19 வேண்டுமென்றே...
19 வேண்டுமென்றே...
லாவண்யாவையும் நந்தாவையும் அழைத்துச் சென்று, கல்லூரி விடுதியில் முடிக்க வேண்டிய சம்பிரதாயங்களை முடித்தார் அரவிந்தன். அவளது கல்லூரி விடுதியின் அறையை காலி செய்து கொண்டு, லாவண்யாவை தங்கள் இல்லத்திற்கு நிரந்தரமாய் அழைத்து வந்தார் அவர். அதற்காக, அவர்களது திருமண பதிவு சான்றிதழை அவர் சமர்ப்பித்தார்.
லாவண்யாவின் பொருட்களை, அவளது அறையில் சீரமைத்து கொடுக்க, அவளுக்கு உதவுவதற்காக வந்தாள் குஷி.
"பாவம் அர்ச்சனா... இனிமே அவ ஹாஸ்டல் ரூம்ல தனியா இருப்பா" என்றாள் லாவண்யா வருத்தத்துடன்.
"பாவம் நந்தா, அவனும் அவனுடைய ரூம்ல தனியா இருப்பான்" என்றாள் குஷி.
"உனக்கு நந்தா மேல அவ்வளவு கரிசனம் இருந்தா, உன்னோட அல்லவ்வை கல்யாணத்துக்கு சம்மதிக்க வை" என்றாள்.
"அல்லவ்வாவது கல்யாணத்துக்கு சம்மதிக்கிறதாவது...! நீங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருக்க வாய்ப்பே இல்ல"
விளையாட்டாக அவள் முதுகில் ஒரு அடி போட்டாள் லாவண்யா.
அப்பொழுது அவளுக்கு எல்லாம் வசதியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள அங்கு வந்தார் ரத்னா.
"எல்லாம் கம்ஃபர்டபிலா இருக்கா?"
"ஹாஸ்டல் ரூமை விட பல மடங்கு கம்ஃபர்ட்டபுளா இருக்கு மா...!"
"அதுவும் ரத்னா ஆன்ட்டியோட சூப்பர் சமையலோட... " என்றாள் குஷி.
"கரெக்ட்" என்றாள் லாவண்யா.
"லாவி, நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத. உன் குடும்பத்தை பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றார் ரத்னா.
"இதுல தயங்க என்ன மா இருக்கு? தாராளமா தெரிஞ்சுக்கலாம். நான் டென்த் படிச்சுக்கிட்டு இருந்தப்போ எங்க அம்மா அப்பா இறந்துட்டாங்க. எங்க அம்மாவோட தம்பி எனக்கு கார்டியன் ஆனாரு. என்னோட சேர்த்து, என் சொத்தோட பொறுப்பும் அவர் கைக்கு போச்சு. ஊர்க்காரங்ககிட்ட கிடைச்ச புது மரியாதை, அவரை அப்படியே தலைகீழா மாத்திடுச்சு. எனக்கு கல்யாணம் ஆனா, எல்லாம் அவர் கையைவிட்டு போயிடும்னு அவர் நினைச்சாரு. அதனால அவர் கட்டுப்பாட்டுல இருக்கிற ஒருத்தனை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணாரு"
"உங்க குடும்பத்துல அவரை தவிர வேற யாரும் இல்லையா?"
"மாமாவோட வைஃப் இருக்காங்க...! மாமி ரொம்ப நல்லவங்க. என்னை அவங்க சொந்த தங்கச்சி மாதிரி பாத்துக்குவாங்க. நான் படிக்கணும்னு கேட்டபோது, அவங்க தான் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க"
"இந்த கல்யாணத்தை பொறுத்தவரை அவங்களோட நிலைப்பாடு என்ன?"
