21 நடக்க விடமாட்டேன்
21 நடக்க விடமாட்டேன்
பெசன்ட் நகர் கடற்கரை
சக்திக்காக காத்திருந்தான் அர்னவ். அவனது பொறுமை இழந்த இருபத்தி ஐந்து நிமிட காத்திருப்பதற்குப் பிறகு, சக்தி வந்தான்.
"இன்னா வாத்தியாரே...!"
"சக்தி நீ எனக்காக ரொம்ப முக்கியமான ஒரு வேலை செய்யணும்"
"சொல்லு வாத்தியாரே, இன்னா வேணா செய்றேன்"
"உன் ஏரியாவுல இருக்கிற தியேட்டர்ல விக்னேஷை நீ எந்த பொண்ணு கூடயாவது பார்த்தா, அதை வீடியோ எடுத்து எனக்கு அனுப்பு"
ஏதோ தவறாக நடந்திருக்க வேண்டும் என்பது சக்திக்கு புரிந்தது. அது குஷி சம்பந்தப்பட்ட விஷயமாகத்தான் இருக்கும் என்று அவன் கணித்தான்..!
"நிச்சயமா அனுப்புறேன் வாத்தியாரே, ஆனா, நான் அவனைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே..."
"ஏன், இப்போ நீ அந்த ஏரியாவில் இல்லையா?"
"நான் அதே ஏரியாவுல தான் இருக்கேன். அதே தியேட்டர் முன்னாடி தான் உக்காந்து இருப்பேன். என் தோஸ்துங்க கூட அவனைப் பத்தி கேட்டானுங்க. அவன் இப்பல்லாம் அங்க வர்றதே இல்ல. அவன் நல்லவனா மாறிட்டான்னு நினைக்கிறேன்"
"இல்ல... அவனெல்லாம் மாறவே மாட்டான்" என்றான் எரிச்சலாக.
"அவன் மாறினா நல்லது தானே? அதுல என்ன தப்பு இருக்கு?"
"அவன் மாறிட்டதா சொல்லி எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்கான்"
"ஆனா உனக்கு தான் அவனைப் பத்தி தெரியுமே... அப்புறம் நீ ஏன் கவலைப்படற? எப்படியும் நீ அவனை நம்ப போறதில்ல இல்ல?
"என்னை அவனால ஏமாத்த முடியாது. ஆனா எல்லாரும் அவனை கண்மூடித்தனமா நம்புறாங்க"
"எல்லாருமா? நீ யாரை சொல்ற பா?"
"வேற யாரு? குஷியும் அவளோட அப்பா அம்மாவும் தான்"
"ஆமாம்பா, நான் கூட பார்த்தேன், அந்த பொண்ணு அவனை அவங்க அப்பாகிட்ட கூட்டிகினு போய் பேசிகிட்டு இருந்தது. அவன்கிட்ட அந்த பொண்ணு ஜாக்கிரதையா இருக்கும்னு நினைக்கிறேன்..."
"அவ ஜாக்கிரதையா இல்ல... அவ புத்தி மழுங்கி போச்சு"
"அய்யய்யோ... நெஜமாவா சொல்ற? மத்த பொண்ணுங்கள மாதிரியே அவன் கூட அந்த பொண்ணு சினிமாவுக்கு போக ஒத்துகிச்சா?"
"அதுக்கும் மேல... அவனை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா"
"என்ன்னனது??? நீ உண்மையா தான் சொல்றியா வாத்தியாரே?" என்றான் அதிர்ச்சியாக.
"சம்பந்தம் பேசி முடிக்க அவங்க நாளைக்கு வராங்க"
"அந்த பொண்ணுக்கு அவனைப் பத்தி தெரியாதா?"
"குஷிக்காகவே அவன் மாறிட்டதா எல்லாரையும் நம்ப வச்சு சமாளிச்சுட்டான்"
"ஒருவேளை, அது உண்மையா கூட இருக்கலாம்ல? அவன் அந்த பொண்ணுகிட்ட ரொம்ப பவ்யமா பேசிக்கிட்டு இருந்ததை பார்த்தேனே!"
