48 திட்டம் செயலானது...
48 திட்டம் செயலானது...
காமினியிடம் இருந்து விக்ரமுக்கு கைப்பேசி அழைப்பு வந்தது.
"சொல்லுங்க" என்றான் விக்ரம்.
"என்னோட ஆளு, நந்தினி கிட்ட மருந்தை கொண்டு போய் கொடுத்துட்டான்"
"சரி"
"அதை நந்தினி பிரசாதத்தோடு கலந்துட்டா"
"நான் பார்த்துக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்துல நாங்க ஹாஸ்பிடல்ல இருப்போம்"
"நான் ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். நீங்க எப்ப வேணா வாங்க" என்றார் காமினி.
"சரி" என்று அழைப்பை துண்டித்தான் விக்ரம்.
பொன்னகரம்
வைஷாலியை தன்னுடன் இருத்திக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார் சாவித்திரி. தங்களது திட்டத்தை செயல்படுத்த அவள் சாவித்திரியுடன் இருக்கக் கூடாது. என்ன செய்வது என்பதை யோசித்தபடி, சமையல் மேடையின் மீது சாய்ந்த படி நின்றிருந்தாள் வைஷாலி.
"இந்தா வைஷு, இந்த ஜூஸை குடி" என்று அவளிடம் பழரச தம்ளரை நீட்டினார் சாவித்திரி.
ஒன்றும் கூறாமல் அதைக் குடித்து முடித்தாள் வைஷாலி.
"நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ, வைஷு" என்றார் சாவித்திரி.
"சரிங்க ஆன்ட்டி" என்று கூறிவிட்டு நகர்ந்தாள், அதற்காகவே காத்திருந்த வைஷாலி.
"இங்க அங்கன்னு சுத்திகிட்டு இருக்காம, கொஞ்ச நேரம் தூங்கு"
"சரிங்க ஆன்ட்டி" என்று சமையல் அறையை விட்டு வெளியே வந்தாள் வைஷாலி.
நல்லவேளை, சாவித்திரி அவராகவே அவளை அவளது அறைக்கு அனுப்பி விட்டார். தன் அறைக்கு வந்த வைஷாலி, கட்டிலின் மீது அமர்ந்தாள். அப்பொழுது அவளுக்கு விக்ரமிடமிருந்து அழைப்பு வந்தது.
"வைஷு..."
"சொல்லுங்க விக்ரம்"
"நான் இங்க தான் இருக்கேன்"
"இங்கன்னா எங்க?"
"நம்ம வீட்டுக்கு பக்கத்துல தான்"
"ஒ..."
"பயப்படாத. நான் எப்ப வேணா உள்ள வருவேன்"
"சரி "
அப்பொழுது, நந்தினியின் கார் வீட்டிற்குள் நுழைவதை கவனித்தான் விக்ரம்.
"வைஷு, பாட்டியோட கார் வீட்டுக்குள்ள நுழையுது"
"ஓகே ஓகே"
"நான் சொன்னதை மறந்துடாத"
"சரி, நான் காலை டிஸ்கனெக்ட் பண்றேன்"
"சரி"
அழைப்பை துண்டித்து விட்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள் வைஷாலி.
அழைப்பு மணியின் சத்தம் கேட்டு கதவை திறந்த சாவித்திரி, நந்தினியின் கையில் இருந்த பிரசாதத்தை கவனித்தார். நந்தினி தனக்கு அந்த பிரசாதத்தை வழங்குவார் என்று எதிர்பார்த்தார் சாவித்திரி. ஆனால் அதை அவருக்கு கொடுக்காமல் முதல் தளம் நோக்கி நடந்தார் நந்தினி.
எதிர்பார்த்தது போலவே நேராய் விக்ரமின் அறையை வந்தடைந்து, பாதியளவு சாத்தப்பட்டிருந்த கதவை தட்டினார். அதை பார்த்த சாவித்திரி அதிசயத்தார். மெல்ல கதவின் பக்கம் திரும்பிய வைஷாலி, நந்தினி அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்து, எழுந்து அமர்ந்தாள்.
"உள்ள வாங்க பாட்டி" என்றாள்.