"இன்னைக்கு காலையில அவங்க தான் எங்க மாமாவுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சுன்னு என்னை வார்ன் பண்ணாங்க. அதனால தான், எங்க மாமா ஹாஸ்டலுக்கு வர்றதுக்கு முன்னாடி என்னால அங்கிருந்து கிளம்ப முடிஞ்சது"
"கடவுள் புண்ணியத்துல, உங்க குடும்பத்துல உனக்குன்னு ஒருத்தர் இருக்காங்களே...!"
"உங்களுக்கு எங்க மேல வருத்தம் இல்லையே?"
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ஒரு அம்மாவா என் பிள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் நினைக்கிறேன். ஆனாலும் உங்க மேல எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஏன்னா, கல்யாணத்தைப் பத்தி அர்னவ்வுடைய நிலைப்பாடு எனக்கு கவலையை தருது. ஆனா அதே நேரம், இப்படி ஏதாவது நடந்தால் தான் அவனும் தன்னோட கல்யாணத்தை பத்தி நினைப்பான். என்னோட பிள்ளைங்க சுயநலம் இல்லாம இருக்கிறதை பார்க்கும்போது, எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. ஒரு அம்மாவுக்கு இதைவிட வேற என்ன வேணும்?"
"எங்களை புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அம்மா"
"பாக்கலாம், அவனோட பொண்டாட்டி எங்கிருந்து வரப் போறான்னு..." என்றார் குஷியை பார்த்தபடி.
அதை கேட்டு திடுக்கிட்ட குஷி, தன்னை சமாளித்துக் கொண்டு,
"அந்த பாவப்பட்ட பொண்ணு யாரோ... பாவம்..." என்றாள்.
"அது யாருன்னு எல்லாருக்கும் சீக்கிரமாகவே தெரிஞ்சிடும். நான் சொல்றது சரி தானே அம்மா?" என்றாள் லாவண்யா சிரித்தபடி.
"பின்ன... கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்துதானே ஆகணும்?"
அவர்களது பேச்சினால் தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது போல் பாசாங்கு செய்த குஷி, எதையோ யோசித்து,
"நான் கிளம்புறேன்" என்றாள்
"என்ன ஆச்சு?" என்றாள் லாவண்யா.
"எனக்கு தூக்கம் வருது. நான் காலையில இருந்து இங்கேயும் அங்கேயும் அலைஞ்சுகிட்டே இருக்கேன்"
"சாப்பிட்டு போய் படுத்துடு... அம்மாவையும் கூப்பிடு" என்றார் ரத்னா.
"இல்ல ஆன்ட்டி. நான் சாப்பிடுற மூட்ல இல்ல"
அறையை விட்டு வெளியே வந்தவள், வரவேற்பறையில் அமர்ந்து நந்தா டிவி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள்.
"மாப்பிள்ளை என்ன செய்றாரு?"
"டிவி பாக்குறாரு"
"இந்த உலகத்திலேயே, கல்யாணமான அன்னைக்கு, கல்யாண பொண்ணை பாக்காம டிவி பாத்த மாப்பிள்ளை நீ ஒருத்தனா தான் இருப்ப..."
அவன் வெட்கப்பட்டதை பார்த்த அவள், புன்னகைத்தாள். ஒரு கூரிய பார்வை அவள் மீது இருப்பதை உணர்ந்த அவள், அந்த திசையை நோக்கி திரும்பினாள். சுவற்றில் சாய்ந்த படி நின்றிருந்த அர்னவ், தன் பார்வையை கைபேசியின் பக்கம் திருப்பிக் கொண்டான்.
"மூஞ்சியை பாரு... சிடு மூஞ்சி... இவனாவது கல்யாணம் பண்ணிக்கிறதாவது..." முணுமுணுத்தாள் அவள்.
"நீ ஏதாவது சொன்னியா?" என்றான் நந்தா.
"ஒன்னும் இல்ல. நாளைக்கு பாக்கலாம்"
"குட் நைட்"
"குட் நைட்... ஸ்வீவீவீட் ட்ரீம்ஸ்..." என்று அவள் சிரிக்க, தன் தலையை சொறிந்தான் நந்தா.
