறேன், மீராவுக்கே தெரியாம. ஏன்னா, இது அவங்களோட சொந்த விஷயம். நம்மளோட உதவியை அவங்க நிச்சயம் ஏத்துக்க மாட்டாங்க. அது வேற இல்லாம, அவங்களுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு அவங்க புருஷன் கிட்ட வேற அவங்க சத்தியம் பண்ணி கொடுத்து இருக்காங்களே" என்றான் நந்தகோபால்.
"நந்து சொல்றது உண்மை தான். முகுந்தன் ரொம்ப பொறாமை புடிச்சவன். நம்ம அவன் வைஃப் கிட்ட நெருங்கி பழகுறதை அவன் நிச்சயம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டான்"
"அதைத் தான் நான் செய்யப் போறேன்" என்றான் நந்தகோபால்.
"இந்த விஷயத்துல என்னால ஆனதை நானும் செய்றேன். மீரா சந்தோஷமா இருந்தா எனக்கு போதும்" என்றான் ஜெகதீஷ்.
"ஜகா, நமக்குள்ள ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டு அதுபடி நம்ம நடந்துகிட்டோம். அதே மாதிரி, இந்த விஷயத்துலயும் நம்ம தெளிவா இருக்கணும். மீரா நம்ம ஃப்ரெண்டோட மனைவி. எக்காரணத்தைக் கொண்டும் அவங்களை நம்ம தப்பான பார்வை பார்க்கவே கூடாது" என்றான் நந்தகோபால்.
"நிச்சயமா இல்ல. மீரா ரொம்ப பாவம். என்னால அவங்களோட வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வராது" என்றான் ஜெகதீஷ்.
"முகுந்தன் என்கிட்ட என்ன கேட்டான்னு தெரிஞ்சா, நீங்க நம்ப மாட்டிங்க" என்றான் வாசுதேவன்.
"என்ன கேட்டான்?"
"மீராவோட ஃபோட்டோசை நம்ம கம்பெனி மேகஸின்ல பிரிண்ட் பண்ண வேண்டாம்னு சொன்னான். அதுக்கு ஏற்படுற நஷ்டத்தை தானே கொடுக்கிறதா சொன்னான்"
"பொண்டாட்டி மேல அவ்வளவு அக்கறை இருந்தா, அதை ஏன் அவன் வெளிப்படையா சொல்லாம இருக்கான்?" என்றான் ஜெகதீஷ் எரிச்சலுடன்.
"அவன் பொண்டாட்டி மேல அக்கறையோட இருக்கான்... என்னை பொறுத்த வரைக்கும், அதுவே ரொம்ப பெரிய விஷயம். நம்ம தான் அவனை கடந்த அஞ்சு வருஷமா பார்த்துக்கிட்டு இருக்கோமே... அவனைப் பத்தி நமக்குத் தெரியாது? ஆனா, அவன் முன்னே இருந்த மாதிரி இப்ப இல்லங்கறத உறுதியா என்னால சொல்ல முடியும்"
"நீயும் எங்களுக்கு முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணு வாசு. அப்போ எங்களோட வேலை ரொம்ப சுலபமா முடியும்" என்றான் நந்தகோபால்.
அப்பொழுது முகுந்தன் ஒரு கோப்புடன் அங்கு வருவதை அவர்கள் பார்த்தார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக் கொண்டு,
"எப்போ நீ மீரா கிட்ட உன்னோட காதலை சொல்ல போற?" என்றான் ஜெகதீஷிடம் வாசுதேவன், முகுந்தனின் முகத்தை கவனித்தவாறு.
"சொல்லத்தான் நினைக்கிறேன்..." என்றான் ஜெகதீஷ் சிரித்தபடி.
"என்கிட்ட ஏன் அதை கேட்க மாட்டேங்கிற? நானும், சொல்லத்தான் நினைக்கிறேன்...." என்று பாடினான் நந்தகோபால்.
"பாட்டாவே படிச்சிட்டியா...?" என்று சிரித்தான் வாசுதேவன்.
தான் கொண்டு வந்த கோப்பை வாசுதேவனின் மேஜையின் மீது வைத்துவிட்டு,
"இந்த ஃபைல்ல நீ கையெழுத்து போடணும்" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றான் முகுந்தன்.
மாலை
வீட்டிற்கு செல்ல தயாரானாள் மீரா. அப்பொழுது அவளது அறைக்கு வந்தான் ஜெகதீஷ். முகுந்தன் தன்னை பார்க்கிறான் என்பதை அவன் நிச்சயப்படுத்திக் கொண்டான். மீராவின் அறையின் கண்ணாடி கதவை தட்டினான். சாதாரணமாய் புன்னகைத்தாள் மீரா.
"உங்களுக்கும் உங்க புருஷனுக்கும் நடுவுல என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியல மீரா. எனக்கு தெரியும், நான் கேட்டாலும் நீங்க அதை சொல்ல மாட்டீங்க. ஆனா உங்களை நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன். அப்படிப்பட்ட ஒரு மனுஷனோட நீங்க வாழ்ந்து தான் தீரனுமா? உங்களுக்குன்னு ஒரு வேல்யூ இல்லையா?" என்றான் ஜெகதீஷ்.
மீராவுக்கு தூக்கி வாரிபட்டது. இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இவன் யார் இதைப் பற்றி பேச?