"கிடையாது... அவன் நிச்சயமா மாறியிருக்க மாட்டான். நான் இந்த கல்யாணத்தை நிச்சயம் நடக்க விட மாட்டேன்" என்றான் கோபக்கனலாய்...!
"இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டியா? இல்ல வேற யாருமே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க விட மாட்டியா?" என்றான் புன்னகையுடன்.
தான் அகப்பட்டுக் கொண்டதை உணர்ந்தான் அர்னவ். ஆனால் ஏனோ அவனுக்கு இந்த முறை அதை மறுத்து பேச தோன்றவில்லை. சக்தி கூறியது உண்மை தான்... அவனால் அவள் யாரையும் மணந்து கொள்ள விட்டு விட முடியாது.
"உன் மனசுல இருக்குறத அந்த பொண்ணுகிட்ட சொல்றதுல என்ன பிரச்சனை வாத்தியாரே? இதை மறைச்சி வச்சி நீ இன்னா சாதிக்க போற? அந்த பொண்ணு மேல பாசத்தை வச்சிட்டு அந்த பொண்ணு கிட்டயே அதை சொல்லாம இருந்தா அதனால என்ன லாபம் சொல்லு? அந்த பொண்ணுக்கு தானே அது தெரியணும்...? இப்போ பாரு, அது ஒரு பொறம்போக்கை கல்யாணம் பண்ணிக்க போவுது..."
"எங்களுக்குள்ள ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்" என்றான் கடலை பார்த்தபடி.
"அப்படின்னா மொதல்ல அத்த கிளியர் பண்ணு..."
"நான் ட்ரை பண்ணேன். ஆனா நான் சொல்றதை கேட்க கூட அவ தயாரா இல்ல. அது தான் அவ பிரச்சனையே. நான் பேசணும்னு நினைப்பா, ஆனா நான் பேச போனா, நான் சொல்றதை கேட்க மாட்டா. அப்புறம் நான் எப்படி அவளுக்கு சொல்லி புரிய வைக்கிறது?"
"நான் வேணா சிஸ்டர்கிட்ட பேசட்டுமா?"
"வேணாம்... இது அதுக்கான நேரம் இல்ல. நடக்கப் போற நான்சென்சை நான் முதல்ல நிறுத்தணும். அதை முதல்ல முடிக்கிறேன்"
"உன்னால முடியலைன்னா சொல்லு வாத்தியாரே... அவன் மேட்டரை நான் முடிச்சிடுறேன். அவன் பகுலை பிகில் ஊதி, செவுலை அவுல் தின்ன வைக்கிறேன்...! நம்ம புள்ளிங்கோ அவனை ஆள் அட்ரஸ் இல்லாம செஞ்சிட்டுவானுங்கோ"
"வேண்டாம். இதை நான் பார்த்துக்கிறேன்"
சக்தியிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினான் அர்னவ். அவன் இந்த முறை எதுவும் மறுத்து பேசாததை எண்ணி சந்தோஷப்பட்டான் சக்தி. பார்க்கலாம்... ஒருவேளை, அர்னவ் தன் முயற்சியில் தோற்றால், அவன் தான் இருக்கவே இருக்கிறானே...! என்று எண்ணினான் சக்தி.
சக்தி கூறிய விஷயம் அர்னவ்க்கு ஏமாற்றத்தை அளித்தது. விக்னேஷை அந்த குறிப்பிட்ட திரையரங்கில் இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை என்று சக்தி கூறினானே. குஷியின் குடும்பத்தாரை நம்ப வைக்க அவன் வேண்டுமென்றே அங்கு செல்வதை தவிர்த்திருக்க வேண்டும். இந்த திருமணத்தை அவன் எப்படி தடுக்கப் போகிறான்? எப்படியும் அதை செய்தே தீர வேண்டும்.
தனது வண்டியை கிளப்பிய அர்னவ், அந்த கடற்கரையில் அமைந்திருந்த அஷ்டலட்சுமி கோவிலுக்குள் ஷஷியும் கரிமாவும் செல்வதை பார்த்தான். குஷி எங்கே? அவளது பெற்றோருடன் அவள் வரவில்லை என்றால், அவள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும். தனது வண்டியின் வேகத்தை கூட்டி, வீட்டை நோக்கி விரைந்தான். இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டு விட அவன் தயாராக இல்லை. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு தெரிய வேண்டும்.