மறுநாள்
குஷி ஷாப்பிங் செல்லவில்லை. அர்னவ்வும் தான். அவன் எப்பொழுதுமே ஷாப்பிங் செல்வதை விரும்பியது இல்லை. அது அவனைப் பொறுத்தவரை எரிச்சல் தரும் விஷயம். ப்ராஜெக்ட் பற்றி விவாதம் செய்ய அஞ்சலி வர சொல்லி இருந்ததால், குஷி கல்லூரிக்கு சென்றாள்.
லாவண்யாவும் நந்தாவும் இளஞ்சிவப்பு நிற புடவையை தேர்ந்தெடுத்தார்கள். அது ரத்னாவிற்கும் மிகவும் பிடித்திருந்தது. அவர் குஷிக்காகவும் ஒரு புடவை வாங்கினார். கிண்டலாய் சிரித்தார் கரிமா.
"குஷிக்கு புடவையா?"
"ஏன்?"
"அவளுக்கு புடவை பிடிக்காது"
"இதை நான் அவளுக்காக வாங்கி கொடுத்தேன்னு சொல்லு. அவ நிச்சயம் கட்டிக்குவா"
"நீயாச்சு அவளாச்சு..."
ரத்னா கூறியது போலவே, அந்த புடவை குஷிக்கு மிகவும் பிடித்திருந்தது. அது கரிமாவை வியப்படையச் செய்தது.
"நீ நெஜமா தான் சொல்றியா குஷி? நீ இந்த புடவையை கட்டிக்க போறியா?"
"ஹாங்... ஏன்மா உங்களுக்கு பிடிக்கலையா?"
"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா நீ புடவை கட்டினதே இல்லையே...?"
"இதுக்கு முன்னாடி புடவை கட்ட எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கல. நீங்களும் என்னை கட்ட சொல்லி சொன்னதில்ல"
"உனக்கு புடவை பிடிக்காதுன்னு நெனச்சேன்"
"இந்தப் புடவை எனக்கு பிடிச்சிருக்கு" சிரித்த படி அங்கிருந்து சென்றாள் குஷி, கரிமாவிற்கு வியப்பளித்து.
திருமண வரவேற்பு நாள்
அந்த பார்ட்டி ஹால் வண்ண விளக்குகளால் மிளிர்ந்தது. லாவண்யாவும் நந்தாவும் மேடையில் நின்றார்கள். அன்று அவர்கள் தானே நாயகன், நாயகி...!
ஆனால் நமது நாயகனின் விழிகளை கவர்ந்தது வேறு ஒன்று... சந்தேகமில்லாமல் அது நமது நாயகி தான்...! ரத்னா வாங்கி கொடுத்த டிசைனர் புடவையில் ஆர்ப்பாட்டமாய் இருந்தாள் அவள்.
அவளைப் பார்த்த அர்னவ் மூச்சு விடவும் மறந்தான். மயக்கும் அழகில் தன் மனதை பறிகொடுத்தான். நேற்று வரை அவள் பார்வைக்கு வேறு மாதிரியாக இருந்தாள். ஆனால் இன்று, அவன் தன்னிலையை மறக்க வைக்கும் விதத்தில் இருந்தாள். அவள் தேவதை போல் இருந்தால் என்று கூற முடியாது. ஏனென்றால் தேவதைகள் இவ்வளவு அழகாக இருப்பார்கள் என்று அவன் நம்பவில்லை. வானத்து நிலவு சேலை கட்டி கொண்டு வந்தது போல் இருந்தது அவனுக்கு. அவள் செல்லும் இடமெல்லாம் அவனது கண்கள் பின்தொடர்ந்தன.
மந்திரத்தால் கட்டுண்டவன் போல காணப்பட்ட அந்த அர்னவ்வை எதிர்கொள்ள திணறினாள் குஷி. அவளை எரித்து விடும் அவனது தகிக்கும் பார்வை, அவளை திடுக்குற செய்தது. அவனை அவள் இப்படி பார்த்ததே இல்லை. அவனது கண்கள் ஆயிரம் பேசின. இதை செய்ய அவனால் முடிகிறது என்றால், வாயை திறந்து கூறுவதில் என்ன பிரச்சனை அவனுக்கு?
