11 ருத்ரனின் முடிவு

11 ருத்ரனின் முடிவு

திருமண மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்... முக்கியமாய், கல்யாணப் பெண் சக்தி. அவன் என்ன கேட்டான்? அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?

அதிர்ச்சி நிறைந்த முக பாவத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் சக்தி. அவன் மனதில் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? நட்ராஜ் இந்த பிரச்சினையை சமாளிக்கும் திராணி இல்லாதவன் என்று நினைக்கிறானா? அல்லது நடராஜ் ஒரு கோழை என்பதால் இதை செய்ய நினைக்கிறானா? அவனுடைய மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை சக்தியால்.

"என்ன சொன்ன நீ?" என்றான் நட்ராஜ்.

"உனக்கு 20 லட்சம் கொடுத்துட்டு சக்தியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்" என்றான் ருத்ரன்.

பதட்டத்துடன் நடராஜை ஏறிட்டாள் சக்தி. அவன் என்ன சொல்லப் போகிறானோ...!

"முடியாது... எனக்கு உன் பணம் தேவையில்ல" என்று கூறி அவளை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தான் நட்ராஜ். ஆனால் அது ருத்ரனின் கோபத்தை அதிகரித்தது.

"ஆமாம், எங்களுக்கு ஒன்னும் உன்னோட பணம் தேவையில்ல" என்றார் விசாலாட்சி.

அம்மாவும் பிள்ளையும் ருத்ரனின் உதவியை ஏற்க தயாராக இல்லை. ஏனென்றால், சக்தியிடம் அதைவிட அதிகமான பணமும், 70 லட்சம் மதிப்புள்ள வீடும் இருந்தது. சக்தியின் அப்பாவுடைய இன்சூரன்ஸ் பணத்தை வைத்து, அவன் பக்தவச்சலத்திற்கு 20 லட்சம் கொடுத்தது போக, மீதி பணத்தை கொண்டு, சுய தொழில் கூட தொடங்கி விட முடியுமே...

"அப்படின்னா, உன்னை அரெஸ்ட் பண்றதை தவிர எங்களுக்கு வேற வழியில்ல" என்றார் இன்ஸ்பெக்டர்.

"நான் ஜெயிலுக்குப் போக தயாரா இருக்கேன். ஆனா சக்தியை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்றான் நட்ராஜ்.

நடராஜனை நினைத்து பெருமைப்பட்டாள் சக்தி. அவன் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பதில் இவ்வளவு நிலையாய் நிற்பான் என்று அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. இந்த ஒரு தகுதி போதாதா அவனை திருமணம் செய்து கொள்ள..?

தன்னை கைது செய்ய வந்த ஆய்வாளரின் முன் தன் கைகளை நீட்டினான் நட்ராஜ். அவன் கைகளில் விலங்கு பூட்டி அழைத்துச் சென்றார் ஆய்வாளர். திரும்பத் திரும்ப சக்தியை பார்த்த வண்ணம் அங்கிருந்து சென்றான் நடராஜ்.

அந்த காட்சியை கண்ட ருத்ரன், பொங்கி வந்த கோபத்தை கஷ்டப்பட்டு விழுங்கினான். நட்ராஜ் தன்னிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வான் என்று அவன் எதிர்பார்த்து இருந்தான். ஆனால், அவனுடைய முயற்சி வீணாய் போய்விட்டது. அவனது மனம் நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது.

"வா சக்தி போகலாம்" என்றார் விசாலாட்சி.

அவருடன் நடக்க துவங்கினாள் சக்தி. ருத்ரனை கடந்து சென்ற போது, அவள் அவனை ஏறிட்டாள். அவனது முகபாவம், அவளது வயிற்றை ஏதோ செய்ய, சட்டென்று முகத்தை தாழ்த்திக் கொண்டாள்.

மகாதேவனும், அவனுடைய ஆட்களும் கூட திகைத்துப் போனார்கள். ருத்ரன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறுவதை கண்ட அவர்கள், அமைதியாய் அவனை பின்தொடர்ந்து வெளியேறினார்கள்.