கோவிலுக்குள் நுழைவதற்கு முன், கரிமாவை தடுத்து நிறுத்திய ஷஷி, அவரை அங்கு அமரச் செய்து, தானும் அமர்ந்து கொண்டார். அவரை கேள்விக்குறியுடன் பார்த்தார் கரிமா.
"நம்ம ஏதாவது தப்பு செய்றோமா கரிமா?"
"நானும் கொஞ்சம் பதட்டமா தான் இருந்தேன். ஆனா, இந்த விஷயத்த கேள்விப்பட்டு அர்னவ் எவ்வளவு கோபப்பட்டான்னு தெரிஞ்ச போது, நம்ம சரியான வழியில தான் போறோம்னு எனக்கு தோணுது"
"ஆனா விக்னேஷ் நல்லவன் இல்ல"
"அது தான் அர்னவ் கோபத்துக்கு காரணம். அவன் இந்த கல்யாணத்தை நிறுத்த நிச்சயம் ஏதாவது செய்வான்... நம்ம எதிர்பார்த்ததை விட வேகமாவே! நான் சொல்றது நடக்குதா இல்லையா பாருங்க"
"நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நம்பிக்கையோடு இருக்கிறத பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு. அந்த தைரியம் ஏன் அப்பாக்களுக்கு வரமாட்டேங்குது? எங்களால உங்க அளவுக்கு தைரியமாக இருக்க முடியலன்னு ஒத்துக்கிட்டு தான் ஆகணும். எல்லாம் நல்லபடியாக நடந்தா சரி"
"அப்பாங்க எல்லாரும் தன் கண்ணுக்கு முன்னாடி நடக்கிறதை அப்படியே நம்புறீங்க. ஆனா நாங்க அதையும் மீறி அவங்க மனசுல என்ன இருக்குன்னு பார்க்குறோம்"
"நான் நேவியை விட்டு ரிட்டயர் ஆகறதுக்கு இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு. அரவிந்தனை விட்டா நமக்கு யாருமே இல்ல. அதுக்காக தான் அவனோடவே செட்டில் ஆகணும்னு, நான் சென்னைக்கு தான் டிரான்ஸ்ஃபர் வேணும்னு கேட்டு வாங்கிக்கிட்டு வந்தேன். அவனோட வாழ்க்கையில நானும் ஒரு அங்கமா இருக்கணும்னு விரும்புறேன். அவ்வளவு தான் எனக்கு வேணும்"
"நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க. இந்த பிரச்சனை எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான். சீக்கிரமே எல்லாம் சரியாகும். ரத்னா எல்லாத்தையும் பாத்துக்குவா. நிச்சயம் அவ குஷியை விட்டுடவே மாட்டா. ஏன்னா அவளுக்கு தெரியும், குஷியைத் தவிர வேற யாரையுமே அர்னவ் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்"
"நீ நிஜமாதான் சொல்றியா?"
"பின்ன? அவ விக்னேஷை கல்யாணம் பண்ணிக்க போறான்னு தெரிஞ்சதுக்கு பிறகு அவன் வீட்ல என்ன ஆட்டம் ஆடினான்னு அரவிந்த் அண்ணன் உங்ககிட்ட சொன்னாரே"
"அது தான் எனக்கு கொஞ்சம் தைரியத்தை தந்திருக்கு"
"எல்லாம் நல்லபடியா நடக்கும். வாங்க கோவிலுக்கு போகலாம்" என்று எழுந்து நின்ற கரிமாவை பின்தொடர்ந்தார் ஷஷி
..........
குஷியின் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் அர்னவ். முன் கதவு தாளிடப்படாமல் இருந்தது. அனுமதி பெறுவதைப் பற்றி கவலைப்படாமல், உள்ளே நுழைந்தான் அவன். நேராக மாடிக்கு சென்றான். சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, குஷி எதையோ ஆழமாய் யோசித்து கொண்டிருந்தாள். அவனை அங்கு பார்த்த அவள் திகைத்தாள். அவன் எப்படி உள்ளே வந்தான்? அவளது பெற்றோர் கதவை ஒழுங்காக சாத்தாமல் சென்று விட்டிருக்க வேண்டும்...