ஷியாமுடன் உள்ளே நுழைந்த அஞ்சலியை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினாள் குஷி. அவர்களை வரவேற்று மேடையை நோக்கி அழைத்துச் சென்றாள். அப்பொழுது அர்னவ் அவர்களை நோக்கி வருவதை பார்த்த ஷியாம், அஞ்சலியின் கையை பிடித்து நிறுத்தினான். அர்னவ்வை பார்த்து புன்னகைத்தாள் அஞ்சலி. வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் அவனை, தழுவிக் கொண்டான் ஷியாம். அவனையும் தங்களுடன் மேடையை நோக்கி இழுத்துச் சென்றான் ஷியாம், அவன் பேச்சுக்கு காது கொடுக்காமல்.
ஷியாமும் அஞ்சலியும் மணமக்களை வாழ்த்தினார்கள். அவர்களை புகைப்படம் எடுக்க, நேராய் நிற்கச் சொல்லி கேட்டுக்கொண்டார் புகைப்படக்காரர். லாவண்யாவின் பக்கத்தில் நின்று கொண்டாள் குஷி. அஞ்சலி மற்றும் ஷியாமுடன் நந்தாவின் பக்கத்தில் நின்றான் அர்னவ். ஆனால் புகைப்படக் கலைஞருக்கு அது சமமாய் இல்லாததாய் தோன்றியது. அதனால், அர்னவ்வை குஷியின் பக்கத்தில் வந்து நிற்கும்படி கேட்டுக் கொண்டார். எந்த மறுப்பும் கூறாமலும், காலதாமதம் செய்யாமலும் அவள் அருகில் வந்து நின்றான் அர்னவ். அது அனைவருக்கும் வியப்பளித்தது.
"பர்ஃபெக்ட்... ஸ்மைல்..." என்றார் புகைப்படக் கலைஞர்.
அவர்கள் புன்னகைத்தார்கள்... நேற்றைய, இன்றைய, மற்றும் நாளைய தம்பதிகளுடன் அந்த நொடி புகைப்படமாய் மாறியது.
அஞ்சலியையும் ஷியாமையும் சாப்பிட அழைத்துச் சென்றாள் குஷி. குஷியையும் தங்களுடன் சாப்பிடச் சொன்னாள் அஞ்சலி. இன்னும் அவர்கள் குடும்பத்தில் யாரும் சாப்பிடாததால், அதை அன்பாய் மறுத்துவிட்டாள் குஷி. அங்கு பந்தி உபசரித்துக் கொண்டிருந்தான் சக்தி. குஷியை பார்த்தவுடன் அவளிடம் வந்தான்.
"ஏதாவது வேணுமா சிஸ்டர்?"
"இவங்க ரெண்டு பேரும் எங்க ப்ரொஃபசர்ஸ். அவங்களை கொஞ்சம் ஸ்பெஷலா கவனிங்க"
"கவனிச்சிட்டா போகுது"
குஷி எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அவர்களை கவனித்துக் கொண்டான் சக்தி. அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, அவர்களை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள் குஷி. அங்கு அவளை கெஞ்சலாய் பார்த்தபடி நின்றிருந்தான் விக்னேஷ். அவனுக்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல் அவனை கடந்து சென்றாள் அவள்.
"குஷி, ஒரு நிமிஷம் ப்ளீஸ்..."
அதைக் கேட்டும் நிற்காமல், மேலும் ஓர் அடி எடுத்து வைத்து அவள் அங்கிருந்து செல்ல முயன்றாள். ஆனால் அவன் அவளுக்கு முன்னால் வந்து கெஞ்சினான்.