உள்ளே நுழைந்த நந்தினி,
"உனக்காக இந்த பிரசாதத்தை கொண்டு வந்தேன்" என்றார்.
"ஓஹோ..."
அதை நந்தினியின் கையிலிருந்து பெற்றுக்கொண்ட வைஷாலி, புன்னகையுடன் அதை சாப்பிட்டாள்.
"நீங்களும் கொஞ்சம் சாப்பிடுங்க பாட்டி" என்று நந்தினியிடம் நீட்டினாள் வைஷாலி.
"இல்ல. நான் ஏற்கனவே சாப்பிட்டுட்டேன்" என்று அங்கிருந்து நடையை கட்டினார் நந்தினி.
பிரசாதத்தை முழுவதையும் சாப்பிடாமல் பாதியை , அந்த தொன்னையிலேயே விட்டுவைத்தாள் வைஷாலி. பின் கட்டிலில் படித்துக் கொண்டு காத்திருந்தாள்.
அவர்களது திட்டப்படி வீட்டிற்கு வந்தான் விக்ரம்.
"சின்னா, நீ வந்துட்டியா?" என்றார் சாவித்திரி.
"ஆமாம்மா. என்னோட ஃபிரண்டுக்கு இன்னைக்கு வேற ஏதோ ப்ரோக்ராம் இருக்காம். அதனால அவனை வேற ஒரு நாள் பாத்துக்கலாம்னு திரும்பி வந்துட்டேன்"
"ஏதாவது சாப்பிடறியா?"
"அப்புறமா சாப்பிடுறேன்"
சரி என்று தலையசைத்தார் சாவித்திரி.
"வைஷு எங்க மாம்?"
"உங்க ரூம்ல இருக்கா. இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா?" என்றார் சந்தோஷமாக.
"என்ன ஆச்சு?"
"உங்க பாட்டி, கோவில்ல இருந்து பிரசாதம் வாங்கிட்டு வந்து வைஷாலிக்கு கொடுத்தாங்க"
"அப்படியா?"
"ஆமாம். அவங்க வைஷாலியை முழுமனசோட ஏத்துக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"
தன் அம்மாவுக்காக உள்ளுக்குள் வருத்தப்பட்ட படி ஆமாம் என்று தலையசைத்தான் விக்ரம்.
"சரி இருங்க உங்க மருமக என்ன செய்றான்னு பார்த்துட்டு வரேன்" நாலு கால் தாவலில் தனது அறையை நோக்கி ஓடினான் விக்ரம்.
அவனைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டு நின்றார் சாவித்திரி. அவர் அங்கிருந்து செல்ல எண்ணிய போது விக்ரமின் கூக்குரலை கேட்டு நின்றார்.
"வைஷு..." என்று அலறினான் விக்ரம்.
அதைக் கேட்டு அவர்கள் அறையை நோக்கி ஓடினார் சாவித்திரி.
"வைஷு உனக்கு என்ன ஆச்சு?" சென்றான் வைஷாலியை பார்த்து சிரித்தபடி.
சாவித்திரியின் காலடி ஓசையை கேட்ட வைஷாலி, அழுவது போல் பாசாங்கு செய்தாள்.
"வைஷு, உனக்கு என்ன செய்யுது?" என்றான் விக்ரம்.
அப்பொழுது அங்கு வந்து சேர்ந்த சாவித்திரியும் அதைக் கேட்டார்.
"என்னாச்சு வைஷு?" என்றார் பதட்டத்துடன்.
"வயிறு ரொம்ப வலிக்குது ஆன்ட்டி" என்று கண்ணை கசக்கினாள் வைஷாலி.
"என்ன சாப்பிட்ட?" என்றான் விக்ரம்.
"நான் அவளுக்கு வெறும் ஜூஸ் தான் டா கொடுத்தேன்" என்றார் சாவித்திரி பதட்டம் மாறாமல்.
அப்பொழுது பிரசாதம் வைக்கப்பட்ட தொன்னை அவன் கண்ணில் பட்டது.
"இது என்னது?"
"பாட்டி கொண்டு வந்து கொடுத்தாங்க" என்றாள் வைஷாலி.