அவன் அவளை நோக்கி கோபமாய் முன்னேறி வருவதை பார்த்த அவள், திகிலுடன் பின்னோக்கி நகர்ந்தாள். அவள் மேற்கையை பிடித்து, தடுத்து நிறுத்தி, அவளை மேலும் திகிலடையச் செய்தான்.
"நீ என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? ஹாங்?" கோபத்தில் குரலை உயர்த்தினான்.
அவன் இறுக பிடித்திருந்த பிடி அவளுக்கு வலியை தந்தது. ஆனாலும், ஏனோ அவன் பிடியிலிருந்து வெளிவர வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. அவனது கோபத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த காதல் தான் அதற்கு காரணம் என்று அவளுக்கு தெரியும்.
"உன்னை பத்தி நான் எதுவும் நினைக்கல. நான் ஏன் உன்னை பத்தி நினைக்கணும்? நீ யாரு எனக்கு?" என்றாள், அப்பொழுதாவது அவன் அவளுக்கு யாரென்று அவன் கூறுவானா என்று எதிர்பார்த்து.
"குஷி, நீ என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. ஜஸ்ட் ஸ்டாப் இட் ஓகே?"
"நீ எதைப் பத்தி பேசுறேன்னு கொஞ்சம் தெளிவா சொல்றியா?"
கோபத்தில் பல்லை கடித்து கண்களை மூடினான்.
"விக்னேஷ் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஏன் நீ சொல்லல?"
"ஏன் சொல்லணும்?" என்றாள் அமைதியாய்.
"உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? அவனைப் பத்தி உனக்கு தெரியாதா?"
"அவனைப் பத்தின எல்லா உண்மையையும் அவங்க அப்பா எங்க அப்பாகிட்ட சொல்லிட்டாரு. அதைக் கேட்டு எங்க அப்பா ரொம்ப பெருமை பட்டாரு. அவர் பொண்ணு ஒருத்தவனுடைய வாழ்க்கையை மாத்தியிருக்கா இல்லையா?"
"அவன் மாற மாட்டான்... எப்பவுமே மாற மாட்டான். அவன் ஏதோ ஒரு இன்டென்ஷனோட தான் இதை செய்றான். அவனை நம்பாத... இல்லன்னா, நீ நிச்சயம் வருத்தப்படுவ"
"நான் வருத்தப்பட்டா உனக்கு என்ன? என் வருத்தத்தை பத்தி நீ எப்பவாவது கவலைப்பட்டிருக்கியா? என்னைப் பத்தி உனக்கு கவலை இருக்கா?" என்றாள் கோபமாய்.
"ஏன் இல்ல? உன்னை பத்தி எனக்கு கவலை இல்லையா?" என்றான் அவனும் அதே கோபத்தோடு.
"ஏன்? என்னைப் பத்தி நீ ஏன் கவலைப்படுற?"
"ஏன்னா, நான்..." மேலே எதுவும் கூறாமல் திகைத்து நின்றான்.
அவன் கண்களில் அவள் எதையோ தேடினாள். அவளை பற்றியிருந்த அவனது பிடி தளர்ந்தது. அவள் கரத்தில் அவனது கைரேகைகள் பதிந்திருந்ததை கவனித்த அவன், அவளை வேதனையோடு பார்த்தான்.
"சத்தியமா சொல்றேன், உன்னோட மௌனம் கொடுக்கிற வலியை இந்த காயம் எனக்கு கொடுக்கல" என்றாள் கலங்கிய கண்களோடு.
அவளுக்கு எதிர் திசையில் திரும்பி நின்றான். அவன் கரத்தைப் பற்றிய அவள்,
"நீ என் கல்யாணத்துல ஒரு பார்ட்டா இருப்பேன்னு நம்புறேன்" என்றாள்.