"ப்ளீஸ் குஷி. ஐ அம் ரியலி சாரி. நீ என்னை பிளாக் பண்ணப்போ, என்னால அதை தாங்கிக்க முடியல. ஏன்னா, நான் உன் மேல அவ்வளவு பிரியம் வச்சிருக்கேன். ஐ லவ் யூ சோ மச்"
அதைக் கேட்ட குஷி அதிர்ந்தாள். பேச்சிழந்து அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். விக்னேஷ் அவளிடம் பேச முயல்வதை பார்த்தான் சக்தி. சக்திக்கு விக்னேஷ் வெகுவாய் பரிச்சயமானவன். குஷியை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினைத்தான் சக்தி. ஆனால் ஒரு மூன்றாவது மனிதனாய் இருந்து கொண்டு அவளிடம் எப்படி அவன் உரிமை பாராட்டுவது? அவர்களைப் பார்த்தபடி சற்று தொலைவில் நின்றான். ஏதாவது விக்னேஷ் தவறாய் நடக்க முயன்றால், அவனது எலும்பை எண்ணி விடுவது என்று தீர்மானித்தான் சக்தி.
"குஷி, சத்தியமா என் காதலை எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியாம தான் நான் தப்பு செஞ்சுட்டேன். நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு நீ என்னை விட்டு விலகிப்போன போது தான் எனக்கு தெரிஞ்சது. என்னை நம்பு. உனக்கு முன்னாடி நின்னுகிட்டு இருக்கிற இந்த விக்னேஷ், ஒரு புது மனுஷன். உனக்கு என் மேல நம்பிக்கை இல்லனா, நீ என்னை எப்படி வேணும்னாலும் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம். நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன்... சத்தியமா செய்வேன்"
அவனது பேச்சை கேட்ட குஷிக்கு எரிச்சல் தாங்கவில்லை. அவள் ஏற்கனவே வேறொருவன் மீது பயங்கர கடுப்பில் இருந்தாள். போதாக்குறைக்கு இந்த முட்டாள் வேறு அவளை கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறான். எவ்வளவு தைரியம் இருந்தால், அனைவரும் பார்க்கக்கூடிய முகநூலில் அவளைப் பற்றி தவறாய் கமெண்ட் செய்திருப்பான்? அது போதாது என்று அவளிடம் தவறாக நடக்க வேறு முயன்றான். இவ்வளவையும் செய்துவிட்டு, இப்பொழுது அப்பாவி போல் பேசுகிறான். காலில் இருந்த செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
அவனை பிடி பிடி என பிடிப்பது என்று அவள் தீர்மானித்த போது, அர்னவ் அவர்களை நோக்கி கோபத்துடன் வருவதை கண்டாள். அடுத்து என்ன நடக்கும் என்று அவளுக்கு தெரியும். விக்னேஷை நிச்சயம் அர்னவ் அடித்து துவைத்தெடுப்பான். அவன் முகத்தைப் பார்த்த உடனேயே யாராக இருந்தாலும் சுலபமாய் அதை கணித்து விடுவார்கள். ஆனால் விக்னேஷை மறுபடியும் அடிப்பதால் என்ன பலன்? அதை ஏன் அவள் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?
சட்டென்று தனது முகபாவத்தை மாற்றி, விக்னேஷ் பார்த்து புன்னகை புரிந்தாள். அவள் புன்னகையை பார்த்த அர்னவ்வின் நடையின் வேகம் தளர்ந்தது. கோபத்தில் அவன் முஷ்டியை மடக்கினான். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவனுக்கு கேட்கவில்லை, அவர்கள் சற்று தொலைவில் இருந்ததால்...!
