50 சக்தியின் அதிரடி

50 சக்தியின் அதிரடி

தங்கள் அறைக்குச் சென்ற சக்தி, கதவை சாத்தி தாழிட்டாள். அவளைப் பார்த்து புன்னகை புரிந்த ருத்ரன், தன் கையில் வைத்திருந்த புடவைகளை பார்த்து,

"இந்த புடவை உனக்கு பிடிச்சிருக்கா?" என்றான்.

 பிடித்திருக்கிறது என்பது போல் தலை அசைத்தாள் சக்தி.

"நெஜமாவா சொல்ற?"

"ஆமாம். உங்களுக்கு பிடிச்ச எல்லாம், எனக்கும் பிடிக்கும்" என்றாள் அவன் அருகில் அமர்ந்து கொண்டு.

"போய் இந்த புடவையை கட்டிக்கிட்டு வா"

"கட்டிக்கிறேன். ஆனா, அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"தாராளமா பேசலாம். என்ன பேசணும் சொல்லு"

"விஷயம் எவ்வளவு மோசமானதா இருந்தாலும், நீங்க கோபமே பட மாட்டீங்கன்னு எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க"

அமைதியாய் அவளை பார்வையிட்டான் ருத்ரன்.

"நீங்க என் மேல எவ்வளவு வேணும்னாலும் கோபப்படலாம்... இந்த ரூமுக்குள்ள என்ன வேணா  செய்யலாம்... ஆனா தயவு செய்து கோபம் மட்டும் படாதீங்க. உங்க கோபத்துக்கு நியாயமான ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் கோபப்படக் கூடாது"

அவள் கேட்கும் சத்தியத்திற்கான காரணம் அவனுக்கு ஓரளவுக்கு புரிந்து விட்டது.

"சத்தியம் பண்ணுங்க" என்றாள் தன் கையை நீட்டி.

எதைப் பற்றியும் யோசிக்காமல் அவள் கரம் பற்றினான்.

"எதுக்காகவும் நான் கோபப்பட மாட்டேன். போதுமா?"

நிம்மதியுடன் அவன் கரத்தை சுற்றி வளைத்துக் கொண்டு, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் சக்தி.

"ஏன் டென்ஷனா இருக்க? என்ன ஆச்சு?"

"ஒன்னும் இல்ல சும்மா தான்..."

"நீ எதுக்காகவும் டென்ஷனாகாத. ஓகேவா?"

சரி என்று தலையசைத்தாள் சக்தி.

"நான் தான் களத்துல இறங்கி உன்னை ரிலாக்ஸ் பண்ணனும் போல இருக்கே" என்றான் நமுட்டு புன்னகையுடன்.

அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், அவனது நெற்றி, கண், கண்ணம், உதடு என முத்தமிட்டு விட்டு மீண்டும் அவனை அனைத்துக் கொண்டாள் சக்தி.

"என்ன ஆச்சு சக்தி?"

மீண்டும் அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைத்தாள்.

"உனக்கு இங்க கம்ஃபர்டபுலா இருக்க முடியலன்னா நம்ம இங்கிருந்து போயிடலாம்"

அதற்கும் சக்தி மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததை பார்த்து அவன் வியந்து போனான்.

"போயிடலாமா?"

"எங்க கூட்டிக்கிட்டு போவீங்க?" என்ற அவளது கேள்வி அவனை மேலும் வியப்படையச் செய்தது.

"அந்தமான் ஐலண்ட்ஸ்?"

"என்னை வேற ஏதாவது ஒரு நாட்டுக்கு கூட்டிக்கிட்டு போறேன்னு நீங்க ஒரு தடவை சொன்னீங்க இல்ல?"

அவனது கையை சுற்றி வளைத்திருந்த அவளது கரங்களை விளக்கி விட்டு,

"ஃபாரினுக்கா?" என்றான்.

ஆம் என்று தலையசைத்தாள் சக்தி.

"உங்க அப்பாவை நினைச்சு பயப்படுறியா சக்தி?"

"அவர் என்னோட அப்பா இல்ல" என்றாள் ஒரு நொடியும் யோசிக்காமல்.

"சரி... தக்ஷிணாமூர்த்தி..."

