15 மலராலான வெடிகுண்டு
15 மலராலான வெடிகுண்டு
குட்டி போட்ட பூனை போல் தனது அறையில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான் சித்தார்த். இருக்காதா பின்னே? இன்று அவனுக்கு திருமணம் ஆயிற்றே. இன்று அவன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போகிறான்...! ஆனால் இந்த முறை, அவன் மனதுக்கு மிகவும் பிடித்த பெண்ணை மணக்க போகிறான். இன்று முதல், அவள் அவனுடன் ஒரே அறையில் இருக்கப் போகிறாள். அவள் மலர்களாலான வெடிகுண்டு. எப்போது வெடித்து, பூமாரி பொழிவாள் என்று தெரியாது. மன முதிர்ச்சி உள்ள, அதேநேரம், வெளிப்படையாய் பேசக்கூடிய பெண்ணை கையாள்வது அவ்வளவு சுலபமல்ல. இது அவனுக்கு முதல் திருமணமாக இருந்திருந்தால், அவன் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக அவளை சுற்றி வலம் வந்திருப்பான். ஆனால் இப்போது நிலைமையே வேறு.
அவனது பரிதவிப்பை பார்த்தபடி புன்னகையுடன் நின்றிருந்தார் அவனது அம்மா தேவயானி. அவன் அணிந்து கொள்ளப்போகும் வேட்டி சட்டையுடன் அவர் வந்திருந்தார்.
"யாரோ ரொம்ப பதட்டமா இருக்கிற மாதிரி தெரியுது?" என்றார்.
இல்லை என்று தலையசைத்த சித்தார்த், மறுபடி ஆம் என்று தலையசைத்தான். வாய்விட்டு சிரித்தார் தேவயானி.
"உன் நிலைமை எனக்கு புரியுது. எல்லாத்தையும் தூக்கி தூரமா போடு. நீ ஆசைப்பட்டது உனக்கு கிடைக்கப் போகுது. அதை மட்டும் நினைச்சுப் பாரு. ஹரிணி ரொம்ப நல்ல பொண்ணு. எல்லாத்தையும் சிகரமே புரிஞ்சுக்குவா... நீ அவளை காதலிக்கிறங்குறதையும் சேர்த்து"
"அவ புரிஞ்சுக்குவாளா?"
"நிச்சயமா... நெருப்பையும், காதலையும் ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது"
"அப்படியா?"
"ஆமாம். அவ பார்வையில் இருந்து நீ தப்பவே முடியாது. அவ ரொம்ப நல்ல பொண்ணு டா... எது மாதிரின்னா..."
வார்த்தை கிடைக்காமல் தடுமாறினார் தேவயானி.
"பூவால் ஆன வெடிகுண்டு..." என்று சிரித்தான் சித்தார்த்.
"பரவாயில்லைடா... நீ தேறிட்ட. அவ உண்மையிலேயே பூ அணுகுண்டு தான்"
"அதனால தான் மா டென்ஷனா இருக்கு"
"டென்ஷனாகாத. அவ உன்னோட வைஃப். நீ அவளைக் காதலிக்கிறேன்னு உண்மையை சொல்லிடு டா" என்றார் கெஞ்சலாக.
"அது அவ்வளவு ஈசி இல்ல மா. ஏன்னா, நான் அவளுடைய அக்கா வீட்டுக்காரனும் கூட... என்னுடைய ஃபீலிங்சை நான் சொல்ல ஆரம்பிச்சா, அவகிட்ட நான் எல்லாத்தையும் சொல்ல வேண்டியிருக்கும். ஷிவானினா அவளுக்கு உயிர். ஷிவானி தன்கிட்ட எதையுமே மறைக்க மாட்டான்னு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு ஹரிணிக்கு. உண்மை தெரிஞ்சா அவ ரொம்ப வருத்தப்படுவா மா"
"நான் சொல்லிவிடவா?"
பதட்டமடைந்த சித்தார்த்,
"வேணா வேணா... உண்மை தெரிஞ்சு அவ நம்மளை வேற மாதிரி நெனச்சுட்டா என்ன செய்யறது?"
"அப்படின்னா நீ எப்ப தான் உண்மையை சொல்ல போற?"