அது நிச்சயம் அவனது ஈகோவை தொட்டுப் பார்த்தது. ஆனால் அதை அவளிடம் காட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை. அதை எந்த விதத்தில் காட்ட வேண்டும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். தன்னை பிடித்திருந்த அவளது கையை விடுவித்துவிட்டு அங்கிருந்து நடந்தான். மென்மையாய் புன்னகைத்த குஷி, அவனால் தன் கரத்தில் ஏற்பட்டிருந்த காயத்தை முத்தமிட்டு சிரித்தாள்.
ரத்னா மஹால்
காயம் பட்ட சிங்கத்தை போல் தன் அறையில் உலவிக் கொண்டிருந்தான் அர்னவ். இந்தப் பெண் தனது எல்லையை மீறிக் கொண்டிருக்கிறாள். அது அவளை எங்கு அழைத்துச் செல்ல போகிறது என்று புரியவில்லை. தனது கைபேசியை எடுத்த அவன், வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தான்.
*எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும்
சுதந்திரம் உனக்கு இருக்கிறது... ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து தப்பிக்கும் சுதந்திரம் உனக்கு இருக்காது...*
அதற்கு குஷியிடமிருந்து என்ன பதில் வருகிறது என்று அவன் காத்திருந்தான். ஆனால் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவள் பதில் அளிக்கவில்லை. ஆனால் அதை பார்த்தவர்களின் பட்டியலில் அவள் பெயர் இருந்தது அவள் பெயர் மட்டும் தான் இருந்தது...! அவன் ஸ்டேட்டஸ் வைப்பதே அவள் ஒருத்திக்காக தானே...! கோபத்தோடு மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் வைத்தான்.
*தவறான ஒருவனை
மணப்பதை விட
காத்திருப்பது
எவ்வளவோ மேல்*
இந்த முறை அவனுக்கு பதில் கிடைத்தது. அது அவனது ரத்தத்தை கொதிக்க செய்தது.
*வெறும் நண்பனாய்
இருக்கும் ஒருவன்,
தன் வரம்புக்கு மீறிய விஷயங்களில்
தலையிடுவது சரியல்ல*
தன் கைபேசியை கோபத்துடன் கட்டிலின் மீது விட்டெறிந்தான். இந்தப் பெண் அகம்பாவம் பிடித்தவளாய் மாறிவிட்டிருக்கிறாள். இப்படியெல்லாம் முயற்சிப்பது எந்த விதத்திலும் பலன் அளிக்காது. இதற்கு ஒரேடியாய் முடிவு கட்டும் ஒரு விஷயத்தை அவன் செய்தாக வேண்டும்.
கட்டிலில் அமர்ந்து யோசித்தபடி தன் நெற்றியை தேத்தான். அவன் புத்தியில் பொறி பறந்தது. அந்த பொறி கூறியது, அவன் விக்னேஷை மொத்தமாய் எரிக்கும் ஒரே வழி அது தான் என்று.
குஷிக்கு ஒரு லிங்கை அனுப்பினான். அவள் அதனுள் நுழைந்தாள். அதில் ஏதோ வெல்ல நிவாரண நிதி என்று இருந்ததை பார்த்து முகம் சுருக்கினாள். அதை தனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு ஷேர் செய்துவிட்டு அதை மறந்தாள். அர்னவ் நிம்மதி அடைந்தான். அந்த லிங்க் அவளது கைபேசியை ஹேக் செய்வதற்காக அவன் அனுப்பியது. அவளது கைபேசி அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அவளது கைபேசியில் இருந்து அதே லிங்கை விக்னேஷுக்கு அனுப்பினான் அவன். அடுத்த சில நொடிகளில் அதை திறந்து உள் நுழைந்தான் விக்னேஷ். அவன் சில லட்சத்தை, வெள்ள நிவாரண நிதியாய் அளித்ததாய் அவளுக்கு பதில் அனுப்பினான். குஷி அதை பார்ப்பதற்கு முன், அதை டெலிட் செய்தான் அர்னவ். அடுத்து தான் செய்ய வேண்டிய காரியத்திற்கு தயாரானான். இப்பொழுது விக்னேஷின் கைபேசியும் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top