உயிர் விளக்கு
மரணத்தை தொடும்
வலியோ பயமோ தெரியுமா உங்களுக்கு..?
அந்த பயத்தின் நச்சு நிமிடங்களுள்
எத்தனை முகத்தை
நினைத்துக்கொள்ள முடியுமென்று எண்ணுகிறீர்கள் ?
செய்த நல்லதும் கெட்டதுமெல்லாம்
பயமுறுத்தும் தருணத்தைவிட
அந்நேரத்தில்
உயிர்த்திருப்பது அப்படியொரு கொடிது
நிறையப்பேரைப் போல
நானுமப்படி
சில சமயங்களில்
உயிர்த்துக் கிடக்கிறேன்
அப்போது வலி' அப்படி வலிக்கிறது
பயம்' ஓடும் ரத்தமெல்லாம் பரவுகிறது
வலிக்க வலிக்க
உடன் இருப்போரை நினைப்பேன் - அது
இன்னும் வலிக்கும்
ச்ச என்ன இது வலியென்றுப்
பிடுங்கி ஓரமெறிந்துவிட்டு
உடனிருப்போருக்காய் அமர்ந்துக் கொள்கிறேன்
இப்படி நான் பிடுங்கி பிடுங்கிப் போட்ட
எனது வலிக்குள் இன்னும்
ஆயிரம் உயிர் விளக்குகள் எரியும்
ஒரேயொரு எனது
இருளும் பொழுதிற்குள்
ஆயிரம் விடியல்கள் விடியும்
விடியலில் எரியும் விளக்கொன்று
அதன்பின் எனக்காகவும்தான்
எரிந்துப் போகட்டுமே போ..........!
உள்ளே
ஒரு விளக்கு எரிவது
தெரிகிறது..
இப்போதெல்லாம்
அந்த விளக்கு இங்குமங்குமாய்
அசைகிறது
சட்டென
அணைந்துவிடுமோ
என்றொரு பயம்கூடஎனக்கு
பயத்தை அகற்றி
இங்கொன்றுமாய்
அங்கொன்றுமாய் வந்து சில கைகள்
விளக்கை மூடிக்கொள்கின்றன
மூடிய கைகளின் அன்பில்
அணையாது எரிகிறது
அந்த விளக்கு
அது எரியும்
எரியும்
யாரும் கல்லெறிந்து விடாதவரை
அது எரியும்..!
அதற்குப் பெயர் நான்.....!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top