"அவ நம்மகிட்ட எப்படி பழகுறான்னு முதல்ல பார்க்கலாம். அவ இன்னும் படிப்பைக் கூட முடிக்கல. அவ கிராஜுவேஷன் முடிக்கிறதுக்கு முன்னாடி நிச்சயம் சொல்லிடுவேன்... ஐ ப்ராமிஸ்"
"நல்ல சந்தர்ப்பம் கிடைச்சா நழுவ விட்டுடாத டா"
"நிச்சயம் மாட்டேன் மா. அவளுக்கு ஏத்த மாதிரி தான் நான் நடந்தாகணும்"
ஹரிணி சீக்கிரமே உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுளை பிரார்த்தித்தார் தேவயானி.
.......
தனது துணிமணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் ஹரிணி. அலமேலு அவளுக்கு உதவிக் கொண்டிருந்தார். ஷிவானியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எடுத்து தன் பையில் வைத்தாள் ஹரிணி.
"அந்த போட்டோ அவசியமா?" என்றார் அலமேலு.
"வேண்டாமா?"
"வேண்டாம். இதையெல்லாம் நீ தவிர்க்கிறது தான் நல்லது. சித்தார்த்தை நிச்சயம் இது சங்கடப்படுத்தும்"
சரி என்று தலையசைத்துவிட்டு, அந்த புகைப்படத்தை மீண்டும் தனது மேஜையின் மீது வைத்தாள் ஹரிணி.
"சித்தார்த்தை கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?" என்றார் அலமேலு.
ஒரு நொடி திகைத்தாள் ஹரிணி. அவளுக்கு தெரியும் அலமேலுவுக்கு லேசான உறுத்தல் இருக்கிறது என்று. அவள் தான் ஹரிணி ஆயிற்றே... அவளுக்கு தெரியாதா, தன் அம்மாவை எப்படி சரி கட்ட வேண்டும் என்று?
"இந்தக் கேள்வியை கேட்கிற நேரமா இது...?" என்று சிரித்தாள் ஹரிணி.
"எனக்கு மனசு உறுத்தலா இருக்கு டா"
அப்படி என்றால் அவள் நினைத்தது சரி தான்.
"நீங்க அப்படி எல்லாம் எதுவும் ஃபீல் பண்ண வேண்டாம். ஏன்னா எனக்கு சித்தார்த்தை ரொம்ப பிடிச்சிருக்கு"
"நெஜமாத் தான் சொல்றியா?" என்றார் சந்தோஷமாக.
"அப்படித் தான் நினைக்கிறேன்" என்று கிண்டலாய் கூறிவிட்டு அவள் சிரிக்க, அவளை பட்டென்று ஒரு அடி போட்டார் அலமேலு.
"உங்களுக்கு தெரியுமா மா, எப்போ அப்பா என்னுடைய கல்யாண பேச்சை ஆரம்பிச்சாரோ, எனக்குள்ள என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியல மா. சித்துவை பார்க்கணும், அவர்கிட்ட பேசணும், அவர் கூடவே இருக்கணும்னு தோணுது"
சந்தோஷத்தில் அலமேலுவின் கண்கள் கலங்கியது. அவர் முகபாவத்தை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் ஹரிணி.
"சீக்கிரமே நான் அவரை லவ் பண்ணிடுவேன் போல இருக்கு" என்றாள்.
இடவலமாய் தலையசைத்து சிரித்தார் அலமேலு.
"இதெல்லாம் எப்படி மா நடக்குது?"
"அது தான் கல்யாணத்தோட சக்தி. நம்ம மனசுக்கு பிடிச்சதை கேக்குற தைரியத்தை அது கொடுக்கும்"
"அப்படின்னா நான் சித்துகிட்ட எது வேணாலும் கேட்கலாமா?"
பதில் கூறாமல் அமைதியாக இருந்தார் அலமேலு.
"என்ன ஆச்சும்மா?"
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. சித்தார்த்தோட மனநிலை எப்படி இருக்குன்னு நம்மால நிச்சயமா சொல்ல முடியல. நீ கொஞ்சம் அவசரப்படாம இருடா. கொஞ்சம் பொறுமையா, சித்தார்த் எப்படி நடந்துகுறார்னு பார்த்து அவருக்கு தகுந்த மாதிரி நீயும் நடந்துக்கோ. நான் சொல்றது புரியுதா?"