தனது காரை ஸ்டார்ட் செய்த ருத்ரன், மனதில் இருந்த ஒட்டுமொத்த கோபத்தையும் கொட்டி காரை கிளப்பினான். அவனுடைய திட்டம் மண்ணை கவ்வி விட்டது. ஏன் நடராஜ் அவனிடம் இருந்து பணத்தை பெற ஒப்புக்கொள்ளவில்லை? உண்மையிலேயே அவன் சக்தியை ஆழமாய் நேசிக்கிறானோ? அப்படி என்றால் எதற்காக அவளை ரவுடிகளிடம் தனியாய் விட்டு ஓடிப் போனான்? இவற்றையெல்லாம் யோசித்தபடி காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் ருத்ரன்.

வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கனமழையை பற்றி கூட அவன் கவலைப்படவில்லை. அவனுக்கு என்ன தோன்றியதோ, யாருமற்ற ஓர் இடத்திற்கு வந்த போது, சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். வண்டி கிறீச்சிட்டு நின்றது. ஏமாற்றம் மேலிட்ட முகத்துடன் இருக்கையில் சாய்ந்தான்.  இப்பொழுது அவன் என்ன செய்யப் போகிறான? சக்தியை எப்படி அடையப் போகிறான்? எப்படியும் அவளை திருமணம் செய்து கொண்டு விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான் அவன். ஆனால், அது அவ்வளவு சுலபமாய் நடப்பதாய் தெரியவில்லை.

கண்களை திடமாய் திறந்தான் ருத்ரன். எது எப்படி இருந்தாலும்,  அவனுக்கு சக்தி வேண்டும். அவ்வளவு தான். அவள் வேறு யாருடனும் இருக்க அனுமதிக்க முடியாது. அவள் அவனுடன் தான் இருக்க வேண்டும். ஸ்டியரிங் வீலை கோபமாய் முறுக்கினான்.

வெகு சொற்ப நேரம் எடுத்துக்கொண்டு, மிக ஆழமாய் யோசித்தான். செய்ய வேண்டியது என்ன என்பதை முடிவெடுத்த பின், நீண்ட பெருமூச்சு விட்டான். தனது கைபேசியை எடுத்து மஹாதேவனுக்கு ஃபோன் செய்தான்.

ருத்ரனின் கைபேசி எண் ஒளிர்வதை கண்ட மகாதேவன், நேரத்தை வீணாக்காமல் உடனே அந்த அழைப்பை ஏற்றான். நடராஜனின் அம்மாவுடன், சக்தி மண்டபத்தை விட்டு வெளியேறிய போது, ருத்ரனின் முகத்தை மகாதேவன் கவனித்திருந்தான். ருத்ரனை நினைத்து அவனும் அவனது நண்பர்களும் கவலைப்பட்ட படி இருந்தார்கள்.

"ருத்ரன் சார், நீங்க நல்லா இருக்கீங்கல்ல?" என்றான் மகாதேவன்.

மென்று விழுங்கிய ருத்ரன், அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல்,

"நான் சொல்றதை கேளுங்க" என்றான்.

"சொல்லுங்க சார்"

"சக்தியை ஃபாலோ பண்ணுங்க"

"அவங்க நடராஜ் வீட்டில் இருக்காங்க சார்"

"தெரியும். அவ எதுக்காகவாவது வீட்டை விட்டு நிச்சயம் வெளியே வருவா. அவ வரும் போது எனக்கு சொல்லுங்க"

"நிச்சயமா செய்றேன் சார்"

அழைப்பை துண்டித்தான் ருத்ரன். அவனது மூளை வேகமாய் வேலை செய்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு கொண்டான்.

.......

விசாலாட்சி ஓயாமல் அழுதபடி இருந்தார். அவரது கணவர் அருணாச்சலமும், சக்தியும் அவரை கவலையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை சக்திக்கு.

"செய்யாத தப்புக்காக என் மகன் ஜெயில்ல இருக்கான். அவன் என்ன செய்றானோ... எப்படி இருக்கானோ... அந்த மனுஷன் பணம் கொடுக்கறேன்னு சொன்னப்போ, அதை அவன்கிட்ட இருந்து வாங்கி, அவன் நிம்மதியா இருந்திருக்கலாம். ஆனா, அவன் அப்படி செய்யல. ஏன்னா, அவன் உன் மேல வச்ச பாசம் அவ்வளவு பெருசு. என்கிட்ட பணம் இருந்தா, என் பிள்ளையை ஜெயில்ல இருந்து வெளியே கொண்டு வந்திருப்பேனே... என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே...  இப்போ நான் என்ன செய்வேன்?" என்று புலம்பினார் விசாலாட்சி.