"எனக்கு தெரியலங்க. ஆனா ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கு"

"அப்புறம் எதுக்காக என்கிட்ட சத்தியம் வாங்கிகிட்ட? என்னை நீ கோபப்பட விட்டிருக்கணும்... எல்லாரையும் கிழிச்சி தொங்கவிட்டு இருப்பேன்..."

"அப்படி நீங்க செய்யக்கூடாதுன்னு தான் சத்தியம் வாங்கினேன். நீங்க உண்மையிலேயே என்னை நம்பறதா இருந்தா அப்படி எல்லாம் எதுவும் செய்யாதீங்க"

"நான் உன்னை நம்புறேன்"

"எனக்கு தெரியும்"

மீண்டும் அவனது கரத்தை சுற்றி வளைத்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பது நன்றாகவே புரிந்தது ருத்ரனுக்கு. அவளுக்கு திடீரென்று என்ன ஆனது என்று தான் அவனுக்கு புரியவில்லை.

"சக்தி எனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரியா?"

"என்ன வேணும்? டீ, காபி, இல்லனா ஏதாவது ஜூஸ் கொண்டு வரவா?"

"எதுவா இருந்தாலும் பரவாயில்ல"

சமையல் அறையை நோக்கிச் சென்றாள் சக்தி. தனது கைபேசியை எடுத்து சிவாவுக்கு ஃபோன் செய்தான் ருத்ரன்.

"சொல்லு ருத்து..."

"எங்க இருக்க நீ?"

"இன்னும் வீட்ல தான் இருக்கேன். வெளியில கிளம்பிக்கிட்டு இருக்கேன்"

"யாராவது சக்தி கிட்ட ஏதாவது சொன்னாங்களா?"

"ஏன் கேக்குற ருத்து?" 

"சக்தி ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கா... என்னை கோபமே படக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிகிட்டா"

அதைக் கேட்டு சிவா புன்னகை புரிந்தான்.

"ரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்காங்க"

"இல்ல... அவளை ஏதோ டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கு"

"சரி என்கிட்ட விடு. நான் பாத்துக்குறேன்"

"வெயிட் பண்ணு. நான் வரேன்"

"சரி வா"

ருத்ரனுக்காக காத்திருந்தான் சிவா. அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்க, கதவை திறந்தான் தியாகு. அங்கு, ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயர் பொறிக்கப்பட்ட சீருடையில் சிலர் நின்றிருந்ததை பார்த்து மென்று விழுங்கினான் தியாகு.

"யார் நீங்க?"

"நாங்க சைக்யாட்ரிக் ஹாஸ்பிடல்ல இருந்து வறோம். ருத்ரனை எங்க கூட கூட்டிகிட்டு போக வந்திருக்கோம்"

தியாகு மட்டும் அல்ல, அதைக் கேட்ட அனைவரும் பதட்டமடைந்தார்கள். அவர்களது பதட்டம் தாறுமாறாய் எகிறியது, ருத்ரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதை பார்த்து. மருத்துவமனையின் சீருடையில் இருந்தவர்களை பார்த்து அப்படியே நின்றான் ருத்ரன். அவன் மருத்துவமனையில் இருந்த போது, அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்திய உடை அது. தனது முஷ்டியை இறுக்கி, தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான் ருத்ரன்.

"எங்ககிட்ட அதுக்கான ஆர்டர் இருக்கு" என்றான் அவர்களில் ஒருவன்.

"யார் உங்களுக்கு ஆர்டர் போட்டது?" என்ற சக்தியின் குரல் கேட்டு அனைவரும் அவள் பக்கம் திரும்பினார்கள்.

அவளைப் பார்த்து அமைதி அடைந்தான் ருத்ரன். கோபப்பட மாட்டேன் என்று அவளுக்கு அவன் சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறான் அல்லவா? தான் கொண்டு வந்த பழச்சாற்றை அவனிடம் கொடுத்தாள் சக்தி.

"நீங்க ரூமுக்கு போங்க. தயவு செய்து கோபப்படாதீங்க" என்றாள் மருத்துவமனையின் ஊழியர்களை பார்த்தபடி ருத்ரனிடம்.