"புரியுது மா. நான் அவசரப்பட மாட்டேன். எல்லாத்துக்கும் மேல, நான் என்னுடைய படிப்பை முடிக்க வேண்டி இருக்கு. முசுடு மாமாகிட்ட தான் நான் என்னோட ப்ராஜக்டை முடிக்கணும். அதுக்கு நான் எல்லாத்துலயும் பக்காவா இருக்கணும். அதனால நான் என் படிப்பை முடிச்சுட்டு அதுக்கப்புறம் முசுடு மாமாவை கவனிச்சிக்கிறேன்" என்று சிரிக்க, அலமேலுவும் சிரித்தார்.
திருமண மண்டபம்
மிக முக்கியமானவர்கள் மட்டும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார் பண்டிதர். ஹரிணியின் வருகைக்காக மேடையில் காத்திருந்தான் சித்தார்த். அவள் வரும் வழியை அடிக்கடி திரும்பி பார்த்தவாறு இருந்தான். ஹரிணி அவன் அருகில் அமர வைக்கப்பட்டாள். தன் அருகில் அமர்ந்திருப்பது அவள் தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அவன் அடைந்திருந்த முன்னனுபவம் அப்படிப்பட்டது. பண்டிதரை பார்ப்பது போல் அவள் மீது கண்களை ஓட்டினான் சித்தார்த். அவளைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான். சித்தார்த், ஹரிணி இருவருக்குமே முந்தைய திருமணத்தை பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அதிஷ்டவசமாக, இருவருமே அந்த நினைப்பை உதறித் தள்ளினார்கள்.
திருமாங்கல்யத்தை பண்டிதர் அவனிடம் வழங்கினார். அதை ஹரிணியின் கழுத்தில் அணிவித்து, நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டான். தன் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை செய்தவனை போல் குதூகலித்தான் சித்தார்த். அவன் மனம் நிம்மதி அடைந்தது. சிரிக்காமல் இருக்க சொல்லி அவன் உதடுகளை அவனால் பணிக்க முடியவில்லை.
தன் தாய், தந்தையரை பிரியும் நேரம் வந்தது ஹரிணிக்கு. அவர்களை கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தினாள். அவளை சித்தார்த்தின் முன் அழைத்து வந்து நிறுத்திய வெங்கடேசன், சித்தார்த்தின் முன் கைகூப்பி நின்றார். அவர் உணர்ச்சி பெருக்குடன் இருந்தது தெள்ளத் தெளிவாய் புரிந்தது. பெற்றவர் ஆயிற்றே...!
"என் குழந்தையை உங்ககிட்ட கொடுக்கிறேன்... அவளுடைய அப்பாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து நீங்க அவளை பார்த்துக்கணும்"
அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு செய்கிறேன் என்று தலையசைத்தான் சித்தார்த். அவனை அணைத்துக் கொண்டு, அவன் முதுகை தட்டிக் கொடுத்தார் வெங்கடேசன். அலங்கரிக்கப்பட்ட கார் அவர்களை அழைத்துச்செல்ல காத்திருந்தது. தமிழ் குடிலை நோக்கி கார் புறப்பட, அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் துவங்கியது.
தமிழ் குடில்
ஆலம் கரைத்து அவர்கள் வரவேற்க்கபட்டார்கள். வலது காலை எடுத்து வைத்து சித்தார்த்துடன் திருமண பந்தத்தில் நுழைந்தாள் ஹரிணி.
விருந்தினர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு காக்க வைக்கப்பட்டாள் ஹரிணி. அவளைக் காண அங்கு வந்தார் தேவயானி. தான் கையில் அணிந்திருந்த வளையல்களை ஹரிணிக்கு அணிவித்தார் தேவயானி.
"எதுக்கு ஆன்ட்டி இதெல்லாம்?"
"இது என் மாமியாரோட வளையல்." அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு சில நொடி தாமதித்தார்.