"சின்னா, யோசிக்க வேண்டாம், வா நம்ம அவளை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போகலாம்" என்றார் சாவித்திரி.
அங்கிருந்த தொன்னையை எடுத்து சாவித்திரியிடம் கொடுத்தான் விக்ரம்.
"இதை வச்சுக்கங்க" என்ற அவனை பார்த்து முகம் சுருக்கினார் சாவித்திரி.
"வைஷு என்ன சாப்பிட்டான்னு டாக்டர் கேட்பாங்க மாம்"
சரி என்று தலையசைத்தார் சாவித்திரி. விக்ரம் வைஷாலியை தன் கையில் தூக்கிக்கொண்டு நடக்க, அவர்களை பின் தொடர்ந்தார் சாவித்திரி. ஆக்சிஜன் மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான் விக்ரம்.
காமினி அவர்களுக்காக அங்கே காத்திருந்தார். அவர்கள் மருத்துவமனைக்கு வந்ததும் மருத்துவமனை ஊழியர்கள் வைஷாலியை ஸ்டெச்சரில் படுக்க வைத்து காமினியின் அறைக்கு கொண்டு சென்றார்கள். அதற்குள் தன் அறையை விட்டு வெளியே வந்த காமினி, வைஷாலியின் நாடித்துடிப்பை பரிசோதித்து விட்டு,
"ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு போங்க" என்றார்.
"ஏதாவது பிரச்சனையா டாக்டர்?" என்றார் சாவித்திரி.
"செக் பண்ணிட்டு சொல்றேன்"
"டாக்டர்" என்று அவரை அழைத்தான் விக்ரம்.
"சொல்லுங்க"
"வைஷாலி இதைத் தான் கடைசியா சாப்பிட்டா" என்று அந்த தொன்னையை அவரிடம் நீட்டினான் விக்ரம்.
அதை அவனிடமிருந்து பெற்றுக் கொண்ட காமினி, மருத்துவமனை ஊழியரை அழைத்து,
"இதை லேப்ல கொடுத்து உடனே டெஸ்ட் பண்ண சொல்லுங்க" என்றார்.
"சரிங்க மேடம்" என்று அதை வாங்கிக்கொண்டு ஆய்வகத்தை நோக்கிச் சென்றார் அந்த ஊழியர்.
அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள் வைஷாலி. அவளைப் பின்தொடர்ந்து சென்றார் காமினி.
ஏற்கனவே அங்கு வந்து விட்டிருந்த சுதாகர், அறுவை சிகிச்சை அறையினுள் கதவுக்கு பின்னால் அமர்ந்திருந்ததை பார்த்து, புன்னகைத்தபடி எழுந்த அமர்ந்தாள் வைஷாலி.
"ஒன்றும் கவலைப்படாதே" என்பது போல் அவளைப் பார்த்து மெல்ல கண்ணிமைத்தான் சுதாகர்.
அங்கிருந்த வேறொரு நாற்காலியில் காமினியும் அமர்ந்து கொண்டார். செவிலியர்களும் சும்மாவே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏற்கனவே அனைத்தும் கூறப்பட்டு விட்டிருந்தது.
சாவித்திரியுடன் அறுவை சிகிச்சை அறையில் வெளியே காத்திருந்தான் விக்ரம். விமலாதித்தனுக்கு ஃபோன் செய்து நடந்தவற்றை கூறி முடித்தார் சாவித்திரி.
"சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு வாங்க"
"நான் வரேன் நீ ஒன்னும் பயப்படாத. ஒன்னும் ஆகாது" அழைப்பை துண்டித்தார் விமலாதித்தன்.
சாவித்திரியை தடுக்கவில்லை விக்ரம். அவர்களது திட்டப்படி, விமலாதித்தன் மருத்துவமனைக்கு வர வேண்டும்.
அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் விமலாதித்தன். அவரை பார்த்தவுடன் அவரை நோக்கி ஓடிச் சென்றார் சாவித்திரி.
"என்ன ஆச்சு சாவித்திரி?"
"வைஷாலியை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போயிருக்காங்க. அரை மணி நேரம் ஆயிடுச்சு. என்னன்னு தெரியல..." என்றார் கலங்கிய கண்களுடன்.