அவ்வளவு நேரம் அவர்களை கவனித்துக் கொண்டிருந்த சக்தி, அர்னவ்வை பார்த்தவுடன் சட்டென்று மாறிய குஷியின் முகபாவத்தை கண்டு வியப்படைந்தான். விக்னேஷிடம் பேசியபடி அவள் அவ்வப்போது அர்னவ்வை நோட்டம் விட்டதை அவன் கவனித்தான். அவள் நாடகம் ஆடுவது அவனுக்கு புரிந்து போனது. எரியும் நெருப்பில் எண்ணெயை வார்க்க, அவன் குஷிக்கு உதவுவது என்று முடிவு செய்தான்.
"என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு தானே விக்னேஷ்?" என்றாள் குஷி.
"என் தப்பை நான் உணர்ந்துட்டேன். அதனால தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன்..."
"செஞ்ச தப்பை உணர்ந்துட்டாலே போதும்...!"
"அப்படின்னா நீ என்னை மன்னிச்சிட்டியா?"
"ஆமாம்"
"உன்கிட்ட எனக்கு இந்த விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு"
அப்பொழுது ஷஷியும் கரிமாவும் அங்கு வந்தார்கள்.
"குஷி வா சாப்பிட போகலாம்" என்றார் அவர்.
அவள் செய்த அடுத்த செயல், அர்னவ்வுக்கு கடும் கோபத்தை வரவழைத்தது. என்ன நடக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.
"டாட், இவர் விக்னேஷ்... என்னோட ஃபிரண்டு" என்றாள்.
ஷஷி விக்னேஷுடன் கைக்கூலுக்கினார்.
"என்ன செய்றீங்க விக்னேஷ்?"
"அப்பாவோட பிசினஸ்ல அவருக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன் அங்கிள்"
"உங்க அப்பா என்ன செய்றாரு?"
"டி நகர்ல துணிக்கடை வச்சிருக்காரு. அவர் பேர் கணேஷ்"
"ஓ... அவரா? அவரை எனக்கு தெரியும். அவரை ஜாகிங் போகும் போது பார்த்திருக்கேன்"
"ஆமாம் அங்கிள், ஒரு நாள் தவறாம அவர் ஜாகிங் போவாரு"
"நீங்க போறதில்லையா?"
"நான் ஜிம்முக்கு போறேன்"
"தட்ஸ் நைஸ்... நீங்களும் எங்க கூட வந்து சாப்பிடுங்களேன்"
"இல்லை அங்கிள், நான் ஏற்கனவே சாப்பிட்டுட்டேன்... நான் கிளம்பணும்"
"ஓகே பை..."
விக்னேஷ் அங்கிருந்து கிளம்பினான்.
"வா குஷி, நம்ம சாப்பிடலாம்" என்றார் கரிமா.
"இல்லமா, நான் லாவண்யா, நந்து கூட சாப்பிடுறேன். நீங்க சாப்பிடுங்க"
"சரி" என்று அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.
அர்னவ்விடம் கவலை தோய்ந்த முகத்தோடு வந்த சக்தி,
"வாத்தியாரே, அவன் படா பேஜரான பையன்... அவன்கிட்ட பேச வேணாம்னு சிஸ்டர் கிட்ட சொல்லு..." என்றான்.
"உனக்கு அவனை எப்படி தெரியும்?"
"எங்க ஏரியாவுல இருக்கிற ஒரு தியேட்டர்ல அவனை நான் அடிக்கடி பார்த்திருக்கேன். ஒரு தடவை வந்த பொண்ணு கூட அவன் மறு தடவை வந்ததே இல்ல. அந்த தியேட்டர்ல கூட்டமே இருக்காது. ( அர்னவ் மென்று விழுங்கினான்) அவன்கிட்ட பேச வேணாம்னு கன்பர்மேஸனா சொல்லிடு வாத்தியாரே. இந்த மாதிரி நல்ல பொண்ணுங்க அவன் பக்கத்துல கூட நிக்க கூடாது. அவங்க பேர் கெட்டுப் போயிடும்"
அர்னவ்வுக்கு இதெல்லாம் தெரியாததல்ல. விக்னேஷ் நல்லவனா கெட்டவனா என்பதெல்லாம் இங்கு பெரிய விஷயமா? அவனைப் பொறுத்தவரை குஷி யாரிடமும் பேசுவது அவனுக்கு பிடிக்காது. அவ்வளவு தான்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் கோபமாய் குஷியிடம் வந்த அவன், அவளை பக்கத்தில் இருந்த அறைக்கு இழுத்துச் சென்று, கதவை சாத்தி தாளிட்டான்.