"நான் உனக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்ல. நம்ம நிக்கிற சிக்கலான சூழ்நிலை உனக்கு நல்லாவே தெரியும். ஒரு குடும்பத்தை குடும்பமா மாத்துறது ஒரு பொண்ணால தான் முடியும். ஒரு பொண்ணு மனசு வச்சுட்டா அவ என்ன வேணாலும் சாதிப்பா. நான் உன்னைத் தான் நம்பி இருக்கேன். நீ எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்னு எனக்கு தெரியும். நீ யாருக்காகவும் உன்னை மாத்திக்க வேண்டாம். நீ நீயாவே இரு. அது எல்லாரையுமே சந்தோஷமா வைக்கும். ஏன்னா, நீ ஒரு தனி ரகம்"
அதைக் கேட்டுச் சிரித்தாள் ஹரிணி. தேவயானியின் எளிய அணுகுமுறை அவளுக்கு பிடித்திருந்தது. பெண்கள் மாமியார் வீட்டில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையே மாமியார் தான். அந்த மாமியார் எளிமையானவராக இருந்து விட்டால், அந்தப் பெண்ணுக்கு வேறு என்ன வேண்டும்? அந்த வகையில் அவள் அதிர்ஷ்டசாலி தான்.
அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற முயன்றாள் ஹரிணி. அவளைத் தடுத்து நிறுத்தி,
"கடவுள் உன்னை எப்பவும் சந்தோஷமா வைக்கட்டும்" என்று வாழ்த்தினார்.
தன் மாமியார் கூறிய வார்த்தைகளையும், தன் அம்மா கூறிய வார்த்தைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் ஹரிணி. அவள் அம்மாவோ அவசரப்பட வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் தேவயானிக்கு அவளிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்போது அவள் என்ன செய்வது? இரண்டு பேர் கூறியதையும் ஓரமாய் வைத்து விட்டு, சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்வது என்று தீர்மானித்தாள் ஹரிணி. இது அவளுடைய வாழ்க்கை. இதை அவளுடைய இடத்திலிருந்து அவள் தான் வாழப் போகிறாள். அதனால், இதில் அவளே சுயமாக முடிவெடுக்க வேண்டுமென்று நினைத்தாள் அந்த புத்திசாலி பெண்.
.....
சித்தார்த்தின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் ஹரிணி. அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்து கொண்டாள் அவள். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்தான் சித்தார்த். அவனைப் பார்த்தவுடன் எழுந்து நின்றாள் ஹரிணி. என்ன செய்வது என்று புரியாமல், இருவருமே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். தன்னை சுதாகரித்துக் கொண்ட ஹரிணி, இங்குமங்கும் எதையோ தேடினாள். கட்டிலுக்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த தனது பையை கவனித்தாள்.
"நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். இந்தப் பட்டுப் புடவை கம்ஃபர்டபிலா இல்ல." என்றாள்.
சரி என்று தலையசைத்தான் சித்தார்த்.
"நீங்க டிசைன் பண்ணி கொடுத்த ட்ரஸ் ரொம்ப அழகாக இருந்தது... (சற்றே நிறுத்தியவள் ) எனக்கு" என்று சிரித்து அவனை புன்னகைக்க செய்தாள்.
"அப்படின்னு நான் சொல்லல. என்னோட ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க... நம்புங்க"
சரி என்று குறுநகை புரிந்தான் சித்தார்த். தன் பையில் இருந்த லகுவான உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள். சித்தார்த்தும் வேட்டி சட்டையில் இருந்து ட்ராக் பேண்ட், டீசர்ட்டுக்கு மாறினான்.
சில நிமிடங்களில் இரவு உடையில் வெளி வந்தாள் ஹரிணி. அவள் அணிந்திருந்த புடவை, நகைகள், தலையில் இருந்த பூ, அனைத்தும் அவள் கையில் இருந்தது. அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, கட்டிலில் அமர்ந்து தன் கால்களை கட்டிக் கொண்டாள்.
"உங்களுக்கு ஒன்னு தெரியுமா, எனக்கு ஜெயிலில் இருந்து விடுதலையான மாதிரி இருக்கு ..."
அவள் என்ன கூறுகிறார் என்பது புரியாததால்,
"என்ன சொன்ன?" என்றான்.
"காலையில இருந்து கிட்டத்தட்ட அஞ்சு ஆறு கிலோவை நான் சுமந்துகிட்டு இருந்தேன். பட்டுப்புடவை, நகை, மாலை, ஜடை, பூ, போதும்டா சாமி... ஆனா பசங்களுக்கு இந்த பிரச்சனை இல்ல..."