"பயப்படாத. வைஷாலிக்கு ஒன்னும் ஆகாது" என்றார் விமலாதித்தன்.
அப்பொழுது அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தார் காமினி. அனைவரும் அவரை நோக்கி சென்றார்கள்.
"வைஷாலி எப்படி இருக்கா?" என்றார் சாவித்திரி.
"அவளுக்கு ஒன்னும் இல்லையே?" என்றார் விமலாதித்தன்.
"ஐ அம் சாரி... ( சில நொடி நிறுத்திவிட்டு, அவர்களை ஏறிட்ட காமினி ) கரு கலைஞ்சு போச்சு" என்றார்.
விமலாதித்தன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, சாவித்திரியோ வாய்விட்டு கதறி அழுதார். தன் பெற்றோருக்காக மனதார வருத்தப்பட்டான் விக்ரம்.
"ஆனா, இது எப்படி நடந்தது டாக்டர்? காலையில் வரைக்கும் நல்லா தானே இருந்தா..." என்றார் சாவித்திரி.
"கஷ்டமான வேலை ஏதாவது செஞ்சாளா?"
"இல்ல. ரெஸ்ட் தான் எடுத்துக்கிட்டு இருந்தா. நான் கொடுத்த ஜூசை குடிக்கும் போது கூட நல்லா இருந்தாளே..."
"சரி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. லேப் ரிசல்ட் வரட்டும்"
அப்பொழுது, லேப் ரிசல்ட்டுடன் அங்கு வந்த லேப் அசிஸ்டன்ட், அதை காமினியிடம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த காமினி,
"அவ சாப்பிட்ட பிரசாதத்துல, அபார்ஷன் கன்டென்ட் இருந்திருக்கு" என்றார்.
அதிர்ச்சியோடு விமலாதித்தனை பார்த்தார் சாவித்திரி.
"அந்த பிரசாதத்தை அவளுக்கு கொடுத்தது யாரு?" என்றார் விமலாதித்தன்.
"பாட்டி" என்றான் விக்ரம்.
விமலாதித்தன் திடுக்கிட்டு போனார்.
"என்னங்க இதெல்லாம்?" என்றார் சாவித்திரி அழுதபடி.
ஒன்றும் கூற முடியாமல் சிலை போல் நின்றார் விமலாதித்தன்.
"ஆரம்பத்துல இருந்தே அவங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. ஆனா அவங்க இவ்வளவு கீழ்த்தரமா இறங்குவாங்கன்னு நான் எதிர்பார்க்கலையே..." தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் சாவித்திரி.
அந்த விஷயம் விமலாதித்தனும் அறிந்தது தான். அவரை விட அவரது அம்மாவை பற்றி யாருக்கு அதிகம் தெரிந்து விடப் போகிறது...? சிவராமன் இறந்த பிறகு தங்கள் இல்லத்தில் இருந்து கோப்பெருந்தேவியையும், வைஷாலியையும் அவர் எப்படி விரட்டி அடித்தார் என்பதும், வைஷாலியிடம் இருந்து விக்ரமை தூரம் வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவனை லண்டன் அனுப்பி, பத்து வருடங்கள் அங்கே தங்க வைத்ததும் அவர் அறிந்தது தான்.
எல்லாவற்றையும் மன்னித்து விடலாம். அதையெல்லாம் அவர் செய்தது திருமணத்திற்கு முன். ஆனால் அவர்களுக்கு திருமணமான பின்... வைஷாலி கருவுற்ற பின்... கருவில் வளரும் குழந்தையை கொல்லும் எண்ணம் அவருக்கு எப்படி ஏற்பட்டது? விமலாதித்தனால் அதை தாங்கவே முடியவில்லை. தான் முற்றிலும் ஏமாற்றப்பட்டதாய் உணர்ந்தார் விமலாதித்தன்.
கோபத்தை உமிழ்ந்து கொண்டிருந்த தன் தந்தையின் முகத்தை அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தான் விக்ரம். ஏனென்றால், விமலாதித்தன் என்ன செய்யப் போகிறார் என்பதில் தான் இருக்கிறது அவன் வகுத்த திட்டத்தின் வெற்றி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top