"ருத்ரனோட மனநிலை சமமா இல்லைன்னு எங்களுக்கு தெரிய வந்திருக்கு. அதனால அவரை நாங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போக வந்திருக்கோம்"

"இங்க வர சொல்லி உங்களுக்கு யார் சொன்னது? நாங்க எல்லாரும் அவரோட ஃபேமிலி. இந்த குடும்பத்தில் இருந்து யாராவது உங்களை வர சொல்லி சொன்னாங்களா? எங்க அனுமதி இல்லாம உள்ள நுழையுற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? யார்கிட்டயும் அனுமதி கேட்காம, வீடு திறந்து இருந்தா போதும்னு உள்ள நுழைஞ்சிடுவீங்களா? உங்க ஹாஸ்பிடல் இருக்கிறவங்களுக்கு வெக்கம் எல்லாம்  எதுவும் கிடையாதா?"

"மேடம், எங்களை இங்க வர சொல்லி தான் வந்திருக்கோம்"

"யார் உங்களை வர சொன்னது?"

அவர்கள் கூறிய பதில் அனைவரையும் ஆட்டிப் பார்த்தது.

"சக்திங்குறவங்க தான் எங்களை வர சொன்னாங்க"

அதைக் கேட்ட சக்தியின் விழி அதிர்ச்சியில் விரிவடைந்தது. சிவாவும் மற்றவர்களும் கூட அதிர்ந்தார்கள். ருத்ரன் மென்று விழுங்கினான், ஆனாலும் அவன் தன்னிலை இழக்கவில்லை.

"சக்தி யார்னு உங்களுக்கு தெரியுமா?" என்றாள் மருத்துவமனை ஊழியர்களிடம்.

அவர்கள் தெரியாது என்று தலையசைத்தார்கள்.

"அது வேற யாரும் இல்ல, நான் தான். ருத்ரன் என்னோட ஹஸ்பண்ட் தான். நான் எந்த கம்ப்ளைன்ட்டும் கொடுக்கலன்னு என்னால நிரூபிக்க முடியும். என்னோட பேரை வச்சு விளையாடினது யார்?"

"அதெல்லாம் எங்களுக்கு தெரியாது மேடம். எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டரை நாங்கள் பூர்த்தி செஞ்சாகணும்"

அவர்கள் கூறியதற்கு முக்கியத்துவம் வழங்காமல், அங்கிருந்த தொலைபேசியை எடுத்து, 100க்கு ஃபோன் செய்தாள். அழைப்பு ஏற்கப்பட்டது.

"யார் பேசுறீங்க? என்ன விஷயம்?"

"சார், சில பேர் அத்து மீறி எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு, திருட பாக்குறாங்க. அவங்க ஒரு பிரபலமான ஹாஸ்பிடல் யூனிபார்ம் போட்டுக்கிட்டு வந்து இங்கே இருக்கிறவங்களை ஏமாத்த பாக்குறாங்க. நீங்க உடனே வந்தா அவளை அரெஸ்ட் பண்ணலாம் சார்" என்றாள் சக்தி சுற்றி இருந்தவர்களை வாய்ப்பிளக்கச் செய்து.

ருத்ரன் முகத்தில் புன்னகை துளிர்த்தது.

"மேடம், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க. நாங்க இங்க திருட வரல"

"நீங்க என் புருஷனை என்கிட்ட இருந்து திருடிகிட்டு போக வந்திருக்கீங்க... அவரோட சந்தோஷத்தை திருடிகிட்டு போக வந்திருக்கீங்க. போலீஸ் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க. இந்த விஷயத்தை நான் சும்மா விடப்போறதில்ல"

"மேடம், உங்களுக்கு அவரை எங்க கூட அனுப்புறதுல விருப்பம் இல்லனா, விட்டுடுங்க. நாங்க கிளம்பறோம்"

"முடியாது. அப்படியே நில்லுங்க. தியாகு கதவை இழுத்து மூடுங்க. போலீஸ் வர வரைக்கும் அவங்க இந்த வீட்டை விட்டு வெளியில போகக் கூடாது. இந்த நாடகத்துக்கு பின்னாடி யார் இருக்கான்னு எனக்கு தெரிஞ்சாகணும்"

உடனடியாக கதவை இழுத்து சாத்திவிட்டு கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டான் தியாகு.