ஆமாம் என்று தலையசைத்தான்.
"நான் பெட்டு கட்டுவேன்... இதையெல்லாம் போட்டுக்கிட்டா தான் கல்யாணம்னு சொன்னா, பயபுள்ளைங்க தெரிச்சு ஓடிடுவானுங்க."
அதைக் கேட்டு சிரித்தான் சித்தார்த்.
"ஆனா, எப்படிப்பட்ட புருஷனும் பொண்டாட்டியோட ஷாப்பிங் பேக்கை தூங்காம எஸ்கேப் ஆக முடியாது... கரெக்ட் தானே?"
"கரெக்டு தான்" என்றான், எல்லாவித ஷாப்பிங்கையும் ஆன்லைனிலேயே செய்யும் சித்தார்த்.
அவனுக்கு *அப்பாடா* என்று இருந்தது. அவள் எங்கு தன்னிடம் பேசாமல் இருந்து விடுவாளோ என்று பயந்தான் அவன். நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்று அவள் கூறி இருந்தாள் அல்லவா? அவளைப் பொறுத்தவரை டிஸ்டர்ப் என்றால் என்ன அர்த்தமோ என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.
"உங்களுக்கு தூக்கம் வருதா?" என்றாள்.
"இல்ல... ஏன்?"
"உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்"
"கேளு"
"யார் லீவு எடுத்தாலும், அவங்க செய்ய வேண்டிய வேலையை நீங்க தான் செய்வீங்களா?"
"அது வேலையுடைய அவசரத்தை பொறுத்தது. எங்ககிட்ட நிறைய டிசைனர்ஸ் டீம் இருக்கு. எல்லா வேலையையும் அவங்க பார்த்துக்குவாங்க"
"அப்படின்னா என்னோட டிரஸ்ஸை நீங்க ஏன் டிசைன் பண்ணீங்க? அதையும் யாரையாவது செய்ய சொல்லி இருக்கலாமே?"
"உனக்கு என்ன வேணும்னு கிரணுக்கும் எனக்கு மட்டும் தான் தெரியும். அதோட மட்டும் இல்லாம, அது உன்னுடைய டிசைன். அதனால அதை வேற யார்கிட்டயும் கொடுக்க வேண்டாம்னு நெனச்சேன்"
"நைஸ்..."
கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
"வழக்கமா நீங்க எத்தனை மணிக்கு எழுந்துக்குவீங்க?"
"ஆறு மணிக்கு முன்னாடி எழுந்துடுவேன்"
"அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்வீங்க?"
"ஜாகிங் போவேன்"
"ஓஹோ அப்படின்னா நீங்க சீக்கிரம் தூங்கணும் இல்ல"
"நாளைக்கு நான் போக மாட்டேன்"
"ஓஹோ..."
*ஏன் போக மாட்டீங்க?* என்று அவள் கேட்பாள் என்று எதிர்பார்த்தான் சித்தார்த். *திருமணமான அடுத்த நாளே ஜாக்கிங் சென்றால் எல்லோரும் என்னை கிண்டல் செய்வார்கள்* என்று கூறலாம் என அந்தக் கேள்விக்கான பதிலை தயாராக வைத்திருந்தான். ஆனால் அவள் அந்த கேள்வியை கேட்கவில்லை. எது எப்படியோ, அவள் அவனிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. அது தம்பதியரின் பேச்சு போல் இல்லாவிட்டாலும், அவனுக்கு அது மகிழ்ச்சியளித்தது.
"நீங்க எழுந்துக்கும் போது, என்னையும் எழுப்பி விடுங்க" என்றாள் கண்களை மூடியபடியே.
"சரி" என்றான்.
கட்டிலின் மறு பக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டான் சித்தார்த், தன் மனைவியை பார்த்தபடி. அவன் கட்டிய தாலி, அவன் பெயரை கூறிக்கொண்டு, அவளது கழுத்தில் அலட்டலாய் ஜொலித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது அவனுக்கு பெருமையாய் இருந்தது. தான் விரும்பிய பெண்ணை தனதாக்கிக் கொள்வதைப் போன்ற சந்தோஷம் வேறு இருக்க முடியாது. இன்று அவன் நிச்சயம் நிம்மதியாய் உறங்குவான்... வெகு நாட்களுக்கு பிறகு...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top