"உங்களுக்கு உங்க புருஷன் கொடுக்க தவறின சந்தோஷத்தை, நான் கொடுக்க விரும்புகிறேன் மீரா"
"ஜெகதீஷ் ப்ளீஸ்... போதும்... நான் கல்யாணம் ஆனவ. உங்களுக்கு தப்பான நம்பிக்கையை கொடுக்க வேண்டாம்னு தான் எனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை நான் உங்ககிட்ட சொன்னேன்"
"அதைப்பத்தி நீங்க சொல்றீங்களா மீரா? நீங்க தான் தப்பான நம்பிக்கையோட இருக்கீங்க"
"ஜகா, ப்ளீஸ், இதை பத்தி நான் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பல. எக்ஸ்கியூஸ் மீ..."
தனது பையை எடுத்துக் கொண்டு, தன் அறையை விட்டு வெளியே வந்த அவள், அங்கு கோபமாய் நின்றிருந்த முகுந்தனை பார்த்து திடுக்கிட்டாள். தன்னில் எழுந்த பயத்தை விழுங்கினாள். அங்கிருந்து விடுவிடுவென நடந்தாள். அவளை பின்தொடர்ந்து முகுந்தன் செல்ல நினைத்த போது, வாசுதேவன் அவனை அழைத்தான்.
"முகுந்தன் இந்த ஃபைல்ல நீ ஒரு மிஸ்டேக் பண்ணி இருக்க"
"என்ன மிஸ்டேக்?"
"டேட்டை தப்பா போட்டிருக்க"
"நாளைக்கு காலையில் வந்து கரெக்ட் பண்ணி கொடுக்கிறேன்"
"இந்த ஃபைலை நம்ம இன்னைக்கே அனுப்பியாகணும்னு மறந்துட்டியா?"
தனது எரிச்சலை காட்டிக் கொள்ளாத முகுந்தன்,
"சரி என்கிட்ட கொடு" அந்த கோப்பை பெற்றுக்கொண்டு தன்னறைக்கு சென்றான்.
மீரா பேருந்தில் செல்பவள். அவள் அவனுக்காக காத்திருக்க மாட்டாள் என்று அவனுக்கு தெரியும். ஆம் அவன் எண்ணியது போலவே அவள் செய்தாள். ஆனால் முகுந்தன், அவள் எண்ணாததை செய்தான்.
.........
முகுந்தனுக்கு பத்து நிமிடம் முன்னதாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மீரா. அவளை பின்தொடர்ந்து வந்த முகுந்தன் தனது பையை கூட கீழே வைக்காமல், மீராவின் அறையின் கதவை தட்டினான். தன் அறையின் கதவை எப்பொழுதும் போல் தாளிடாமல் விட்டிருந்த மீரா, அதை திறந்தாள். அவள் எதற்காக அந்த அறையின் கதவை தாளிடுவதில்லை என்பது நாம் அறிந்தது தான். முகுந்தன் நிச்சயம் தன் அறைக்குள் நுழைய மாட்டான் என்று அவளுக்கு தெரியாதா?
"ஜெகதீஷ் உன்கிட்ட என்ன சொன்னான்?" என்றான்.
மீரா ஆடித்தான் போனாள். அவன் கேட்பது எதைப்பற்றி?
"நீங்க ப்ராஜெக்ட்டை பத்தி கேட்கிறீங்களா?"
"மண்ணாங்கட்டி ப்ராஜெக்ட்... அவன் உன் புருஷனைப் பத்தி உன் கிட்ட என்ன சொன்னான்?"
மீராவுக்குள் நடுக்கம் பிறந்தது. முகுந்தனுக்கு இந்த விஷயம் எப்படி தெரிந்தது?
"அவனை என்டர்டைன் பண்ணாத" என்றான் கோபமாய்.
"என்டர்டைன் பண்ணாதேன்னு சொன்னா என்ன அர்த்தம்?"
"அவன்கிட்ட பேசாதன்னு அர்த்தம்" என்று அவன் அங்கிருந்து செல்ல முயன்ற போது,
"ஏன்?" என்றாள் மீரா.
அவளை நோக்கி திரும்பினான் முகுந்தன்.
"எதுக்காக நான் அவர்கிட்ட பேசக்கூடாது?" என்றாள் அதற்கான விடையை அவனது கண்களில் தேடியபடி.
சில கணம் திகைத்து நின்ற முகுந்தன்,
"அவன் ப்ராஜெக்ட் மேனேஜர், நீ வாசுவோட பி ஏ... உன்னால அவன் கிட்ட பேசாம இருக்க முடியாது. அது எனக்கு தெரியும்..."
"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல" என்றாள்.
"என்கிட்ட இப்படி பேசாத மீரா. இதே மாதிரி தான், ஃபோட்டோ ஷுட் சமயத்திலையும் என்னோட பேச்சை நீ மீறிப் போன. அப்போ என்ன நடந்தது? மறுபடியும் அதே மாதிரி நடக்கணுமா? ஒவ்வொரு தடவையும் நான் வந்து உன்னை காப்பாத்திகிட்டு இருக்க முடியாது..."
அவனது பேச்சு வெட்டி,
"நீங்க ஒன்னும் என்னை வந்து காப்பாத்த வேண்டாம்..." என்றாள் விரக்தியாக.
"நான் அந்த அர்த்தத்துல சொல்லல"
"ஒவ்வொரு தடவையும் நீங்க என்ன அர்த்தத்துல பேசுறீங்கன்னு எனக்கு புரியல. நீங்க என்ன அர்த்தத்துல பேசுறீங்கன்னு உங்களுக்காவது புரிஞ்சிருக்கான்னு எனக்கு தெரியல" என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டாள், முகுந்தனை கலவரத்தில் ஆழ்த்தி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top