"ஆன்ட்டி, நட்ராஜை வெளியே கொண்டு வர தேவையான பணத்தை நான் தரேன். நம்ம அவரை வெளியில கொண்டு வந்துடலாம்"

அழுகையை நிறுத்தினார் விசாலாட்சி.

"என்னம்மா சொல்ற? உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா?" என்றார் அவருக்கு ஒன்றும் தெரியாதது போல.

"அப்பாவுடைய இன்சூரன்ஸ் பணம் இருக்கு ஆன்ட்டி"

"அது உனக்காக உங்க அப்பா வச்சிட்டு போன பணமாச்சே... "

"நட்ராஜ்க்கும் அதுல உரிமை இருக்கு ஆன்ட்டி. கல்யாணம் மட்டும் நிக்காம இருந்திருந்தா, அவர் இந்நேரம் என் ஹஸ்பண்டா இருந்திருப்பார் இல்லையா?"

நிம்மதி பெருமூச்சு விட்டார் விசாலாட்சி.

"எங்களை தப்பா எடுத்துக்காத கண்ணு. உன்கிட்ட பணத்தை வாங்குறதை தவிர எங்களுக்கு வேற வழி இல்ல. ஆனா நிச்சயம் நாங்க உனக்கு அதை திருப்பி கொடுத்துடுவோம்"

"பரவாயில்ல ஆன்ட்டி. நான் நாளைக்கு வீட்டுக்கு போய், என்னோட பேங்க் புக்கை கொண்டு வரேன்"

"இன்னைக்கே போய் எடுத்துக்கிட்டு வந்துட்டா, நாளைக்கு பேங்குக்கு போக வசதியா இருக்காது?" என்றார் விசாலாட்சி.

ஆமாம் என்று தலையசைத்தாள் சக்தி.

"உனக்கு சுலபமாக இருக்குமேன்னு தான் சொன்னேன்"

"நீங்க சொல்றது சரி தான் ஆன்ட்டி"

"இங்க பாருங்க" என்றார் அருணாச்சலத்திடம்.

அவரை நோக்கி திரும்பினார் அருணாச்சலம்.

"சக்தியை அவங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய், பேங்க் புக்கை கொண்டு வாங்க" என்றார் விசாலாட்சி.

சரி என்று தலையசைத்தார் அருணாச்சலம்.

"நடராஜ் ஜெயில்ல இருந்து வந்த உடனே, நம்ம சக்திக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணிடனும். நம்ம ஐயர் கிட்ட வேற தேதி குறிச்சு வாங்கிகிட்டு வாங்க"

"சரி நான் சக்தியை வீட்ல விட்டுட்டு, ஐயர் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன்" என்றார் அருணாச்சலம்.

ருத்ரனுக்கு ஃபோன் செய்தான் உமாபதி.

"சொல்லுங்க"

"சார், நடராஜன் அப்பாவோட சக்தி மேடம் எங்கேயோ போறாங்க"

"அவளை ஃபாலோ பண்ணி, எங்க போறான்னு எனக்கு சொல்லுங்க"

"போய்கிட்டு தான் சார் இருக்கேன். அவங்க சக்தி மேடம் வீட்டுக்கு போறாங்கன்னு நினைக்கிறேன்"

"சரி"

உமாபதி சக்தியை பின்தொடர்ந்து செல்ல, ருத்ரன் சக்தியின் வீட்டை நோக்கி பயணமானான்.

சக்தியின் வீட்டை சென்று அடைந்தவுடன், அருணாச்சலம்

"நம்ம ஐயர் கிட்ட நான் ஏற்கனவே விஷயத்தை ஃபோன்ல சொல்லிட்டேன். நான் போய் அவர்கிட்ட கல்யாண தேதியை வாங்கிட்டு, பத்து நிமிஷத்துல வந்துடறேன்" என்றார்.

சரி என்று தலையசைத்தாள் சக்தி. தனது இருசக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு அருணாச்சலம் அங்கிருந்து சென்றார். வீட்டின் பூட்டை திறந்து, விளக்குகளை எரிய விட்டாள் சக்தி.