"மேடம், நாங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப். எங்களுக்கு எதுவும் தெரியாது. உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா டாக்டரை கேளுங்க"

"நான் என்ன செய்யணும்னு நீங்க எனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்ல. போலீஸ் வர வரைக்கும் வாயை மூடிக்கிட்டு சும்மா நிக்கணும். அவங்க வந்து கேப்பாங்க, அவங்களுக்கு பதில் சொல்லுங்க"

அனைவரும் அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நிற்க, சக்தி தன்னிடம் கொடுத்த பழச்சாற்றை பொறுமையாய் பருகிக் கொண்டு நின்றிருந்தான் ருத்ரன்.

அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து சேர்ந்தார்கள்.

"என்ன பிரச்சனை? யார் எங்களை வர சொன்னது?"

"நான் தான் சார் வர சொன்னேன். இவங்க என்னோட புருஷனை கடத்திக்கிட்டு போக முயற்சி பண்றாங்க"

"இல்லை சார், நாங்க ஹாஸ்பிடல்ல இருந்து வறோம். எங்களை நம்புங்க"

"சார், என் புருஷனை கூட்டிகிட்டு போக  அவங்களை நான் வர சொன்னதா என்கிட்டயே சொல்றாங்க... இவங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?"

"உங்களோட ஹாஸ்பிடல் ஐடென்டி கார்டை காட்டுங்க"

அவர்கள் தங்களது அடையாள அட்டைகளை காட்டினார்கள்.

"சார், இப்பெல்லாம் டூப்ளிகேட் சர்டிஃபிகேட்டையே  ஒரிஜினல் மாதிரி பிரிண்ட் பண்றாங்க. ஒரு ஹாஸ்பிடலோட ஐடென்டி கார்டை தானா பிரிண்ட் பண்ண முடியாது?" என்றாள் சக்தி.

"உங்க டாக்டர் பேர் என்ன?"

"டாக்டர் கங்காதரன்"

அவர் தான் ருத்ரனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்.

"அவருக்கு ஃபோன் பண்ணுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்.

தன் கைபேசியை எடுத்து கங்காதரனுக்கு ஒருவன் ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்றார் கங்காதரன். அவன் கையில் இருந்த கைபேசியை பிடுங்கினார் இன்ஸ்பெக்டர்.

"அவன் உங்க கூட வர ஒத்துக்கிட்டானா?"  என்றார் கங்காதரன்.

"அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போக சொல்லி உங்ககிட்ட யாரு சொன்னது டாக்டர்?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"நீங்க யார் பேசுறது?" என்றார் கங்காதரன்.

"நான் இன்ஸ்பெக்டர்" பேசுறேன்.

மறுபுறம், சில நொடிகள் அமைதி நிலவியது.

"ருத்ரனுடைய வைஃப் தான் சொன்னாங்க"

"எங்களுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லி, உங்க ஆளுங்களை பிடிச்சு கொடுத்ததே அவங்க தான்"

"அவங்க மனசை மாத்திக்கிட்டார்களோ என்னவோ"

"அவங்க உங்க கிட்ட கொடுத்த ரிட்டன் கம்ப்ளைன்ட் இருக்கா?"

"இல்ல"

"அப்புறம் எப்படி நீங்க ஆக்சன் எடுக்க முடியும்?"

"இது மெண்டல் கேஸ், இன்ஸ்பெக்டர். அவங்க ரிட்டன் கம்பளைண்ட் குடுக்குற வரைக்கும் எங்களால காத்திருக்க முடியுமா?"

"காத்திருந்து தான் ஆகணும் சார். இப்போ மிஸஸ் ருத்ரன் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க முடியும். அப்போ என்ன செய்யப் போறீங்க?

"ஆனா அவங்க தான் தன்னுடைய புருஷனை ஹாஸ்பிடல் சேர்க்கணும்னு சொன்னாங்க"

"மன்னிச்சிடுங்க டாக்டர். உங்களை அரெஸ்ட் பண்றதை தவிர எங்களுக்கு வேற வழியில்ல"

கங்காதரன் அமைதியானார்.

"உண்மையை சொன்னா நீங்க தப்பிச்சுக்கலாம். அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு வரச் சொல்லி யார் சொன்னது?"

கங்காதரன் பதில் அளிக்கவில்லை. ஆனால் சிவா பதில் அளித்தான்...

"தக்ஷிணாமூர்த்தி" என்று.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top