"என்ன செய்ற நீ?" என்றாள் அவள் அதிர்ச்சியோடு.
"நீ (என்பதை அழுத்தி) என்ன செய்ற குஷி?" என்றான் தன் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய்.
பற்றி எரிய ஆரம்பித்து விட்டது நன்றாகவே தெரிந்தது. எக்காரணத்தைக் கொண்டும் சிரித்து விடக்கூடாது என்று சபதம் ஏற்றாள் குஷி.
"நான் சாப்பிட போறேன்" என்றாள்.
"நான் அதைக் கேட்கல. விக்னேஷ் கூட என்ன பேசிக்கிட்டு இருந்த?"
"ஒன்னும் இல்ல..."
"எதுக்கு அவன் கிட்ட பேசுற?"
"என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டதுக்காக அவன் மன்னிப்பு கேட்டான். பாவம்... ரொம்ப வருத்தப்பட்டான்..."
"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அவன் மன்னிப்பு கேட்டான்... நீ அவனை மன்னிச்சிட்டியா?"
"பின்ன.... திருந்துறதுக்கு எல்லாருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கணும்ல...? அட்லீஸ்ட், மத்தவங்களை மாதிரி இல்லாம, அவன் மனசுல இருக்கிறதை வெளியில சொல்லவாவது செஞ்சானே...!"
அவனால் அதை பொறுக்க முடியவில்லை.
"அவன்கிட்ட பேசுறத நிறுத்து. நான் உன்னை வார்ன் பண்றேன்...!"
கூலாக சிரித்தபடி,
"என்னது வார்ன் பண்றியா? நீ யாரு என்னை வார்ன் பண்ண? ஒ... ஆமாம்ல... உனக்கு எங்க அப்பா மேலயும், அவரோட ரெபுடேஷன் மேலயும் ரொம்ப அக்கறை இருக்கு...! நீ அதை பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதுக்காகத்தான் நான் அவனை எங்க அப்பாவுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணி வச்சேன். ஏன்னா, உன்னை விட எங்க அப்பாவுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். அவர் எல்லாத்தையும் பாத்துக்குவாரு. ஏன்னா அவர் என் அப்பா... எல்லாரையும் விட அதிகமா என் மேல அவருக்கு அக்கறை இருக்கு" என்று தெனாவட்டாய் கூறிவிட்டு அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது அவளை தடுத்து நிறுத்தி,
"நீ என்ன செய்றன்னு தெரிஞ்சு தான் செய்றியா, குஷி?"
அவனது கண்களை சந்தித்தாள் அவள்.
"இப்படி செய்யறதை நிறுத்து. இல்லன்னா, நீ ரொம்ப வருத்தப்படுவ...!"
"அதைப் பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம்..."
அவன் தோளை பிடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்து சென்றாள் குஷி. சொல்ல முடியாத கோபத்துடன் நின்றான் அவன். குஷி சற்று முன் செய்த காரியம் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. அது நிச்சயம் அவளை பிரச்சனையில் கொண்டு சேர்க்கும். இந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது? எதற்காக அவனது கோபத்தை தூண்டும் படி நடந்து கொள்கிறாள்? வெளியே வந்த அவன், விக்னேஷை தேடினான். அவனது நல்ல நேரம், அவன் ஏற்கனவே பறந்து விட்டான். கோபத்துடன் சுவற்றை ஓங்கி குத்தினான் அவன். அந்தக் காட்சியை கண்ட சக்தி, ஏதோ சுவாரசியமாய் நிகழவிருப்பதை உணர்ந்து புன்னகைத்தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top