"சார், சக்தி மேடம் அவங்க வீட்டுக்கு தான் வந்திருக்காங்க. அவங்களை வீட்ல விட்டுட்டு, நடராஜனோட அப்பா எங்கேயோ போறாரு" என்றான் உமாபதி.

"நான் கிட்ட வந்துட்டேன்" என்றான் ருத்ரன்.

"சரிங்க சார்"

அடுத்த இரண்டாவது நிமிடம் அங்கு வந்து சேர்ந்தான் ருத்ரன். அதற்கு முன்பாகவே அங்கு வந்து விட்டிருந்தார்கள் மகாதேவனும், அவனது மற்ற ஆட்களும். ருத்ரனிடம் எதையோ கொடுத்தான் மகாதேவன். அதை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஏதோ ஜாடை செய்தான் ருத்ரன். சக்தியின் வீட்டை நோக்கி சென்ற ருத்ரனை பின்தொடர்ந்து சென்ற மகாதேவன், வெளியிலேயே நின்றான்.

கதவு சாத்தப்படாமல் இருக்கவே வீட்டினுள் நுழைந்தான் ருத்ரன். வங்கி புத்தகத்தை எடுத்துக்கொண்டு உடனே திரும்பி விடப் போகிறோமே என்ற எண்ணத்தில் கதவை சாத்தவில்லை சக்தி. வங்கிப் புத்தகத்தை தனது பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்த சக்தி, தன் வீட்டில் ருத்ரனை பார்த்ததும் அதிர்ச்சியுடன் நின்றாள். அவன் ஏன் அங்கு வந்திருக்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"இங்க பாருங்க ருத்ரன் சார், என் சொந்த விஷயத்துல நீங்க தலையிடாம இருக்கிறது உங்களுக்கு நல்லது. நான் நடராஜை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அதுல எந்த மாற்றமும் இல்ல" என்றாள் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு.

ருத்ரன் எதுவும் பேசாமல் இருக்கவே, அவனை நோக்கி திரும்பிய அவள், அவன் அவளை நோக்கி ஆபத்தான ஒரு பார்வை வீசிக்கொண்டிருந்ததை கவனித்தாள்.

"தயவு செய்து என் வீட்டை விட்டு வெளியில போங்க. அருணாச்சலம் அங்கிள் இங்க எப்ப வேணா வந்துடுவாரு. நீங்க இங்க இருக்கிறதை பார்த்தா, அவரு என்னை தப்பா நினைப்பாரு" என்று கூறிவிட்டு, அவனை கடந்து செல்ல அவள் முயன்றாள்.

அப்பொழுது அவள் எதிர்பாராத வண்ணம், அவள் முகத்தில் ஒரு கைக்குட்டையை வைத்து அழுத்தினான் ருத்ரன். மகாதேவன் அவனிடம் கொடுத்தது அதைத் தான். அதை எதிர்பார்க்காத சக்தி, அவன் கையை தன் முகத்திலிருந்து எடுக்க போராடினாள். அவளால் அவன் கையை அசைக்கக்கூட முடியவில்லை, எங்கிருந்து எடுப்பது? அடுத்த சில நொடிகளில், உணர்வை இழந்து, அவன் நெஞ்சில் சரிந்தாள் சக்தி. அவளை தன் தோளில் தூக்கிக்கொண்டு, வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தான் ருத்ரன்.

அந்த வீட்டின் பூட்டு, கதவிலேயே இருந்ததை பார்த்த மகாதேவன், கதவை பூட்டிக்கொண்டு, சாவியுடன் ருத்ரனின் பின்னால் ஓடினான்.

தனது காரின் பின் சீட்டில் சக்தியை படுக்க வைத்து விட்டு, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான் ருத்ரன். அவனை பின்தொடர்ந்து வந்த மகாதேவன்,  சக்தியின் வீட்டு சாவியை அவனிடம் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு, கத்தையான பணத்தையும், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சாவியையும் அவனிடம் கொடுத்த ருத்ரன்,

"என்னோட ரூமை வெக்கேட் பண்ணிடுங்க" என்றான்.

"சரிங்க சார்"

அதன் பிறகு அங்கு காலம் கடத்திக் கொண்டிருக்க ருத்ரனுக்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. காரை ஸ்டார்ட் செய்த அவன், சென்னையை நோக்கி விரைந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top